ஜெபக்குறிப்பு: 2021 ஜூலை 31 சனி

நாடோறும் உம்மை ஸ்தோத்திரித்து, எப்பொழுதும் என்றென்றைக்கும் உம்முடைய நாமத்தைத் துதிப்பேன் (சங்.145:2) இம்மாதம் முழுவதும் கண்ணை இமை காப்பதுபோல் நம்மைக் காத்து வழிநடத்தின பரமபிதாவை என்றென்றைக்குமாக ஸ்தோத்திரித்துத் துதிப்போம். அவருக்கே சதாகாலங்களிலும் மகிமை உண்டாவதாக. ஆமென்.

முழுமையான கீழ்ப்படிதல்

தியானம்: 2021 ஜூலை 31 சனி | வேத வாசிப்பு: 1சாமு.15:7-23

நீர் கர்த்தருடைய வார்த்தையைப் புறக்கணித்தபடியினாலே, அவர் உம்மை ராஜாவாயிராதபடிக்குப் புறக்கணித்துத் தள்ளினார் என்றான் (1சாமு.15:23).

குடும்பத்தில் மூத்த பிள்ளை வழிமாறிவிட்டால் இளைய பிள்ளையும் என்னவாகுமோ என்று பெற்றோர் கலங்குவதுண்டு. நமது காரியங்களில் முதல் முயற்சி தவறிவிட்டால், எல்லாமே தவறிவிடுமோ என்ற பயம் வருவதுண்டு. இஸ்ரவேலுக்கு நடந்ததும் இப்படிப்பட்டதாய் இருக்குமோ என்று எண்ணத் தோன்றலாம்; ஆனால், காரியம் அதுவல்ல. அப்போ, இஸ்ரவேலின் முதல் ராஜாவுக்கு நடந்தது என்ன?

முதலாவது, இஸ்ரவேலின் முதல் ராஜா, சவுல் அல்ல; தேவனாகிய கர்த்தரே அவர்களுடைய முழுமையான ராஜா. ஆனால் இஸ்ரவேலர் அவரைப் புறக்கணித்துவிட்டு, மனிதருக்குள் இருக்கின்ற வழக்கத்தின்படியே ஒரு ராஜா வேண்டும் என்று கேட்டுப் பெற்றுக்கொண்ட முதல் ராஜாதான் சவுல். உலக வழக்கப்படி சொன்னாலும், அவன் கெட்டால், பின்னே வருகின்ற எல்லோரும் கெட்டுப் போகவேண்டிய அவசியமே இல்லையே!

அடுத்ததாக, இந்த சவுல் முதல் தடவை பெரிய தவறைச் செய்தவன். அவனுக்கு இரண்டாவது தருணம் கொடுக்கப்பட்டது. அமலேக்கை மடங்கடித்து அவனுக்கு உண்டான யாவையும், ஒன்றும் மிச்சம் வைக்காமல் அழிக்கவேண்டும் என்பதே சவுலுக்கு கொடுக்கப்பட்ட பணி. அப்படியே சவுல் போனான். யுத்தம் பண்ணி அமலேக்கை மடங்கடித்தான். ஆனால் கண்ணுக்குப் பிரியமானதையெல்லாம் கொல்லாமல் கொண்டு வந்துவிட்டான். போதாதற்கு, வெற்றியின் அடையாளமாக கர்மேலிலே தனக்கென்று ஒரு ஜெய ஸ்தம்பத்தை நாட்டி, தனக்குப் பெயர் உண்டாக்கிக் கொண்டான். மேலும், சாமுவேல் கேட்டதற்கு, இந்த ஜனங்கள் உமது தேவனாகிய கர்த்தருக்குப் பலியிடுவதற்கே இந்த ஆடு மாடுகளைக் கொண்டு வந்தனர் என்று பழியை ஜனங்களிடம் போட்டான்; கர்த்தர் சொற்படிதான் தான் செய்ததாக வாதிட்டான் சவுல். சவுலின் அரைகுறை கீழ்ப்படி தலைக் கர்த்தர் கேட்டாரா? பலியைக் கேட்டாரா? சவுல் தள்ளப்பட்டதற்குச் சவுலின் கீழ்ப்படியாமையே காரணம். அதாவது, சவுலின் வீழ்ச்சிக்குச் சவுலேதான் காரணமாயிருந்தான்.

