வாக்குத்தத்தம்: 2022 மார்ச் 1 செவ்வாய்

ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால் புதுச்சிருஷ்டியாயிருக்கிறான்; பழையவைகள் ஒழிந்துபோயின, எல்லாம் புதிதாயின (2கொரி.5:17)


கண்மணியைப் போல என்னைக் காத்தருளும் (சங்.17:8).
வேதவாசிப்பு: எண்ணாகமம் 15,16,17 | மாலை: மாற்கு 08:01-21

ஜெபக்குறிப்பு: 2022 மார்ச் 1 செவ்வாய்

தம்மை நோக்கிக் கூப்பிடுகிற யாவருக்கும், உண்மையாய்த் தம்மை நோக்கிக் கூப்பிடுகிற யாவருக்கும் கர்த்தர் சமீபமாயிருக்கிறார் (சங்.145:18).


கர்த்தர் தமது ஜனத்திற்குப் பெலன் கொடுப்பார்; கர்த்தர் தமது ஜனத்திற்குச் சமாதானம் அருளி, அவர்களை ஆசீர்வதிப்பார் (சங்.29:11) என்ற வாக்கின்படி இப்புதிய மாதத்தை கர்த்தர் ஆசீர்வதித்து குறைவுகளை நிறைவாக்கி, தம்முடைய ஜனத்திற்கு பெலன், சமாதானத்தை சம்பூரணமாய் அருளிச்செய்திட வேண்டுதல் செய்வாம்.

என் வாழ்வை ஆசீர்வாதமாக்கும்!

தியானம்: 2022 மார்ச் 1 செவ்வாய் | வேத வாசிப்பு: ஆதியாகமம்; 22:13-18

நீ என் சொல்லுக்குக் கீழ்ப்படிந்தபடியினால், உன் சந்ததிக்குள் பூமியிலுள்ள சகல ஜாதிகளும் ஆசீர்வதிக்கப்படும் (ஆதியாகமம் 22:18).

ஒரு புதிய மாதத்திற்குள்ளாக கடந்து வந்திருக்கிற நம்மையும் குடும்பத்தையும் ஆசீர்வதித்து நமது தேவைகள் அனைத்தையும் சந்தித்து வழிநடத்த தேவன் கிருபை செய்வாராக!

பிள்ளைகளுக்குப் பாரமாயிருக்கும்படி நீண்டகாலம் வாழ விரும்பும் பெற்றோர் இருக்கிறார்கள். இது நகைப்புக்குரியதாய் இருந்தாலும், சிலவேளைகளில் புரிந்துகொள்ளக் கூடியதாகவும் இருக்கிறது. ஆனால், இது நல்ல உபதேசமல்ல. ஆபிரகாமின் வாழ்க்கை வித்தியாசமான அணுகுமுறையைத் தருகிறது. அது நீடிய ஆயுளாக இருந்தபோதும் ஆசீர்வாதமாய் இருந்தது.

ஆபிரகாம் இளவயதில் மரித்திருந்தால் இன்று நாம் எதை இழந்திருப்போம்? அவரது ஆயுளில் முதல் 75 வருடங்கள், தன் தகப்பனான தேராகுவின் கடமையுணர்ச்சியுள்ள மகனாக வாழ்ந்தார். மனைவியான சாராளுக்கு நல்ல கணவனாக வாழ்ந்தார். ஆபிரகாமின் வாழ்க்கையில் பலவிதமான சோதனைகள், பரீட்சைகளுக் கூடாக தேவன் அவரைப் பரிசுத்தப்படுத்தி, கீழ்ப்படிதலைக் கற்றுக்கொடுத்திருந்தார். கடைசியில் அவரது 99வது வயதில், இந்த உலகம் முழுவதுக்குமே ஓர் ஆசீர்வாதமாக மாறும் வாக்கினைப் பெற்றார். 100 வயதாக இருந்தபோது பிறந்த மகன் ஈசாக்கின் சந்ததியில், இந்த உலகத்து ராஜ்யங்கள் அனைத்துக்கும் நம்பிக்கையும் இரட்சிப்பும் அருளப்போகின்ற மேசியா வந்து பிறந்தார். அவருக்கூடாக முழு உலகத்தாரும் ஆசீர்வதிக்கப்படுவார்கள் என்பதில் எவ்வித சந்தேகமில்லை.

