பேராசிரியர் S.C.எடிசன்
(செப்டம்பர்-அக்டோபர் 2022)

நானே திராட்சச்செடி, நீங்கள் கொடிகள். ஒருவன் என்னிலும் நான் அவனிலும் நிலைத்திருந்தால், அவன் மிகுந்த கனிகளைக் கொடுப்பான்; என்னையல்லாமல் உங்களால் ஒன்றும் செய்யக்கூடாது (யோவான் 15:5).

பேராசிரியர் S.C.எடிசன்

இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் சத்திய வசனம் நேயர்களுக்கு என் அன்பான வாழ்த்துக்கள், யோவான் சுவிசேஷத்தில் மோசேயினிடத்திலே தேவன் சொன்ன இருக்கிறவராகவே இருக்கிறேன் என்கிற அந்த ஒரு காரியத்தை இயேசு புதிய ஏற்பாட்டிலே விளக்கியிருக்கிறார். யோவான் அவை எல்லாவற்றையும் நினைவில் வைத்து, நமக்குச் சொல்லிக் கொடுக்கிறார்.

நானே ஒளியாய் இருக்கிறேன். நானே சத்தியம்! நானே வழி! நானே ஜீவன்! நானே உயிர்த் தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன் என்றெல்லாம் அவர் சொல்லியிருக்கிறார். கடைசியாக யோவான் சுவிசேஷத்திலே அவர் சிலுவைக்கு போகும் முன்னதாக தனது சீஷர்களோடு செய்த அந்த ஒரு சம்பாஷணையிலே ஆண்டவர் கடைசியாக சொல்கி றார்: “நானே மெய்யான திராட்சச்செடி, என் பிதா திராட்சத்தோட்டக்காரர்” என்றார் (யோவான் 15:1).

மேலும், நானே திராட்சச்செடி; நீங்கள் கொடிகள் என்றார் (வச.5), கொஞ்சம் யோசித்தால் போதும், நம் எல்லாருக்கும் நன்றாக தெரிந்துவிடும்: இது இயேசுவுக்கும் நமக்கும் உள்ள ஒரு உறவைச் சொல்லுகிறார் என்று. நானே நல்ல மேய்ப்பன் என்று சொல்லும்பொழுது, நம்மை ஒரு ஆடாகவும் அவரை நமது மேய்ப்பராகவும் வைத்து இயேசு சொல்லுகிறார்: நான் உன்னை பாதுகாத்து போஷித்து, பராமரித்து வியாதிகளை விலக்கி உன்னை பரலோகத்தில் சேர்ப்பேன். என் தொழுவத்திற்குள் உன்னை வைத்துக்கொள்வேன் என்று சொல்லி, நமக்கும் அவருக்கும் உள்ள உறவை ஆட்டிற்கும் மேய்ப்பனுக்கும் உள்ள உறவாகச் சொல்லுகிறார்.

தாவீது இந்த உறவை அதிகம் நேசித்தான். அதனால்தான் அவன்: கர்த்தர் என் மேய்ப்பராயிருக்கிறார் என்று சொல்லி அந்த 23ஆம் சங்கீதத்திலே அவ்வளவு அழகாக அவனுக்கும் அவருக்கும் உள்ள தொடர்பை உறவை சொல்லுகிறார். நீர் என்னை புல்லுள்ள இடங்களில் மேய்த்து அமர்ந்த தண்ணீர்களண்டையில் கொண்டுபோகிற தேவன். நான் மரண இருளின் பள்ளத்தாக்கிலே நடந்தாலும் பொல்லாப்புக்கு பயப்படேன். தேவரீர் என்னோடே கூட இருக்கிற மேய்ப்பர். உமது கோலும் தடியும் என்னைத் தேற்றும். அப்படி தனக்கும் தேவனுக்கும் உள்ள உறவை, மேய்ப்பனுக்கும் ஆட்டுக்கும் உள்ள உறவாக சொல்கின்றார். இன்னும் தேவன் தம்மை இஸ்ரவேல் ஜனங்களுக்கு பிதாவாக சொல்லுகிறார். யோவான் 1:12இல் நாம் பார்க்கிறோம். மேலும் அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக்கொண்டவர்கள் எத்தனை பேர்களோ, அத்தனை பேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங் கொடுத்தார் என்று ரோமர் 8:14 இல் பார்க்கிறோம். மேலும் எவர்கள் ஆவியினால் நடத்தப்படுகிறார்களோ, அவர்கள் தேவனுடைய புத்திராயிருக்கிறார்கள் என்று. ஒரு உறவு, தகப்பனுக்கும் பிள்ளைக்கும் உள்ள உறவு. அதை விவரிக்கவே கெட்டகுமாரரின் சரித்திரத்தைச் சொன்னார், நீ பாவஞ்செய்து விலகினாலும், பிதாவானவர் உன்னை மன்னித்து ஏற்றுக்கொள்ளுகிற பிதாவாய், அப்பாவாய் இருக்கிறார் என்பதை அந்த உவமையிலே சொன்னார்.