பிரியமானவர்களே, கர்த்தர் நம்மிடம் எதிர்பார்ப்பதெல்லாம் ஒன்றேயொன்றுதான். அது “கீழ்ப்படிதல்”. தமது வார்த்தைக்குக் கீழ்ப்படியும்போது, அவர் நம்மில் பிரியமாயிருக்கிறார். தம்மைப் பற்றும் உத்தம இருதயத்தையே கர்த்தர் நம்மிடம் எதிர்பார்க்கிறார்; வேறே நமது புண்ணியங்களையும் காணிக்கைகளையும் அல்ல. இந்த நாளிலே நமது ஒவ்வொரு அடியை எடுத்து வைக்கும்போதும் கவனமாக இருப்போம்.

தேவனுடைய வழி உத்தமமானது; கர்த்தருடைய வசனம் புடமிடப்பட்டது; தம்மை நம்புகிற அனைவருக்கும் அவர் கேடகமாயிருக்கிறார் (சங்.18:30).

ஜெபம்: அன்பின் தேவனே, அரைகுறையான கீழ்ப்படிதலை விட்டு மனந்திரும்பி உமக்கு முழுமையாக கீழ்ப்படிவதற்கு எனக்குக் கற்றுத் தாரும். ஆமென்.

ஜெபக்குறிப்பு: 2021 ஜூலை 30 வெள்ளி

அவர்கள் இரவும் பகலும் வழிநடக்கக்கூடும்படிக்கு …மேகஸ்தம்பத்திலும் … அக்கினிஸ்தம்பத்திலும் அவர்களுக்கு முன்சென்றார் (யாத்.13:21) இம்மாதம் முழுவதுமாய் சத்தியவசன பிரதிநிதிகளோடுகூட இருந்து பாதுகாத்து அவர்களது பணிகளை ஆசீர்வதித்து பாதுகாத்த கிருபைகளுக்காக கர்த்தரை ஸ்தோத்திரிப்போம்.

கடைசி விநாடியில் தவறவிடாதே!

தியானம்: 2021 ஜூலை 30 வெள்ளி | வேத வாசிப்பு: 1சாமு.13:1-14

புத்தியீனமாய்ச் செய்தீர். உம்முடைய தேவனாகிய கர்த்தர் உமக்கு விதித்த கட்டளையைக் கைக்கொள்ளாமற்போனீர் (1சாமு.13:13).

ஊருக்குள்ளே போகிற பேருந்துக்காகக் காத்து நின்றோம். “நேரம் போகிறது, இனியும் காத்திருக்க முடியாது” என்று நான்தான் சொன்னேன். இனி அது வராது என்றெண்ணி, ஆட்டோவில் ஏறினோம். ஒரு நூறு மீட்டர் போகவில்லை, நாங்கள் காத்து நின்ற பேருந்து சீறிக்கொண்டே முன்னே போவதைக் கண்டு ஒருவரையொருவர் திகைப்போடு பார்த்துக் கொண்டோம். “அரை மணிநேரம் காத்துக்கிடந்த உனக்கு ஒரு அரை நிமிடம் காத்திருக்க முடியாமற்போயிற்றா?” என்று சிநேகிதி தன் பார்வையாலேயே என்னைக் கொன்றாள்.

