ஜெபக்குறிப்பு: 2021 நவம்பர் 21 ஞாயிறு

நீங்கள் போய், தேவாலயத்திலே நின்று, இந்த ஜீவவார்த்தைகள் எல்லாவற்றையும் ஜனங்களுக்குச் சொல்லுங்கள் (அப்.5:21) இந்தக் கட்டளைப்படியே இந்த நாளிலும் ஒவ்வொரு திருச்சபைகளிலும் கொடுக்கப்படுகிற ஜீவனும் ஆவியாயும் இருக்கிற கர்த்தருடைய வார்த்தைகளை கேட்கிற மனந்திரும்பாத விசுவாசிகள் தங்களை சோதித்து அறிந்து மனந்திரும்ப ஜெபிப்போம்.

குறைவிலும் நிறைவு

தியானம்: 2021 நவம்பர் 21 ஞாயிறு | வேத வாசிப்பு: 1 இராஜாக்கள் 4:8-13

அதற்கு அவள்: என் ஜனத்தின் நடுவே நான் சுகமாய்க் குடியிருக்கிறேன் என்றாள் (2 இராஜாக்கள் 4:13).

சூனேம் ஊரில் தன் கணவனுடன் வாழ்ந்திருந்த இவள் ஒரு பணக்காரப் பெண்மணி. நற்குணசாலி. ஜனங்கள் மத்தியிலே மதிப்புப்பெற்றவளும், கனம் பொருந்தியவளுமாயிருந்தாள். தேவ மனுஷன் வந்திருக்கிறார் என்று அறிந்ததும், மெய்யாகவே அவரைக் கனப்படுத்தும் நோக்கத்துடன் போஜனத்திற்காக வருந்தி அழைக்கிறாள். அவள் தன் இஷ்டப்படி நடப்பவள் அல்ல; தன் கணவனின் ஆலோசனையுடனேயே எலிசாவிற்கு தன் வீட்டு மெத்தையிலே ஓர் அறையை ஒழுங்கு பண்ணி, அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தியாக்கி, அதனை எலிசாவிற்கென்றே விட்டுவிட்டாள். இவற்றிலும் மேலாக, அவளுக்கு பதிலுபகாரம் செய்ய நினைத்த எலிசாவிற்கு அவள் கூறிய பதிலே மிகவும் முக்கியமானது. “என் ஜனத்தின் நடுவே நான் சுகமாய்க் குடியிருக்கிறேன்” அதாவது, தனக்கு எந்தக் குறையுமில்லை என்பதுபோல் அவள் பதிலளித்தாள். ஆனால், இவளுக்கு பிள்ளையில்லை. புருஷனும் பெரிய வயதுள்ளவன். அப்படியிருந்தும் அவளுக்கு அது குறைவாகத் தெரியவில்லைப்போலும். தன் ஜனத்தின்மீது அவள் கொண்டிருந்த நேசம் அவளது குறைகளை அவளுக்கு மறைத்துப்போட்டது.

பிரியமானவர்களே, இப்பெண் தனக்குப் பிள்ளையில்லை என்று கவலைப்பட்டு தாழ்வு மனப்பான்மையால் கூனிக்குறுகிப்போகவில்லை. அதேசமயம் அங்கே வந்த தேவ மனுஷனுக்கு நன்மை செய்தால் தனக்கு நன்மை கிட்டும் என்ற மனநோக்கமும் அவளுக்கு இருந்ததாக தெரியவில்லை. அத்துடன், தனக்கிருந்த நிறைவிலும் தேவ மனுஷனுக்கு செய்யவேண்டியதை நல்மனதோடும் முழுமன தோடும் எதிர்ப்பார்ப்பு எதுவுமின்றிச் செய்தாள்; அந்த மெத்தை அறையில் எந்தப் பங்கும் அவள் எடுக்கவில்லை. அதை எலிசாவுக்கென்றே பூட்டிவைத்தாள். அவள், குறைவுகள் மத்தியிலும் நிறைவைக் கண்டுகொள்ளும் ஒருத்தி என்பதை இந்த மனப்பான்மையே எடுத்துக்காட்டுகிறது.

யாராவது விருந்தாளிகள் நமது வீட்டில் தங்க வருகிறார்கள் என்றால், நாம் எத்தனை ஆயத்தம் செய்கிறோம். முழுமனதுடனோ அரைமனதுடனோ நமது நேரம் வேலை யாவையும் ஒதுக்கிவிடுகிறோம். அவர்களும் வந்துவிட்டுப் போய் விடுவார்கள். நம்முடனே என்று தங்கி நம்முடனே வாசம் பண்ணும் ஆண்டவருக்காக நமது வீடுகளில் ஒரு சிறு இடத்தையாகிலும் ஜெபத்திற்காக ஒதுக்கிவைத்திருக்கிறேனா? தினமும் 24 மணி நேரத்தில் தேவனுக்கென்று பிரித்துவிடப்பட்ட நேரம் உண்டா? கர்த்தருடைய காணிக்கை, தேவனுக்கென்று முதலிடமும், வேறுபிரித்த வாழ்க்கையும் நமக்கு இருக்குமாயின், குறைவுகளிலும் நிறைவு காணும் மனப் பக்குவம் வந்திருக்கும். பெயர் அறியப்படாத அந்தப் பெண்மணி தன் குறைவை எண்ணாமல், கர்த்தரை நேசித்தாள். தேவ ஊழியனைக் கனப்படுத்தினாள். ஜனத்தை நேசித்தாள்; மனநிறைவைக் கண்டாள்.

ஜெபம்: ஆசீர்வாதத்தின் தேவனே, நீர் எனக்கு அளித்திருக்கின்ற நிறைவுகளைக் காண முடியாதபடி எனது கண்களிலுள்ள மறைவுகளை அகற்றிவிடும். நீர் எனக்குப் பாராட்டின ஆசீர்வாதங்களையும் எண்ணி உம்மை ஸ்தோத்தரிக்கிறேன். ஆமென்.