ஜெபக்குறிப்பு: 2022 ஜனவரி 31 திங்கள்
கர்த்தர் நீடிய சாந்தமும், மிகுந்த வல்லமையுமுள்ளவர் (நாகூம்1:3) வல்லமையுள்ள தேவன் இம்மாதம் முழுவதும் நம்மோடிருந்து நம்மை நடத்தினார், ஜெபத்திற்கு பதில் தந்தார். வேண்டிக்கொண்டதற்கும் அதிகமான நன்மையால் நம்மை திருப்தியாக்கினார். அவருடைய கரத்திற்குள்ளாகவே அடங்கியிருக்க நம்மை அர்ப்பணித்து வேண்டுதல் செய்வோம்.
பாவமன்னிப்பு!
தியானம்: 2022 ஜனவரி 31 திங்கள் | வேத வாசிப்பு: 2கொரிந்தியர் 2:5-11
சாத்தானாலே நாம் மோசம்போகாதபடிக்கு அப்படிச் செய்தேன்; அவனுடைய தந்திரங்கள் நமக்குத் தெரியாதவைகள் அல்லவே (2கொரிந்தியர் 2:11).
கண் பார்ப்பதற்காகவே, கண்ணாடி மூக்கின்மீதே வைக்கப்படுகிறது. அதனால் அதற்கு மூக்குக்கண்ணாடி என்ற பெயரும் வந்தது. இதனால் கோபமடைந்த மூக்கு ஒருநாள், கண்ணோடு சண்டை போட்டது. “என்னால் உனது கண்ணாடியைச் சுமக்கமுடியாது. நீயே சுமந்துகொள் அல்லது பேசாமல் இரு” என்று கண்ணாடியைத் தூர வீசிப்போட்டதாம். அந்த மனிதன் எழுந்து நடந்தபோது, கண் தெரியாமல் போய் கதவோடு மோதினான். அப்பொழுது முதலில் அடிபட்டது மூக்கு; அதினால் இரத்தமும் கொட்டியதாம்.
நமது ஐக்கியத்திலே யாராவது ஒருவர் தவறுவிட்டால், அதைச் சரி செய்ய எவ்விதத்தில் முயற்சிக்கிறோம்? முழுமையாகவே அவர் பாவி என்று அடையாளமிட்டுத் தள்ளிவிடலாமா? அவருக்கும் இந்த ஐக்கியத்துக்கும் இனி என்றைக்குமே தொடர்பு கிடையாது என்று சொல்லிவிடலாமா? நமது சரீரத்தில் ஒரு அவயவம் தேவையில்லையென்று நாம் அதை வெட்டிப்போடமுடியுமா? நமது ஐக்கியத்தில் கிறிஸ்து தலையாயும் நாமெல்லாரும் சரீரத்தின் அவயவங்களாயும் இருக்கிறோம். ஒரு சரீரத்தின் அவயவம் பாடுபட்டால் எப்படி மற்ற எல்லா அவயவங்களும் பாடுபடுமோ, அதுபோன்ற உணர்வே நமது ஐக்கியத்திலும் காணப்படவேண்டும்.
