ஜெபக்குறிப்பு: 2022 ஏப்ரல் 15 வெள்ளி
பிரதான ஆசாரியரும் அதிகாரிகளும் அவரை மரண ஆக்கினைக்குட்படுத்தி, சிலுவையில் அறைந்தார்கள் (லூக்.24:20) நம்முடைய பாவங்களுக்காக தம்முடைய ஒரேபேறான குமாரனை சிலுவைமரணத்துக்கு ஒப்புக்கொடுத்த தேவன் அன்பாகவே இருக்கிறார் என்ற உண்மையை உலகுக்கு எடுத்துரைக்க நம்மை இந்நாளில் ஒப்புவித்து ஜெபிப்போம்.
சாப சிலுவை புனிதமானதோ!
தியானம்: 2022 ஏப்ரல் 15 வெள்ளி | வேத வாசிப்பு: மாற்கு 15:24-37
அக்கிரமக்காரரில் ஒருவனாக எண்ணப்பட்டார் என்கிற வேதவாக்கியம் அதனாலே நிறைவேறிற்று (மாற்கு 15:28).
வெள்ளை வெளீரென்று இருக்கும் பாலில் ஒரு துளி விஷம் கலந்தாலும், அந்தப்பால் முழுவதுமே விஷமாகிவிடும். அல்லது ஒரு வர்ணக்கரைசலில் ஒரு துளியைப் பாலுக்குள்ளே விட்டால் முழுப்பாலின் நிறமுமே மாறிவிடும். அன்று, ரோமர் ஆட்சியில் சிலுவையென்பது ஒரு சாபமாக, அல்லது ஓர் அவமானச் சின்னமாகவே கருதப்பட்டது. கொடிய தண்டனைக்குப் பாத்திரவான்களான, கள்வரையும், கொலைக்காரரையும்தான் பொதுவாகச் சிலுவையில் அறைந்து கொலை செய்வார்கள். ஆனால், எந்தக் குற்றமும் செய்யாத இயேசு ஏன் அறையப்பட்டார்?
ஆம், நாம் அறையப்படவேண்டிய இடத்தில், நமது பாவங்களைத் தம்மில் சுமந்து, இந்த இழிவான சிலுவை மரணத்தை ஏற்றுக்கொண்டு தமது ஜீவனை விட்டார் இயேசு. அக்கிரமக்காரரில் ஒருவராக எண்ணப்பட்டார் என்ற வேத வாக்கியம் நிறைவேறத்தக்கதாக, அவரது வலது பக்கத்தில் ஒரு கள்வனும் இடது பக்கத்தில் ஒரு கள்வனுமாக இரண்டு கள்வர்கள் மத்தியில் தூய்மையானவராகத் தொங்கினார் இயேசு! ஆம், கள்ளத்தனம் நிறைந்த நம்மை மீட்பதற்காகவே அவர் இப்படியானார். அவர் பாவ சிலுவையில் சிந்திய இரத்தம் இன்று நம்மைப் பரிசுத்தமாக்கியிருக்கிறது. பாவத்தின் தண்டனையான அந்தச் சாப சிலுவை, இயேசுவின் மரணத்தினால் புனிதமானதோ! இன்று நாம் சிலுவையை மேன்மையான ஒன்றாக, புனித சின்னமாகக் கருதுகிறோம் என்றால் அது இயேசு வாலேயே ஆனது. அவரின்றி அதற்கேது மதிப்பு!
ஏதேன் தோட்டத்திலே ஆதாமும் ஏவாளும் பாவத்தில் விழுந்து தேவனாகிய கர்த்தருடைய சத்தத்துக்கு ஒளித்துக்கொண்டிருந்தபோது, தேவனாகிய கர்த்தர் ஆதாமைக் கூப்பிட்டு, “நீ எங்கே இருக்கிறாய்” என்றார். அதற்கு அவன், “நான் தேவரீருடைய சத்தத்தைக் கேட்டு, நான் நிர்வாணியாயிருப்பதினால் பயந்து ஒளித்துக்கொண்டேன்” என்றான். அந்த நிர்வாணத்தைப் போக்கவே தேவகுமாரன் சிலுவையிலே நிர்வாணியாய்த் தொங்கினார். அந்தக் கயவர்களோ அவரது துணிகளை எடுக்க சீட்டுப்போட்டு மகிழ்ந்தனர். “என் வஸ்திரங்களைத் தங்களுக்குள்ளே பங்கிட்டு, என் உடைகளின் பேரிலே சீட்டுப் போட்டார்கள்” என்று தீர்க்கதரிசியால் உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இப்படி நடந்தது.
பிரியமானவர்களே, நம்மைப் பரிசுத்தராக்க, பரிசுத்தராகிய தேவன் பாவமாக்கப்பட்டார். இப்படியிருக்க இன்னமும் நாம் பாவத்தில் ஜீவித்து அவருடைய பலியைப் பரிகசிக்கலாமா? மனந்திரும்புவோம். நம்மை ஜீவபலியாக ஒப்புவித்து, நமக்காகச் சிலுவை சுமந்தவருக்காக நமது சிலுவையைச் சுமப்போம்.
ஒருவன் என்னைப் பின்பற்றி வர விரும்பினால், அவன் தன்னைத்தான் வெறுத்து, தன் சிலுவையை எடுத்துக்கொண்டு என்னைப் பின்பற்றக்கடவன் (மத்.16:24).
ஜெபம்: அன்பின் தேவனே, நாங்கள் பிழைத்திருக்கும்படியாக சாபமான சிலுவையில் நீர் பலியானீர். எங்களை ஜீவபலியாக உமக்கு ஒப்புவிக்கிறோம். ஏற்றுக்கொள்ளும். ஆமென்.