ஜெபக்குறிப்பு: 2022 மார்ச் 31 வியாழன்

என் ஆத்துமாவே, .. தேவனை நோக்கிக் காத்திரு; என் முகத்திற்கு இரட்சிப்பும் என் தேவனுமாயிருக்கிற வரை நான் இன்னும் துதிப்பேன் (சங்.42:11) நாம் வேண்டிக்கொண்டதற்கும் நினைத்த தற்கும் அதிகமான நன்மைகளாலே கர்த்தர் இம்மாதம் முழுவதும் நம்மை நிரப்பி வழிநடத்தினார். மரித்தும் எழுந்தும் பிழைத்துமிருக்கிற அவருக்கே சகல கனத்தையும் மகிமையும் செலுத்துவோம்.

கிறிஸ்துவுக்குள் வேர் கொள்வோம்!

தியானம்: 2022 மார்ச் 31 வியாழன் | வேத வாசிப்பு: கொலோ.2:5-12,1பேது.1:7-9

நீங்கள் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை ஏற்றுக்கொண்டபடியே அவருக்குள் வேர்கொண்டு… அவருக்குள் நடந்துகொள்ளுங்கள் (கொலோ.2:6).

தன்னை முற்றுமாக கிறிஸ்துவின் சித்தத்திற்கு ஒப்புக்கொடுத்த சவுல், தேவன் தெரிந்துகொண்ட பாத்திரமாக மாற இரு முக்கிய காரியங்கள் அமைந்தன.

1. கிறிஸ்துவுக்குள் வேர் கொண்டார்,

2. கிறிஸ்துவைப்போல கனி கொடுத்தார்.

ஒரு மரம் நல்ல கனியைக் கொடுக்க வேண்டுமானால் அது தன் வேரை மிகவும் ஆழமாக செலுத்தி நீரையும் கனிப் பொருட்களையும் நித்தமும் பெற்றுக்கொள்ள வேண்டும். இவை இரண்டும் தடைபடுமாகில் அது பிரயோஜனமற்ற மரமாகவே போய்விடும். பவுலின் வாழ்க்கையில் இவை தடையின்றி கிடைத்தன. கிறிஸ்துவுக்காக கனி கொடுப்பதற்கு கிறிஸ்துவுக்குள் பவுல் விட்டுச்சென்ற வேர் “விசுவாசம்” என்னும் வேராகும். ஒரு மரத்தின் கனியிலிருந்து அதன் வேர் எத்தனை ஆழமாகச் சென்றுள்ளது என்பதை நாம் அறிந்துகொள்ளமுடியும்.

பவுலின் வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றங்கள், கிறிஸ்துவைக் குறித்த பக்தி வைராக்கியம், கிறிஸ்துவைக் குறித்ததான சாட்சி, அவர் கிறிஸ்துவிலே கொண்டிருந்த விசுவாசத்தின் உறுதியை நமக்கு எடுத்துக்காட்டுகிறது. இப்படியாக பவுல் வாழ்ந்தபடியால்தான், இறுதியாக, நல்ல போராட்டத்தைப் போராடினேன், ஓட்டத்தை முடித்தேன், விசுவாசத்தைக் காத்துக்கொண்டேன் (2 தீமோ.4:7) என்று கூறினார். கிறிஸ்தவ ஓட்டத்தில் அநேகர் விசுவாசத்தைக் காத்துக்கொள்ளாமல் தங்கள் ஓட்டத்தை முடிக்காமல்போன சரித்திரங்கள் உண்டு. கற்பாறை இடங்களில் விதைக்கப்பட்டவன், வசனத்தைக் கேட்டு, உடனே அதைச் சந்தோஷத்தோடே ஏற்றுக்கொள்ளுகிறவன்; ஆகிலும் தனக்குள்ளே வேரில்லாதவனாய், கொஞ்சக்காலமாத்திரம் நிலைத்திருப்பான்; வசனத்தினிமித்தம் உபத்திரவமும் துன்பமும் உண்டானவுடனே இடறலடைவான் (லூக்.13:20,21).

அன்பானவர்களே, உண்மையாகவே பவுலைப்போல கிறிஸ்துவுக்காக வாழ வேண்டுமாகில், முதலாவதாக, நீங்கள் “கிறிஸ்துவுக்குள் விசுவாசம்” என்னும் வேர்கொள்ளவேண்டும். இந்த வேர் உறுதியாக நிலைத்திருக்குமாகில் இவ்வுலகிலே நல்ல போராட்டத்தை நீங்கள் போராடி உங்கள் ஓட்டத்தை வெற்றியோடு ஓடிமுடித்து கிறிஸ்துவோடு நித்திய நித்திய காலமாக நீங்கள் ஜீவிக்கும் பெரிதான சிலாக்கியத்தைப் பெற்றுக்கொள்ள முடியும்.

ஆகவே, “பாரமான யாவற்றையும், நம்மைச் சுற்றி நெருங்கி நிற்கிற பாவத்தையும் தள்ளிவிட்டு, விசுவாசத்தைத் துவக்குகிறவரும் முடிக்கிறவருமாயிருக்கிற இயேசுவை நோக்கி நமக்கு நியமித்திருக்கிற ஓட்டத்தில் பொறுமையோடு ஓடக்கடவோம்” (எபி.12:1) என்று கூறப்பட்டபடி, இன்றிலிருந்து உங்கள் விசுவாச ஓட்டத்தை ஓட ஆரம்பியுங்கள்.