நமது வாழ்வில் தேவன் கிருபையாய்க் கூட்டித்தரும் ஒவ்வொரு வருஷத்தையும் நம்மைச் சுற்றிலும் இருப்பவர்களுக்கு பெரிய ஆசீர்வாதமாக இருப்பதற்கு நமக்கு வழங்கப்பட்ட ஒரு வாய்ப்பு என்று ஏற்று நாம் செயற்படவேண்டும். வயதாகிப்போனாலும் நாம் பிறருக்கு ஆசீர்வாதமாக இருக்கவேண்டும். நமது ஆயுசின் நாட்கள் பெருகும்போது நம் வாழ்வில் கண்ட குறைகள், சுகவீனங்கள் இவைகளின் பட்டியலை நீட்டிக்கொண்டு போகக்கூடாது. முதலில் தேவையற்ற உபதேசம் கொடுப்பதை நாம் நிறுத்தவேண்டும். பிறருக்குத் தேவையான நேரத்தில் உதவி செய்ய ஆயத்தமாய் இருக்கவேண்டும். பிறருக்குத் துன்பம் தரும் செயல்களில் ஈடுபடக்கூடாது. நாம் எப்படி ஆசீர்வதிக்கப்படலாம் என்று சிந்திப்பதைவிட, பிறருக்கு நாம் எப்படி ஆசீர்வாதமாய் இருக்கமுடியும் என்று சிந்திப்போம்.

துன்பப்படுகிறவர்களிடத்தில் சில ஆசீர்வாத வார்த்தைகளைப் பேசலாம். தேவை யுள்ளவர்களுக்கு சிறுசிறு நன்மைகளைச் செய்யலாம். அடுத்தவர்களின் துன்பத்தை வேடிக்கை பார்ப்பவனாய் அல்ல, மனமுவந்து வேண்டிய உதவிகளைச் செய்து உதவுபவனாக இருப்பது நல்லது. வாழ்நாளில் நாம் பிறருக்கு ஆசீர்வாதமாயிருப்பதே நமது இலட்சியமாயிருக்கட்டும்.

அடுத்தவர் துன்பத்தை வேடிக்கைப் பார்ப்பவனாய் அல்ல, மனமுவந்து வேண்டிய உதவிகளைச் செய்து உதவுபவனாக இருப்பது நல்லது!

ஜெபம்: எங்கள் நல்ல ஆண்டவரே, ஆபிரகாமின் வாழ்க்கையிலிருந்து அநேக காரியங்களைக் கற்றுக்கொடுத்தீர். நாங்கள் பிறருக்கு எப்படி ஆசீர்வாதமாக இருக்கலாம் என்பதைப் பற்றியே இனிச் சிந்தித்து செயல்படுகிறவர்களாக காணப்பட எங்களுக்கு உதவி செய்யும். ஆமென்.

ஊழியத்தின் கலவைப்பொருட்கள்!

அதிகாலை வேளையில்…
(மார்ச்-ஏப்ரல் 2022)
Dr.உட்ரோ குரோல்

வேதபகுதி: யாத்திராகமம் 34:1-35


விடியற்காலத்தில் நீ ஆயத்தமாகி, சீனாய் மலையில் ஏறி, அங்கே மலையின் உச்சியில் காலமே என் சமுகத்தில் வந்து நில் (யாத்தி.34:2).


