பழைய ஏற்பாட்டு வேதபாடம்
Dr.உட்ரோ குரோல்
(செப்டம்பர்-அக்டோபர் 2022)

தானியேல்

8 ஆம் அதிகாரம்

Dr.உட்ரோ குரோல்

இத்தலைப்பு இரு மல்யுத்த வீரர்களுக்கிடையே நடந்த போட்டியைப் பற்றிய ஒரு சினிமா அல்லது வீடியோ விளையாட்டைப்போலத் தோற்றமளிக்கிறது. இன்று நாம் ஆராய இருக்கும் தானியேலின் புத்தகத்திலும் இதைப்போன்றதொரு சண்டை காணப்படுகிறது. ஆனாலும் இது நித்திய கண்ணோட்டமாகும். அர்ப்பணிப்பும் உண்மையுமான தேவனுடைய தீர்க்கதரிசியான தானியேல், தனக்கு தேவன் அருளிய கனவுகளின் பொருளை விளக்கும் வரத்தை அரசர்களுக்கு வெளிப்படுத்தினார். ஆனால் தற்சமயம் தனக்கு அருளப்பட்ட கனவுகளைக் கண்டு கலக்கமுற்றார். தீர்க்கதரிசனங்கள் இன்றும் அநேக மக்களை பல விதங்களில் கலங்கப்பண்ணுகின்றன.

அநேக மக்கள் தீர்க்கதரிசனங்களை அற்பமாக எண்ணுகின்றனர். மற்றவர்களோ அவைகள் வாழ்வின் நிறைவேறுதல் என்று எண்ணுகிறார்கள். இரண்டையும் நாம் ஒதுக்கக்கூடாது. நாம் தீர்க்க தரிசனங்களை நம்பி நம் வாழ்வை நடத்தக்கூடாது. தேவன் தீர்க்கதரிசன வெளிப்பாடுகளை நமக்கு தருவதில்லை என்றும் நாம் நினைக்கக்கூடாது.

தானியேல் 8:1இல் “ராஜாவாகிய பெல்ஷாத் சார் ராஜ்யபாரம் பண்ணின மூன்றாம் வருஷத்திலே” என்று எழுதப்பட்டுள்ளது. தானியேல் 7 ஆம் அதிகாரத்தின் ஆரம்பத்தில் “பாபிலோன் ராஜாவாகிய பெல்ஷாத்சாரின் முதலாம் வருஷத்திலே” என்று உள்ளது. எனவே இரண்டு ஆண்டுகள் கடந்துவிட்டன. ஆனால் தரிசனங்களில் காணப்பட்ட இடங்கள் வேறுபடுகின்றன.

“தானியேலாகிய எனக்கு முதலில் காண்பிக்கப்பட்ட தரிசனத்துக்குப் பின்பு, .. வேறொரு தரிசனம் எனக்குக் காண்பிக்கப்பட்டது. தரிசனத்திலே நான் கண்டது என்னவென்றால்: நான் பார்க்கையில் ஏலாம் தேசத்திலுள்ள சூசான் அரமனையில் இருந்தேன்; அங்கே நான் ஊலாய் என்னும் ஆற்றங்கரையில் இருந்ததாகத் தரிசனத்திலே கண்டேன்.”

யூதா, இஸ்ரவேல் தேசத்தின் தென்பகுதியில் இருந்த எருசலேம் நகரத்திலிருந்து தானியேல் சிறைக்கைதியாகப் புறப்பட்டார். பாபிலோனுக்கு இன்றைய ஈராக் 604ஆம் ஆண்டு சிறைப்பட்டுப் போனார். அவர் தன்னையே அத்தரிசனத்தில் கண்டார். சரீரப் பிரகாரமாக 200 மைல் கிழக்கேயிருந்த பகுதியில் (இன்றைய ஈரானில்) தான் இருப்பதாக அக்கனவில் அவர் கண்டார்.

சூசான் அரமனையில் தானியேல் தன்னைக் கண்டார். 100 ஆண்டுகளுக்குப் பின்னர் இந்த நகரில் இருந்து அர்தசஷ்டா அல்லது அகாஸ்வேரு என்ற அரசரும் ஒரு ராணியும் எழும்பினார்கள். அந்த அரசரின் ராணியே எஸ்தர் என்ற பெயரையுடைய பெண்மணி.

