வாக்குத்தத்தம்: 2022 ஜனவரி 1 சனி

தேவன் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினாரென்று உன் இருதயத்திலே விசுவாசித்தால் இரட்சிக்கப்படுவாய் (ரோமர் 109)


கர்த்தர் நித்தமும் உன்னை நடத்தி, மகா வறட்சியான காலங்களில் உன் ஆத்துமாவைத் திருப்தியாக்கி, உன் எலும்புகளை நிணமுள்ளதாக்குவார். …. வற்றாத நீருற்றைப்போலவும் இருப்பாய் (ஏசா. 58:11).
வேதவாசிப்பு: காலை: ஆதியாகமம் 1,2 மாலை: மத்தேயு 1

ஜெபக்குறிப்பு: 2022 ஜனவரி 1 சனி

கர்த்தர்மேல் உன் பாரத்தை வைத்துவிடு, அவர் உன்னை ஆதரிப்பார்; நீதிமானை ஒருபோதும் தள்ளாடவொட்டார் (சங்.55:22).


இந்த தேவன் என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் நம்முடைய தேவன்; மரணபரியந்தம் நம்மை நடத்துவார் (சங்.48:14) இப்புதிய ஆண்டிலே கர்த்தர் நமக்கு துணையாகவும், வழி காட்டியாகவும் ஆறுதலாகவும் இருந்து அவரைப் பற்றி அறிகிற அறிவிலே வளர்ந்து எழும்பி பிரகாசிக்க கிருபை செய்யும்படியாக ஒப்புவித்து ஜெபிப்போம்.

மகத்துவமான ஒரே ராஜா!

தியானம்: 2022 ஜனவரி 1 சனி | வேத வாசிப்பு: சங்கீதம் 46:1-11

உன்னதமானவராகிய கர்த்தர் பயங்கரமானவரும், பூமியின் மீதெங்கும் மகத்துவமான ராஜாவுமாயிருக்கிறார் (சங்.47:2).

சத்தியவசனம் பங்காளர்கள், வாசகர்கள், நேயர்கள் ஆதரவாளர்கள் அனை வருக்கும் எமது புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறோம். தேவனுடைய கிருபையும் நன்மையும் ஆசீர்வாதமும் சுகமும் தங்களையும் தங்களது குடும்பத்தார் அனைவரையும் தொடருவதாக!

எல்லா விக்கினங்களிலிருந்தும் நம்மைப் பாதுகாத்து, இன்னுமொரு வருடத்தைக் காணும்படி வழிநடத்திவந்த தேவன் ஒருவருக்கே சகல கனமும் மகிமையும் என்றென்றும் உண்டாவதாக. கடந்தவருட கசப்பான அனுபவங்கள், எதிர்பாராத சம்பவங்கள், லட்சக்கணக்கான உயிரிழப்புகள், கண்ணீரில் மிதந்த குடும்பங்கள், முழு உலகமுமே ஆடிப்போகுமளவுக்கு முடிவு காணமுடியாத முடிச்சுக்கள் பல! இப்புதிய வருடத்தில், இந்த ஜீவனுள்ளோர் தேசத்தில் ஜீவனுள்ளோர் தொகையில் நாம் இன்னமும் ஜீவித்திருக்கிறோம் என்றால், அது ராஜாதி ராஜாவினுடைய சுத்த கிருபையே! கர்த்தரே ராஜா; சகலமும் அவர் கட்டுப்பாட்டிலேயே இருக்கிறது.

