வாக்குத்தத்தம்: 2021 ஜூலை 1 வியாழன்

நானே திராட்சச்செடி, நீங்கள் கொடிகள். ஒருவன் என்னிலும் நான் அவனிலும் நிலைத்திருந்தால், அவன் மிகுந்த கனிகளைக் கொடுப்பான் (யோவான் 15:5).


கர்த்தரின் நாமம் பலத்த துருகம்; நீதிமான் அதற்குள் ஓடிச் சுகமாயிருப்பான் (நீதி.18:10).
2நாளாகமம் 21-23 | அப்போஸ்தலர் 7:41-60

ஜெபக்குறிப்பு: 2021 ஜூலை 1 வியாழன்

எந்தச் சமயத்திலும் சகலவிதமான வேண்டுதலோடும் விண்ணப்பத்தோடும் ஆவியினாலே ஜெபம் பண்ணி … விழித்திருங்கள் (எபேசி.6:18).


கர்த்தாவே, நீர் எனக்குப் பலத்த துருகமும், எனக்கு அடைக்கலமான அரணுமாயிரும் (சங்.31:2) இம் மட்டும் நம்மை பாதுகாத்து தப்புவித்த தேவன் இப்புதிய மாதத்திலும் நமக்கு பலத்த துருகமாக, அடைக்கலமான அரணுமாக இருந்து எல்லா துர்ச்சன பிரவாகங்களுக்கும் விலக்கி நம்மை வழிநடத்த ஒப்புவித்து ஜெபிப்போம்.

துன்பத்திலும் துணை அவரே

தியானம்: 2021 ஜூலை 1 வியாழன் | வேத வாசிப்பு: சங்.138:1-8 மத்.14:23-33

நான் துன்பத்தின் நடுவில் நடந்தாலும், நீர் என்னை உயிர்ப்பிப்பீர் (சங்.138:7).

நம்மில் யார்தான் துன்பத்தை வரவேற்கிறோம்? அதற்காக துயர அனுபவங்கள் நெருங்காமல் போய்விடுமா? நாம் வாழும் சூழ்நிலைகளே எதிர்பாராத நேரத்தில், நம்மை துன்பப்படுத்தலாம்; அல்லது நாமாகவே பிரச்சனைகளுக்கு முகங்கொடுத்து, பின்னர் மீள வழி தெரியாமல் தவிக்கலாம். நல்லது என்று நாம் நினைக்கின்ற சில காரியங்கள், நமக்கே பாதகமாக மாறிவிடலாம். நாம் நேசிப்பவர்களும் சில சமயங்களில் நம்மை புரிந்துகொள்ளாமல் நம்மை துன்பப்படுத்தலாம். மரணத்திற்கேதுவான கடும் வியாதி, இழந்துவிட்ட நம் அன்புக்குரியவர்கள், நம்மை துன்பத்தின் உச்சிக்கே இழுத்துச் சென்றுவிடலாம். ஜெபித்தும் பதிலில்லாமையால் சோர்ந்தும் போகலாம். சத்துரு சளைக்காமல் நம்மைப் பின்தொடரலாம். “செத்துப் போனால் என்ன” என்று எண்ணுமளவிற்கு துன்பம் பெருகிப்போகலாம்.

ஆனால், ஓர் உண்மையை நாம் தெரிந்து கொள்ளவேண்டும். “மேலும் நம்பிக்கைக்கு இடமில்லை என்று தோன்றுகின்ற சமயமே, கர்த்தர், சத்துருவின் உக்கிரத்திற்கு எதிராய் தமது கரத்தை நீட்டி, தம்மை நம்பினோருக்கு ஜெயம் கொடுக்கும் வேளையாகும்.” இதனை நீங்கள் அனுபவித்திருக்கிறீர்களா? சமுத்திரத்தின் மேற்புறத்திலே அலைகளும் இரைச்சலும் அதிகம். ஆனால், அதன் ஆழத்தில் எத்தனை அமைதியும் அழகும் நிறைந்திருக்கும்! இயேசுவே தமது சீஷர்களைப் படகிலேறிப் போகச் சொன்னார். அவ்வேளையில்தானே பலத்த காற்று வீசியது. இயேசு அவர்களைக் கைவிட்டாரா? நாம் நினைத்தா இந்த வாழ்க்கையை வாழ ஆரம்பித்தோம். இது தேவன் கொடுத்த ஈவு! நமது வாழ்க்கைப் படகு அமிழ்ந்துவிட ஆண்டவர் ஒருபோதும் அனுமதியார். அன்று கடலில் நடந்து வந்து சீஷரைக் காத்தவர் இன்னமும் உயிரோடேயே இருக்கிறார். அன்று அந்த மூன்று எபிரேய வாலிபரும் தாமாகவா அக்கினிச்சூளையை ஏற்றுக்கொண்டார்கள்? தள்ளிவிடப்பட்டார்கள். தள்ளிவிட்டவர்கள் எரிந்துபோனார்கள். அக்கினியில் போடப்பட்டவர்களோ நான்காம் நபரோடு உலாவிக்கொண்டிருந்தார்கள். ராஜா மெய்த்தேவனை அறிந்துகொண்டான் (தானி. 3:25).