கொரிந்து சபையிலே துக்கப்படும்படியான ஒரு காரியம் நடந்திருக்க வேண்டும். ஏனெனில், கோபப்படாமல், மிகவும் வியாகுலத்தோடு, மனஇடுக்கம் அடைந்தவராய் கண்ணீரோடு அவர்கள் மீதுள்ள அன்பினாலே எழுதுவதாகவே பவுல் அவர்களுக்கு எழுதுகிறார். “துக்கமுண்டாக்கினவன் எனக்கு மட்டுமல்லாமல் அநேகருக்குத் துக்கம் உண்டாக்கினான். அவனுக்குக் கிடைத்த இந்தத் தண்டனையே போதும். அவன் அதிக துக்கத்தினாலே அழிந்துபோகாதபடிக்கு, அவனுக்கு மன்னித்து அவனை ஏற்றுக்கொள்ளுங்கள்” என்று அறிவுரை கூறுகிறார். “எல்லாவற்றிலும் கீழ்ப்படிந்திருக்கிறீர்களோ என்று நீங்களும் உங்களைச் சோதனை செய்து பாருங்கள். நீங்கள் யாருக்கு மன்னிக்கிறீர்களோ அவர்களுக்கு நானும் மன்னிக்கிறேன்” என்கிறார் (2 கொரி.2:9-10). இதனால், சாத்தான் ஐக்கியத்துக்குள் குழப்பம் விளைவித்து பிரிவினையைக் கொண்டு வந்து விடாதபடி, துக்கமுண்டாக்கினவனை மன்னித்து ஏற்றுக்கொள்வதே உகந்த காரியம் என்பதையே பவுல் எழுதுகிறார்.
அன்பானவர்களே, இது கொரிந்தியருக்கு மட்டுமல்ல நமக்கும் பொருந்தும். நாமும் இவ்வண்ணமாகவே, மன்னிக்கிறதற்குத் தயை கொண்டிருப்பது அவசியம். “உன் சகோதரன் உனக்கு விரோதமாய்க் குற்றஞ்செய்தால், அவனைக் கடிந்துகொள்; அவன் மனஸ்தாபப்பட்டால், அவனுக்கு மன்னிப்பாயாக (லூக்கா 17:3).
ஜெபம்: மன்னிக்கும் தேவனே, கிறிஸ்துவின் மன்னிப்பைப் பெற்ற நாங்கள், பிறரை மன்னித்து ஏற்றுக்கொள்ள தயாராயிருக்கும்படியான மனப்பான்மையைத் தந்தருளும். ஆமென்.
வாக்குத்தத்தம்: 2022 ஜனவரி 30 ஞாயிறு
கர்த்தர் ஜீவனுள்ளவர்; என் கன்மலையானவர் துதிக்கப்படுவாராக (சங்.18:46).
வேதவாசிப்பு: யாத்திராகமம் 20-21 மாலை: மத்தேயு 21:28-46
ஜெபக்குறிப்பு: 2022 ஜனவரி 30 ஞாயிறு
அவருடைய கூடாரத்திலே நான் ஆனந்தபலிகளையிட்டு, கர்த்தரைப் பாடி அவரைக் கீர்த்தனம் பண்ணு வேன் (சங்.27:6) இன்றைய ஆராதனை நாளிலும் கர்த்தரைப் பாடிக் கீர்த்தனம் பண்ணவும், அவருடைய சமுகத்தில் மனமகிழ்ச்சியோடு தங்கியிருக்கவும் நம்மைத் தெரிந்துகொண்ட தேவாதி தேவனுக்கே மகிமையைச் செலுத்தி துதித்து ஜெபிப்போம்.
ஆறுதலின் தேவன்!
தியானம்: 2022 ஜனவரி 30 ஞாயிறு | வேத வாசிப்பு: 2கொரிந்தியர் 1:1-11
தேவனால் எங்களுக்கு அருளப்படுகிற ஆறுதலினாலே, … எங்களுக்கு வரும் சகல உபத்திரவங்களிலேயும் அவரே எங்களுக்கு ஆறுதல் செய்கிறவர் (2 கொரிந்தியர் 1:4).