1இராஜா.18:13-19:37 பகுதியில், யூதாவின் ராஜாவாகிய எசேக்கியாவின் நாட்களிலே, அசீரியா ராஜா சனகெரிப்பினால் யூதாவுக்கு வந்த பயமுறுத்தல் காலப் பகுதியில்தான் இந்த 46ம், 47ம் சங்கீதங்கள் எழுதப்பட்டன என்று நம்பப்படுகிறது. அசீரியா யூதாவுக்கு எதிராக வந்தபோது, எசேக்கியா செய்தது இதுதான்: தன் வஸ்திரங்களைக் கிழித்து, இரட்டு உடுத்திக்கொண்டு கர்த்தருடைய ஆலயத்தில் பிரவேசித்தான். பின்னும், எதிரி அனுப்பிய நிருபத்தை வாங்கி வாசித்து விட்டு, கர்த்தரின் ஆலத்திற்குப் போய், அதைக் கர்த்தருக்கு முன்பாக விரித்து வைத்து ஜெபித்தான். கர்த்தர் அவனுக்கு அடைக்கலமும் பெலனும், ஆபத்துக் காலத்தில் அநுகூலமான துணையுமானார். நடந்தது என்ன? ஒரே இராத்திரியிலே அசீரியரின் இலட்சத்தெண்பத்தையாயிரம் பேர் சங்கரிக்கப்பட்டார்கள். எசேக்கியாவின் எதிரிகள், ஒரே ராத்திரியிலே மாண்டார்கள்.

அன்பானவர்களே, நமக்கு சஞ்சலம் ஏற்படுத்திய சத்துருவை நமது வெற்றுக் கண்களும் காணவில்லை. ஆனால், நமது “தேவன் என்றென்றைக்குமுள்ள சதா காலங்களிலும் நம்முடைய தேவன்; மரணபரியந்தம் நம்மை நடத்துவார்” (சங்.48:14). ஆகவே, மகத்துவமான ராஜாவை நோக்கித் திருப்புவோம்.இந்த ஆண்டில்கூட என்ன நடக்கும், யார் அறிவார்? ஆக, நமக்கு அடைக்கலமாயிருக்கும், சேனைகளின் கர்த்தரை மாத்திரமே பற்றிக்கொள்வோம். பல பொறுப்புகள் மத்தியில்தான் ஏனோக்கு தேவனோடு சஞ்சரித்தார். மனுஷருடைய அக்கிரமம் பூமியிலே பெருகிய காலத்தில் தான் நோவா தேவனோடு சஞ்சரித்தார். ஆகவே, எது நடந்தாலும்; எஞ்சியிருக்கிற நமது வாழ்நாட்களில் ஒவ்வொரு கணமும், தூக்கத்தில்கூட தேவனோடு இணைந்து வாழும் கிருபையைப் பெற்றுக்கொள்வோம். மகத்துவமானவர் நம்மோடிருக்கிறார்!

ஜெபம்: இந்த புதிய ஆண்டிற்குள் பிரவேசிக்க எனக்கு கிருபை செய்தீரே, உமக்கு ஸ்தோத்திரம். ஒருகணத்தில் யாவையும் மாற்றிப்போட வல்லவரும் மகத்துவமுமுள்ள ராஜாவாகிய உம்மையே சார்ந்திருக்க என்னை ஒப்புவிக்கிறேன். ஆமென்.

உறுதியுடன் நிலைத்திருத்தல்!

அதிகாலை வேளையில்…
(ஜனவரி-பிப்ரவரி 2022)
Dr.உட்ரோ குரோல்

வேதபகுதி: யோபு 1:1-5


யோபு: ஒருவேளை என் குமாரர் பாவஞ்செய்து, தேவனைத் தங்கள் இருதயத்திலே  தூஷித்திருப்பார்கள் என்று சொல்லி, அவர்களை அழைத்தனுப்பி, பரிசுத்தப்படுத்தி, அதிகாலமே எழுந்து, அவர்கள் எல்லாருடைய இலக்கத்தின்படியேபும் சர்வாங்க தகனபலிகளைச் செலுத்துவான் (யோபு 1:5).


