ஜெபக்குறிப்பு: 2022 பிப்ரவரி 28 திங்கள்

இஸ்ரவேலின் தேவன் தம்முடைய ஜனங்களுக்குப் பெலனையும் சத்துவத்தையும் அருளுகிறவர்; தேவனுக்கு ஸ்தோத்திரமுண்டாவதாக (சங்.68:35) இம்மாதம் முழுவதும் நம்முடைய வேண்டுதலின் சத்தத்துக்கு கர்த்தர் செவிசாய்த்தபடியால் அவருக்கு நன்றியறிதலான ஸ்தோத்திரங்களைச் செலுத்தி அவரை மகிமைப்படுத்தி உயர்த்துவோம். ஆமென்.


பிரியமானவர்களே, நம்முடைய இருதயம் நம்மைக் குற்றவாளிகளென்று தீர்க்காதிருந்தால், நாம் தேவனிடத்தில் தைரியங்கொண்டிருந்து, அவருடைய கற்பனைகளை நாம் கைக்கொண்டு அவருக்கு முன்பாகப் பிரியமானவைகளைச் செய்கிறபடியினால் நாம் வேண்டிக்கொள்ளுகிறதெதுவோ அதை அவராலே பெற்றுக்கொள்ளுகிறோம் (1 யோவான் 3:21-22).

அர்த்தமுள்ள தாக்குதல்

தியானம்: 2022 பிப்ரவரி 28 திங்கள் | வேத வாசிப்பு: ஆதியாகமம் 22:8-12

பின்பு ஆபிரகாம் தன் குமாரனை வெட்டும்படிக்குத் தன் கையை நீட்டி கத்தியை எடுத்தான் (ஆதியாகமம் 22:10).

20ஆம் நூற்றாண்டின் மிகச் சிறந்த ஓவியர், பப்லோ பிக்காஸோ ஆவார். தனிச் சிறப்புடைய அவருடைய ஓவியங்களின் இரகசியம் என்னவென்று கேட்டபோது, “இன்றைய உலகில் எவரும் எதையும் அர்த்தமுள்ளதாகச் செய்யவில்லை. நான் மட்டும் ஏன் அர்த்தமுள்ள ஓவியங்களைத் தீட்டவேண்டும்?” என்றார். ஆம், இந்த உலகம் எதையும் அர்த்தமுள்ளதாகச் செய்வதில்லை.

ஈசாக்கைப் பலியிடும்படி தேவன் கூறியபோது, ஆபிரகாமின் மனதில் என்ன தோன்றியதோ, நாமறியோம். எனினும், ஈசாக்கு என்ற ஏகசுதனைப் பெற, நூறு வருடங்கள் பொறுமையாகக் காத்திருந்தவர் ஆபிரகாம். இங்கே ஒரு தகப்பனின் அன்பைவிட இன்னும் அநேக காரியங்கள் உள்ளன. ஆபிரகாமின் சந்ததியாருக்குத் தேவன் ஏராளமான ஆசீர்வாதங்களையும், வாக்குத்தத்தங்களையும் தந்திருந்தார். இந்த ஏகசுதனைப் பலியிட்டால் அவனுக்கு எப்படி சந்ததி உண்டாகும்? தன் குமாரனை தகன பலியாகச் செலுத்துவதன் மூலம் தேவனுடைய எதிர்கால வாக்குத் தத்தங்கள் என்னவாகும் என்று சிந்திக்காமல், தேவன் தந்த குமாரனைக் கொல்ல கத்தியை எடுத்தார் ஆபிரகாம். ஆபிரகாமின் மனதில் என்னதான் இருந்தாலும், கீழ்ப்படிதலுள்ள தன் வேலையை நிறுத்தவில்லை. பலிபீடத்தில் கட்டைகளை அடுக்கினார். கை, கால்கள் கட்டப்பட்டவனாய் தன் குமாரனை அந்தக் கட்டைகளின்மேல் கிடத்தினார். அவனைக் கொல்லத் தன் கையை நீட்டி கத்தியையும் எடுத்தார்.

