வாக்குத்தத்தம்: 2021 நவம்பர் 1 திங்கள்

கிறிஸ்து இயேசுவுக்குள் தேவன் அழைத்த பரம அழைப்பின் பந்தயப் பொருளுக்காக இலக்கை நோக்கித் தொடருகிறேன் (பிலி.3:14).


நீங்கள் தரித்துநின்று கர்த்தர் உங்களுக்குச் செய்யும் இரட்சிப்பைப் பாருங்கள் (2நாளா.20:17).
எரேமியா 51,52 | தீத்து 2

ஜெபக்குறிப்பு: 2021 நவம்பர் 1 திங்கள்

சமாதானத்துடனே போ; நீ இஸ்ரவேலின் தேவனிடத்தில் கேட்ட உன் விண்ணப்பத்தின்படி அவர் உனக்குக் கட்டளையிடுவாராக (1சாமு. 1:17).


நீர் ஏழைக்குப் பெலனும், நெருக்கப்படுகிற எளியவனுக்குத்திடனும், பெருவெள்ளத்துக்குத் தப்பும் அடைக்கலமும், வெயிலுக்கு ஒதுங்கும் நிழலுமானீர் (ஏசா.25:4) கடந்த நாட்கள் முழுவதும் நமக்கு அடைக்கலமாக, பெலனாக, திடனாக, நிழலாக காத்த தேவனை ஸ்தோத்திரித்து, புதிய மாதத்தையும் ஆசீர்வதித்து தரும்படியாக ஜெபிப்போம்.

வேறுபட்ட பாத்திரங்கள்!

தியானம்: 2021 நவம்பர் 1 திங்கள் | வேத வாசிப்பு: ரோமர் 9:10-23

….குயவன்; ஒரு பாத்திரத்தை…பண்ணுகிறதற்கு மண்ணின் மேல் அவனுக்கு அதிகாரம் இல்லையோ? (ரோமர்; 9:21).

பரம குயவனாகிய தேவனின் கரத்திலே நாமெல்லோரும் களிமண்ணாக இருக்கிறோம். அவரே சிருஷ்டிகர்; அவராலேயல்லாமல் எதுவும் சிருஷ்டிக்கப்படவில்லை. அவர் தமக்குச் சித்தமானதைத் தமக்குச் சித்தமானபடியே சிருஷ்டித்தார். அவற்றில் ஒன்று பெரியது; மற்றது சிறியது. ஒன்று ஒரு நோக்கத்திற்காகச் சிருஷ்டிக்கப்பட்டிருந்தால், இன்னொன்று அதை நிறைவேற்றுவதற்கு உறுதுணையாகச் சிருஷ்டிக்கப்பட்டிருக்கும். அது சிருஷ்டிகரின் உரிமை. வேதாகமத்திலே ஆண் பெண் என்றும், நல்லோர் தீயோர் என்றும், நீதிமான்கள் துன்மார்க்கர் என்றும் வேறுபட்ட பாத்திரங்களை நாம் சந்திக்கின்றோம். தேவனோ ஒவ்வொரு பாத்திரத்தின்மீதும் கரிசனையுள்ளவராக இருக்கிறார் என்பதுதான் உண்மை.