எதிர்பாராமலோ, வலுக்கட்டாயமாகவோ துன்பத்தில் துவண்டிருக்கும் தேவ பிள்ளையே, தைரியமாயிரு. இயேசு இல்லாத, சந்தோஷங்கள் நிறைந்த வாழ்வைவிட, இயேசுவோடுகூட நடக்கும் கல்வாரி பாதை மேன்மையானது, பரிசுத்தமுள்ளது; பாடுகளானாலும் தேவபாதுகாப்பு மிகுந்தது; அது தேவனுக்கானது. ஏனெனில் முந்தியதின் முடிவோ பரிதாபம்; பிந்தியதோ நம்மை நித்திய மகிமையிலே சேர்க்கும்படிக்கு நம்மை உயிரோடே எழுப்பிவிடுகிறது.

உடனே இயேசு கையை நீட்டி அவனைப் பிடித்து: அற்பவிசுவாசியே, ஏன் சந்தேகப்பட்டாய் என்றார். அவர்கள் படவில் ஏறினவுடனே காற்று அமர்ந்தது (மத்.14:31,32).

ஜெபம்: நாங்கள் துன்பத்தின் நடுவில் நடந்தாலும் எங்களை உயிர்ப்பிக்கிற ஆண்டவரே, இனியும் நாங்கள் சந்திக்கும் துன்பதுயர வேளைகளிலும் தேவனுக்கேற்ற வாழ்க்கை வாழவே எங்களை அர்ப்பணிக்கிறோம். ஆமென்.

பெருமை

அதிகாலை வேளையில்…
(ஜூலை-ஆகஸ்ட் 2021)
Dr.உட்ரோ குரோல்

வேதபகுதி: 2 சாமுவேல் 24:1-25


தாவீது காலமே எழுந்திருந்தபோது, தாவீதின் ஞானதிருஷ்டிக்காரனாகிய காத் என்னும் தீர்க்கதரிசிக்குக் கர்த்தருடைய வார்த்தை உண்டாகிச் சொன்னது …. (2சாமுவேல் 24:11).


உங்களுடைய மாபெரும் ஒரு வெற்றிக்குப் பின்னர் நீங்கள் ஒரு மாபெரும் தோல்வியைச் சந்தித்ததை எப்பொழுதாவது உணர்ந்திருக்கிறீர்களா? அது ஏன்? அதற்குப் பொருத்தமான விடை “பெருமை” என்பதே. பரிசுத்த வேதாகமம் பெருமைக்கான தண்டனையைப்பற்றி அடிக்கடி எச்சரிக்கிறது. நீதி மொழிகள் 16:18இல் “அழிவுக்கு முன்னானது அகந்தை; விழுதலுக்கு முன்னானது மனமேட்டிமை” என நாம் வாசிக்கிறோம். வேதாகமத்தின் பக்கங்களில் தங்களுடைய ஆணவத்தினாலும் கர்வத்தினாலும் தோல்வியைச் சந்தித்த அநேக மனிதர்களை நாம் காண முடியும்.

பெருமைக்கு தண்டனை கிடைத்ததற்கு தாவீது அரசரின் வாழ்க்கை ஓர் எடுத்துக்காட்டாக உள்ளது. தேவனுடைய இருதயத்துக்கு ஏற்ற மனிதராக அவர் இருந்தார். தன்னுடைய உண்மையினாலும் தூய வாழ்வினாலும் யேகோவா தேவனின் அநேக நன்மைகளைப் பெற்றார். தன்னுடைய சிம்மாசனத்தைப் பறிக்க முயன்ற தனது இரு மகன்களிடமிருந்தும் அதனைக் காப்பாற்றிக்கொண்டார். தாவீது உரியாவின் மனைவி பத்சேபாளிடம் நடந்துகொண்ட பாவச்செயல் அவருக்கு அவமானத்தைக் கொண்டுவந்தது. துணிச்சல் மிக்க இந்த வெற்றிவீரன் தற்பொழுது தனது வாழ்வின் இறுதிக்கு வந்து விட்டார்.

