ஜெபக்குறிப்பு: 2022 ஏப்ரல் 30 சனி

நாம் நிர்மூலமாகாதிருக்கிறது கர்த்தருடைய கிருபையே, அவருடைய இரக்கங்களுக்கு முடிவில்லை (புலம்.3:22) இம்மாதம் முழுவதும் நம்முடைய பெலனாகிய கர்த்தர் நம்மோடி ருந்து நம்மைப் பெலப்படுத்தி, தமது இரக்கத்தினாலும் கிருபையினாலும் நம்மை தாங்கி நடத்தி வந்திருக்கிறார். முழு உள்ளத்தோடும் முழுப் பெலத்தோடும் கர்த்தரை மகிமைப்படுத்தி ஸ்தோத்திரிப்போம்.


அசதியாயிராமல் ஜாக்கிரதையாயிருங்கள்; ஆவியிலே அனலாயிருங்கள்; கர்த்தருக்கு ஊழியஞ்செய்யுங்கள். நம்பிக்கையிலே சந்தோஷமாயிருங்கள்; உபத்திரவத்திலே பொறுமையாயிருங்கள்; ஜெபத்திலே உறுதியாய்த் தரித்திருங்கள். பரிசுத்தவான்களுடைய குறைவில் அவர்களுக்கு உதவி செய்யுங்கள் (ரோமர் 12:11-13).

ஜீவனுள்ள நம்பிக்கை!

தியானம்: 2022 ஏப்ரல் 30 சனி | வேத வாசிப்பு: 1பேதுரு 1:1-5

உன்னதமானவராகிய கர்த்தர் பயங்கரமானவரும், பூமியின் மீதெங்கும் மகத்துவமான ராஜாவுமாயிருக்கிறார் (சங்.47:2).

கோவிட் வைரஸ் நாட்டை கலங்கடித்தபோது தேவபிள்ளைகளின் மன நிலைமை எப்படிப்பட்டதாயிருந்தது? இத்தாக்கத்தின் பின் விளைவினால் ஏராளமானோர் பல விதங்களில் தாக்குண்டனர். இதனால் நாம் சோர்வடைந்தோமா? அல்லது இதற்கும் முடிவுவரும் என்று தைரியமாய் எழுந்து நின்று, முகங்கொடுத்து ஜெயம் பெற்றோமா?

ரோம அரசாட்சியினாலும், வைராக்கியமுள்ள யூதராலும், சொந்த வீட்டாராலும் ஆரம்பகால பல கிறிஸ்தவர்கள் பல இன்னல்களை அடைந்தார்கள், துன்புறுத்தப்பட்டார்கள், கொலையும் செய்யப்பட்டார்கள். சிதறுண்டு போனார்கள். விசுவாசத்தினிமித்தம் உபத்திரவப்பட்ட அந்த சமயத்தில் கிறிஸ்துவை இரட்சகராக ஏற்றுக்கொண்ட புதிய விசுவாசிகளுக்கு ஊக்கமளிப்பதாகவே பேதுரு இந்த நிருபத்தை எழுதியுள்ளார். “நீங்கள் கிறிஸ்துவுக்குள்ளான ஒரு புதிய வாழ்வுக்குத் தெரிந்துகொள்ளப்பட்ட பரதேசிகள்” என ஞாபகப்படுத்தியதோடு, இந்த உலகில் எது நேர்ந்தாலும், எல்லாமே நம்மைக்கைவிட்டாலும், நமக்காக அழியாத, மாசற்ற, வாடாத சுதந்திரத்திற்கு ஏதுவான ஜீவனுள்ள நம்பிக்கை ஒன்று வைக்கப்பட்டுள்ளது என பேதுரு திடப்படுத்துகிறார். நமது கண்களுக்கு முன்பாக எல்லாம் தலைகீழாக மாறுகிறது; திடீர் திடீரென இல்லாமற்போகிறது. அப்படியிருக்க இதை எப்படி நம்புவது? ஆம், இயேசுகிறிஸ்து மரித்தோரிலிருந்து எழுந்ததினாலே… இதுதான் நமது நம்பிக்கையின் ஆதாரம்; இதுவே நித்தியத்திற்கான நம்பிக்கை! அப்படியென்றால் மறுவாழ்விலேதானா இந்த நம்பிக்கை நிறைவேறும்? இல்லை! கிறிஸ்துவை ஏற்றுக்கொள்கின்ற ஒவ்வொருவனும் இவ்வுலகிலேயே அந்த நித்திய நம்பிக்கையை ருசிபார்க்க ஆரம்பித்துவிடுகிறான். தேவனுடைய பரிசுத்த குடும்பத்தில் அங்கத்தவனாகிறான். ஆகவே, என்னதான் நேர்ந்தாலும், வைரஸ் என்ன, அதற்கப்பாலும் எது வந்தாலும், விசுவாசத்தினிமித்தம் உபத்திரவம்தான் நேர்ந்தாலும், இறுதி மூச்சுவரைக்கும் விசுவாசத்தில் நிலைநிற்க கர்த்தர் தமது பிள்ளைகளுக்கு உதவி செய்வார்.