தானியேல் வேற்று தேசத்தில், வேறு காலக் கட்டத்தில் தன்னைக் கண்டார். யாருக்கும் கிடைக்காத ஆவிக்குரிய கண்ணோட்டத்தை தானியேலுக்கு தேவன் அருளினார். இங்கு தானியேல் தேவனின் புதிய தரிசனத்தைப் பெற்றுக்கொண்டார்.

அந்த தரிசனம் மிகவும் வித்தியாசமானது. வசனம் 1 இல் “ராஜாவாகிய பெல்ஷாத்சார் ராஜ்யபாரம் பண்ணின மூன்றாம் வருஷத்திலே வேறொரு தரிசனம் எனக்குக் காண்பிக்கப்பட்டது. தரிசனத்திலே நான் கண்டது என்னவென்றால்: நான் பார்க்கையில் ஏலாம் தேசத்திலுள்ள சூசான் அரமனையில் இருந்தேன்; அங்கே நான் ஊலாய் என்னும் ஆற்றங்கரையில் இருந்ததாகத் தரிசனத்திலே கண்டேன். நான் என் கண்களை ஏறெடுத்துப் பார்த்தேன்; இதோ, இரண்டு கொம்புகளுள்ள ஒரு ஆட்டுக்கடா ஆற்றிற்கு முன்பாக நின்றது; அதின் இரண்டு கொம்புகளும் உயர்ந்தவைகளாயிருந்தது; ஆகிலும், அவைகளில் ஒன்று மற்றதைப் பார்க்கிலும் உயர்ந்திருந்தது; உயர்ந்த கொம்பு பிந்தி முளைத்தெழும்பிற்று.”

உங்களுடைய தீர்க்கதரிசனத் திறனை சற்றே சோதித்துப்பார்க்க அழைக்கிறேன். இந்த ஆட்டுக் கடாவைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? அதற்கு இரு கொம்புகள் இருந்தன. அது இயற்கையானதே. ஆனால், ஒரு கொம்பு மற்றதைப் பார்க்கிலும் நீண்டதாயிருந்தது. “உயர்ந்த கொம்பு பிந்தி முளைத்தது” என தரப்பட்டுள்ளது. இந்த கொம்பு எதைக் குறிக்கிறது? இந்த அதிகாரத்தின் இறுதியில் உங்களுடைய கணிப்பு சரியா என நாம் கண்டு கொள்ளலாம். அந்த செம்மறி ஆட்டுக்கடாவின் செயலைக் கவனியுங்கள். வசனம் 4: “அந்த ஆட்டுக்கடா மேற்கும் வடக்கும் தெற்கும் பாய்கிறதைக் கண்டேன்; ஒரு மிருகமும் அதின் முன்னே நிற்கக் கூடாதிருந்தது; அதின் கைக்குத் தப்புவிப்பாருமில்லை; அது தன் இஷ்டப்படியே செய்து வல்லமை கொண்டது.”

தானியேல் இந்த செம்மறியின் தரிசனத்தைப் பார்த்துக்கொண்டிருக்கையில் வசனம் 5,6இல் மற்றொரு மிருகத்தைக் கண்டார். “இதோ, மேற்கேயிருந்து ஒரு வெள்ளாட்டுக்கடா நிலத்திலே கால் பாவாமல் தேசத்தின் மீதெங்கும் சென்றது; அந்த வெள்ளாட்டுக்கடாவின் கண்களுக்கு நடுவே விசேஷித்த ஒரு கொம்பு இருந்தது. நான் ஆற்றின் முன்பாக நிற்கக்கண்ட இரண்டு கொம்புகளுள்ள ஆட்டுக்கடாவினிடமட்டும் அது வந்து தன் பலத்தின் உக்கிரத்தோடே அதற்கு எதிராகப் பாய்ந்தது. அது ஆட்டுக்கடாவின் கிட்டச் சேரக் கண்டேன். அது ஆட்டுக்கடாவின்மேல் கடுங் கோபங்கொண்டு, அதை முட்டி, அதின் இரண்டு கொம்புகளையும் முறித்துப்போட்டது.”

