ஜெபக்குறிப்பு: 2021 நவம்பர் 23 செவ்வாய்

வேதாகமத்திற்கு திரும்புக ஹிந்தி மொழி ஊழியங்களுக்காக ஜெபிப்போம். மஷி வந்தனா ஹிந்தி வானொலி நிகழ்ச்சிகளை அநேகமாயிரமான மக்கள் கேட்பதற்கும் இஸ்ரவேலின் தேவனுடைய மகிமை (எசேக்கி.11:22) இவ்வூழியங்களின்மேல் இருந்து ஆத்துமாக்கள் தேவனுடைய மந்தைக்குள் வந்துசேர வேண்டுதல் செய்வோம்.

சிறு பெண்ணின் சாட்சி

தியானம்: 2021 நவம்பர் 23 செவ்வாய் | வேத வாசிப்பு: 2 இராஜாக்கள் 5:1-19

அவள் தன் நாச்சியாரைப் பார்த்து: என் ஆண்டவன் சமாரியாவிலிருக்கிற தீர்க்கதரிசியினிடத்தில் போவாரானால் நலமாயிருக்கும்… (2 இராஜாக்கள் 5:3).

பெயர் குறிப்பிடப்படாத ஒரு சிறுபெண், நாகமான் வாழ்விலும், நமது ஜீவியத்திலும் ஒரு சவாலாகத் திகழுகிறாள். இஸ்ரவேல் நாட்டைச் சேர்ந்த இவள் சீரியப் படையினரால் சிறைப்பிடிக்கப்பட்டு, நாகமானின் மனைவிக்கு வேலை செய்ய அமர்த்தப்பட்டாள். இவளது மனநிலையைச் சற்றுக் கற்பனை பண்ணிப் பாருங்கள். அம்மாவின் செல்லப் பிள்ளையாக இருந்த சிறுமி, தனது தாயை, தகப்பனைப் பிரிந்து எவ்வளவாய் தவித்திருப்பாள்; இஸ்ரவேலன் அல்லாத ஒருவன் வீட்டில் வேலைக்கு அமர்த்தப்பட்ட அப்பிஞ்சு உள்ளம் எத்தனையாய்த் துடித்திருக்கும். ஆனாலும், தனது எஜமானும், சீரியநாட்டு ராஜாவின் மதிப்புக்குரிய படைத் தளபதியுமான நாகமான் குஷ்டரோகத்தினால் அவதிப்படுவதைக் கண்டபோது, அவள் பாராமுகமாக இருக்கவுமில்லை; தனக்கு தீங்கிழைத்தவன் வேதனைப் படட்டும் என்று பழிவாங்கும் எண்ணத்துடன் பேசாமல் இருந்துவிடவுமில்லை. இச்சிறுபெண் பரிகாரம் கூறினாள். அதிகம் பேசவில்லை. ஒரு சிறு சாட்சிமாத்திரம் ஓரிரு வார்த்தைகளில் கூறினாள்; அதன் விளைவோ விலையேறப் பெற்றதாயிருந்தது. இறுதியில், “உமது அடியேன் இனிக் கர்த்தருக்கேயல்லாமல் அந்நிய தேவர்களுக்கு சர்வாங்க தகனத்தையும் பலியையும் செலுத்துவதில்லை” என்று கூறி, இஸ்ரவேல் தேசத்து மண்ணைக் கேட்டு வாங்குமளவிற்கு இச்சிறு பெண்ணின் சிறிய சாட்சி நாகமானின் வாழ்வில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்திவிட்டது. எவ்வளவு பெரிய ஆச்சரியம்! நாகமானின் சரீரத்தை மட்டுமல்லாமல், அவனது ஜீவியத்தையே மாற்றிவிட்டது. அப்பெண், தான் சிறியவள், வேலைக்காரி என்று எண்ணி, அமைதியாய் இருந்திருப்பாளேயானால், இப்படியொரு சம்பவமே நிகழ்ந்திருக்குமோ என்னவோ!

தேவபிள்ளையே, அந்தச் சிறுமியின் உள்ளத்தில் பழியுணர்வு இருந்திருந்தால் இந்தச் சாட்சியை அவள் உரைத்திருக்கமாட்டாள். நம்மை வேதனைப் படுத்துகிறவர்கள் விஷயத்திலே நமது மனநிலை எப்படிப்பட்டது? அவர்களுக்கு ஆபத்து நேரிடும்போது ‘எனக்கென்ன’ “நன்றாய் அனுபவிக்கட்டும்” என்று பேசாமல் இருக்கிறோமா? நான் வீட்டிலே சிறியவன்; சபையிலே கணக்கிடப்படாதவன்; நான் தகுதியிலே குறைந்தவன் என்று மவுனமாக இருக்கிறோமா?

நாம் என்ன நிலையிலிருந்தால் என்ன, நம்மை ஒடுக்கும் மேலதிகாரியானால் என்ன, துன்பப்படுத்தும் உறவினர் என்றாலென்ன, நம்மை புறக்கணிக்கும் சகோதரராயிருந்தால் என்ன, அவர்கள்மீது மனதுருகி, தகுந்த தருணத்தில் நாம் சொல்லும் சாட்சி, அது ஒரு சிறியதாக இருந்தாலும், பெரியதொரு அறுவடைக்கு நிச்சயம் வழிவகுக்கும். சரீர சுகத்துடன், ஜீவனுள்ள தேவனை ஆராதிப்பவனாக நாகமான் திரும்பிவந்தது அந்தச் சிறுபெண்ணுக்கு எத்தனை மகிழ்ச்சியைக் கொடுத்திருக்கும்! நாமும் அப்படிப்பட்ட மகிழ்ச்சியை அனுபவிக்கவேண்டாமா?

ஜெபம்: கிருபையுள்ள தேவனே, எனக்கு தீங்கு செய்தவர்களிடத்தில்; அன்பு பாராட்டவும் அவர்களிடத்தில் உம்மைக் குறித்து சாட்சியாகக் கூறி அவர்களுக்கு நன்மை செய்யவும் எனக்குக் கிருபை தாரும். ஆமென்.