இந்தப்படி, வேதாகமத்தில் அநேக பெண் பாத்திரங்களைக் காணலாம். ஒருத்தி ஆசீர்வதிக்கப்பட்டாள்; மற்றவள் சாபத்துக்குள்ளானாள், ஒருத்தியின் வீட்டிலே அற்புதம் நிகழ, இன்னொருத்தி அற்புதங்களுக்கு எதிராகக் காணப்பட்டாள். ஒருத்தி புத்தியுள்ளவள். மற்றவள் புத்தியற்றவள். யார் எப்படி இருந்தாலும் கர்த்தர் ஒவ்வொரு நோக்கத்துடனேயே ஒவ்வொரு பாத்திரத்திற்கும் வேதாகமத்திலே இடமளித்துள்ளார். இஸ்ரவேலைத் துன்பப்படுத்திய பார்வோனைப்பற்றி, “மேலும் என்னுடைய வல்லமையை உன்னிடத்தில் காண்பிக்கும்படிக்கும், என்னுடைய நாமம் பூமியில் எங்கும் பிரஸ்தாபமாகும்படிக்கும், உன்னை நிலைநிறுத்தினேன்” (ரோமர் 9:17) என்றெழுதப்பட்டுள்ளது. ஆகவே, பாத்திரங்களிலுள்ள குறைகளை எடுத்துப் பேசிக்கொண்டிராமல், கர்த்தர் எதற்காக இப்படியொரு பாத்திரத்தைப்பற்றி நாம் அறிந்துகொள்ள சித்தங்கொண்டார் என்பதைச் சிந்தித்து, அந்தப் பாத்திரங்களில் நம்மை நிறுத்திப்பார்த்து, எச்சரிக்கையுடன் செயல்படுவதே புத்தியுள்ள செயலாகும். அப்போது, பாத்திரங்களாகிய நாமும் தேவநாமத்தை மகிமைப் படுத்தலாமே! இம்மாதம் முழுவதும் ஆவியானவர் துணைகொண்டு சில பெண் பாத்திரங்களைப்பற்றி தியானிப்போம். தேவையான தேவ ஆலோசனைகளை ஆவியானவர் நமக்குத் தந்தருளுவாராக!

பிரியமானவர்களே, நம்மில் பலர் நம்மைக் குறித்துத் திருப்தியற்றவர்களாக, தாழ்வு மனப்பான்மை உடையவர்களாக இருக்கலாம். அது வேண்டாம். சிறியதோ பெரியதோ, நாம் எப்படிப்பட்ட பாத்திரங்களானாலும், நான் ஏன் இப்படிச் சிருஷ்டிக்கப்பட்டேன் என்று முறுமுறுக்காமல், கர்த்தருடைய கரத்திலே நம்மை உள்ளபடியே ஒப்புவிப்போம். நம்மை எந்த நோக்கத்திற்காக அவர் சிருஷ்டித்தாரோ, அந்த நோக்கம் நமக்கூடாக நிறைவேற நம்மைத் தமது சித்தப்படி உபயோகிப்பாராக. “ஆகையால், விரும்புகிறவனாலும் அல்ல; ஓடுகிறவனாலும் அல்ல; இரங்குகிற தேவனாலேயாம்” (ரோமர் 9:16).

ஜெபம்: பரம குயவனே, உமது கரத்தில் உள்ளபடியே என்னை அர்பபணிக்கிறேன். குறிப்பாக, என்னைக் குறித்து நீர் கொண்டிருக்கும் உன்னத நோக்கம் நிறைவேற உம்மிடத்தில் என்னை ஒப்புவிக்கிறேன். ஆமென்.

பூரண அழகுள்ள ஆத்தும நேசர்

அதிகாலை வேளையில்…
(நவம்பர்-டிசம்பர் 2021)
Dr.உட்ரோ குரோல்

வேதபகுதி: வெளிப்படுத்தல் 22:1-21


சபைகளில் இவைகளை உங்களுக்குச் சாட்சியாக அறிவிக்கும்படிக்கு இயேசுவாகிய நான் என் தூதனை அனுப்பினேன். நான் தாவீதின் வேரும் சந்ததியும், பிரகாசமுள்ள விடிவெள்ளி நட்சத்திரமுமாயிருக்கிறேன் என்றார் (வெளி. 22:16).


பரிசுத்த வேதாகமத்தின் முதல் புத்தகமான ஆதியாகமம் அநேக ஆரம்பங்களை அறிவிப்பது போலவே, கடைசி புத்தகமான வெளிப்படுத்தல் விசேஷ நூலும் சில ஆரம்பங்களைத் தெரிவிக்கிறது. பல புதிய ஆரம்பங்களுக்கு முன்னர் முடிவடைய வேண்டிய சில காரியங்களும் இருந்தன. எனவே வெளிப்படுத்தின விசேஷமானது அநேக இறுதியானவைகளை தேவனுடைய வார்த்தை மூலமாக நமக்குக் கூறுகிறது.

