ஜெபக்குறிப்பு: 2021 டிசம்பர் 31 வெள்ளி
கர்த்தராகிய ஆண்டவரே, தேவரீர் என்னை இதுவரைக்கும் கொண்டுவந்ததற்கு, நான் எம்மாத்திரம்? என் வீடும் எம்மாத்திரம்? (2சாமு.7:18) எங்களை கைவிடாமலும், நெகிழவிடாமலும் பாதுகாத்த தேவ அன்பை நினைத்து முழு உள்ளத்தோடும் உமக்கு நன்றி சொல்லுகிறோம். நீரே எங்களுக்கு மறைவிடமாயிருந்து காத்துக்கொள்ளும். ஆமென்.
இலக்கைத் தவறவிடாதிருப்போம்
தியானம்: 2021 டிசம்பர் 31 வெள்ளி | வேத வாசிப்பு: எபிரெயர் 13:14-21
நிலையான நகரம் நமக்கு இங்கே இல்லை; வரப்போகிறதையே நாடித் தேடுகிறோம் (எபிரெயர் 13:14).
உலகின் பல நாடுகளை வெற்றிபெற்ற ஒரு மாவீரன், தனது படைகளோடு சொந்த நாட்டிற்கு திரும்பி வரும்வழியில், நதிகள் காடுகள் கரடுமுரடான பாறைகளைக் கடந்து, போர்க் களைப்புடன், பல வீரரை இழந்துவிட்ட இழப்புடன், செங்குத்தான மலைப்பாதைக்கூடாக வந்து, மிக உயர்ந்த ஆல்ப்ஸ் மலையருகே கடந்து செல்ல கஷ்டப்பட்டனர். மேலே ஏற ஏற மூச்சுமுட்டியது. பனிப்புயலும் தாக்கியது. ஒரு வீரன், தன் கைகளை மலைகளுக்கு அப்பால் நீட்டி, “வீரர்களே, இந்த மலைக்கு அப்பால் நமது அழகான தேசம் இருக்கிறது. பூக்கள் பூத்துக்குலுங்கும் தேசம். பழமரத்தோப்புகளும் நீரோடைகளும் நிறைந்த தேசம். அங்கேதான் நமது தாய் தந்தை மனைவி பிள்ளைகள் உள்ளனர். அதுவே நமது சொந்த நாடு; நாம் இளைப்பாறும் இல்லம்; அது எத்தனை இன்பமானது” என்றான். வீரர்கள் புத்துயிர் அடைந்தனர்; செங்குத்தான பாதை அவர்களுக்கு இலேசாக காணப்பட்டது. புதுப்பெலனுடன் ஆரவாரப் பாடல்களுடன் மகிழ்ச்சியின் கோஷத்துடன் தங்கள் நாட்டை அடைந்தனர். அங்கே அவர்களை வரவேற்க பெருங்கூட்டத்தினர் காத்து நின்றனர்.
ஒவ்வொரு ஆண்டும் நிறைவடையும்போது, ஒரு புதிய ஆண்டைச் சந்திக்கும் ஆர்வம் பலருக்குண்டு. சோர்ந்துபோகிறவர்களும் உண்டு. அந்த வீரப்படை எதிர்கொண்ட போரைப்பார்க்கிலும், பாவத்துடனான நம்முடைய போர் நம்மை இளைப்படைய மாத்திரமல்ல, “போதும்” என்று அதைரியப்படுத்தியும் விடுகிறது. ஆனால், நமக்கு முன்னே நடந்த தேவபிள்ளைகளும் இந்தக் கடினபாதையைக் கடந்துதான் தாம் சென்றடைய வேண்டிய நிலையான நித்திய நகரத்தைச் சென்றடைந்தனர். இன்று, பாவத்தையும் உலக சோதனைகளையும் நாம் கடந்துசெல்ல நேரிட்டிருக்கலாம். என்றாலும், நமக்கு முன்னே நடந்தவர் ஒரு சாதாரண மனிதன் அல்ல; நித்திய உடன்படிக்கையின் இரத்தத்தினாலே ஆடுகளுடைய பெரிய மேய்ப்பனானவர், அவரே நம்மை நடத்திச் செல்லும் தலைவர். அவரும் எந்த மனிதனும் கடக்கமுடியாத பெரிய மலையாகிய சிலுவையைக் கடந்து வெற்றி சிறந்தவர். அவர் பேசுகிறார்: “அதோ, உலகப் பாடுகளுக்கு அப்பால் நமது நித்திய நகரம் இருக்கிறது. அங்கே எல்லாம் உண்டு. நம்மை எதிர்கொள்ள நமக்கு அன்பானவர்கள் ஆவலாயிருக்கிறார்கள்.” ஆகவே, புத்துணர்வுடன் முன்செல்வோம்.