தாவீதின் பராக்கிரமசாலிகளின் பட்டியலைத் தொடர்ந்து “கர்த்தருடைய கோபம் திரும்ப இஸ்ரவேலின்மேல் மூண்டது; இஸ்ரவேல் யூதா என்பவர்களை இலக்கம் பார் என்று அவர்களுக்கு விரோதமாய்ச் சொல்லுகிறதற்கு தாவீது ஏவப்பட்டான்” (2 சாமுவேல் 24:1) என்று காணப்படுகிறது. இம்முறை தேவனுடைய ஜனங்கள் மீது அவருடைய கோபம் எழும்பினது. பொதுவாக தேவனை விட்டு தூரம் போகும் பொழுது அவருடைய சினம் எழும்பும். ஆனால் இம்முறை இஸ்ரவேல் மக்கள் எந்தவொரு குறிப்பிட்ட தவறும் செய்யவில்லை. 1 நாளாகமம் 21:1இல் “சாத்தான் இஸ்ரவேலுக்கு விரோதமாய் எழும்பி, இஸ்ரவேலைத் தொகையிடுகிறதற்குத் தாவீதை ஏவிவிட்டது” என்று வாசிக்கிறோம். இந்த பாவத்துக்கான தண்டனை அனைத்து மக்களையும் பாதித்தாலும் தாவீது அது தன்னுடைய பாவம் என்று ஒத்துக்கொண்டான். ஏன்? மக்கட் தொகை கணக்கெடுப்பு அவனது சுய மகிமைக்காகவும் பெருமைக்காகவும் எடுக்கப்பட்டது. பெருமைக்கு எப்பொழுதும் தண்டனை உண்டு.

தனது படைபலத்தை அறிந்த தாவீது உடனேயே அந்த இலக்கத்தை அறிவ தன் முகாந்தரத்தை உணர்ந்து கொண்டான். அவனுடைய இருதயம் அவனை வாதித்தது. “நான் இந்தக் காரியத்தைச் செய்ததினால் மிகவும் பாவஞ் செய்தேன்; வெகு புத்தியீனமாய்ச் செய்தேன் என்று தேவனிடம் அறிக்கையிட்டான்”. தாவீது காலமே எழுந்திருந்தபோது தேவன் அவனுடைய பெருமைக்கு தண்டனையாக மூன்று காரியங்களை அவன் முன் வைத்தார். தேசத்திலே ஏழு வருடங்கள் பஞ்சம் உண்டாதல், மூன்று மாதம் அவனுடைய சத்துருக்களுக்கு பயந்து ஓடிப் போதல், தேசத்திலே மூன்று நாள் பயங்கர கொள்ளைநோய் உண்டாதல் முதலியன. ஆனால் தாவீதின் தெரிந்தெடுப்பு சிறப்பானதாக இல்லை. தனது எதிரிகளிடமிருந்து தண்டனை பெறுவதைவிட தேவனிடத்திலிருந்து அதைப் பெறுவதையே தாவீது விரும்பினார். அவ்வாறே அன்று காலையிலேயே கொள்ளைநோயை கர்த்தர் இஸ்ரவேலிலே வரப்பண்ணினார். அடுத்த 3 நாட்களில் இஸ்ரவேலரின் தொடர்ச்சியான பாவத்துக்காகவும் தாவீதின் பெருமைக்காகவும் எழுபதினாயிரம் மனிதர்கள் அக்கொள்ளை நோயால் இறந்தனர்.

தற்பெருமையால் அழிவு நேர்ந்ததை ஈசாபின் கதை ஒன்றிலிருந்து நாம் அறிவோம். ஒரு சிறிய குளத்தில் இரு நாரைகளும் ஓர் ஆமையும் நட்பாக இருந்து வந்தன. கோடை காலத்தில் நாட்கள் செல்லச்செல்ல அக்குளத்தின் தண்ணீர் வெப்பத்தால் வற்றி ஒரு குட்டையாக மாறிவிட்டது. எனவே அந்த நாரைகளும் ஆமையும் வேறிடத்துக்குச் செல்லவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. நாரைகள் எளிதாக வேறிடத்துக்குப் பறந்து செல்ல முடியும். ஆனால் ஆமையால் அவ்வாறு செய்ய முடியாது. எனவே அவைகள் யோசித்தன. இறுதியில் அந்த ஆமை ஓர் ஆலோசனை கூறியது. ஒரு பெரிய குச்சியின் நடுவில் ஆமை கவ்விக்கொள்ள, நாரைகள் அந்த குச்சியுடன் பறந்தால் தானும் அவர்களுடன் வந்துவிடலாம் என்பதாகச் சொன்னது. ஆமை குச்சியை இறுக்கமாகப் பற்றிக்கொள்ள நாரைகள் அருகிலுள்ள மற்றொரு குளத்துக்கு பறந்து சென்றன. இந்த வினோத காட்சியைக் கண்டு வியந்த ஒரு விவசாயி, “ஆ! என்ன அருமையான திட்டம்! யார் இந்த சிறந்த ஆலோசனையைத் தந்தது?” என்று கூவினார். அதைக் கேட்டதும் பெருமை தலைக்கேற ஆமை “நான்தான்” என்று சொல்ல வாயைத் திறந்ததும், அது குச்சியைக் கவ்வியிருந்த பிடி நழுவி தரையில் விழுந்து இறந்தது. அதன் அழிவுக்கு அதன் பெருமையே காரணமாயிற்று.