ஒருதடவை, யுத்தத்தினால் இடம்பெயர்ந்து வந்தவர்கள் மத்தியில் தேவனுடைய வார்த்தையைப் பகிர்ந்துகொண்டிருந்தபோது, உங்களைப்போலவே நானும் யுத்தத்தால் இடம்பெயர்ந்துதான் கொழும்புக்கு வரநேரிட்டது என்று சொன்னேன். அப்போது, அவர்களுடைய முகத்தில் புன்முறுவலும், மாறுதலும் உண்டானது. அதுவரைக்கும், கொழும்பில் வசிக்கின்ற எனக்கு, தாங்கள் பட்ட துன்பம் எனக்கு எங்கே தெரியப்போகிறது என்றுதான் அவர்கள் நினைத்திருப்பார்கள்; நானும் அவர்களில் ஒருவர்தான் என்று தெரிந்தபோது இன்னமும் உன்னிப்பாகத் தேவசெய்தியைக் கேட்டதைக் கண்டேன். இங்கே பவுல், “சகலவிதமான ஆறுதலின் தேவன்” என்று தேவனை அடையாளங்காட்டுகிறார்.
இயேசு இவ்வுலகில் மனிதனாய் வந்துதித்து, சகலவித உபத்திரவங்களையும் அனுபவித்து, சிலுவையில் நமக்காகத் தம்மை ஒப்புக்கொடுத்து, மரித்து உயிர்த்தவர். பாவமான இவ்வுலகில் நம்மைப்போலவே மனிதனாக வாழ்ந்தாலும் பாவம் அவரை ஒட்டிக்கொள்ளவில்லை; அவர் பரிசுத்தர். நமது பலவீனத்தில் நம்மோடுகூட பரிதபிக்கக் கூடிய பிரதான ஆசாரியனாய் அவர் இருக்கிறார். அப்படிப்பட்ட தேவன் நமது ஆறுதலின் தேவனாய் இருக்கிறார் என்பது எவ்வளவு ஆறுதலான வார்த்தை! அதுமட்டுமல்ல, தேவன் அருளும் ஆறுதலானது, நாம் ஆறுதல் அடைவதோடு மாத்திரமல்லாது, உபத்திரவப்படுகிற மற்றவர்களையும் ஆறுதல்படுத்தக்கூடியதான ஆறுதலையே அவர் தருகிறார்.
மேலும், “நாங்கள் எங்கள்மீது நம்பிக்கையாயிராமல், மரித்தோரை எழுப்புகின்ற தேவன்மீது நம்பிக்கை வைத்தோம். எங்களுக்கு மரணமே நேரிடப்போகிறது என்று நாங்கள் நிச்சயித்திருந்தோம். அப்படிப்பட்ட மரணத்தினின்று அவர் எங்களைத் தப்புவித்தார். ஆகையால் நாங்கள் உபத்திரவப்பட்டது நல்லது. நீங்களும் எங்களோடே பாடுபடுகிறதுபோல ஆறுதலும் அடைவீர்கள்” என்கிறார்.
அன்பானவர்களே, இன்று நாம் பாடுகளைக் கண்டு பயப்படுகிறோம். எப்போ தும் உபத்திரவமற்ற சொகுசான வாழ்வை வாழவே நினைக்கிறோம். கிறிஸ்தவ வாழ்வென்பது பஞ்சு மெத்தையில் படுத்துக் கனாக்காணும் வாழ்வல்ல; அது உபத்திரவங்களினூடாகச் சாதிக்கும் வாழ்வு. இந்நாட்களில் இன்னும் அதிகமாக நம்மை ஆயத்தப்படுத்துவோம். கிறிஸ்துவுக்குள் பெலப்படுவோம். “எப்படியெனில், கிறிஸ்துவினுடைய பாடுகள், எங்களிடத்தில் பெருகுகிறதுபோல, கிறிஸ்துவினாலே எங்களுக்கு ஆறுதலும் பெருகுகிறது” (2கொரிந்தியர் 1:5). அவ்வா றாக நாம் ஆறுதலின் தேவனைப் பற்றிக்கொள்வோமாக.
ஜெபம்: சகல ஆறுதலின் தேவனே, உம்மிடமிருந்து ஆறுதலைப் பெற்றிருக்கிற நான், பிறரின் துயரில் பங்கெடுக்கவும் என்னாலே அவர்கள் ஆறுதல் பெருகுவதற்கும் எனக்குக் கிருபை செய்தருளும். ஆமென்.