பிரியமானவர்களே, அந்த நித்திய நகரத்தைச் சென்றடைய ஒவ்வொருவருக்கும் பெலனுண்டு. நமக்கு ஒரு நம்பிக்கையும் உண்டு. நமது கண்கள், புது வருடத்தில் என்னவாகுமோ என்று மலையளவு பெரிதான கஷ்டங்களை நோக்கிப் பார்க்காதபடி, அதற்கும் அப்பாலுள்ள நமது நிலையான வீட்டை நோக்கட்டும். தேவன் தாமே, இயேசுகிறிஸ்துவுக்கூடாக, தமக்குச் சித்தமானதை உங்களில் நடப்பித்து, உங்களைச் சகலவித நற்கிரியையிலும் சீர்பொருந்தினவர்களாக்குவாராக.
ஜெபம்: எங்களுக்கு வாசஸ்தலத்தை ஆயத்தப்படுத்தியுள்ள நல்ல ஆண்டவரே, அந்த நிலையான நகரத்திற்கு சென்று அங்கே தேவனுடைய ராஜ்யத்தில் அகமகிழ்ந்திருக்கும் பாக்கியத்தை இழந்துவிடாதிருக்க எங்களுக்கு உதவி செய்யும். ஆமென்.
வாக்குத்தத்தம்: 2021 டிசம்பர் 30 வியாழன்
உமது அடியேன்மேல் உமது முகத்தைப் பிரகாசிக்கப்பண்ணி …. எனக்குப் போதியும் (சங்.119:135).
சகரியா 11-14 | வெளிப்படுத்தல் 21
ஜெபக்குறிப்பு: 2021 டிசம்பர் 30 வியாழன்
…எல்லாப் புத்திக்கும் மேலான தேவ சமாதானம் உங்கள் இருதயங்களையும் உங்கள் சிந்தைகளையும் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாகக் காத்துக்கொள்ளும் (பிலி.4:7) கர்த்தர் இந்நாட்வரை நம்மை நடத்திவந்த அற்புத செயல்களை எண்ணி எண்ணி அவரைத் துதித்து உபவாசத்தோடும் ஜெபத்தோடும் புதிய வருடத்தின் ஆசீர்வாதத்திற்காக ஆண்டவரிடத்தில் மன்றாடுவோம்.
எக்காலமும் ஸ்தோத்திரமே!
தியானம்: 2021 டிசம்பர் 30 வியாழன் | வேத வாசிப்பு: சங்கீதம் 34:1-22
கர்த்தருடைய கண்கள் நீதிமான்கள்மேல் நோக்கமாயிருக்கிறது; அவருடைய செவிகள் அவர்கள் கூப்பிடுதலுக்குத் திறந்திருக்கிறது (சங். 34:15).
ஒரு விளையாட்டு வீரன் தன் சகாக்களின் எரிச்சல் காரணமாக மனமடிவுக்குள்ளானான். இதனை அறிந்த தகப்பனோ, “மகனே, நீ பயப்படாதே. உன் திறமை என்னவோ அதை வெளிப்படுத்து. மிகுதியை நான் பார்த்துக்கொள்வேன். உன் மேல் என் கண்கள் இமை கொட்டாமல் விழித்திருக்கும்” என திடப்படுத்தினார். அவன் வெற்றிக்கிண்ணத்தைப் பெற்றுக்கொண்டபோது, “இந்தப் போட்டி மிகுந்த சவாலாகவே இருந்தது. ஆனாலும், என் அப்பா என்னையே பார்த்துக் கொண்டிருக்கிறார் என்ற நிச்சயம்தான் இந்தப் போட்டியில் எனக்கு வெற்றி தந்தது” என்றான்.