முதல் நான்கு வசனங்களில் இரண்டு கொம்புகளையுடைய செம்மறி ஆட்டுக்கடாவைப் பார்த்தோம்; அதன் ஒரு கொம்பு மற்றதைவிட உயர்ந்திருந்தது. நான்கு திசைகளெங்கும் அது பாய்ந்து சென்றது. திடீரென்று மேற்கேயிருந்து ஒரு வெள்ளாட்டுக்கடா வந்தது. அதன் கண்களுக்கு நடுவே விசேஷித்த ஒரு கொம்பு இருந்தது. இது வேகமாக வந்ததால் அதன் கால் தரையில்படாதவாறு தோன்றிற்று. அது மேற்கிலிருந்து கிழக்குக்கு பாய்ந்து வந்தது. அது செம்மறி ஆட்டின்மேல் பாய்ந்தது. வெள்ளாட்டுக்கடா செம்மறி ஆட்டை அழித்துப்போட்டது.

வசனம் 8 மிக முக்கியமானதாகும்: “வெள்ளாட்டுக்கடா மிகுதியும் வல்லமைகொண்டது; அது பலங்கொண்டிருக்கையில், அந்த பெரிய கொம்பு முறிந்துபோயிற்று; அதற்குப்பதிலாக ஆகாயத்தின் நாலுதிசைகளுக்கும் எதிராய் விசேஷித்த நாலுகொம்புகள் முளைத்தெழும்பினது.”

ஒரு கொம்பு மற்றதைவிட உயர்ந்திருந்த இரு கொம்புகளையுடைய செம்மறிக்கிடாயின் தரிசனம், விசேஷித்த ஒரு கொம்பையுடைய வெள்ளாட்டுக் கடாவின் தரிசனம் இவற்றை நாம் கண்டோம். இந்த கொம்பு முறித்துப்போடப்பட்டு அவ்விடத்தில் நான்கு கொம்புகள் முளைத்தெழும்பின. இது மிகவும் விசித்திரமானது.

வசனம்9: “அவைகளில் ஒன்றிலிருந்து சின்னதான ஒரு கொம்பு புறப்பட்டு, தெற்குக்கும், கிழக்குக்கும் எதிராகவும், சிங்காரமான தேசத்துக்கு நேராகவும் மிகவும் பெரியதாயிற்று.”

இந்த சிங்காரமான தேசமானது தேவனுடைய பரிசுத்த தேசமும், வாக்களிக்கப்பட்ட தேசமுமான இஸ்ரவேல் தேசத்தைக் குறிக்கும். இந்த நான்கு கொம்புகளிலிருந்து ஒரு மனிதன் எழும்புவான். அவன் கிழக்கு, தெற்கு மற்றும் உலக முழுவதையும் ஆட்சி பண்ணுவான். மற்ற யாவரையும் அவன் அதிகாரம் செய்வான்.

இந்நிலையில் தானியேல் மிகவும் குழப்பமடைந்தான். மிருகங்களைப் பற்றியும் அதன் பொருளையும் அவனால் அறிந்துகொள்ள முடியவில்லை. அவனுக்கு சில உதவிகள் தேவைப்பட்டன.

வசனம் 15 ஐ வாசியுங்கள்: “தானியேலாகிய நான் இந்தத் தரிசனத்தைக்கண்டு, அதின் பொருளை அறிய வகைதேடுகையில், இதோ, மனுஷசாயலான ஒருவன் எனக்கு எதிரே நின்றான். அன்றியும் காபிரியேலே, இவனுக்கு தரிசனத்தை விளங்கப்பண்ணென்று ஊலாயின் மத்தியிலே கூப்பிட்டுச் சொல்லுகிற ஒரு மனுஷ சத்தத்தையும் கேட்டேன்.”

காபிரியேல் என்பவர் ஒரு தேவதூதர். ஒரு தூதன் காபிரியேலை நோக்கி, “காபிரியேலே, தானியேல் மிகுந்த கலக்கத்தில் இருக்கிறான். அரசர்களின் சொப்பனங்களை விளக்கிய இம்மனிதன் தன்னுடைய தரிசனத்தையும் அதன் பொருளையும் அறியாமல் திகைத்து நிற்கிறான். காபிரியேலே அத்தரிசனத்தை நீ தானியேலுக்கு விளக்கிச்சொல்லு” என்றார்.