நமது பெருமையைப் பற்றி நாமும் எச்சரிக்கையாய் இருப்போமாக; அந்த ஆமை சந்திந்த துன்பமான முடிவு நமக்கும் வேண்டாம். தாவீதின் வாழ்க்கையில் பெருமையினால் மற்றவர்களும் பாதிக்கப்பட்டது மிகவும் வருந்தத்தக்கதே. எனவே “அழிவுக்கு முன்னானது அகந்தை; விழுதலுக்கு முன்னானது மனமேட்டிமை (நீதிமொழிகள் 16:18) என்பதை நினைவில் கொள்ளுவோம். தாழ்மையுடன் வாழ்வோம்.


அதிகாலைப்பாடல்:

சிங்காசனத்தில் வீற்றிருக்கும் ஆண்டவரே,
என் அறிவு யாவையும் விட்டொழிக்கிறேன்;
என்னைக் கழுவும், பனியிலும் வெண்மையாவேன்;
முழுவதும் என்னை அர்ப்பணிக்க உதவும்.

மொழியாக்கம்: Mrs.அகஸ்டா மங்களதுரை

ஆசிரியரிடமிருந்து…

(ஜூலை-ஆகஸ்ட் 2021)

கிறிஸ்துவுக்குள் பிரியமுள்ள வாசகர்களுக்கு,

வாதை நம் கூடாரத்தை அணுகாமல் பாதுகாக்கும் அன்பின் தேவன் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துக்கள்.

இவ்விதழின் வாயிலாக தங்களைச் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறோம். கோவிட்-19 இரண்டாவது அலையின் தாக்கத்தினால் தற்போது நமது தேசத்தில் நிலவிவரும் துயர சம்பவங்களையும் உயிரிழப்புகளையும் பார்க்கும்போது தேவன் மாத்திரமே நமது ஆதரவாயிருக்கிறார். அவரது நித்திய புயங்கள் நமக்கு ஆதாரமாயிருக்கிறது. பரவிவரும் கொரனா வைரஸ் தாக்கத்திலிருந்து நமது தேசத்தையும் குடும்பங்களையும் அழிவிலிருந்து பாதுகாக்கவும் சபை கூடிவருவதற்கு தற்போது இருக்கின்ற தடைகள் நீங்கவும் திறப்பின் வாசலில் நின்று தொடர்ந்து மன்றாடுவோம்.

கொரோனாவின் தாக்குதலுக்குள்ளான பங்காளர்களுக்காக தொடர்ந்து பாரத்தோடு ஜெபித்து வருகிறோம். சிலர் மரணமடைந்ததை அறிந்து மனம் வருந்துகிறோம். அக்குடும்பங்களுக்கு தேவன்தாமே ஆறுதலையும் தேறுதலையும் தந்தருள வேண்டுதல் செய்கிறோம். மறுபடியும் இயல்பு நிலை திரும்பவும் லாக்டவுனினால் பாதிக்கப்பட்ட தேவபிள்ளைகளின் பொருளாதாரத் தேவைகளை தேவன் சந்திக்கவும் அடுத்த கல்வியாண்டில் பள்ளிகளும் கல்லூரிகளும் தடையின்றி திறக்கப்படவும் பாரத்தோடு மன்றாடுவோம்.

இவ்விதழில் ஜூலை மாதத்தில் பலவித தலைப்புகளிலும் ஆகஸ்டு மாதத்தில் சாமுவேல் மற்றும் இராஜாக்கள் புஸ்தகத்திலிருந்தும் சகோதரி சாந்தி பொன்னு அவர்கள் தியானங்களை எழுதியுள்ளார்கள். இத்தியானங்கள் அனைத்தும் வாசிக்கிற அனைவருக்கும் பிரயோஜனமாயிருக்கும்படி வேண்டுதல் செய்கிறோம். தியானங்களை எழுதிவரும் சகோதர, சகோதரிகளை தங்களுடைய ஜெபங்களில் தாங்க அன்புடன் வேண்டுகிறோம். இத்தியானங்கள் வாயிலாக தாங்கள் பெறும் ஆசீர்வாத அனுபவங்களை எங்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.

கே.ப.ஆபிரகாம்