தாவீதின் சங்கீதங்கள், அவருடைய அனுபவங்களே. அதனால்தான் அவை இன்றும் நமது வாழ்வின் அனுபவங்களாக பிரதிபலிக்கின்றன. கொலை செய்யத் துரத்திய சவுலினால், தாவீது முகங்கொடுத்த இன்னல்களுக்கு அளவேயில்லை. ஒருதடவை, காத்தின் ராஜாவாகிய ஆகீசிடம் ஓடிப்போனான் தாவீது. அங்கு, பித்தங் கொண்டவன்போல நடித்து, அவ்விடத்திலிருந்து தப்பியபோது (1சாமு.21:10-15) தாவீது பாடியதுதான் இந்த 34ம் சங்கீதம். தேவனுடைய பிள்ளைகள் தேவனை மனதார கூப்பிடும்போது, அவர் நிச்சயம் பதிலளிப்பார் என்பதை அனுபவரீதியாகக் கண்ட தாவீது மனம் நிறைந்த நன்றியோடு இச்சங்கீதத்தை எழுதினார். கர்த்தர் தம்மைக் கூப்பிடுகிறவர்களைத் தப்புவிப்பார்; சூழ்நிலை எதுவானாலும் விடுவித்து உயர்த்துவார். இதில் நம் பங்களிப்பும் உண்டு. முதலாவது, நாம் கர்த்தரையே தேடவேண்டும்; அவரைக் கூப்பிடும்போது அவர் பதிலளிப்பார் என்ற நம்பிக்கை வேண்டும். நாம் கர்த்தருக்குப் பயப்படுவோமாயின், நமது நாவைப் பொல்லாப்புக்கும் தவறான பேச்சுக்கும் தவிர்க்க வேண்டும். சகல தீமையையும் விட்டுவிலகி நன்மை செய்ய முந்திக்கொள்ள வேண்டும். சமாதானத்தை விரும்ப வேண்டும். ஏனெனில், எப்பொழுதும் கர்த்தருடைய கண்கள் நம்மை நோக்கிய படியே இருக்கிறது. அதற்கு எதுவுமே மறைவில்லை.
நாம் கர்த்தருக்குப் பயந்து ஜீவிக்கும்போது நிச்சயம் இந்த உலகம் நம்மை விடாது. நமக்கு அநேகம் துன்பங்கள் நேரிடும். ஆனால், கர்த்தர் நம்மேல் நோக்கமாயிருக்கிறார் என்ற ஒரே நம்பிக்கை, நாம் ஜெயிக்கப் போதுமானது. நெருக்கங்கள் வரும்போது அதைத்தானே நாம் மறந்துவிடுகிறோம். கடந்துபோகும் இந்த ஆண்டின் சம்பவங்களைச் சற்றுத் திரும்பிப்பார்ப்போம். நமக்கு நேரிட்ட தோல்விகளின் காரணங்களையும், ஜெயம் பெற்ற சமயங்களையும் ஆராய்வோம். வியாதியோ, வேதனையோ, புறக்கணிப்போ, ஏமாற்றமோ, உயிராபத்தோ நொறுங்குண்ட நருங்குண்ட இருதயத்தோடு கர்த்தரை தேடுவோம். வாக்கு மாறாத கர்த்தர் நிச்சயம் நம்மை இரட்சிப்பார்!
ஜெபம்: தகப்பனே, அடைக்கலான் குருவிகளில் கண்வைத்திருக்கிற தேவன் எங்களைக் கைவிடுவீரோ? மனுஷர்களால் விடுவிக்கக்கூடாதிருந்த வேளையிலும் நீர் எங்கள்மேல் நோக்கமாயிருந்ததை நாங்கள் விடுதலையை அனுபவித்த சமயங்களை எண்ணி உம்மைத் துதிக்கிறோம். ஆமென்.