தேவனுடைய சமுகத்தில் அதிகமாகத் தாழ்த்தி தலைகுனியும்; மனிதனே பாவத்தின் முன் தலைநிமிர்ந்து நிற்பான். இந்த உண்மையை பழைய ஏற்பாட்டு பக்தர்களில் மோசே நன்கு அறிந்திருந்தார். இஸ்ரவேலரின் பாவத்துக்கு முன்பாக அவர் நேருக்கு நேர் எதிர்த்து உறுதியுடன் நின்றார். ஒருமுறை மோசே சீனாய் மலையின் மேல் தேவனுடன் உறவாடிக் கொண்டிருக்கையில் இஸ்ரவேலர் பாவத்தில் மூழ்கிவிட்டனர். மலையிலிருந்து கீழே இறங்கிவந்த மோசே, பொன்னால் ஆன கன்றுக்குட்டியையும், மரபை மீறிய இஸ்ரவேலரின் நடவடிக்கையையும் கண்டார். அவரது நேர்மையான கடுங்கோபம் தேவனுடைய சாட்சிப் பலகைகள் இரண்டையும் தரையில் போட்டு உடைத்தது (யாத்.32:19). மக்கள் இந்த பாவத்திற்காகக் கடிந்து கொள்ளப்பட்டனர். 3000 பேர் கொலை செய்யப்பட்டனர். மோசே மீதியுள்ள மக்களுக்காக தேவனிடம் மன்றாடினார். பொன் கன்றுக்குட்டியின் பிரச்சனை முடிந்தது.

ஆனால், இஸ்ரவேலரிடம் இன்னும் அதிகமான பாவங்கள் இருந்தன. உடைத்துப்போடப்பட்ட சாட்சிப் பலகைகளை மீண்டுமாக சரிசெய்ய வேண்டும். எனவே தேவன் மோசேயை மீண்டுமாக சீனாய் மலைக்கு ஏறிவரக் கட்டளையிட்டார். விடியற்காலத்தில் நீ ஆயத்தமாகி, சீனாய் மலையில் ஏறி, அங்கே மலையின் உச்சியில் காலமே என் சமுகத்தில் வந்து நில் (யாத்.34:2). “ஆயத்தமாகி” , “ஏறி வா”, “வந்து நில்” ஆகிய மூன்று சொற்களையும் கவனியுங்கள். ஊழியத்திற்கு அவசியமான இம்மூன்று முக்கியமான காரியங்களை மோசே புதுப்பித்துக்கொண்டார். தேவனு டைய ஊழியத்துக்கான அழைப்பில் இம் மூன்றும் அத்தியாவசியமானவை.

1. ஆயத்தமாகுதல்:
ஆயத்தமாகவும், விருப்பமுடையவனாகவும், உபயோகிக்கப்படத்தக்க அர்ப்பணிக்கும் மனிதனையே தேவன் உபயோகிக்கிறார். நாம் ஆயத்தமாக இல்லையெனில் தேவன் நம்மையல்லாது வேறோருவரை உபயோகிப்பார். நமக்கு வரவேண்டிய ஆசீர்வாதங்களை நாம் இழந்துபோக நேரிடும். அப்.பவுல் ஊழியம் செய்ய எல்லா வேளைகளிலும் ஆயத்தமாக இருந்த ஓர் மனிதர். “ஆகையால் ரோமாபுரியிலிருக்கிற உங்களுக்கும் என்னால் இயன்றமட்டும் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்க விரும்புகிறேன்” (ரோமர் 1:15) பவுலுக்கு பிரசங்கம் பண்ணுவது மிக விருப்பமானதொன்று. “எருசலேமில் நான் கர்த்தராகிய இயேசுவின் நாமத்திற்காகக் கட்டப்படுவதற்கு மாத்திரமல்ல, மரிப்பதற்கும் ஆயத்தமாயிருக்கிறேன்” (அப்.21:13). அநேக ஆண்டுகள் தனது ஆண்டவருக்காக உழைத்த பவுல், “நான் இப்பொழுதே பானபலியாக வார்க்கப்பட்டுப் போகிறேன்; நான் தேகத்தை விட்டுப்பிரியும் காலம் வந்தது. நல்ல போராட்டத்தைப் போராடினேன், ஓட்டத்தை முடித்தேன், விசுவாசத்தைக் காத்துக்கொண்டேன்” (2 தீமோ.4:6-7) என்று மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறார். அப். பவுல் நற்செய்தியை அறிவிக்க ஆயத்தமாகவும், அதனால் பாடுபடவும், ஊழியத்தில் மரிக்கவும் ஆயத்தமாக இருந்தார்.

