ஜெபக்குறிப்பு: 2022 ஏப்ரல் 12 செவ்வாய்
நான் வனாந்தரத்திலே வழியையும், அவாந்தவெளியிலே ஆறுகளையும் உண்டாக்குவேன் (ஏசா.43:19) இவ்வாக்குப்படி வேலைக்காக, வேலை நிரந்தரத்திற்காக, வேலையில் பணி உயர்வுக்காக, இடமாறுதலுக்காக காத்திருக்கும் பங்காளர் குடும்பத்தினர்களுக்கு கர்த்தர் சகாயம் செய்து பரத்திலிருந்து உதவியையும் ஒத்தாசையையும் அருளிச்செய்திட வேண்டுதல் செய்வோம்.
முத்தத்தினாலேயா?
தியானம்: 2022 ஏப்ரல் 12 செவ்வாய் | வேத வாசிப்பு: லூக்கா 22:39-48
இயேசு அவனை நோக்கி: யூதாசே, முத்தத்தினாலேயா மனுஷகுமாரனைக் காட்டிக்கொடுக்கிறாய் என்றார் (லூக்.22:48).
முத்தம் செய்தல் என்பது ஒரு அன்பின் வெளிப்பாடாகும். தாய் தன் குழந்தையை அரவணைத்து முத்தமிடல் நல்லதொரு உதாரணமாகும். வேதாகமத்தில் பல இடங்களில் நாம் இந்த முத்தமிடல் சம்பவத்தை வாசிக்கிறோம். நகோமி தன் மருமக்களை முத்தமிட்டுக் கிளம்பினாள் (ரூத் 1:9). தாவீது அப்சலோமை முத்தமிட்டான் (2சாமு.14:33). காணாமற்போன இளையமகன் திரும்பி வந்தபோது, தகப்பன் அவனை முத்தஞ்செய்தான் (லூக்.15:20). இவைகள் எல்லாமே அன்பின் வெளிப்பாடாகவே அமைந்துள்ளன.
ஆனால் இங்கே, யூதாசோ தனது குருவாகிய இயேசுவைக் காட்டிக் கொடுப் பதற்காக இந்த முத்தத்தைப் பயன்படுத்துகிறான். அதாவது, அன்பின் வெளிப்பாடாகிய முத்தத்தைக் கொடுத்து, அவரைப் பகைவரிடம் காட்டிக்கொடுத்தான் யூதாஸ். ஆண்டவர் அவனை நோக்கி: யூதாசே, முத்தத்தினாலேயா மனுஷகுமாரனைக் காட்டிக்கொடுக்கிறாய் என்று கேட்டார். இதை ஒரு வஞ்சகம் அல்லது சூழ்ச்சியென்றே சொல்லலாம். வெளியில் செய்வதோ ஒன்று; ஆனால், உள்ளத்தில் இருப்பதோ வேறொன்று.
பிரியமானவர்களே, இன்று நாம் என்ன செய்கிறோம்? “நேசிக்கிறேன் உம்மைத்தான் ஐயா” என்று வாயால் பாடுவோம்; ஆனால், ஆண்டவரின் வார்த்தைக்குக் கீழ்ப்படிய மாட்டோம். ஆனால் ஆண்டவரோ, நீங்கள் என் கற்பனைகளைக் கைக்கொண்டிருந்தால் என்னுடைய அன்பிலே நிலைத்திருப்பீர்கள் என்று கூறியுள்ளார். ஆகையால் நாம் அன்பாய் இருக்கிறோம், அவரில் நம்பிக் கையாயிருக்கிறோம், என்று வாயின் வார்த்தைகளால் சொல்லுவதில் பலனில்லை. அதை நாம் நமது வாழ்க்கையில் காட்டவேண்டும். நாம் நாவினால் அன்புகூராமல் முழு இருதயத்தோடும் அன்புகூரவேண்டும்.
யூதாஸ், “குற்றமில்லாத இரத்தத்தைக் காட்டிக்கொடுத்து, நான் பாவம் செய்தேன்” என்றான். ஆனால், ஆண்டவரிடம் அவன் மன்னிப்புக் கேட்கவில்லை. கேட்டிருந்தால் ஆண்டவர் அவனையும் மன்னித்திருப்பார். ஆனால் அவனோ, தனது முடிவைத் தானே தேடிக்கொண்டு, நான்றுகொண்டு செத்து தனது அழிவுக்குத் தானே காரணமானான். நாம் அப்படியிருக்க வேண்டாம். ஆண்டவரிடம் நாம் கொண்டிருக்கின்ற அன்பைப் பரிசீலித்துப் பார்ப்போமாக. தவறு இருந்தால் மனஸ்தாபப்பட்டு மனந்திரும்புவோம். யூதாசைக் குற்றஞ்சொல்லும் நாம் அவனைப்போல மாறிவிடவேண்டாம். விழிப்புடன் இருப்போம். நாமும் இயேசுவை முத்தத்தினால் காட்டிக்கொடுக்கின்றவர்களாக இராதபடி எச்சரிக்கையாயிருப்போம்.
தேவன் அதை ஆராய்ந்து, விசாரியாதிருப்பாரோ? இருதயத்தின் அந்தரங்கங்களை அவர் அறிந்திருக்கிறாரே (சங்கீதம் 44:21).
ஜெபம்: இருதயத்தின் அந்தரங்கங்களை அறிந்திருக்கிற ஆண்டவரே, நான் உள்ளொன்று வைத்துக்கொண்டு வெளியொன்று செயல்படாதபடிக்கு எங்களைப் பரிசுத்தப்படுத்தும். ஆமென்.