துன்பங்களின் மத்தியிலும் சகிப்புத்தன்மையுடன் அவற்றை ஏற்றுக்கொண்டு தேவபக்தியில் சற்றும் குறையாமல் வாழ்வதே ஓர் உண்மையான கிறிஸ்தவனுடைய தன்மையும் அடையாளமுமாகும். இவ்வித வாழ்க்கை வாழ்ந்தவர்களில் உத்தம பக்தன் யோபு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்துள்ளார். யோபு புத்தகத்தின் ஆசிரியர்; ஊத்ஸ் தேசத்தில் வாழ்ந்து வந்த இம் மனிதரான யோபுவை ஒரு மிகச் சிறந்த செல்வந்தனாகவும், மரியாதைக்குரியவராகவும், பெரிய ஜமீன்தாரராகவும் அறிமுகப் படுத்தப்படுத்துகிறார். அவருக்கு ஏழாயிரம் ஆடுகளும் மூவாயிரம் ஒட்டகங்களும், ஏராளமான நிலங்களும் இருந்தன. ஏழு குமாரர்களும் மூன்று குமாரத்திகளும் கொண்ட அன்பான குடும்பத்தை உடையவராயிருந்தார்.

இவை எல்லாவற்றுக்கும் மேலாக அவர் மிகச் சிறந்த பக்திமானாக விளங்கினார். இப்புத்தகத்தின் ஆரம்ப வசனம் அவரை “உத்தமனும் சன்மார்க்கனும் தேவனுக்கு பயந்து, பொல்லாப்புக்கு விலகுகிறவனுமாயிருந்தான்” எனக் குறிப்பிடுகிறது. தானும் தன் வீட்டாரும் தேவனுக்கு முன்பாக உத்தமர்களாயிருக்க வேண்டுமென்று எண்ணி அதிகாலமே எழுந்து அவர்களுடைய எண்ணிக்கையின்படி அவர்களுக்காக சர்வாங்க தகனபலிகளைச் செலுத்திவந்தான். ஏனெனில் ஒருவேளை தன் குமாரர்கள் பாவஞ் செய்து தங்கள் இருதயத்தில் தேவனை தூஷித்திருப்பார்கள் என எண்ணினான். இவ்வாறு அவன் தொடர்ச்சியாக செய்து வந்தான் (யோபு 1:5). தன் குடும்பத்தாரில் எவரேனும் இரகசியமாக பாவஞ்செய்திருப்பார்கள் என எண்ணி ஒவ்வொரு நாளும் அதி காலமே தேவனைச் சந்தித்து, சர்வவல்லவருக்கு பலிகளைச் செலுத்தி வந்தான்.

இவ்வதிகாரத்தில் பின்வரும் பகுதி யோபுவின் வாழ்வின் இரண்டாவது பகுதியைக் கொண்டுள்ளது. இதை வாசிக்கும் பொழுது ஒரு பயங்கரமான கதையைப் போல அச்சத்தை உண்டாக்குகிறது. இங்கே சாத்தான் யோபுவின் அமைதியான கிராமவாழ்வில் நுழைந்து அவருடைய குடும்பத்தின் அமைதியை குலைக்கிறான். இந்த இரண்டாவது பகுதியில் நடப்பதை நாம் கவனிப்போமா?

1. சாத்தானின் அறிக்கை (வசனம் 6):
ஒரு நாள் தேவபுத்திரர், (இவர்கள் தேவ தூதர்களாக இருக்கலாம்) தேவனுடைய சந்நிதியில் வந்து தங்களுடைய காரியங்களைத் தெரிவித்தபொழுது சாத்தானும் அவர்கள் நடுவில் வந்து நின்றான்.

2. சாத்தானின் செயல் (வசனம் 7):
கர்த்தர் சாத்தானை நோக்கி, எங்கிருந்து வருகிறாய் என்று வினவினார். அதற்கு லூசிபர்: “நான் பூமியெங்கும்; சுற்றி உலாவி வருகிறேன்” என்று பதிலுரைத்தான். தேவனுடைய திட்டத்துக்கு இடையூறுபண்ண வாய்ப்புகளைத் தேடும் சாத்தானுடைய செயலுக்கு முடிவே கிடையாது.