தேவதூதர்களைப் பற்றிய அநேக கதைகள் வழங்கிவரும் சமுதாயத்தில் நாம் வாழ்ந்து வருகிறோம். “Angels in the Outfield”, “Touched by an Angel” போன்ற திரைப்படங்களும் வெளிவந்தன. தேவதையாக நடித்து பாடகியான டெல்லா ரீஸ் போன்றே அனைத்து தேவதூதர்களும் இருப்பார்கள் என நாம் நினைக்க இடமுண்டு. அநேகர் தேவதூதர்களை நம்புகின்றனர். 1995ஆம் ஆண் டில் LIFE பத்திரிக்கை ஒரு கருத்துக்கணிப்பு நடத்தியது. அதில் 69 விழுக்காடு அமெரிக்கர்கள் தூதர்களை நம்புவதாகவும், 32 விழுக்காடு மக்கள் தங்களுடைய வாழ்க்கையில் தேவதூதர்களின் பிரசன்னத்தை உணர்ந்ததாகவும் கூறினர்.

தானியேலுக்கு விளக்கவந்த காபிரியேல் செய்ததை நாம் ஆராய்வோம்.

வசனம் 16: “அன்றியும் காபிரியேலே, இவனுக்குத் தரிசனத்தை விளங்கப்பண்ணென்று ஊலாயின் மத்தியிலே கூப்பிட்டுச் சொல்லுகிற ஒரு மனுஷ சத்தத்தையும் கேட்டேன். அப்பொழுது அவன் நான் நின்ற இடத்துக்கு வந்தான்; அவன் வருகையில் நான் திடுக்கிட்டு முகங்குப்புற விழுந்தேன்.”

தூதர்களை சந்தித்த மக்கள் பயந்தனர் என வேதாகமத்தில் நாம் வாசிக்கிறோம். இயேசுகிறிஸ்து வின் பிறப்பின் நற்செய்தியைக் கூறவந்த தூதர்களைக் கண்ட மேய்ப்பர்கள் பயந்தனர். கல்லறையில் வைக்கப்பட்ட இயேசுவின் சரீரத்துக்கு கந்தவர்க்கமிட வந்த ஸ்திரீகள் அங்கு ஒரு தூதனைக் கண்டனர். கர்த்தருடைய தூதன் வாசலிலிருந்த கல்லைப் புரட்டித்தள்ளினார். அங்கிருந்த காவலாளர் அவனுக்குப் பயந்ததினால் திடுக்கிட்டுச் செத்தவர்கள் போலானார்கள். இன்றும் நாம் தூதர்களுக்குப் பயப்படும் மனோபாவம் உடையவர்களாய் இருக்கிறோம். தேவதூதர்கள் கடவுளின் தூதுவர்கள். தானியேலுக்கு உதவ வந்த இந்த தேவதூதன் தேவனால் அனுப்பப்பட்டவன்.

வசனம் 19: இந்த தரிசனம் கோபத்தின் முடிவு காலத்துக்குரியது என தெளிவாகக் கூறுகிறது. “இதோ, கோபத்தின் முடிவு காலத்தில் சம்பவிப்பதை உனக்குத் தெரிவிப்பேன்” என்றார். கோபத்தின் முடிவுகாலம் என்பது பூமியின்மேல் தேவனுடைய கோபத்தினால் உண்டாகும் உபத்திரவ காலம் என்பதை நாம் அறிவோம். காபிரியேல் தேவதூதனும் தானியேலிடம் “நீ கேட்பதும் காண்பதுமான இத்தரிசனங்கள் தேவனின் மாபெரும் கோபத்தின் காலத்தில் நடக்க இருப்பன” என்று கூறினார்.

நாமும் இக்கடைசி காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். தேவனுடைய கோபத்தின் காலத்துக்கு நம்மை ஆயத்தமாக்கி வருகிறோம். இத்தரிசனத்தின் அர்த்தமானது நமக்கு மிகவும் அவசியமானதாகும். இத்தரிசனத்தின் அர்த்தம் யாது?