இன்றைக்கும் ஒரு புது உறவை ஒரு புதுக் கோணத்திலே இயேசு சொல்லுகிறார். நானே மெய்யான திராட்சச்செடி, நீங்கள் கொடிகள், ஒருவன் என்னிலும் நான் அவனிலும் நிலைத்திருந்தால் அவன் மிகுந்த கனிகளைக் கொடுப்பான். அப்படியென்றால் இயேசுவானவர் தன்னைச் செடியாகவும், என்னை கொடியாகவும் அவர் உறவு வைத்திருக்கிறார் என்றால் கஷ்டம் என்ன? ஒரு கொடி அல்லது ஒரு மரத்தின் கொப்போ அல்லது கிளையோ அந்த மரத்தில் ஒட்டியிராமல், அது தனித்து இருக்க முடியுமா? முடியாது. மரம்தான் அந்த கிளைகளுக்கு கொடிகளுக்கு ஆகாரம் கொடுக்கிறது. திராட்சச்செடி தரையிலிருந்து தண்ணீரையும் உரத்தையும் உறிஞ்சி அதை நுண்ணிய குழாய்களின் வழியாக இந்த கொடிகளுக்கு கொடுத்து செடிகள் உயிர்வாழ்கிறது, அந்தச் செடியிலிருந்து அந்த தண்ணீரையும் கொடிகள் உறிஞ்சி எடுத்து அவைகள் பிழைக்கின்றன. இதைத்தான் ஆண்டவர் சொன்னார், நீ என்றைக்கு என்னிடத்திலிருந்து சாரத்தை நீ உறியவில்லையோ, என்னுடைய சாரத்தை நீ என்றைக்கு பருகவில்லையோ, அன்றைக்கு நீ வாடிப்போவாய். அந்த உறவு எனக்கும் அவருக்கும் உள்ள உறவு. அது எப்படிப்பட்ட உறவாக இருக்கவேண்டும் என்றால், ஒருநாளும் நின்றுபோகாத உறவாக இருக்க வேண்டும். It must be a Eternal Relationship. ஒருநாளும் அது நின்று போகக்கூடாது. ஆகவேதான் இயேசு இந்த உறவைச் சொல்லும்போது நீ என்னோடு நிலைத்திரு என்றார். உனக்கும் எனக்கும் உள்ள உறவு நின்று போகக்கூடாது, தடைபடக்கூடாது. இதைத்தான் சொல்லுகிறார். அந்த உறவு நிலைத்திருக்க வேண்டுமானால் என்ன செய்யவேண்டும் என்பதை யோவான் 15 ஆம் அதிகாரத்திலே இயேசு தெளிவாக்கி இருக்கிறார்.

முதலாவதாக, என்னில் நிலைத்திருங்கள் என்று யோவான் 15:4இல் இயேசு கூறுகிறார். சகோதரனே, இயேசுவில் நிலைத்திருக்க வேண்டுமானால், என்ன செய்யவேண்டும்? கோயிலுக்கு போய்விட்டு வந்தால் இயேசுவுக்கும் நமக்கும் ஒரு தனிப்பட்ட உறவு உண்டாகுமா? அப்படியல்ல; தினமும் அதிகாலையில் நீங்கள் இயேசுவை நேசித்து, அவர் வசனத்தை வாசித்து, அவரோடுள்ள உள்ள உறவைப் பலப்படுத்திக்கொள்ள வேண்டும். அதுதான் நிலைத்திருத்தல் என்பதின் அர்த்தமாகும். உங்கள் தனிப்பட்ட வாழ்க்கை பரிசுத்த வாழ்க்கையாக இருக்கவேண்டும். இயேசுவோடு இணைந்தவன் பாவத்தோடு இணைந்திருக்க முடியாது. இருளுக்கும் ஒளிக்கும் ஐக்கியம் ஏது?

