ஜெபக்குறிப்பு: 2022 மார்ச் 9 புதன்

உமது அடியேன் உமது சந்நிதியில் செய்கிற விண்ணப்பத்தையும் வேண்டுதலையும் திருவுளத்தில் கொண்டருளும் (2நாளா.6:19) இவ்வாக்கைப்போலவே இந்த நாள் அலுவலக ஜெபக் கூட்டத்தை கர்த்தர் ஆசீர்வதித்து ஏறெடுக்கப்படும் விண்ணப்பங்களுக்கு அவருடைய தயவுள்ள சித்தத்தின்படியே நல்ல பதில்களைத் தரவும், செய்தியாளரை கர்த்தர் உபயோகப்படுத்தவும் ஜெபிப்போம்.

ஆத்தும பசி!

தியானம்: 2022 மார்ச் 9 புதன் | வேத வாசிப்பு: சங்கீ.107:1-8;யோவான் 6:28-35

அவர் இரவும் பகலும் நாற்பது நாள் உபவாசமாயிருந்தபின்பு, அவருக்குப் பசியுண்டாயிற்று (மத்தேயு 4:2).

நாற்பது நாட்கள் உபவாசத்தை மேற்கொண்ட இயேசுவுக்கும் இறுதியில் பசி உண்டாயிற்று. இதையறிந்த சாத்தான், அவரும் இந்த உலகத்திலே அதிக நாட்கள் ஜீவிக்க விரும்புவார் என்று நினைத்து, இயேசுவைப் பார்த்து, அவர் மாம்ச பசியைப் போக்க, அவருக்கு முன்னிருந்த கல்லுகளை அப்பமாக்கி உண்ணும்படி கூறினான். ஆனால் இயேசுவோ, இவ்வுலகத்தில் தொடர்ந்தும் வாழ வாஞ்சித்து வந்தவர் அல்ல. அவருக்கு ஏற்பட்ட பசி மாம்ச பசியும் அல்ல. அவர் தாம் விட்டு வந்த பரலோகத்திற்குத் திரும்பவும் செல்லவும், நம் ஒவ்வொருவரையும் அழைத்துச் செல்லவும் வந்தவராகையால், அவ்விடத்திற்குச் செல்லும் ஆத்துமாவைப் போஷிக்க வேண்டியதிருந்தபடியால், ஆத்தும பசியே அவருக்கு ஏற்பட்டது. எனவே தான் சாத்தானைப் பார்த்து, மனுஷன் அப்பத்தினால் மாத்திரமல்ல, தேவனுடைய வாயிலிருந்து புறப்படும் ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான் என்று கூறினார்.

இதைப்போன்று உபவாசமிருப்பவர்களை சாத்தான் அவர்களது சரீரத்தைக் குறித்த அக்கறையையும், நீண்ட நாட்கள் உயிர் வாழவேண்டுமென்ற ஆசையையும் கொடுத்து அவர்களை சோதிப்பான். எனவேதான் நம்மில் சிலர் உபவாசமிருந்தாலும் இருதயமோ உலகத்தையும், சரீரத்தையும் நோக்கியதாக இருப்பதினால் அவர்கள் உபவாசத்தின் பலனை அடையாமற் போகின்றனர். உபவாசிக்கின்ற நம்மிடம் ஆவிக்குரிய பசியும் ஆத்தும பசியும் நீதியைக் குறித்த பசிதாகமும் இருக்கவேண்டும். உபவாசிக்கின்ற நமது நோக்கமும் எதிர்பார்ப்பும் தேவனுக்கு முன்பதாக சரியானதாயிருக்கவேண்டும். அப்பொழுது அந்தரங்கத்தில் உபவாசிக்கிற நமக்கு வெளியரங்கமாக பலனளிப்பார்.

அருமையானவர்களே, இன்று கிறிஸ்துவின் அடிச்சுவடுகளைப் பின்பற்றுகிற நமக்கு எப்படியான பசி ஏற்படுகிறது? மாம்ச பசியா? ஆத்தும பசியா? மாம்ச பசியை மட்டும் போக்குவதற்குக் கரிசனையோடு இருப்பீர்களென்றால், பரலோக ராஜ்யத்தை நோக்கும் முதல் படியிலேயே நாம் விழுந்து போகிறவர்களாக இருப்போம். எனவே நமது ஆத்துமாவை இந்நாட்களில் போஷித்துக்கொள்ளத் தவறாதிருப்போம். இப்படியான போஷாக்கை நீங்கள் தினமும் பெற்றுக்கொள்வதின் மூலம், நமக்கு ஏற்படும் அனைத்து சோதனைகளிலும் நாம் ஜெயத்தைப் பெற்றுக் கொள்ளலாம்.

நீதியின்மேல் பசிதாகமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் திருப்தியடைவார்கள் (மத்.5:6).

ஜெபம்: அன்பின் தேவனே, எங்கள் ஆத்துமாவிலே நாங்கள் பசியடைந்து, ஆத்துமாவை உமது வார்த்தையாகிய அப்பத்தால் போஷித்துக்கொள்ளவும், உம்முடைய அடிச்சுவடுகளை மட்டுமே பின்தொடருகிறவர்களாகக் காணப்படுவதற்கும் எங்களை வழிநடத்தும். ஆமென்.