ஜெபம்: தேவனே! நான் உம்மிலே விசுவாசம் என்னும் வேர் கொண்டு வளர்ந்து என் ஜீவிய ஓட்டத்தை ஓட என்னைக் கரம் தாங்கி வழிநடத்தும். ஆமென்.

ஜெபக்குறிப்பு: 2022 மார்ச் 30 புதன்

மாயையைப் பெருகப்பண்ணுகிற அநேக விசேஷங்கள் உண்டாயிருக்கிறபடியால் அதினாலே மனுஷருக்குப் பிரயோஜனமென்ன? (பிரச.6:11) என்று கர்த்தருடைய வார்த்தை எச்சரிக்கிறபடி அனைத்து கிறிஸ்தவ வாலிப சகோதரர்களும் சகோதரிகளும் கண்களுக்கு இன்பமாய் தோன்றுகிற மாயைக்குள் சிக்கிடாதபடி வசனத்தினால் தங்களைக் காத்துக்கொள்ளத் தக்கதாக மன்றாடுவோம்.

தேவசித்தம் செய்ய நம்மை ஒப்புக்கொடுப்போம்!

தியானம்: 2022 மார்ச் 30 புதன் | வேத வாசிப்பு: அப்போஸ்தலர் 9:1-16

“ஆண்டவரே, நான் என்ன செய்ய சித்தமாயிருக்கிறீர்” (அப்.9:6).

வனாந்தர வாழ்க்கையில் இயேசுகிறிஸ்துவோடு நடந்துவந்து அவரை உங்கள் சரீரமாகிய ஆலயத்தில் வாசம் பண்ண அழைக்க உங்கள் சரீரத்தை பரிசுத்தம் பண்ணிய நீங்கள், அடுத்ததாகச் செய்யவேண்டியது என்னவென்பதைக் குறித்து சிந்திப்போம்.

சவுலின் வாழ்க்கையைச் சற்று சிந்தித்துப் பாருங்கள். சவுல் சகல வேத சட்டதிட்டங்களையும் கற்றறிந்ததினால், தன்னைப் பரிசுத்தமானவன் என்று எண்ணியிருந்தான். தன் சரீரமாகிய ஆலயத்தில் இயேசுகிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளாமல், சீஷர்களை அடித்து துன்புறுத்துகிறவனாயிருந்தான். தன் கண்களில் படும் எந்தக் கிறிஸ்தவனையும் தப்பவிடக்கூடாது என்ற தீர்மானத்தோடு பிரதான ஆசாரியரிடத்திற்குச் சென்று தன் பேச்சு வன்மையால் அவர்களை வசப்படுத்தி அவர்களிடமிருந்து கட்டளைபெற்று தமஸ்குவில் இருக்கும் கிறிஸ்தவர்களைத் துன்புறுத்துவதற்காக விரைந்து சென்றுகொண்டிருந்தான். அவன் கால்கள் கிறிஸ்தவர்களுக்குத் தீங்கு விளைவிக்க தீவிரமாய்ச் சென்றது. கர்த்தரிடம் அனனியா பவுலைக் குறித்து சொல்லும்போது: ஆண்டவரே, இந்த மனுஷன் எருசலேமிலுள்ள உம்முடைய பரிசுத்தவான்களுக்கு எத்தனையோ பொல்லாங்குகளைச் செய்தானென்று அவனைக்குறித்து அநேகரால் கேள்விப்பட்டிருக்கிறேன். இங்கேயும் உம்முடைய நாமத்தைத் தொழுதுகொள்ளுகிற யாவரையுங் கட்டும்படி அவன் பிரதான ஆசாரியர்களால் அதிகாரம் பெற்றிருக்கிறானே என்றான் (அப்13:14).

இப்படிப்பட்ட சவுல் உண்மையாகவே கிறிஸ்தவர்களைத் துன்பப்படுத்தவில்லை. மாறாக அவன் கிறஸ்துவையே துன்பப்படுத்தியதால் கிறிஸ்து இடைமறித்து அவனை சந்தித்து, “சவுலே, சவுலே நீ துன்பப்படுத்துகிற இயேசு நானே” என்று கூறி தடுத்ததும், அவன் தன் குற்றத்தை உணர்ந்து மனமுடைந்தான். உடனடியாக, “ஆண்டவரே, நான் என்ன செய்ய சித்தமாயிருக்கிறீர்?” என்ற கேள்வி யோடு தன்னை முற்றும் அவருக்கு ஒப்புக்கொடுத்து தன்னை நடத்தும் படி விட்டுக்கொடுத்தான்.

அருமையான தேவபிள்ளையே, சவுலைப்போலவே தேவன் உங்களை சந்தித்த போதும் அவர் சித்தம் செய்வதற்கு உங்களை ஒப்புக்கொடுக்காமல் இத்தனை காலமும் வாழ்ந்து வருகிறீர்களா? இன்று ஆண்டவர் அழைப்பை ஏற்று பவுலைப் போல தேவசித்தத்திற்கு முழுவதுமாக ஒப்புக்கொடுக்க முன்வாருங்கள். அவர் உங்களை ஏற்றுக்கொண்டு உள்ளும் புறம்பும் அவர் இரத்தத்தால் கழுவி, தமக்கு உகந்த பாத்திரமாக எடுத்து உபயோகப்படுத்துவார்.

ஜெபம்: அன்பின் தேவனே! பவுலைப்போல இன்றிலிருந்து நான் உம் சித்தத்தின் பாதையில் செல்ல என்னை உமக்கு ஒப்புக்கொடுக்கிறேன் ஆமென்.