ஆதியாகமம் 3:9 இல் தேவன் மனிதனுக்குக் கொடுத்த முதல் அழைப்பினை நாம் வாசிக்கிறோம். “அப்பொழுது தேவனாகிய கர்த்தர் ஆதாமைக் கூப்பிட்டு: நீ எங்கே இருக்கிறாய்?” என்றார். வெளிப்படுத்தல் 22:17இல் தேவன் மனிதனுக்குக் கொடுத்த இறுதி அழைப்பினைக் காண்கிறோம். “ஆவியும் மணவாட்டியும் வா என்கிறார்கள்; கேட்கிறவனும் வா என்பானாக; தாகமாயிருக்கிறவன் வரக்கடவன்; விருப்பமுள்ளவன் ஜீவத்தண்ணீரை இலவசமாய் வாங்கிக்கொள்ளக் கடவன்”. கிறிஸ்துவுடன் நித்தியத்தில் வாழ விரும்பும் ஒவ்வொருவரும் இவ் விரு வசனங்களிலுள்ள அழைப்புகளில் ஒன்றினுக்கு செவிகொடுத்திருக்க வேண்டும்.

ஒருவேளை மத்தேயு 11:28இல் கிறிஸ்துவின் “வருத்தப்பட்டுப் பாரஞ் சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்” என்ற கூப்பிடுதலுக்கோ “நான் கொடுக்கும் தண்ணீரைக் குடிக்கிறவனுக்கோ ஒருக்காலும் தாகமுண்டாகாது; நான் அவனுக்குக் கொடுக்கும் தண்ணீர் அவனுக்குள்ளே நித்திய ஜீவகாலமாய் ஊறுகிற நீரூற்றாயிருக்கும்” (யோவான் 4:14) என்ற அழைப்புக்கோ ஒருவர் செவிசாய்த்திருக்கலாம். இவ்விரண்டுக்கும் நீங்கள் கீழ்ப்படியவில்லை என்றாலோ, இயேசு கிறிஸ்துவை உங்கள் இரட்சகராக ஏற்றுக்கொள்ளவில்லை என்றாலோ, நீங்கள் நித்திய ஜீவனைப் பெற்றுக்கொள்ள இயலாது; இப்பொழுதே அவரது அன்பின் அழைப்பை ஏற்றுக்கொள்ளுங்கள்.

இரட்சிப்பின் அழைப்புக்கு நீங்கள் இணங்கிவிட்டீர்கள் எனில் உங்களது எதிர்காலத்தைப் பற்றிய புதிய கண்ணோட்டம் உங்களுக்கு உண்டாயிருக்கும். உங்களது எதிர்கால இலக்கு பிரகாசமாயிருக்கும்; ஆகாயத்துப் பறவைகளின் பாடல்கள் மிக இனிமையாயிருக்கும்; ஒவ்வொரு நாளும் இயேசுகிறிஸ்துவுக்கு ஊழியஞ்செய்ய ஆர்வமாயிருப்போம். அவருடன் மகிமையில் நாம் வாழ இருப்பதை எதிர்நோக்கியிருப்போம். வெளி.22:17இல் தேவனுடைய இறுதி அழைப்புக்கு முன்னர் இயேசுகிறிஸ்துவே நம்மை இரட்சிப்புக்கு அழைத்தவர் என்பதை அவர் உறுதி செய்கிறார். “நான் தாவீதின் வேரும் சந்ததியும், பிரகாசமுள்ள விடிவெள்ளி நட்சத்திரமுமாயிருக்கிறேன் (வெளி.22:16) என்று இயேசு கூறுகிறார். இந்த விருதுகள் வேதாகமத்தில் அநேக இடங்களில் இயேசுவைக் குறிப்பதாகக் காணப்படுகின்றன (ஏசா. 11:1; எண்.24:17), ஆனால் இந்த இறுதி அழைப்புக்கு முன்னர் அது தரும் தாக்கத்தைப்போல வேறு எங்கும் காணப்படவில்லை.