வசனம் 20: “நீ கண்ட இரண்டு கொம்புள்ள ஆட்டுக்கடா மேதியா பெர்சியா தேசங்களின் ராஜாக்கள்” என்கிறார். இந்த இரு கொம்புள்ள ஆட்டுக்கடாவின் ஒரு கொம்பு மற்றதைவிட நீளமானது. இந்த நீளமான கொம்பு தாமதமாய் முளைத்தது என்று நாம் பார்த்தோம். மேதியா பெர்சியா தேசங்களில் மேதியா என்பது பரப்பளவில் பெரியது. பின்னர் பெர்சியா அதனுடன் இணைந்தது. இரண்டாவது கொம்பைக் குறிக்கும் பெர்சியா முக்கியத்து வம் வாய்ந்ததாக மாறியது. எனவே இங்கு காபிரியேல் குறிப்பிடும் இரு கொம்புகள் மேதியா பெர்சியா சாம்ராஜ்யங்களையே சுட்டிக்காட்டுகின்றன.

தானியேலின் இரண்டாம் அதிகாரத்தில் மாபெரும் சிலையின் உலோகங்கள், 7ஆம் அதிகாரத்தில் காணப்படும் மிருகங்கள் மற்றும் 8ஆம் அதிகாரத்தின் ஆட்டுக்கடாக்கள் இவை யாவுமே எதிர் காலத்தின் தேசங்களைக் குறிப்பிடுகின்றன. அவை முறையே பாபிலோன், மேதியா-பெர்சியா, கிரீஸ் மற்றும் ரோம சாம்ராஜ்யங்கள் எனத் தெளிவாகத் தெரிவிக்கின்றன.

வசனம் 21இல் கூறப்படும் ஆட்டுக்கடா, வெள்ளாட்டுக்கடா என்பன யாது?

ஒற்றைக் கொம்புடைய வெள்ளாட்டுக்கடா கிரீஸ் தேசத்து அரசரைக் குறிக்கும். தானியேல் இந்த அரசரை எவ்வாறு அறிவார்? அக்காலத்தில் கிரீஸ் ஒரு நாடாகவே உருவாகவில்லை. தானியேல் இவ்வரசர் தோன்றும் முன்னதாகவே அவரைப் பற்றி உரைத்துள்ளார்.

அப்பொழுது கிரீஸ் சில பட்டணங்களைக் கொண்ட மாகாணமாகவே இருந்தது. பாரசீகப் பேரரசுக்கு கிரேக்கர்களே மிகப்பெரிய எதிரியாக உருவாகுவார்கள் என்ற எண்ணமும் இருந்தது. எனவேதான் “கவலைப்படாதேயுங்கள்; கிரேக்கர்கள் வருகிறார்கள்” என்று தேவன் விளக்கமளித்தார். எனவே வெள்ளாட்டுக்கடா கிரீஸ் தேசத்தைக் குறிக்கிறது. அந்த வெள்ளாட்டுக்கடாவின் கண்களுக்கு நடுவே ஒரு ஒற்றைக்கொம்பு இருந்தது. அது கிரேக்க நாட்டின் முதல் அரசரான மகா அலெக்ஸாண்டர் ஆவார். ஒரு சிலர் மக்கதொனியா நாட்டின் அரசரான இரண்டாம் பிலிப்புவே கிரேக்க நாட்டின் முதல் அரசர் என்று வாதிடுவர். இரண்டாம் பிலிப்பு என்பவர் அலெக்ஸாண்டரின் தந்தையாவார். இவர் ஸ்பார்ட்டாவைத் தவிர அனைத்து பட்டணங்களையும் ஒருங்கிணைத்து ஒரே நாடாக்கினார். ஆனால் அவர் அதன் முதல் அரசரல்லர்; மகா அலெக்சாந்தரே முதலாவது கிரேக்க நாட்டு அரசர். எனவே இங்கு சொல்லப்படும் ஒற்றைக் கொம்பையுடைய வெள்ளாட்டுக்கடா மகா அலெக்ஸாண்டர் என்பது மிகத் தெளிவு.