ஆபிரகாமின் முந்திய அனுபவங்களிலிருந்து, தேவனிடத்தில் கேள்விகள் கேட்கக் கூடாது என்றும், தேவன் கூறியதைச் செய்வதில் காலதாமதம் காட்டக்கூடாது என்றும் அறிந்திருந்தார். தன் உணர்வுகளைச் சிறைப்படுத்திவிட்டு, விசுவாசத்துடன் தேவன் செய்ய சொன்னதைச் செய்ய முற்பட்டார். மனதிற்கு கஷ்டமாக இருந்த போதிலும், பலிபீடத்தில் தன் மகனை கட்டையின்மீது கிடத்துவது அத்தனை இலேசானதாக இருந்திருக்காது. “கர்த்தருடைய சத்தத்திற்குக் கீழ்ப்படிகிறதைப் பார்க்கிலும், சர்வாங்க தகனங்களும் பலிகளும் கர்த்தருக்குப் பிரியமாயிருக்குமோ?” (1சாமு.15:22) என்று வாசிக்கிறோம். “நீங்கள் என்னிடத்தில் அன்பாயிருந்தால், என் கற்பனைகளைக் கைக்கொள்ளுங்கள்” (யோவான் 14:15) என்றார் இயேசு.

பிரியமானவர்களே, உலக ஞானத்துக்கு அப்பாற்பட்ட விசுவாசத்தில் நிலை நிற்க தேவன் நம்மை அழைப்பாரானால், முதலாவது நாம்தான் அதற்குக் கீழ்ப்படிய வேண்டும். ஆபிரகாமைப்போல நாம் கீழ்ப்படிய ஆயத்தமானால் மாத்திரமே, நமது செயல்கள் அர்த்தமுள்ளவைகளாக இருக்கும். ஏனென்றால், நாம் யாருக்கு கீழ்ப்படிகின்றோம் என்பதிலேயே நம் வாழ்க்கைக்கான அர்த்தம் பொதிந்துள்ளது.

“ஏன்?” என்பதை உங்களால் புரிந்துகொள்ள முடியாவிட்டால், “யார்?” என்பவரை நம்புங்கள்.

ஜெபம்: சர்வ வல்லமையுள்ள தேவனே, விசுவாசத்தில் நிலைத்துநிற்கவும், எங்கள் செயல்கள் அர்த்தமுள்ளவைகளாயிருப்பதற்கும் உமது ஆவியினால் எங்களை நிரப்பும். ஆமென்.

ஜெபக்குறிப்பு: 2022 பிப்ரவரி 27 ஞாயிறு

பரலோகத்தின் தேவனானவர் எங்களுக்குக் காரியத்தைக் கைகூடி வரப்பண்ணுவார்; அவருடைய ஊழியக்காரராகிய நாங்கள் எழுந்து கட்டுவோம் (நெகேமி. 2:20) இந்த நாளிலும் அனைத்து திருச்சபை வளர்ச்சிப் பணிகளுக்காகவும், வாலிபர்கள் இளைஞர்கள் மத்தியிலே அசைவை ஏற்படுத்தக்கூடிய வகையில் வல்லமையாய் ஊழியஞ் செய்யும் ஊழியர்கள் எழும்பவும் ஜெபம் செய்வோம்.

தெய்வீக முன்னேற்பாடு

தியானம்: 2022 பிப்ரவரி 27 ஞாயிறு | வேத வாசிப்பு: ஆதியாகமம் 22:6-9

அதற்கு ஆபிரகாம்: என் மகனே, தேவன் தமக்குத் தகனபலிக்கான ஆட்டுக்குட்டியைப் பார்த்துக்கொள்வார் என்றான் (ஆதியாகமம் 22:8).