நாம் இரட்சிப்பில் தேவனிடத்துக்கு வரும்பொழுது தாவீதின் சந்ததியில் சேருகிறோம். பாவத்தின் இருளிலிருந்து வெளிவரும் பொழுது பிரகாசமுள்ள விடி வெள்ளி நட்சத்திரத்தின் ஒளிக்குள் பிரவேசிக்கிறோம். நமக்காக மரித்த இயேசுவின் முகப்பிரகாசமே அது. பரலோகத்தின் வெளிச்சத்துக்குள் நாம் பிரவேசிக்கும் பொழுது அவரைத்தான் நாம் முதன் முதலாக தரிசிப்போம். நம்முடைய இரட்சகரின் பிரசன்னமே பரலோகத்தை ஒளியூட்டுகிறது.

பிறந்த ஆறே வாரத்தில் பார்வையை இழந்த ஃபானி கிராஸ்பி என்ற அமெரிக்க இசைஞானி எட்டாயிரத்துக்கும் மேலான கிறிஸ்தவப் பாடல்களை இயற்றி இசையமைத்துள்ளார். ஒரு முறை ஒரு நண்பர் அவர் பார்வையில்லாதவராக இருப்பதைக் குறித்து, தனது துயரத்தை வெளிப்படுத்த முற்பட்டபோது, கிராஸ்பி அவரைத் தடுத்து, “எனது பிறப்பின்போது எனது வேண்டுகோள் எது என்று என்னைக் கேட்டிருந்தால் நான் குருடாக இருப்பதையே விரும்பியிருப்பேன்.” என்றார். அதிர்ச்சியடைந்த அவர் அதற்கு விளக்கம் கேட்டபொழுது, “ஏனெனில் நான் பரலோகத்திற்குப் போகும் பொழுது நான் காணும் முதல் முதல் முகம் எனக்காகத் தன் ஜீவனையே கொடுத்த என் நேசர் இயேசுவாகத்தான் இருக்கும்” என்று நெகிழ்ச்சியோடு கூறினார்.

பாரசீகப் பேரரசின் நிறுவனரான சைரஸ் மாமன்னரைப்பற்றிய ஒரு கதை உண்டு ; அவர் ஒருமுறை ஓர் இளவரசரையும் அவரது குடும்பத்தினரையும் சிறைபிடித்தார். அவர்கள் அனைவரும் பேரரசருக்கு முன் நிறுத்தப்பட்ட பொழுது சைரஸ் மன்னர் அக்கைதியைப் பார்த்து, “நான் உன்னை விடுதலை செய்தால் நீ எனக்கு என்ன தருவாய்?” என்று வினவினார். அதற்கு அந்த இளவரசர் என்னுடைய ஆஸ்திகளில் பாதியைத் தருவேன்” என்றார். “உன்னுடைய பிள்ளைகளை விடுவித்தால்?” என்ற கேள்விக்கு “எனக்குரிய எல்லாவற்றையும் தந்துவிடுவேன்” என்று இளவரசர் பதிலுரைத்தார். இறுதியாக சைரஸ் மன்னர் “உன் மனைவியை விடுதலை செய்தால் எனக்கு என்ன தருவாய்?” என்று கேட்டார். அதற்கு அந்த இளவரசன் “மாட்சிமையுடைய மன்னரே, நான் என்னையே தந்துவிடுவேன்” என்றார். இந்த பதிலால் நெகிழ்ச்சியுற்ற பேரரசர் அவனையும் அவனுடைய குடும்பத்தையும் விடுதலை செய்தார். இளவரசன் அவனுடைய மனைவி மற்றும் பிள்ளைகள் யாவரும் தங்களுடைய வீட்டுக்குத் திரும்பினர். இளவரசன் தனது மனைவியிடம் “சைரஸ் மன்னர் மிக அழகானவர் அல்லவா?” என்று கேட்டான். “நான் அவரைக் கவனிக்கவில்லை; எனக்காகத் தன்னையே கொடுக்க ஆயத்தமாயிருந்த உம்மீதே என் கண்கள் இருந்தன” என்று அன்பொழுகக் கூறினாள்.