3. சாத்தானுடைய பிரச்சனை (வசனம் 8):
கர்த்தர் சாத்தானிடம் “என் ஊழியன் யோபைப் பார்த்தாயா?” என்று கேட்டார். மாசற்றவனும், நேர்மையானவனும், இறைவனுக்கு அஞ்சி சாத்தான் வைக்கும் எல்லாவித தீமைகளுக்கும் தன்னை விலக்கி வாழ்ந்துகொண்டிருந்த ஒரு மனிதனை சாத்தான் சந்தித்தான்.

4. சாத்தானின் குற்றப்பத்திரிக்கை (வசனம் 10-11):
யோபு நேர்மையாய் நடப்பதற்கான காரணங்களை சாத்தான் ஆயத்தமாக வைத்திருந்தான். யோபுவையும் அவனுக்குரிய யாவற்றையும் தேவன் சூழ்ந்து நின்று வேலியடைத்திருந்தார். எனவேதான் யோபு மிகவும் செழித்தோங்கி வாழ்கிறார்; அவ்வேலியை தேவன் எடுத்துவிட்டால் யோபு தேவனுடைய முகத்திற்கு நேராகவே அவரை தூஷிப்பான் என்றும் விளக்கினான்.

5. சாத்தானுக்கு கட்டுப்பாடு (வசனம் 12):
யோபுக்குரிய எல்லாவற்றையும் தொடுவதற்கு லூசிபருக்கு அனுமதி கொடுத்த யேகோவா, யோபுவின் மீது மாத்திரம் கை வைக்கக்கூடாது என்ற ஒரு கட்டுப்பாட்டையும் விதித்தார். இக்காலத்தில் சாத்தானுக்கு இவ்விதமான தற்காலிக தடைகளை எப்பொழுதும் ஆண்டவர் தருவதில்லை; அத்தடை நிரந்தரமானதாக இருக்கும்.

6. சாத்தானின் எதிர்ப்பு (வசனம் 13-19):
அனுமதி பெற்ற சாத்தான் யோபுக்கு தொந்தரவு கொடுக்க ஆரம்பித்துவிட்டான். எதிரிப் படைவீரர்கள் அணிவகுத்து வருவது போன்று யோபுக்கு அழிவின் அறிக்கைகள் வந்தவண்ணம் இருந்தன. இறுதியில் தான் அனைத்தையும் இழந்துவிட்டதை யோபு அறிந்துகொண்டார்.

7. சாத்தானின் தோல்வி (வசனம் 20-22):
யோபு எழுந்து தன்னுடைய மன உளைச்சலை வெளிப்படுத்தினான். மதியீனமாய் தேவனைக் குற்றப்படுத்தி பாவஞ் செய்யாமல் “நிர்வாணியாய் என் தாயின் கர்ப்பத்திலிருந்து வந்தேன்; நிர்வாணியாய் அவ் விடத்துக்குத் திரும்புவேன்; கர்த்தர் கொடுத்தார், கர்த்தர் எடுத்தார்; கர்த்தருடைய நாமத்துக்கு ஸ்தோத்திரம்” என்றான் (யோபு 1:21).

தீயவர்களுடைய எதிர்ப்பை நீங்கள் சந்திக்கும்பொழுது அதைரியப்படாதிருங்கள். இந்த எதிர்ப்புகள் தற்காலிகமானதே. நம்முடைய அன்பு தேவனே இறுதி தீர்ப்பைக் கூறுவார். தேவனுடைய வழிகளை எப்பொழுதும் நீங்கள் அறிந்துகொள்ள முடியாது, ஆனால் யோபுவைப் போல அவர் நடத்திச் செல்லும் வழிகளை நம்பலாம்.