இதையே நாம் வாழ்விலும் செய்துவிட்டு, பின்னர் அழுகிறோம். சவுல் ராஜாவுக்கு நேர்ந்ததும் இதுதான். “நீ எனக்கு முன்னே கில்காலுக்கு இறங்கிப்போ; சர்வாங்க தகனபலிகளையும் சமாதான பலிகளையும் செலுத்தும்படிக்கு, நான் உன்னிடத்தில் வருவேன். “ஏழு நாள் காத்திரு” என்று இஸ்ரவேல் கேட்டுப் பெற்றுக்கொண்ட முதலாவது ராஜாவான சவுலிடம் சாமுவேல் தெளிவாகச் சொல்லியிருந்தார் (1சாமு.10:8). எல்லாம் சரியாகத்தான் நடந்தது. சவுல் இஸ்ரவேலை பெலிஸ்தரிடமிருந்து இரட்சிப்பான் என்று கர்த்தர் ஏற்கனவே சாமுவேலிடம் சொல்லியிருந்தார் (1சாமு.9:16). அப்படியே பெலிஸ்தர் இஸ்ரவேலுக்கு எதிராக பெருவாரியாக வந்திருந்தார்கள். சவுலும், சொன்னபடியே ஏழுநாட்கள் காத்திருந்தான். ஆனால், சாமுவேல் வரவில்லை. ஜனங்கள் சிதறி ஓடினார்கள், பலி செலுத்தாமல் யுத்தம் ஆரம்பிக்கக்கூடாது என்பதிலும் சவுல் சரியாகவே செயற் பட்டான். ஆனால், இனிக் காத்திருப்பதில் பலனில்லை என்று நினைத்த சவுல், தான் செய்யக்கூடாத காரியத்தைத் துணிகரமாகச் செய்தான். தானே பலியைச் செலுத்திவிட்டான். வசனம் சொல்லுகிறது: “அவன் சர்வாங்க தகனபலியிட்டு முடிகிறபோது, இதோ, சாமுவேல் வந்தான்.” சவுல் சொன்ன சாக்குகளில் ஒரு சொல்லைக் கவனியுங்கள்: “எண்ணித் துணிந்து (1சாமு.13:12).”

அன்பானவர்களே, இங்கேதான் நாமும் தவறுவிடுவதுண்டு. நாமே எண்ணி, கற்பனை பண்ணி, காரியத்தை கையிலெடுத்து விடுகிறோம். கர்த்தர் முந்தவும் மாட்டார், பிந்தவும் மாட்டார். ஏன் தெரியுமா? முந்தினால், “நான் செய்தேன்” என்று நாம் பெருமை கொள்வோம்; பிந்தினால் நாம் அழிந்துபோவோம். அவர் சொன்னபடியே தகுந்த நேரத்துக்கு வருவார். இரண்டு நிமிடம் காத்திருக்கத் தவறிய சவுல் ராஜ்யத்தையே இழந்துபோனான். கீழ்ப்படிவதைத் தவிர கர்த்தர் நம்மிடம் கேட்பது என்ன? இந்த நாளிலே பொறுமையிழந்து நிற்கிறீர்களா? சூழ்நிலையைப் பார்த்துப் பயப்படுகிறீர்களா? நமது ஆண்டவர் சூழ்நிலைகளுக்கும், உங்கள் பிரச்சனைகளுக்கும் மேலானவர். கடைசி நிமிடத்தில் எதையும் இழந்து விடாதபடி கர்த்தருக்காக முழுமனதோடு காத்திருப்போம். அவர் நிச்சயம் காரியத்தை வாய்க்கப்பண்ணுவார்.

கர்த்தரை நோக்கி அமர்ந்து, அவருக்குக் காத்திரு (சங்.37:7).

ஜெபம்: அன்பின் தேவனே, என் காரியங்களை வாய்க்கப்பண்ண நீர் தந்த வாக்கிற்காக உமக்கு நன்றி. உமது பாதத்தில் அமர்ந்து காத்திருக்க கிருபை தாரும். ஆமென்.