ஜெபக்குறிப்பு: 2021 அக்டோபர் 3 ஞாயிறு
அந்தப்படி: முழங்கால் யாவும் எனக்கு முன்பாக முடங்கும், நாவு யாவும் தேவனை அறிக்கை பண்ணும் (ரோம.14:11) கர்த்தருடைய வார்த்தைகள் இந்நாட்களில் நிறைவேறவும், எல்லா தேசங்களிலுமுள்ள திருச்சபை ஆராதனைகளுக்காகவும், போதகர்களுக்காகவும் சபைகளின் எழுப்புதலுக்காகவும் பாரத்தோடு ஜெபிப்போம்.
என் எல்லையைப் பெரிதாக்கும்!
தியானம்: 2021 அக்டோபர் 3 ஞாயிறு | வேத வாசிப்பு: ஏசா.54:2,3; சங்.147:14
என் எல்லையைப் பெரிதாக்கும்!
யாபேஸின் இரண்டாவது விண்ணப்பம் என் எல்லையைப் பெரிதாக்கும் என்பதாகும். இயற்கையாகவே தங்கள் எல்லை பெரிதாக வேண்டுமென்ற ஆசை ஒவ்வொருவரின் உள்ளத்திலும் ஏற்படுவது இயல்பு. சிலர் தங்கள் சொந்த நிலத்தின் எல்லைகளுக்கு அருகில் இருக்கும் நிலம் விலைக்கு வருமானால், எப்படியாகிலும் அதை வாங்கி தன் எல்லையை பெரிதாக்கிவிடலாமென்று முயற்சிப்பார்கள். இன்னும் சிலர் சிறிது சிறிதாக அயலானின் நிலத்தை திருடிவிடுவார்கள்: உலக நாடுகள்கூட தம் அயல்நாட்டைக் கைப்பற்றி நாட்டின் எல்லையைப் பெரிதாக்கவேண்டுமென்ற நோக்கத்துடன் யுத்தத்தில் ஈடுபடுகிறது. எவ்வளவுதான் உலகப்பிரகாரமாக நம் எல்லையைப் பெரிதாக்கினாலும்கூட நமக்குக் கடைசியில் கிடைக்கப்போகும் இடம் ஆறடி நிலம் மட்டுமே என்பதை உணர்ந்துகொள்ளத் தவறிவிடுகிறார்கள்.
ஆவிக்குரியவர்களாகிய நாம் அழிந்துபோகும் உலக காரியங்களுக்காக அல்ல; நித்திய நித்தியமான நிலை நிற்கப்போகும் பரலோகத்தின் காரியங்களை வாஞ்சித்து, அதன் எல்லைகளைப் பெரிதாக்கவே முயற்சிக்க வேண்டும். ஆவிக்குரிய ஜீவியத்தின் எல்லையை நாளுக்குநாள் விரிவுபடுத்த பிரயாசப்பட வேண்டும். கர்த்தர்மேல் வைத்திருக்கும் அன்பின் ஆழம், அகலம், நீளம் பெரிதாக்கப்பட வேண்டும். நம் விசுவாச வாழ்க்கையின் எல்லை விரிவாக்கப் படவேண்டும். ஜெப ஜீவியத்தின் எல்லை கிராமங்கள், பட்டணங்கள், தேசங்களைக் கடந்து செல்லவேண்டும். பரிசுத்த ஜீவியத்தின் எல்லை விரிவடைய வேண்டும். நாம் செய்துகொண்டிருக்கும் சிறிய ஜெபக்கூட்டம். சிறு ஊழியங்களின் எல்லைகள் எங்கும் பரந்து செல்லவேண்டும். இவைகளுக்கு ஓர் எல்லையைப் போட்டு அவற்றைக் கட்டுப்படுத்தி விடக்கூடாது.
அன்பானவர்களே, உங்களுடைய உள்ளத்தில் பரிசுத்த ஜீவியத்தின் எல்லை, ஜெப ஜீவியத்தின் எல்லை, விசுவாச வாழ்க்கையின் எல்லை, ஊழியத்தின் எல்லை ஆகியவை விரிவாக்கப்படவேண்டும் என்ற வாஞ்சை இதுவரை உங்கள் உள்ளத்தில் எழுந்ததுண்டா? கர்த்தர் இன்று உங்களுக்கு கொடுக்கும் ஆலோசனை என்ன? உன் கூடாரத்தின் எல்லையை விசாலமாக்கு: உன் வாசஸ்தலங்களின் திரைகள் விரிவாகட்டும்; தடை செய்யாதே (ஏசா.54:2) என்கிறார். யாபேஸ் ஜெபித்தவண்ணம் நீங்களும் ஜெபியுங்கள்! கர்த்தர் உங்கள் எல்லையைப் பெரிதாக்குவார். அவர் உன் எல்லைகளைச் சமாதானமுள்ளவைகளாக்கி, உசிதமான கோதுமையினால் உன்னைத் திருப்தியாக்குகிறார் (சங்.147:14).
ஜெபம்: கர்த்தாவே, எங்களிடத்தில் காணப்படும் சோர்வு, நிர்விசாரம், அசட்டைத்தனங்களை நீக்கி, ஆவிக்குரிய ஜீவியத்தின் எல்லையைப் பெரிதுபடுத்த எங்களுக்கு உதவி செய்யும். ஆமென்.