காலைதோறும் நம்மை இரட்சித்தவரை நாம் துதிக்க வேண்டும். நாள்தோறும் நம்மை இரட்சித்தவருக்கு சேவை செய்ய வேண்டும். மாலை தோறும் நம்மை இரட்சித்தவரில் களிகூரவேண்டும். நம்மில் அன்புகூர்ந்து நமக்காக தன் ஜீவனைக் கொடுத்த ஆண்டவராகிய இயேசுவுக்கு முதலிடம் கொடுத்து அவரை முழுவதுமாய் நேசிக்க இன்றே தீர்மானம் எடுப்போம்.

மொழியாக்கம்: Mrs.அகஸ்டா மங்களதுரை

வாசகர்கள் பேசுகிறார்கள்

(நவம்பர்-டிசம்பர் 2021)

[01]
சத்தியவசன நிலையத்தாருக்கு, வணக்கம். வியாழன் மாலை நம்பிக்கை டிவியில் நிகழ்ச்சி பார்த்தேன். ஆறுதலாய் விடுவிக்கிற நம்பிக்கையின் செய்தியாய் இருந்தது. தொடரட்டும் தங்கள் பணி.

Mr.S.Gandhiraj, Chengalpet.


[02]
அனுதினமும் கிறிஸ்துவுடன் புத்தகத்தை வாசிக்கும்போதெல்லாம் ஆண்டவர் என்னோடு பேசுவதுபோல் இருக்கும். மன ஆறுதலைத் தரும். எனக்காக எழுதியதுபோல் நினைப்பேன். கர்த்தர் என்னுடைய அநேக ஜெபங்களுக்கு பதில் கொடுத்திருக்கிறார். என் குடும்பத்திற்காக தொடர்ந்து ஜெபியுங்கள்.

Mrs. Yogarani, Tirunelveli.


[03]
தாங்கள் அனுப்பும் மாத இதழ் தவறாமல் வருகிறது. மிக்க நன்றி. மிகவும் ஆறுதலாகவும் எழுப்புதலாகவும் இருக்கிறது. இந்த பயங்கரமான கால சூழ்நிலையில் இருக்கும்போது தியானபகுதிகள் மனதைரியத்தையும் உற்சாகத்தையும் தருகிறது. இன்னும் நாங்கள் விசுவாச பாதையில் நிலைத்து நிற்க எங்களுக்காக ஜெபியுங்கள்,

Mrs.M.Samuel, Nellikupam


[04]
Greetings in Jesus Name. Your Magazine. Anuthinamum Christhuvuden help to my spiritual life. Thank you very much for sending in time.

Mr.Mathew, Vellore.


[05]
I am regularly watching your T.V.Programs. It is very useful to me. kindly uphold me in your prayers.

Mrs.Sarah Magdalene, Chennai.


[06]
சத்தியவசன ஆசிரியர் அவர்களுக்கு, தங்களது மாதாந்திர பத்திரிக்கை வருகிறது. இப்புத்தகங்கள் எங்களை உயிர்ப்பிக்கிறது.

Mrs.Leelabai, Madurai.


[07]
Dear Brother in Christ, kindly pray for the welfare of our family. So that all of us Magazine get ready to meet our Lord in the ‘Judgement day’ and for enrolling our Name in the ‘book of life’. Your Magazine and other publications are very useful to us. May our Lord bless us all. Thanks.

Mr.D.Thangaraj, K.K.Dt.


[08]
Dear Brother in Christ, As I read your devotion today, Lord, give me the courage to allow your word to read me. May I know real nourishment for my soul.

Dr.Chrishtopher Durairaj, Sivakasi


[09]
கர்த்தருக்கு ஸ்தோத்திரம். சொசைட்டி லோன் … உடனடியாக கட்டவேண்டிய நிர்ப்பந்தமான சூழ்நிலையில் ஜெபக்குறிப்பு அனுப்பியிருந்தேன். … தற்போது எனது மனைவியின் அக்கா மூலம் கட்டவேண்டிய தொகை கிடைக்க ஆண்டவர் வழிகொடுத்துள்ளார். கடவுளின் திருப்பாதம் பணிந்து நன்றி சொல்லுகிறேன். எனக்காக ஜெபித்து உதவிய தங்களுக்கும் மிக்க நன்றி ஏறெடுக்கிறேன்.