அதிகாலைப் பாடல்:

என் பாதை இருளாகத் தோன்றும்பொழுது
நான் ஏன் சோர்ந்துபோக வேண்டும்?
ஒளிக்கும் பரலோக வீட்டுக்கும் ஏங்கி
நான் ஏன் மனந் துவள வேண்டும்?
இன்ப இயேசு என் பங்காக இருக்கிறார்;
என்னை விட்டு நீங்காத நண்பர் அவர்;
பாடும் பறவைகளைப் பிழைப்பூட்டுபவர்

மொழியாக்கம்: Mrs.அகஸ்டா மங்களதுரை

வாசகர்கள் பேசுகிறார்கள்

(ஜனவரி-பிப்ரவரி 2022)

[01]
தாங்கள் அனுப்பி வைக்கும் வெளியீடுகள் அனுதினமும் கிறிஸ்துவுடன் ஆசீர்வாதமான செய்திகளை தெரிவிக்கிறது. அதோடு தினமும் தலைப்பில் உள்ள வேதப்பகுதியும், வாசிப்பதற்கு ஏற்றதாக உள்ளது. சத்தியவசனம் புத்தகத்தின் வாயிலாக அநேக செய்திகளையும் அறிந்துகொள்ள முடிகிறது.

Mr.D.Thangaraj, Tirunelveli.


[02]
காலைதோறும் மலர்ந்து மனம் கமிழம் வாசனை மலர்போல, உங்களது வாட்ஸ்அப் அதிகாலை பதிப்புகள் வாழ்த்தும், வாக்குத்தத்தமும் மனம் மகிழ்வு கொள்கிறது.

Mr.G.Anthony


[03]
Praise the Lord, Anuthinamum Christhuvuden – Sister Shanthi Ponnu messages is very very useful for Spiritual Life. May God bless Sister and her family.

Bro.Saviour Gandhi.


[04]
தாங்கள் அனுப்பும் மாத இதழ் தவறாமல் வருகிறது. மிக்க நன்றி. மிகவும் ஆறுதலாகவும் எழுப்புதலாகவும் இருக்கிறது. இந்த பயங்கரமான கால சூழ்நிலையில் இருக்கும்போது தியான பகுதிகள் மன தைரியத்தையும் உற்சாகத்தையும் தருகிறது. இன்னும் நாங்கள் விசுவாச பாதையில் நிலைத்து நிற்க எங்களுக்காக ஜெபியுங்கள்.

Mrs.M.Samuel, Nellikupam


[05]
Your Anuthinamum Christhuvudan Daily Scriptures and other TV Programme are very useful to our spiritual life. May God bless you all in your endeavours in spreading Gospel to the World. Remembering you all in our Prayers. Glory be to God Almighty.

Mr.Dinakar Paul, Chennai.


[06]
செப்டம்பர்-அக்டோபர் மாத சத்தியவசனம் இதழ் கிடைக்கப்பெற்றோம். கட்டுரைகளைப் படிக்கும்போது ஆவியில் வளர பேருதவியாக இருக்கிறது. நாங்கள் தொடர்ச்சியாக நம்பிக்கை டிவியில் சத்தியவசனம் நிகழ்ச்சியை தவறாமல் பார்த்து வருகிறோம். உங்களுக்காகவும் மற்றும் கட்டுரைகள் தியானங்கள் எழுதுபவர்கள், சகோதரி சாந்திபொன்னு அவர்களுக்காகவும் விசேஷித்து ஜெபிக்கிறேன்.

Mrs.Menaka George, Coimbatore.


[07]
கிறிஸ்துவுக்குள் அன்பான ஊழியர்களுக்கு அனுதினமும் கிறிஸ்துவுடன் தியான புத்தகம் எங்கள் குடும்பத்தினரின் ஆவிக்குரிய வாழ்விற்கு பிரயோஜனமுள்ளதாக உள்ளது. கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.

Mr.Immanuel Gideon Inbadoss,Vellore.


[08]
கர்த்தருக்கு ஸ்தோத்திரம். அனுதினமும் கிறிஸ்துவுடன் தியானங்கள் அநேக வேளைகளில் என்னுடைய தனிப்பட்ட வாழ்வில் கர்த்தர் என்னோடு பேசி என்னை உற்சாகப்படுத்துகிறதாய் உள்ளது. எனது மனதும் புதுப்பிக்கப்படுகிறது. ஆண்டவருக்கே நன்றி செலுத்துகிறேன்.

Mrs.Kamala Robert, Coimbatore.


[09]
Dear Brother in Christ, Very happy to hear about the TV Bible studies. May God bless your Ministry. We praying.

