ஜெபக்குறிப்பு: 2021 நவம்பர் 9 செவ்வாய்

கர்த்தாரே உனக்கு நித்திய வெளிச்சமும், உன் தேவனே உனக்கு மகிமையுமாயிருப்பார் (ஏசா.60:19) என்ற வாக்கைப்போலவே வேதாகமத்திற்கு திரும்புக செகந்திராபாத் தலைமை அலுவலகத்திற்கு மகிமையின் கர்த்தர் பெரிய காரியங்களைச் செய்தருளவும், ஊழியத்தேவைகள் சந்திக்கப்படவும், Associate Director Rev.அனில் குமார் அவர்களை கர்த்தர் வல்லமையாய் உபயோகிக்கவும் ஜெபிப்போம்.

பெருமையும் பொறாமையும்

தியானம்: 2021 நவம்பர் 9 செவ்வாய் | வேத வாசிப்பு: ஆதி.30:1-4; யாக்.4:4-10

ராகேல் தான் யாக்கோபுக்கு பிள்ளைகளைப் பெறாததைக் கண்டு, தன் சகோதரியின்மேல் பொறாமைகொண்டு… (ஆதியாகமம் 30:1).

கர்த்தருடைய அனுக்கிரகத்தால், லேயாள் பிள்ளை பேற்றினால், தேற்றப்பட்டாள். இது ஆறுதலளிக்கிற விஷயமாக இருந்தாலும், மறுபுறத்தில் ராகேலின் வாழ்க்கை நமக்கு எச்சரிப்பைத் தருகிறது. யாக்கோபின் முதல் பார்வை ராகேலுக்கே கிடைத்தது. ஏழு வருஷங்களாக காத்திருந்த அவன் ஏமாற்றப்பட்டது லேசான விஷயமல்ல. ஆனாலும், இன்னும் ஏழு வருடங்கள் யாக்கோபு தனக்காக உழைத்தான் என்பது ராகேலுக்குப் பெருமை தரும் விஷயம்தான். யாக்கோபு தன்னிலேயே அதிக பற்று வைத்திருந்ததைக் கண்டு, சகோதரி என்றும் பாராமல் லேயாளை அற்பமாக எண்ணுமளவு ராகேல் பெருமையடைந்திருந்தாள். அவளது அழகும், சௌந்தரியமும் பெருமைக்கு மெருகூட்டின. ஆனாலும், அவள் மலடியாயிருந்தாள். அவளது பெருமைக்கு இது ஒரு பேரிடி. ஆத்திரமும் அஞ்ஞானமும் அவளது கண்களை மறைக்க, பொறாமைத் தீயும் சேர்ந்துவிட, யாரிடம் முறையிடவேண்டுமென்பதையும் மறந்து, “எனக்குப் பிள்ளை தாரும்; அல்லது நான் சாகிறேன்” என்று கணவனைச் சாடுகிறாள். இது தனது ஆசைக் கணவனை சற்றுக் கோபப்படுத்தினாலும், அவள் கர்ப்பத்திற்காக குறுக்கு வழிகளைப் பின்பற்றினாள். இறுதியில் சுயமுயற்சி, பொறாமை, பெருமை யாவும் மறந்து ஓய்ந்தபின்பே, தேவன் ராகேலை நினைத்தருளினார்.

பெருமையும் பொறாமையும் நமக்கு எந்தவிதமான நன்மையும் தராது. மனித தயவும் நேசமும் ஆதரவும் நமக்கிருக்கலாம். பிறரைவிட நாம் கவர்ச்சி மிகுந்த புறத்தோற்றம் உடையவனாக, உடையவளாக இருக்கலாம். நம்மையே பிறர் அதிகமாக விரும்பலாம். ஆனால், இந்த அழகும் ஆதரவும் கர்த்தராலே கிடைக்கிறது என்பதை மறப்பதுதான் நம்மைக் குழிக்குள் தள்ளிவிடுகிறது. மனிதனுடைய கண்களில் தயவை ஏற்படுத்துகிறவரும் கர்த்தரே. அப்படியிருக்க நாம் வீண்பெருமை கொள்வது எப்படி? அதேசமயம், சிறுமைப்பட்டவன், அதிலும் நம்மால் அற்பமாய் எண்ணப்படுகிறவன் கர்த்தரால் உயர்த்தப்படும்போது நமக்கு ஏன் பொறாமை? அவனை உயர்த்துவது கர்த்தர். “தேவன் பெருமையுள்ளவர்களுக்கோ எதிர்த்து நிற்கிறார். தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறார்” (யாக்.4:6).

தேவபிள்ளையே, நமது தேவைகளுக்காக, குறைவுகள் தீர்க்கப்பட நாம் முதலாவது தேவனைத் தேடுவோம். மனுஷரை நாடித்தேடுவதையும், மூளைக்கு எட்டிய சுயமுயற்சிகளையும் விட்டுவிடுவோம். நமக்குள் தேங்கியிருக்கும் பெருமையையும் பொறாமையையும் அறிக்கையிட்டு நம்மை இன்றே தேவ சமுகத்தில் தாழ்த்துவோம். மனுஷர் நம்மை தாழ்த்தினாலும், எல்லாவற்றையும் விட்டு நம்மை வெறுமையாக்கிக் கர்த்தரைச் சார்ந்துகொள்ளும்போது, கர்த்தர் தகுந்த வேளையில் நம்மை நிச்சயம் உயர்த்துவார்.

ஜெபம்: கிருபையுள்ள தேவனே, நான் பெருமைகொள்ளுமளவுக்கு என்னிடத்தில் ஒன்று மில்லை. உமது கிருபைக்கு முன்பாகத் தாழ்மையுடன் பணிந்து, உமது சித்தப்படி நடக்க என்னை ஒப்புக்கொடுக்கிறேன். ஆமென்.