இந்த உலகில் முடிவில்லாதது, நிரந்தரமானது, மாறாதது என்று எதுவுமே இல்லை. எல்லாம் ஒருநாள் மாறும், அல்லது வேறுபக்கம் திரும்பும். எதுவும் நிலையற்றது என்று தெரிந்திருந்தும், சில சந்தர்ப்பங்களில் இடறிப்போகிறோம். ஆனாலும் பிரியமானவர்களே, தேவனிடம் நாம் திரும்புவோமெனில் அவர் நம்மை நிச்சயம் திடப்படுத்துவார்; பரிசுத்த ஆவியானவர் நம்மைப் பெலப்படுத்தி நடத்துவார். இந்த நாளில் நம்மில் எத்தனை பேர் ஏதேதோ காரணங்களால் மனதில் சோர்வடைந்துள்ளோமா? அதை உடனே உதறித்தள்ளி விட்டு எழுந்திருப்போமாக. உயிர்த்தெழுந்த ஆண்டவர் நமக்கு ஜீவனுள்ள நம்பிக்கையைத் தந்திருக்கிறார்.

ஜெபம்: எங்கள் கன்மலையாகிய கர்த்தாவே, இந்த அநித்தியமான உலகில், நீர் அருளிய நித்திய நம்பிக்கை மட்டுமே எங்களுக்கு திடமான நம்பிக்கையைத் தருகிறது. அதற்காக உமக்கு ஸ்தோத்திரம். இயேசுவின் நாமத்தில் பிதாவே. ஆமென்.

ஜெபக்குறிப்பு: 2022 ஏப்ரல் 29 வெள்ளி

குறித்தக் காலத்துக்குத் தரிசனம் இன்னும் வைக்கப்பட்டிருக்கிறது … அது நிச்சயமாய் வரும், அது தாமதிப்பதில்லை (ஆபகூக்2:3) இவ்வாக்குப்படியே பலவிதத் தேவைகளோடு கர்த்தருடைய சமுகத்தில் காத்திருக்கும் பங்காளர் குடும்பங்களில் உள்ள சகோதர, சகோதரிகளின் வேண்டுதலின் சத்தத்திற்கும், கண்ணீரின் ஜெபத்திற்கும் நிச்சயமான ஆசீர்வாதமான நன்மைகளை கர்த்தர் தந்தருள ஜெபிப்போம்.

பரிசுத்தஆவியானவரின் பெலன்!

தியானம்: 2022 ஏப்ரல் 29 வெள்ளி | வேத வாசிப்பு: அப்.2:1-36

இந்த இயேசுவை தேவன் எழுப்பினார்; இதற்கு நாங்களெல்லாரும் சாட்சிகளாயிருக்கிறோம் (அப்போஸ்தலர் 2:32).