ஆகையால் சகோதரனே, இயேசுகிறிஸ்துவில் நிலைத்திருக்க வேண்டுமானால் அவரது பரிசுத்தம் எனக்குள் நிலைத்திருக்க வேண்டும். அப்பொழுது தான் இரண்டுபேருக்குள்ளும் இருக்கும் உறவு ஒருமித்து இருக்கும். நமக்கும் அவருக்கும் உள்ள உறவு செடிக்கும் கொடிக்கும் உள்ள உறவைப் போன்றது என்று சொல்லியிருக்கிறார். நாம் அவர் சாரத்தை எவ்விதமாய் உறிஞ்சுகிறோமோ அவ்விதமாக நமது வளர்ச்சியும் இருக்கும். ஒரு கொடி செடியிலிருந்து அதிகமான அளவு சாரத்தை உறிஞ்சுமேயானால் அதன் வளர்ச்சி அதிகமாக இருக்கும். அதின் கனிகளும் அதிகமாக இருக்கும்.

ஒரு தோட்டத்தில் பல செடிகளை நடுகிறோம். ஆனால், எந்தச் செடியானது நிலத்திலிருந்து அதிக ஆகாரத்தை உறிஞ்சுகிறதோ அந்த செடி செழிப்பாகவும் இருக்கும்; கனிகளையும் கொடுக்கும். ஆண்டவர் அதைத்தான் சொல்லுகிறார்: “நீங்கள் என்னில் நிலைத்திருந்தால்தான் என்னுடைய குணங்கள் உங்களுக்குள் வரும்” என்று. தன்னைச் சிலுவையில் அறைந்தவர்களை இயேசு மன்னித்தார். நாமும் அவ்வாறு மன்னிப்போமா? அந்த குணம் நமக்குள் வரவேண்டுமே. நம்மை நேசிக்கிறவர்களைக்கூட நம்மால் மன்னிக்க முடியவில்லை. அந்த கசப்பை மனதில் வைத்துக்கொண்டே இருக்கிறோம். பெற்றோரை நேசிக்க முடியாமல் அவர்களுக்கு விரோதமாக முறுமுறுக்கின்ற எத்தனை குடும்பங்கள் இருக்கிறது.

சகோதரனே, இயேசுவோடு நிiலைத்திருந்தால்தானே அவர் இருக்கிற பரலோகத்துக்கு நாம் போகமுடியும். ஆண்டவர் சொல்லுகிறார்: “நீங்கள் என்னில் நிலைத்திராவிட்டால் பிதாவானவர் உங்களை வெட்டிப்போடுவார்” என்று. ஏனென்றால் உங்களால் ஒருவருக்கும் பிரயோஜனமில்லை. நீங்கள் சாரத்தை உறிஞ்சவும் இல்லை; கனி கொடுக்கவும் இல்லை. ஆகையால் உங்களை வெட்டிப்போடுவேன் என்று சொல்லுகிறார். இப்படிப்பட்ட கொடிகளைச் சேர்த்து அக்கினியிலே போடுவார்கள். அதாவது, அப்படிப்பட்டவர்கள் முடிவு நரகமாயிருக்கும் என்பதைச் சொல்லுகிறார்.

இயேசுவில் நிலைத்திருந்தால் நமக்கு ஜீவன்; நிலைத்திராவிட்டால் நம்முடைய முடிவு நரகமாயிருக்கும். அவரது குணங்கள் உங்களுக்குள் காணப்படவேண்டும். அன்பு, பரிசுத்தம், தாழ்மை, மன்னிப்பு, பிறரை அற்பமாய் எண்ணாதிருப்பது இவைகளெல்லாம் நமக்குள் வரவேண்டும். இவைகள்தான் இயேசுவின் சாரம். இவை அனைத்தையும் இயேசு தருகிறார். வசனத்தினால் தருகிறார். ஆவியினால் தருகிறார். நம்மோடு பேசி நமக்குப் போதிக்கிறார். அப்படி ஒரு போதனையை அவர் தந்திருக்கிறார். அந்த உபதேசத்தினாலே நாம் சுத்தமாகிறோம். தேவனுடைய சரீரத்தோடு அல்லது தேவனுடைய செடியோடு நிலைத்திராவிட்டால் முடிவு அக்கினி. இதை நினைத்துக்கொள்ளுங்கள். உலகத்தோடு இணைந்திருக்கிறவன் தேவனோடு இணைந்திருக்க முடியாது.