2. நெருங்கிச்சேருதல்:
தேவனுடைய ஊழியத்தைச் செய்ய முதலாவது அவரிடத்தில் வந்து அவர் தரும் இரட்சிப்பைப் பெற்றுக்கொள்ள வேண்டும். தேவன் மோசேயை அழைத்தது இரட்சிப்பைத் தருவதற்கல்ல; அவருடன் ஐக்கியம் கொள்வதற்காகவே. இரட்சிப்புக்கு அழைத்த ஆண்டவர் பின்னர் “வாருங்கள், போஜனம் பண்ணுங்கள்” (யோவா. 21:12) என்று அழைக்கிறார். மோசேயைப்போல நம்மையும் ஆண்டவருடன் ஐக்கியம் கொள்ள அவர் அழைக்கிறார். “ஜெபத்தில் நாம் அவருடன் ஐக்கியம் கொள்ளுகிறோம்.” இரட்சிப்பைப் போலவே, ஜெபமும் ஐக்கியமும் தேவனுடைய ஊழியத்துக்கு முந்தியது (எபே. 6:18-20).

3. அர்ப்பணித்தல்:
தேவனுடைய ஊழிம் செய்யவும் பாவத்தை எதிர்கொள்ளவும் நாம் நம்மை தேவனிடத்தில் அர்ப்பணிக்கவேண்டும். அப்.பவுல் ரோம விசுவாசிகளை “நீங்கள் உங்கள் சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக் கொடுக்கவேண்டும்” என்று வேண்டிக்கொண்டார் (ரோமர் 12:1). தேவனுக்கு ஊழியஞ் செய்ய ஆயத்தமாயிருக்க வேண்டும். அதேவேளையில் உபயோகமான ஊழியத்துக்கு தேவனிடம் நெருங்கிவர ஜெபிக்கவேண்டும். நம்முடைய சொல், செயல், சிந்தை எல்லாவற்றையும் மோசேயைப்போல தேவனுக்கு அர்ப்பணிக்கவேண்டும். அப்பொழுது நாம் பாவத்தின் பிரசன்னத்திலிருந்து விலகி உறுதியாய் வெற்றி பெற்று வாழமுடியும்.

தேவனுடைய அழைப்பைப் பெற்ற மோசே, “முந்தின கற்பலகைகளுக்கு ஒத்த இரண்டு கற்பலகைகளை இழைத்து, அதிகாலமே எழுந்திருந்து, கர்த்தர் தனக்குக் கட்டளையிட்டபடியே அவ்விரண்டு கற்பல கைகளையும் தன் கையிலே எடுத்துக்கொண்டு, சீனாய்மலையில் ஏறினான்” (யாத்.34:4). அதிகாலமே மோசே ஊழியத்துக்கு ஆயத்தமானார். இஸ்ரவேலரின் பாளையத்தில் இன்னும் அநேக பாவங்கள் இருந்தன. அவற்றை எதிர்கொள்ள மோசே பாவத்துக்கு எதிராக உறுதியாய் நிற்க வேண்டியதாயிருந்தது. ஒவ்வொரு விசுவாசியும் மோசேயைப் போலவே அதிகாலையில் எழுந்து, ஜெபத்தில் தேவனிடம் நெருங்கிவந்து அவருக்கு அர்ப்பணிக்க வேண்டும். இவ்வாறு செய்தால் அன்றைய நாள் நல்லமுறையில் அமையும்.