வசனம் 22: அவ்வெள்ளாட்டுக்கடாவின் பெரிய கொம்பு முறிந்த பின்னர், அதற்கு பதிலாக நான்கு கொம்புகள் எழும்பினது. ஆம், மகா அலெக்ஸாண்டர் இளவயதிலேயே மரித்துவிட்டார். அவருடைய ராஜ்யத்தை அரசாள அவருக்கு வாரிசுகள் இல்லாததால் அது நான்காகப் பிரிந்தது. அந்த நான்கு நாடுகளும் அவரது நான்கு படைத்தளபதிகளுக்குச் சென்றது. தாலமி என்ற தளபதி எகிப்தையும், ஆசியா மைனரின் ஒரு பகுதியையும் பெற்றுக்கொண் டார். கசாண்டர் என்பவர் மாசிடோனியா மற்றும் கிரீஸ் தேசத்தையும், லசிமாக்கஸ் என்ற தளபதி திரேசு மற்றும் ஆசியா மைனரின் சில பகுதிகளையும், செலூக்கஸ் சிரியா, இஸ்ரேல் மற்றும் மெசப்பத்தோமியா பகுதிகளையும் பெற்றுக்கொண்டனர்.

மிகப்பெரிய கொம்பு முறிந்தபின் அதிலிருந்து வந்த நான்கு கொம்புகளின் தரிசனத்தை நாம் கண்டோம். அக்காலத்தில் இந்த நான்கு தளபதிகள் தோன்றுவார்கள் என்ற எண்ணம் கொஞ்சம் கூட எழுந்திருக்க வாய்ப்பில்லை. இது தேவனுடைய தீர்க்கதரிசனம். தேவனால்மட்டுமே எதிர்காலத்தில் நடக்கவிருப்பதைப்பற்றி இவ்வளவு துல்லியமான விளக்கங்களைத் தரமுடியும்.

வசனம் 23-26 வரையுள்ள வசனங்கள்: இந்த அரசர்களின் மத்தியிலிருந்து மூர்க்க முகமுடைய ஓர் அரசனைப் பற்றிக் கூறுகிறது. மகா அலெக்ஸாண் டருக்குப் பின் அரசாட்சி செய்த இந்த நான்கு கொம்பிலிருந்து எழும்பிய அரசர்களில் ஒருவர் யார்?

இவர் அந்தியோகஸ் எப்பிபானஸ் என்று உங்களில் சிலர் அறிவீர்கள். இவரைப்பற்றி நான் என்ன சொல்வேன்? இவர் ஒரு வெறியர்; இரத்தப் பிரியர். கொடுங்கோலர். வசனம் 23இல் கூறப்படும் மூர்க்கமுடைய அரசனுக்கு இவர் ஒத்துப்போகிறார். தனது சுயபலத்தால் அவர் வலிமையடையவில்லை; ஆனால் பலசாலியானார். தான் வெற்றிபெற எதையும் அழிக்கவும் துணிவார். அதில் வெற்றியும் பெறுவார். அந்தியோகஸ் எப்பிபானஸ் செய்யும் பயங்கரமான காரியங்களைப்பற்றி அவ்வசனம் விளக்குகிறது. அவருடைய பெயர் நமக்கு முக்கியமல்ல; ஆனால், சாத்தானுடைய குணங்களை அவன் கொண்டிருந்தான்.

இத்தளபதியைப் பற்றி சில காரியங்களை நான் குறிப்பிட விரும்புகிறேன். மகா அலெக்ஸாண்டருக்குப் பின்னர் அவர் செலுக்கஸ் சாம்ராஜ்யத்திலிருந்து தோன்றினார்.

வசனம் 24: மற்றவர்களை அடக்கி அவன் வல்லவனாவான்.

வசனம் 25: அவன் தன் உபாயத்தினால் வஞ்சகத்தைக் கூடிவரப்பண்ணி அதிகாரத்துக்கு வருவான்.

வசனம் 23: அவன் சூதான பேச்சுள்ளவன், சாமர்த்தியமானவன்.

வசனம் 24: அவன் பரிசுத்த ஜனங்களான இஸ்ரவேலருக்கு எதிரியாவான். அவன் மற்றொருவனால் வல்லமை பெறுவான். அவ்வாறெனில் அது சாத்தானாகத்தான் இருக்கவேண்டும் என நான் எண்ணுகிறேன்.