ஒரு சிறு பெண் நீண்ட தூரப்பயணம் சென்றாள். அவள் சென்ற இரயில் வழியில் ஏராளமான ஆறுகளைக் கடக்கவேண்டியிருந்தது. ஒவ்வொரு தடவையும் இரயில் தண்ணீரைக் கிட்டிச்சேர்ந்ததும், அவளுடைய மனதில் ஒரு சந்தேகம் எழும்பும். ஆற்றில் புரண்டோடும் தண்ணீரை இந்த இரயில் எப்படி கடக்க முடியும்? ஒவ்வொரு தடவையும் இரயில் ஆற்றைச் சமீபித்தபோது, கடந்து செல்வதற்காக அங்கே ஒரு பாலம் இருப்பதைக் கண்டாள். கடைசியில் அவள் நிம்மதிப் பெருமூச்சு விட்டவளாக, “நாம் ஆறுகளைக் கடந்துசெல்ல யாரோ பாலங்களை வைத்திருக்கிறார்கள்” என்றாள்.

தன் மகனைப் பலியிடவேண்டிய அவசியம் வந்தபோதும், ஆபிரகாம் இது போன்ற நம்பிக்கைதான் கொண்டிருந்தார். இதுபோல ஆபிரகாமின் விசுவாசம் இந்தளவுக்குச் சோதிக்கப்பட்டதில்லை. என்றாலும், அவரால், “பலிக்கான ஆட்டுக் குட்டியைத் தேவன் பார்த்துக்கொள்ளுவார்” என்று மகனிடம் கூறத்தான் முடிந்தது. அதைத் தேவன் எப்படி செய்வார் என்பதுகூட ஆபிரகாமுக்குத் தெரியாது. ஆனால், எந்த விதத்திலாகிலும் தேவன் செய்துமுடிப்பார் என்று ஆபிரகாம் விசுவாசித்தார்.

இந்த விசுவாசம் நமக்கும் அவசியம். நமக்குத் தேவையானதைத் தேவன் எப்படித் தருவார் என்று நமக்குத் தெரியாது. நாம் நினைத்திராத வழிகளில் அவரால் அவற்றை தரமுடியும். தேவன் நமது தேவைகளை எப்படியாவது சந்திப்பார் என்பதே நமது நம்பிக்கையாக இருக்கவேண்டும். நமக்குத் தேவையானதை அவரே தெரிந்து தருவார். “என் தேவன் தம்முடைய ஐசுவரியத்தின்படி உங்கள் குறைவையெல்லாம் கிறிஸ்து இயேசுவுக்குள் மகிமையிலே நிறைவாக்குவார்” (பிலி. 4:19) என்கிறார் பவுல். தேவன் உங்கள் சரீரத்திற்கு அற்புத சுகத்தைத் தந்து குணமாக்கும் தேவையைச் சந்திக்கலாம்; அல்லது சுகவீனத்தைத் தாங்கும் சக்தியைத் தரலாம். பணத்தேவைகளை யாராவது ஒருவருடைய கொடையின்மூலம் நிறைவாக்கலாம். இப்படியாக அவர் என்னவும் செய்வார். அவர் எப்படிச் செய்கிறார் என்பது தெய்வீக இரகசியம்.

தகனப்பலிக்கான ஆட்டை எடுத்துக்கொண்டு செல்லாத ஆபிரகாமிடம், மகன், ஆட்டுக்குட்டி எங்கே என்று கேட்டதுபோல, நாமும் பல கேள்விகளோடு இருக்கலாம். நிச்சயமாக கர்த்தர் நமது தேவையை அறிந்தவராகவே இருக்கின்றார். நமது தேவையை அவர் சந்திப்பது அவருடைய கிருபை! நாம் அவரை அறிந்திருக்கிறோம், ஆகையால், நமக்கு வேறு சிந்தனை தேவையில்லை.

நமது தேவைகள் தேவன் நமக்கு அவற்றைத் தருவதற்கு ஒரு வாய்ப்பு!

ஜெபம்: எங்களது தேவைகளையெல்லாம் சந்திக்கும் யெகோவாயீரேயாகிய தேவனே, பாடுகள் எங்களைச் சூழ்ந்துகொள்ளும்போது அவைகளெல்லாவற்றையும் கடந்து செல்வதற்கான வழிகளையும் முன்பே எங்களுக்கு ஆயத்தப்படுத்தி வைத்திருப்பதற்காக உமக்கே சகல கனத்தையும் மகிமையையும் செலுத்துகிறோம். ஆமென்.