ஜெபக்குறிப்பு: 2021 அக்டோபர் 20 புதன்

இப்பொழுதும் நீங்கள் உங்கள் வழிகளையும், உங்கள் கிரியைகளையும் சீர்ப்படுத்தி, உங்கள் தேவனாகிய கர்த்தருடைய சத்தத்தைக் கேளுங்கள் (எரேமி.26:13) மராத்தி, கன்னடம், பெங்காலி ஆகிய மொழிகளில் நடைபெறும் வேதாகமத்திற்கு திரும்புக ஊழியங்களினாலே கர்த்தர் பெரியகாரியங்களை செய்தருளவும், ஊழியர்களை வல்லமைப்படுத்தி, தேவைகளைச் சந்தித்து வழிநடத்த மன்றாடுவோம்.

முழுஇருதயத்தோடு தேடினால்…

தியானம்: 2021 அக்டோபர் 20 புதன் | வேத வாசிப்பு: எரேமியா 29:10-14

உங்கள் முழுஇருதயத்தோடும் என்னைத் தேடினீர்களானால், என்னைத் தேடுகையில் கண்டுபிடிப்பீர்கள் (எரேமி. 29:13).

நம்பமுடியாத காரியங்களைக் கூறி, அவற்றைத் தேடி நாடவேண்டும் என்று தேவன் நம்மிடம் எதிர்ப்பார்ப்பதில்லை. அவருடைய வார்த்தை சத்தியம். அந்த வார்த்தையின்படி உண்மையாய் நடப்போமானால் அதன் மேன்மையான முடிவை நிச்சயம் கண்டடைவோம். நமது எதிர்காலத்தையும் முடிவையும்கூட அறிந்தவர் நம் தேவன். அவரே நமக்கான திட்டங்களை வகுத்து அந்த வழியிலே நம்மை நடத்திச் செல்கிறார். அந்தப் பாதையில் ஆபத்து இல்லை, கஷ்ட துன்பம் இல்லை என்று சொல்லமுடியாது. எது இருந்தாலும் முடிவு மகா மேன்மையுள்ளதாயிருக்கும் என்பதில் சந்தேகமில்லை. அதைக் கண்டடைய முழு இருதயத்துடன் கர்த்தரை நாமேதான் தேடவேண்டும்.

கர்த்தருக்குக் கீழ்ப்படியாததால், யூதா, பாபிலோனியரால் சிறைப்பிடிக்கப்பட தேவன்தாமே அனுமதித்திருந்தார். அப்படியே சிறைப்பிடிக்கப்பட்டுச் சென்றபோதும், தேவன் அவர்களை மறக்கவில்லை. அவர்களுக்கு ஒரு புதிய ஆரம்பத்தை, ஒரு புதிய நோக்குடன் வாழும் ஒரு புதிய வாழ்வைத் தர ஆயத்தமாயிருந்தார். ஆனால் அவர்கள் விண்ணப்பம் பண்ணவேண்டும். அப்படிச் செய்தால்தான், தேவன் அவர்களுக்குச் செவிக்கொடுப்பார். கஷ்ட துன்பவேளையில் தேவன் நம்மைக் கைவிட்டு விட்டாரோ என்று நாம் எண்ணலாம். ஆனால், யூதாவில் அவர் கொண்டிருந்த எண்ணத்தையே அவர் நம்மிலும் கொண்டிருக்கிறார். ஆகவே நாம்தான் அவரைத் தேடவேண்டும். அவரிடத்தில் தஞ்சமடைகிறவர்கள் பாக்கியவான்கள்.

கர்த்தருடைய பிள்ளைகள் முழு நம்பிக்கையுள்ள எதிர்காலத்தைப் பெற்றுக்கொள்வதே அவருடைய அநாதி சித்தம். வாழ்வின் கஷ்டநிலைகளில் மாத்திரமல்ல, அகதிகளாக்கப்பட்ட அல்லது சிறைப்பிடிக்கப்பட்ட நிலையிலும் தேவ பிள்ளைகள் மனம் நொந்து போகக்கூடாது. ஏனெனில், தேவன் நம்மோடே இருக்கிறார். எந்த வேளையும் அவரை நோக்கிக் கூப்பிடுகிற சுதந்திரத்தை அவர் நமக்குத் தந்திருக்கிறார். அவருடைய கிருபை நமக்கு எப்போதும் உண்டு என்ற நிச்சயத்தைத் தந்திருக்கிறார். எந்த சூழ்நிலையிலும், அது ஒரு புது இடமோ, சத்துருக்களின் நடுவிலோ, வியாதியோ, மரண ஆபத்தோ, எதுவானாலும் அவர் நம்மோடு இருக்கிறார். ஆனால் நாம் அவரைத் தேடவேண்டும்.

முழு இருதயத்தோடு கர்த்தரைத் தேடினால் வார்த்தைக்கூடாகவோ, தமது சிருஷ்டிகளுக்கூடாகவோ, அல்லது எந்த விதத்திலோ தாம் நம்மோடு இருக்கும் நிச்சயத்தைத் தேவன் தருவார் என்பதே நாம் அவரைப்பற்றிக் கொண்டிருக்கிற நிச்சயம். தேவனை நீங்கள் தேடுவீர்களானால் அவர் உங்களுக்குப் பதிலளிப்பார். பின்னர் அவரைத் தேட ஏன் தாமதம்?

ஜெபம்: கிருபையுள்ள கர்த்தாவே, பொய்யுரையாத உம்முடைய வார்த்தைகளுக்காக நன்றி செலுத்துகிறோம். எங்களுக்கு வரும் பிரச்சனைகளாலே சோர்ந்து போகாமால் முழு இருதயத்தோடு இடைவிடாமல் உம்மைத் தேட எங்களுக்கு உதவி செய்யும். ஆமென்.