Mr.Samuel Iyyadurai, Namakkal.

ஆசிரியரிடமிருந்து…

(நவம்பர்-டிசம்பர் 2021)

கிறிஸ்துவுக்குள் பிரியமுள்ள வாசகர்களுக்கு,

ஜனங்களின் பாவங்களை நீக்கி இரட்சிக்க இவ்வுலகத்திற்கு வந்த ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துக்கள்.

இவ்விதழின் வாயிலாக தங்களைச் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறோம். வருடத்தின் இறுதி மாதங்களுக்குள் பிரவேசிக்க தேவன் கிருபை செய்திருக்கிறார். கொந்தளிப்பை அமர்த்துகிறார், அதின் அலைகள் அடங்குகின்றது (சங்.107:29). நமது தேசம் இயல்பு நிலைக்கு திரும்பச்செய்த தேவாதிதேவனை மகிமைப்படுத்துவோம். தடைகளோடு காணப்படும் திருச்சபை பணிகள், மிஷனெரி பணிகள் மீண்டும் புதுப்பொலிவோடு நடைபெறுவதற்கும் கர்த்தர் தொடர்ந்து ஊழியப்பணிகளை ஆசீர்வதிப்பதற்கும் பாரத்தோடு ஜெபிப்போம்.

அன்பு பங்காளர்கள் சத்தியவசன ஊழியத்தை தொடர்ந்து தங்களது மன்றாட்டு ஜெபங்களினாலும் ஆதரவான காணிக்கையாலும் தாங்கினபடியால் தொலைகாட்சி நிகழ்ச்சிகளை வருடமுழுவதும் தடைகளின்றி நடத்துவதற்கும் கர்த்தர் கிருபை பாராட்டினார். தொலை காட்சி ஊழியங்களை ஆதரவாளர் காணிக்கையாலே தாங்கின யாவருக்காகவும் ஆண்டவருக்கு நன்றி செலுத்துகிறோம். அநேகர் அனுதினமும் கிறிஸ்துவுடன் புதிய சந்தாதாரரை அறிமுகப்படுத்தியிருந்தீர்கள். தியானங்கள் வாயிலாக தாங்கள் பெற்றுக்கொண்ட ஆசீர்வாதங்களையும் எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள். உங்களோடு சேர்த்து நாங்களும் தேவனை மகிமைப்படுத்த அது ஏதுவாயிருக்கும்.

இவ்விதழில் நவம்பர் மாதத்தில் 1-26 ஆகிய நாட்களில் வேதாகத்தின் பெண்களை பற்றியும் டிசம்பர் மாதத்தில் 1-21,25,27-31 ஆகிய நாட்களில் கிறிஸ்துமஸ் நாட்களுக்கான சிறப்பு தியானங்களையும் சகோதரி சாந்தி பொன்னு அவர்கள் எழுதியுள்ளார்கள். நவம். 27-30, டிசம்.22-24,26 ஆகிய நாட்களுக்கு வேறு சில தியானங்களையும் தொகுத்து வழங்கியுள்ளோம். உம்முடைய வசனத்தை நான் காத்து நடக்கும்படிக்கு, சகல பொல்லாத வழிகளுக்கும் என் கால்களை விலக்குகிறேன் (சங்.119:101). வசனங்களை இருதயத்தில் காத்து நடக்க ஆவியானவர் துணை செய்வார். தியானங்களை எழுதிவரும் சகோதர, சகோதரிகளையும் உங்கள் ஜெபங்களில் மறவாதீர்கள். இத்தியானங்கள் உங்களது ஆவிக்குரிய வாழ்வின் வளர்ச்சிக்கு பிரயோஜனமாக இருக்க ஜெபிக்கிறோம்.

கே.ப.ஆபிரகாம்