வசனம் 25: அதிபதிகளுக்கு அதிபதியாயிருக்கிறவருக்கு – இயேசுகிறிஸ்துவுக்கு விரோதமாய் எழும்புவான்.

இத்தரிசனத்தை விளங்கிக்கொள்வது மிகவும் கடினமான காரியம் என்பதை நான் ஒத்துக்கொள்ளுகிறேன். பல நூற்றாண்டுகள், பல தலைமுறைகள் கடந்து அக்காலத்தில் நடந்தேறாத காரியங்களை தானியேலின் தரிசனத்தில் நாம் ஆராய்கிறோம். கிரேக்க சாம்ராஜ்யத்திலிருந்து ஒரு கொடுங்கோல் மன்னன் எழும்புவான் என்பதே தானியேலின் தரிசனத்தின் பொருள். அந்த கொடுங்கோலன் அந்தியோகஸ் எப்பிபானேஸ். அவன் பரிசுத்த ஆலயத்தைத் தீட்டுப்படுத்துவான். யூதருடைய ஆலயத்தில் பன்றியைப் பலியிடுவான். இதனால் மத வைராக்கியமுள்ள யூதர்கள் அந்தியோகஸ் எப்பிபானேஸ்க்கு விரோதமாய் எழும்புவார்கள்.

ஆனால் தரிசனத்தின் முடிவில் இத் தரிசனத்தை எதிர்காலத்துக்காக மறைத்து வைக்குமாறு தானியேலுக்குச் சொல்லப்பட்டது. “தானியேலே கவனி; உனக்கு எதுவுமே விளங்காது. இத்துடன் நிறுத்திக்கொள். இத்தரிசனத்தை முத்திரை போடு” என்று அவருக்கு கூறப்பட்டது. “நீ எழுதுவதை நிறுத்திக்கொள். இத்துடன் எதையும் கூட்டவோ குறைக்கவோ செய்யாதே. நீ அறிந்துகொள்ள போதுமானவற்றை நான் உனக்கு வெளிப்படுத்திவிட் டேன்” என்று தேவன் கூறினார்.

இன்று நீங்களும் நானும் தானியேலைவிட சிறப்பான நன்மைகளைப் பெற்றுள்ளோம். அவரைப்போல நாம் நித்திரை செய்யவில்லை; தரிசனங்களையும் சொப்பனங்களையும் காணவில்லை. ஆனால் நமக்கு வரலாற்றின் பதிவுகள் கிடைத்துள்ளன. நாம் அவற்றை பின்னோக்கி வாசிக்கிறோம். மகா அலெக்ஸாண்டரின் ஆட்சி, அவருடைய ராஜ்யத்தைப் பிரித்துக்கொண்ட நான்கு தளபதிகள் இவையெல்லாவற்றையும் நாம் அறிவோம். “அனைத்தும் செவ்வனே நடந்தேறியது” என நாம் கூறமுடியும்.

ஆனால், தானியேலுக்கு இவை எதுவுமே விளங்கவில்லை. தானியேலுக்கு அது எதிர்கால நிகழ்வு, அவர் தேவனை நம்ப வேண்டியிருந்தது. ஜாம்பவான்கள் மோதினபோது, ஆட்டுக்கடாவும் வெள்ளாட்டுக்கடாவும் மோதினபோது, உலக சாம்ராஜ்யங்கள் சண்டையிட்டபொழுது, ஒருவர் வெற்றி பெறுவார், மற்றவர் தோல்வியடைவார் என்று தானியேலுக்கு தேவன் முன்னறிவித்தார்.

வரலாற்றில் பார்க்கும்பொழுது, ஒரு சாம்ராஜ்யம் அடுத்த சாம்ராஜ்யத்துக்கு கீழ்ப்படிவதையும், ஒன்று அழிந்து, மற்றது உருவானதையும் நாம் கவனித்துள்ளோம். ஆனால் ஒருநாளில் என்றும் அழியாத ஒரு சாம்ராஜ்யம் எழும்பும். உண்மையான ஜாம்பவான்களின் யுத்தம் இன்னும் ஆரம்பமாகவில்லை.