இரண்டாவதாக, இயேசு சொல்லுகிறது என்னவென்றால், என் வார்த்தைகள் உங்களில் நிலைத்திருக்க வேண்டும். தாவீது சொல்லுகிறார்: சங்கீதம் 119:11 நான் உமக்கு விரோமாய் பாவஞ் செய்யாதபடிக்கு, உமது வாக்கை என்னிருதயத்தில் வைத்து வைத்தேன். உம்முடைய வார்த்தைகள் எனக்குள் நிலைத்திருக்கிறது. எரேமியா 15வது அதிகாரம் 16வது வசனத்தில் சொல்கிறார். உம்முடைய வார்த்தைகள் கிடைத்தவுடனே அவைகளை உட்கொண்டேன். அவைகள் எனக்கு சந்தோஷமும், என் இருதயத்துக்கு மகிழ்ச்சியுமாயிருந்தது என்று. இவர்களுக்கு சந்தோஷமாயிருக்கிற வார்த்தையானது நமக்கு ஏன் கசப்பாய் இருக்கிறது? ஏன் அந்த வார்த்தையை நாம் வாசிக்கிறதில்லை? அதற்காக நமக்கு வாஞ்சை இருக்கவேண்டும். நாள் முழுவதும் உட்கார்ந்து டிவி பார்க்கமுடியும். நாள் முழுவதும் உட்கார்ந்து வேதம் வாசிக்கிறோமா? ஆண்டவர் பார்க்கிறார். ஆண்டவர் கேட்கும்போது என்ன பதில் சொல்லுவோம்?

அவருடைய வார்த்தை எனக்குள் நிலைத்திருந்தால்தான் நான் அவரோடு உறவுகொள்ள முடியும். அவருடைய வார்த்தைகளுக்கு நான் கீழ்ப்படியவில்லையென்றால் அவருக்கும் எனக்கும் இடையில் எப்படி உறவு இருக்க முடியும்? செடிக்கும் கொடிக்கும் எப்படி உறவு இருக்கும்? செடியில் உள்ள அதே உணவுதான் கொடிக்கும் வருகிறது. இரண்டு பேருக்கும் ஒரே உணவு இருந்தால்தான் இரண்டு பேரும் ஒருமித்து இருக்கமுடியும்.

தேவன் பரிசுத்தமானவர்! நாமும் பரிசுத்த மாய் இருக்கவேண்டும். தேவன் அன்புள்ளவர். அந்த அன்பு உங்களுக்குள்ளும் இருக்கவேண்டும். அப்பொழுதுதான் நீங்கள் நிலைத்திருக்க முடியும். நீங்கள் கனிதர முடியும். நீங்கள் பிதாவினால் மகிமைப்படுத்தப்படுவீர்கள். என் வார்த்தைகள் உங்களில் நிலைத்திருக்கவேண்டும் என்று சொல்லுகிறார். சகோதரனே, இன்றிலிருந்து நமக்குள் ஒரு மாற்றம்வேண்டும். இரவும் பகலும் கர்த்தருடைய வேதத்தில் தியானமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான் என்று தாவீது சொல்கிறாரே. இரவும் பகலும் ஒரு மனுஷன் வசனத்தை தியானிக்க முடியுமா? முடியாதது எதுவும் வேதத்தில் எழுதப்படவில்லை. வேதத்தில் எழுதப்பட்டிருக்கிறவைகளெல்லாம் நம்மால் செய்யக்கூடியவைகள். பாவ வஞ்சனையால் இருதயம் கடினப்பட்டிருக்கிறபடியால் நமக்கு செய்யமுடிவதில்லை. எனவே, நாம் பாவத்தை விட்டு விலகவேண்டும். தேவனுடைய வார்த்தை நம்மை வழிநடத்தட்டும். தேவனுடைய வார்த்தை நமக்கு உணவாய் இருக்கட்டும். மனுஷன் அப்பத்தினாலே மாத்திரமல்ல; தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான். ஆகவே சகோதரனே, சகோதரியே வார்த்தையில் நாம் நிலைத்திருக்க வேண்டும்.

மூன்றாவதாக, நாம் அவர் அன்பில் நிலைத்திருக்க வேண்டும். 9வது வசனத்தில் என்னுடைய அன்பில் நிலைத்திருங்கள் என்று ஆண்டவர் கூறுகிறார். நீங்கள் என்னில் நிலைத்திருப்பீர்களென்றால் என்னுடைய அன்பில் நிலைத்திருப்பீர்கள் என்று இயேசு கூறினார். தேவனுடைய அன்பு நமக்குள் இருந்தால் என்ன நிகழும்? தேவன் என்ன செய்தார்; பாவத்திலிருந்து விடுபட்டு பரலோகத்துக்கு வரமுடியாமல் இருந்த அந்த மனுக்குலத்துக்கு இரட்சிப்பை கொடுக்க சிலுவையில் மரிக்க இயேசுவை அனுப்பினார். அப்படியென்றால் தேவஅன்பு எனக்குள் இருந்தால் நான் மற்றவர்களுக்கு அந்த அன்பை கொடுப்பேன்.