அதிகாலைப் பாடல்:

நல் மீட்பர் பட்சம் நில்லும்! ரட்சணிய வீரரே!
ராஜாவின் கொடியேற்றி போராட்டம் செய்யுமே!
சேனாதிபதி இயேசு மாற்றாரை மேற்கொள்வார்;
பின் வெற்றி கிரீடம் சூடி செங்கோலும் ஓச்சுவார்.

மொழியாக்கம்: Mrs.அகஸ்டா மங்களதுரை

வாசகர்கள் பேசுகிறார்கள்

(மார்ச்-ஏப்ரல் 2022)

[01]
கர்த்தருக்கு ஸ்தோத்திரம், என்னுடைய வயது 73, கடந்த ஜுன் மாதம் வந்த கொரோனாவிலிருந்து தேவன் நல்லசுகம் தந்தார். தேவனுக்கு மகிமை, தங்கள் தியானபுத்தகம் அனுதினமும் கிறிஸ்துவுடன் ஆத்துமாவுக்கு அதிக பிரயோஜனமாக உள்ளது. சத்தியவசன ஊழியத்திற்காகவும், தியானத்தை எழுதுகிற சகோதர, சகோதரிகளுக்காகவும் ஜெபிக்கிறோம்.

Mrs.Gunaselvi Malliga, Nagercoil


[02]
கர்த்தருக்குள் அன்பான சகோதரருக்கு, நீங்கள் அனுப்பிய காலண்டர், அனுதினமும் கிறிஸ்துவுடன், சத்தியவசனம் சஞ்சிகை எங்களுக்கு மிக பயனுள்ளதாக உள்ளது. நீங்கள் அனுப்பும் ஜெபகுறிப்புகளை வைத்து குடும்பமாக ஜெபிக்கிறோம். சத்திய வசன டிவி நிகழ்ச்சிகளை பார்த்து பயனடைகிறோம். தியான புத்தகத்தின் அட்டவணையைப் பயன்படுத்தி 2021 ஆண்டு நானும் எனது கணவரும் பரிசுத்த வேதாகமத்தை வாசித்து முடித்துவிட்டோம். கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.

Mrs.Beulah James, Chennai


[03]
அன்பு சகோதரருக்கு, புதுச்சேரியிலிருந்து எழுதுகிறேன். 2021 ஆம் ஆண்டு அனுதினமும் கிறிஸ்துவுடன் தியான புத்தகத்தில் பிரசுரமாகும் அட்டவணைப்படி பரிசுத்த வேதாகமத்தை முழுவதுமாக ஒருமுறை வாசித்து முடித்துள்ளேன். இதுவே எனக்கு வேதாகமத்தை முழுவதுமாக வாசிப்பது முதல்முறை. இந்த வருடமும் அட்டவணைப்படி நானும் எனது தாயாரும் வாசித்து வருகிறோம். தியானங்களை அனு தினமும் வாசித்து பயன் அடைகிறோம். மிக்க நன்றி.

Mr.Sunil JacobRaj, Puducherry


[04]
கிறிஸ்துவுக்குள் அன்பான ஐயா, 2021 ஆம் ஆண்டில் பரிசுத்த வேதாகமத்தை ஒரு முறை வாசித்துமுடிக்க தேவன் கிருபை செய்தார். அனுதினமும் கிறிஸ்துவுடன் தியான புத்தகத்தில் வேதாகமத்தில் இடம்பெற்ற அநேக பெண்கள் பற்றி எழுதப்பட்ட செய்திகள் அதிக பிரயோஜனமாக இருந்தது. மேலும் சத்தியவசனத்தில் முதுமையிலும் இனிமை கண்ட அன்னாள் என்ற தலைப்பில் எழுதப்பட்ட செய்திகள் அதிக பயனுள்ளது. தொடர்ந்து சத்தியவசன ஊழியங்களுக்காக ஜெபிக்கிறோம்.