அந்தியோகஸ் எப்பிபானேஸ் ஒரு வரலாற்றின் மனிதராக இருந்தாலும், அவருக்கும் மற்ற நாட்டுக்கும் நடந்த யுத்தம் ஒரு முன்னோட்டமே. அது உண்மையான மல்யுத்தம் அல்ல. நிஜமான யுத்தம் இனிதான் வர உள்ளது. ஏனெனில் அந்தியோகஸ் எப்பிபானஸ் என்பவர் இயேசு கிறிஸ்துவுக்கு எதிரியாக எழும்பும் அந்திக்கிறிஸ்துவுக்கு முன்னடையாளம். அந்த யுத்தம் முடிந்தபின்னர் கிறிஸ்து ஒருவரே வெற்றி பெற்று ராஜாதி ராஜாவாக, கர்த்தாதி கர்த்தராக உயர்ந்து நிற்பார்.

தானியேல் இதனை அறிந்திருக்கமாட்டார். அந்தியோகஸ் எப்பிபானேஸ் பற்றியும் அவரது ராஜ்யத்தைப்பற்றியும் தெரிந்திருக்கமாட்டார்; ஏனெனில் அது அவருடைய எதிர்கால நிகழ்வு. ஆயினும் தேவனுடைய அழைப்பினை அவர் செய்வதில் உண்மையாயிருந்தார். அவர் கண்ட தரிசனங்களை எழுதி வைக்குமாறு தேவன் கூறினார். “இதனை நான் விளக்குவேன்; நீ இதனை முத்திரைபோடு; பின்னர் நீ இளைப்பாறு” என்றாார்.

இத்தரிசனத்தின் விளக்கத்தைப் பெற பத்மு தீவில் “வெளிப்படுத்தின விசேஷம்” நூலை எழுப்பிய மற்றொரு மனிதருக்கு நாம் காத்திருக்க வேண்டியதாயிருந்தது. வரலாற்றின் ஏடுகளில் இவ்விரு நூலும் இணைந்து செல்வதை நாம் காணமுடியும். அந்தியோகஸ் எப்பிபானேஸ் என்பவர் வரலாறில் ஒரு பெரிய மனிதராக இருந்தாலும் அவர் அந்திகிறிஸ்துவுக்கு ஒரு முன்னோடி மாத்திரமே. உண்மையான யுத்தம் இன்னும் நடந்தேறவில்லை; இனிதான் வரவிருக்கிறது.

இத்தீர்க்கதரிசனங்களைக் குறித்து நாம் கலங்க வேண்டியதில்லை. இத்தீர்க்கதரிசனங்கள் யாவையும் நாம் கிறிஸ்துவையும், அவரது மேசியா தன்மையையும், அவரது வருகை மற்றும் இரட்சிப்பு முதலியவற்றையும் நாம் மையப்படுத்தலாம். தேவன் அமைதியாயிருந்து, தீர்க்கதரிசிகள் மாத்திரம் தேவகுரலைக் கேட்பதை மனுக்குலம் சார்ந்திருப்பது அழிவையே கொண்டுவரும். தீர்க்கதரிசிகள் பேசவேண்டும். “தீர்க்கதரிசனம் இல்லாத இடத்தில் ஜனங்கள் அழிவார்கள்” அதாவது தேவனிடமிருந்து வெளிப்படுத்தல் இல்லாதிருந்தால் மக்கள் அழிவார்கள்.

இன்று தேவன் வெளிப்படுத்திய அவரது வார்த்தை நமக்கு இருக்கிறது. தேவனைப்பற்றி நாம் அறிய வேண்டியதை பரிசுத்த வேதாகமத்தில் தேவன் நமக்கு தந்துள்ளார். அநேகர் அவர் அருளப்பட்டதை வாசிக்காது கூடுதலான வெளிப்படுத்தலை மனிதர்களிடம் தேடுகிறார்கள். வேதவாக்கியங்கள் வெளிப்படுத்தும் சத்தியங்களை நாம் அறிந்து அதன் வெளிச்சத்தில் நடப்போம். அனைத்துக் காரியங்களுக்கும் வேதாகமத்துக்கே திரும்பு வோம்.