“அப்பாவின் பெயருக்கு ஏன் இழுக்குக் கொண்டுவருகிறாய்” என்று ஒரு வாலிபனிடம் கேட்டபோது, “அப்பாவின் காலம் வேறு, இந்தக் காலம் வேறு. அன்று அவர் நடந்தபடி இன்று நானும் நடந்தால் இந்த உலகம் என்னை முட்டாளாக்கிவிடும்” என்றான். வாழ்க்கை மாற்றங்களுக்குக் கால இடைவெளி, சமூக இடைவெளி, சந்ததி இடைவெளி என்று பல காரணங்கள் உண்டு. அதிலும் சில உண்மைகள் இருந்தாலும், நமது முன்னோர் மாதிரியா இன்று நாம் வாழுகிறோம்? காலத்திற்கேற்ப வாழ்க்கை முறை மாற்றமடையலாம்; அதற்காக மனிதம் எப்படி மாற்றமடையும்! தனக்கு மாதிரியை வைத்துப்போன தந்தையின் வாழ்வை ஒரு மகன் சரியாகப் புரிந்துகொண்டால், நவீன உலகிலும் அவன் தன் சாட்சியையும், தன் தகப்பனின் நற்பெயரைக் காத்துக்கொள்ள முடியுமே! இதை ஒத்துக்கொள்வீர்களா?

“எனக்குச் சாட்சிகளாயிருங்கள்” என்று தமது சீஷரைப் பணித்தவர் உயிர்த்த இயேசு. எதற்குச் சாட்சிகள்? இயேசுவின் மரணத்துக்கும், உயிர்த்தெழுதலுக்கும், நிறைவேறிய வேதவாக்கியங்களுக்கும் இவர்களே சாட்சிகள்! அதாவது, இவர்களது வாழ்வில் உயிர்த்த இயேசு காணப்படுவார். அவரது வல்லமை, மகத்துவம், அவரது கிரியைகள் எல்லாமே இவர்களில் வெளிப்படவேண்டும். ஆனால், தம்முடையவர்களின் பெலத்தையும் பெலவீனத்தையும் அறிந்த ஆண்டவர் அவர்களை அப்படியே விட்டுவிடவில்லை. அவர்கள் தங்கள் சுயத்தில் சாட்சிகளாக வாழமுடியாது என்பதை அறிந்தவர், “நீங்கள் போய் எருசலேமில் தரித்திருங்கள். நான் போய் தேற்றரவாளனை அனுப்புவேன். அப்பொழுது நீங்கள் பெலனடைந்து சாட்சிகளாயிருப்பீர்கள்” என வாக்களிக்கிறார்.

அப்படியே சீஷர்கள் எருசலேமிலே காத்திருந்து பரிசுத்த ஆவியானவரின் பெலனைப் பெற்றனர். நடந்தது என்ன? அவசரபுத்தியால் இயேசுவை மறுதலித்த பேதுரு, இப்போது முழங்குகிறார். “இயேசுவை நீங்கள்தான் சிலுவையில் ஆணியடித்துக் கொலை செய்தீர்கள்” என்று தைரியமாகக் குற்றஞ்சாட்டினார். “ஆனால் தேவன் அவரை எழுப்பினார் என்பதற்கு நாங்கள் சாட்சிகள்” என்று பயமின்றி வைராக்கியமாய் அறிக்கை பண்ணினார். பேதுருவுக்கு எங்கிருந்து வந்தது இத்தனை தைரியம்? அன்றே ஏறக்குறைய 3000 பேர் இயேசுவை ஏற்றுக்கொண்டனர்.

தேவபிள்ளையே, “இயேசுவே இரட்சகர்” என நம்மால் உரத்துக்கூற முடிகின்றதா? உயிர்த்த இயேசுவுக்கு, சாட்சிகளாக வாழவே நமக்குப் பரிசுத்த ஆவியானவர் அருளப்பட்டிருக்கிறார். அப்படியே சுயபெலனுடன் சாட்சிகளாக ஜீவிப்பதும் கடினமே. ஆக இன்று நம்மை ஆராய்ந்துபார்த்து பரிசுத்த ஆவியானவரின் கரங்களுக்குள் நம்மை அர்ப்பணிப்போமாக.

ஜெபம்: சர்வ வல்லமையுள்ள தேவனே, எங்களது சுயபெலத்தை நம்பி சாட்சியை இழந்த சந்தர்ப்பங்களை எங்களுக்கு மன்னியும். பரிசுத்த ஆவியானவர் எங்களைப் பெலப்படுத்தி எப்பொழுதும் எல்லா இடங்களிலும் சாட்சியாய் நடந்துகொள்ள உதவிச்செய்யும். ஆமென்.