Mr.Ebenezer Fenn & Elizabeth Fenn, Madurai.


[10]
Praise the Lord, I have seen your devotions. Those verses are really heartfelt to me. I need to know your God’s Word update. Kindly please update your daily word to me.

Mr.Shiju, Coimbatore.

ஆசிரியரிடமிருந்து…

(ஜனவரி-பிப்ரவரி 2022)

கிறிஸ்துவுக்குள் பிரியமுள்ள வாசகர்களுக்கு,

நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிற ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

வருடத்தின் துவக்கத்தில் அனுதினமும் கிறிஸ்துவுடன் இதழின் வாயிலாக தங்களைச் சந்திக்க உதவி செய்த தேவாதிதேவனைத் துதிக்கிறோம். கடந்த வருடத்தில் எத்தனையோ நெருக்கங்களை கடந்து வந்திருக்கிறோம். இப்போதும் தேசத்தில் பல்வேறு அச்சுறுத்தல்களைக் கேள்விப்படுகிறோம். இந்த தேவன் என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் நம்முடைய தேவன்; மரணபரியந்தம் நம்மை நடத்துவார் (சங்.48:14) என்ற வாக்கை நாம் பற்றிக்கொள்வோம். வருங்காலங்கள் ஆசீர்வாதமானதாக இருக்க தேவன் அருள் புரிவார்.

கொரோனா தொற்றின் நிமித்தம் நடத்த இயலாமற் இருந்த அலுவலக ஜெபக்கூட்டம் 2021 நவம்பர் மாதத்திலிருந்து மீண்டும் துவங்க கர்த்தர் செய்தார். 2022ஆம் வருட சத்திய வசன காலண்டரை பங்காளர்களுக்கு அனுப்பிவைக்கிறோம். கடந்த ஆண்டு முழுவதும் சத்தியவசன ஊழியத்தை ஜெபத்தோடும் மனப்பூர்வமான காணிக்கையாலும் தாங்கி வந்த அன்பு பங்காளர்கள் ஆதரவாளர்கள் யாவருக்கும் நன்றி கூறுகிறோம். இப்புதிய ஆண்டிலும் தொடர்ந்து தங்களது மேலான ஆதரவைத் தர அன்பாய் கேட்கிறோம்.

தியான புத்தகத்தின் வேதவாசிப்பு அட்டவணையைப் பயன்படுத்தி 2021ஆம் ஆண்டில் பரிசுத்த வேதாகமத்தை வாசித்து முடித்தவர்கள் ஜனவரி 31ஆம் தேதிக்குள் எங்களுக்கு தெரியப்படுத்த அன்பாய் கேட்டுக்கொள்கிறோம். அடுத்த இதழில் உங்களது பெயர்கள் பிரசுரிக்கப்படும். இந்த ஆண்டிலும் அநேகர் வேதாகமத்தை ஒரு வருடத்திற்குள் வாசித்து முடிப்பதற்கு உற்சாகப்படுத்துகிறோம்.

இவ்விதழில் ஜனவரி மாதத்தில் 1-8 ஆகிய நாட்களில் சகோதரி சாந்தி பொன்னு அவர்கள் எழுதிய தியானங்களும், 9-31 வரை சகோதரி தர்ஷினி சேவியர் அவர்கள் எழுதிய தியானங்களும் இடம்பெற்றுள்ளன. பிப்ரவரி மாதத்தில் ஆபிரகாமின் வாழ்வி லிருந்து Dr.உட்ரோல் குரோல் அவர்கள் எழுதிய தியானங்கள் பிரசுரித்துள்ளோம். இந்த தியானங்கள் மறைந்த சகோதரர் வில்சன் அவர்களால் மொழிபெயர்க்கப்பட்டவை யாகும். இத்தியானங்களை எழுதிவருகிற சகோதர, சகோதரிகளைத் தொடர்ந்து உங்கள் ஜெபங்களில் தாங்க அன்பாய் கேட்கிறோம்.

கே.ப.ஆபிரகாம்