Mrs.JP.Gnanamani Hepzibah, Vellalanvilai.

ஆசிரியரிடமிருந்து…

(மார்ச்-ஏப்ரல் 2022)

கிறிஸ்துவுக்குள் பிரியமுள்ள வாசகர்களுக்கு,

மரணத்தை ஜெயித்த ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் இனியநாமத்தில் அன்பின் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

இம்மாதத்தின் அனுதினமும் கிறிஸ்துவுடன் இதழின் வாயிலாக தங்களைச் சந்திக்க உதவி செய்த ஆண்டவருக்கே எல்லா மகிமையும் உண்டாவதாக. நம் தேசத்தில் அன்றாடம் கேள்விப்படுகிற பலவித அரசியல் சூழ்நிலைகளுக்காக ஜெபிப்போம். இக்கடைசி காலத்தில் கிறிஸ்தவ ஊழியங்களுக்கும் ஊழியர்களுக்கும் ஏற்பட்டுள்ள நெருக்கடியான சூழ்நிலைகளை கர்த்தர் கண்ணோக்கிப் பார்த்து விடுதலையோடு ஊழியஞ் செய்யவும், ஆராதிப்பதற்கும் தேவனே உதவி செய்யும்படியாக பாரத்துடன் மன்றாடுவோம். இதோ, இரட்சிக்கக்கூடாதபடிக்குக் கர்த்தருடைய கைகுறுகிப் போகவுமில்லை; கேட்கக்கூடாதபடிக்கு அவருடைய செவி மந்தமாகவுமில்லை (ஏசா.59:1).

அனுதினமும் கிறிஸ்துவுடன் இதழில் 2006 ஆம் ஆண்டிலிருந்து தொடர்ச்சியாக வெளிவந்த அதிகாலை வேளையில் என்ற சிறப்பு தியான செய்தியானது இவ்விதழில் நிறைவடைகிறது. இதுவரை பிரசுரமான 100 செய்திகளும் டாக்டர் உட்ரோ குரோல் அவர்கள் எழுதிய Early in the Morning என்ற புத்தகத்தில் இடம்பெற்றவையாகும். இச்செய்திகளை நேர்த்தியாக மொழிபெயர்த்து சிறப்பித்த சகோதரி அகஸ்டா மங்கள துரை அவர்களுக்கு எமது மனமார்ந்த நன்றியைத் தெரிவிக்கிறோம்.

தியான புத்தகத்தின் வேதவாசிப்பு அட்டவணையைப் பயன்படுத்தி 2021ஆம் ஆண்டில் பரிசுத்த வேதாகமத்தை வாசித்து முடித்தவர்களின் பெயர் பட்டியலை வெளியிட்டுள்ளோம். 2022ஆம் ஆண்டிலும் அநேகர் வேதாகமத்தை ஒரு வருடத்திற்குள் வாசித்து முடிப்பதற்கு உற்சாகப்படுத்துகிறோம். உங்களுக்காக ஜெபிக்கிறோம்.

இவ்விதழில் கடந்த பிப்ரவரி மாதத்தின் தொடர் தியானமாக ஆபிரகாமை குறித்த தியானங்கள் மார்ச் 1-3 ஆகிய நாட்களிலும் ஏனைய நாட்களுக்கு பலர் எழுதிய லெந்து கால தியானங்களைத் தொகுத்தும் வழங்கியுள்ளோம். ஏப்ரல் மாதத்தில் 1-17 வரையுள்ள லெந்துகால தியானங்களை சகோதரி தர்ஷினி சேவியர் அவர்களும் ஏப்ரல் 18 -30 வரை கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலைக் குறித்த தியானங்களை சகோதரி சாந்தி பொன்னு அவர்களும் எழுதியுள்ளார்கள். இத்தியானங்கள் தங்கள் ஒவ்வொருவருக்கும் ஆசீர்வாதமாக அமைய வேண்டுதல் செய்கிறோம்.

கே.ப.ஆபிரகாம்