சத்திய வசனம் பங்காளர் மடல்
(செப்டம்பர்-அக்டோபர் 2022)
கிறிஸ்துவுக்குள் பிரியமுள்ள விசுவாச பங்காளர்களுக்கு,
நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிற இயேசுகிறிஸ்துவின் இனியநாமத்தில் அன்பின் வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறோம்.
இவ்வருடத்தில் இந்நாள்வரையிலும் வழுவாது நம்மை வழிநடத்திவந்த தேவாதிதேவனை ஸ்தோத்திரிப்போம். சத்தியவசன சஞ்சிகை தங்களுக்கு அதிக பிரயோஜனமாக இருப்பதையும் செய்திகள் தங்களது ஆவிக்குரிய வாழ்க்கையில் வளருவதற்கு பயனுள்ளதாக இருப்பதை அறிந்தும் ஆண்டவருக்கு மகிமையைச் செலுத்துகிறோம். சத்தியவசன சஞ்சிகையையும் அனுதினமும் கிறிஸ்துவுடன் தியான நூலையும் உங்கள் குடும்ப நண்பர்களுக்கும் சக விசுவாசிகளுக்கும் அறிமுகப்படுத்தி இவ்வூழியத்திற்கு உதவ அன்பாய் கேட்கிறோம்.
இவ்வூழியத்தை உதாரத்துவமாய் தாங்கிவந்த பங்காளர்கள் ஆதரவாளர்களுக்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம். இவ்வூழியத்தின் வாயிலாக தாங்கள் பெற்றுக்கொண்ட ஆசீர்வாதங்களை எங்களோடு பகிர்ந்துகொள்ளுங்கள். உங்கள் ஜெபத்தேவைகள் எதுவாக இருந்தாலும் தெரியப்படுத்துங்கள். உங்களுக்காக நாங்கள் பாரத்தோடு ஜெபிப்போம். சத்திய வசனம் தொலைகாட்சி நிகழ்ச்சிகளில் பங்கெடுத்து ஆசீர்வாதமடையுங்கள்.
நவம்பர் 19ஆம் தேதி சனிக்கிழமையன்று சென்னையில் ஒருநாள் விசுவாசப்பங்காளர் சிறப்புக் கூடுகையை ஒழுங்குசெய்துள்ளோம். இக்கூட்டத்திற்கான விளம்பரத்தை சஞ்சிகையில் 28ஆம் பக்கத்தில் பிரசுரித்துள்ளோம். சென்னையிலும் அருகாமையிலுமுள்ள பங்காளர்களும் நேயர்களும் குடும்பமாக இக்கூடுகையில் பங்குபெற அன்பாய் அழைக்கிறோம். கூட்டத்தின் ஆசீர்வாதங்களுக்காக தாங்கள் ஜெபிக்கவும் வேண்டுகிறோம்.
இவ்விதழில் நானே திராட்சச்செடி (இயேசு) என்ற தலைப்பில் பேராசிரியர் S.C.எடிசன் அவர்கள் வழங்கிய செய்தியும், நாம் அதிக கனிகளைக் கொடுக்கும்படி சுத்திகரிப்பு என்ற தலைப்பில் சகோதரி சாந்தி பொன்னு அவர்கள் எழுதிய செய்தியும், நம்முடைய வாழ்க்கையில் இருக்கவேண்டிய முக்கிய குணாம்சமாகிய அன்பை விளக்கி தெய்வீக அன்பு என்ற தலைப்பில் சகோ.பிரகாஷ் ஏசுவடியான் அவர்கள் அளித்த செய்தியும் இடம்பெற்றுள்ளது. மேலும் தேவனிடம் ஒரு மன்றாட்டின் ஜெபம் என்ற தலைப்பில் ஜெபத்தின் மேன்மையை சகோ.வஷ்னி ஏனர்ஸ்ட் அவர்கள் எழுதியுள்ளார்கள். தானியேல் புஸ்தகம் தொடர் வேதபாடத்திலிருந்து ஜாம்பவான்களின் மல்யுத்தம் என்ற தலைப்பில் தானியேல் 8ஆம் அதிகாரத்திலிருந்து சிறப்புச்செய்தியும், Dr.தியோடர் எச்.எஃப் அவர்கள் எழுதிய காலங்களைப் பற்றிய சத்தியம் என்ற தொடர் வேதபாடமும், வேதாகமம் புதிர் வினா-59ம் இடம்பெற்றுள்ளது. கட்டுரைகளை எழுதும் எழுத்தாளர்களை உங்கள் ஜெபங்களில் தாங்குங்கள். இச்செய்திகள் யாவும் உங்கள் யாவருக்கும் ஆசீர்வாதமாக அமைய ஜெபிக்கும்…..
கே.ப.ஆபிரகாம்