13வது வசனத்தைப் பாருங்கள்: ஒருவன் தன் சிநேகிதருக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிற அன்பிலும் அதிகமான அன்பு ஒருவரிடத்திலுமில்லை. “ஒரு சிநேகிதனுக்காக ஜீவனை கொடுப்பது” என்பதற்கு என்ன அர்த்தம். உங்களுக்கு உள்ளதையெல்லாம் செலவழிக்க ஆயத்தமாக இருந்தால் அதைவிட பெரிய அன்பு உலகத்திலே ஒருவரிடத்திலும் கிடையாது. சகோதரனே, எத்தனையோ கதைகளைக் கேள்விப்பட்டிருப்போம். ஆனால், ஒப்பற்ற அன்பிற்கு அளவேயில்லை.

ஒரு மனிதனுக்கு மணி அடிக்கும்போது அவனுடைய மரண தண்டனை நிறைவேறவேண்டும் என்று ராஜா கட்டளையிட்டான். அதை மாற்ற முடியாது. ஆனால், அந்த மகனின் தாய் அவள் அதிக அன்புள்ளவள். மகனை அதிகமாக நேசித்தாள். என்ன செய்தாள் தெரியுமா? அந்த கூண்டில் ஏறி அந்த பெரிய குண்டு மணியில் இடிக்கமுடியாதபடி தன் உடம்பை அதற்கு இடையில் வைத்து பிடித்துக் கொண்டாள். அந்த மணியை அடிக்கின்றனர்; ஆனால், சத்தம் வரவில்லை. கடைசியிலே நிறுத்துங்கள் என்று ராஜா சொன்னபோது, அவளது செத்த உடம்பு அந்த மணிகூண்டிலிருந்து கீழே விழுந்தது.

சகோதரனே, ஒரு தாய் இவ்வளவு அன்புகாட்ட முடியுமென்றால், பிதாவானவர் எவ்வளவு அன்பை நம்மிடத்தில் எதிர்பார்க்கிறார். மற்றவர்களுக்காக கவலைப்படுகிறீர்களா? கவலைப்பட்டால் அவர் களது ஆத்துமா நரகத்திற்குப் போகிறதை சந்தோஷமாகப் பார்ப்பீர்களா? மாட்டோம், அல்லவா? நாம் மற்றவர்களிடம் அன்புசெலுத்தி சுவிசேஷத்தைச் சொல்லவேண்டும். அப்படிச் செய்தால் உங்களுக்குக் கிடைக்கும் பலன் என்னவென்றால், ஆண்டவருடைய சந்தோஷம் நம்மில் நிறைவாயிருக்கும். இயேசுவை எது சந்தோஷப்படுத்தும்? ஒரு பாவி மனந்திரும்புவதும் அவன் இயேசுவை ஏற்றுக்கொள்ளுவதும் அவரை சந்தோஷப்படுத்தும். அப்படியே நீங்கள் ஒருவருக்கு சுவிசேஷம் சொல்லி அவர்கள் தேவனை ஏற்றுக்கொண்டால் அந்த சந்தோஷம் பூரணமானதாக இருக்கும். எப் பொழுதும் நம்முடைய உள்ளத்தில் அது சந்தோஷத்தை ஏற்படுத்திக்கொண்டே இருக்கும்.

சகோதரனே, அந்த செடியிலே நீங்கள் ஒட்டிக் கொண்டிருக்கிறீர்களா? செடியிலே ஒட்டிக்கொண்டிருப்பதுதான் உங்களுக்கு வாழ்வு. அந்தச் செடியின் சாரம்தான் உங்களைப் பெலப்படுத்த முடியும். உங்களை வாழ்விக்கமுடியும். இன்றைக்கும் நீங்கள் ஆண்டவரே, உமக்கும் எனக்கும் பிரிவினை உண்டாக்குகிற பாவத்தையும் அக்கிரமத்தையும் எனக்கு மன்னித்து உம்மோடுள்ள உறவைப் புதுப்பித்துத் தாரும் எனக் கேளுங்கள். அப்பொ ழுது கனியுள்ள வாழ்க்கை வாழ்வீர்கள்.