சகோதரி சாந்தி பொன்னு
(செப்டம்பர்-அக்டோபர் 2022)
நான் மெய்யான திராட்சச்செடி, என் பிதா திராட்சத்தோட்டக்காரர். என்னில் கனிகொடாதிருக்கிற கொடி எதுவோ அதை அவர் அறுத்துப்போடுகிறார்; கனி கொடுக்கிற கொடி எதுவோ, அது அதிகக் கனிகளைக் கொடுக்கும்படி, அதைச் சுத்தம் பண்ணுகிறார் (யோவான் 15:1,2).

சகோதரி சாந்தி பொன்னு
சத்தியவசன நேயர்களுக்கு என் அன்பான வாழ்த்துக்கள். நம் எல்லாருக்கும் கஷ்டங்கள் துன்பங்கள் வருகிறது. வியாதிகள் வேதனைகளும் வருகிறதுண்டு. ஆனால், அந்த நேரத்திலே நம்முடைய மனநிலைகள் எப்படியிருக்கிறது என்பதை சிந்தித்துப் பார்க்கவேண்டும். அதிலும் இன்னொருவருக்கு வியாதி வரும்போது நாம் எவ்வளவாய் நியாயங்கள் சொல்லுகிறோம். என்னவெல்லமோ சொல்லுகிறோம். அதேமாதிரி நமக்கு வியாதிகள் வரும்போது, நாம் கஷ்டத்துக்குள்ளே தள்ளப்படும்போது இவர்கள் ஏதோ பாவஞ் செய்துவிட்டார்கள். ஆகவேதான் இவர்களுக்கு இந்த பிரச்சனையென்று மற்றவர்கள் நம்மைக் குறித்து சொல்லுவார்கள்.
நான் வியாதிப்பட்டிருந்த காலத்தில்கூட என்னிடத்தில் வந்து நீ பாவஞ் செய்துவிட்டாய் என்று என் முகத்துக்கு நேரே சொன்னார்கள். ஆம், நான் பாவிதான்! ஆனால், அவர்கள் சொன்ன விதத்திலே அந்த வியாதியின் மரண வேதனையிலே இன்னும் அதிகமான வேதனையை அளித்துவிட்டு போய்விட்டனர். பிரியமானவர்களே, கஷ்ட துன்பம் இல்லாமல் வாழ்க்கை ஒன்றும் இல்லை. ஏனென்றால் இந்த உலகம் அதுதான். நாம் ஓடுகிற ஓட்டம் அதுதான்.
சமீபத்திலே மல்லிகைத் தோட்டம் வைத்திருக்கிற ஒருவர் பேசுகிறதை நான் கேட்டேன். தன்னுடைய வீட்டின் மேல்கூரையில் சின்ன சின்ன ஜாடிகளில் அவர் மல்லிகையை வைத்திருந்தார். அது சின்ன மரமாக இருந்தாலும் அதில் ஏராளமான பூக்கள் காணப்பட்டது. மிகவும் ஆச்சரியமாக இருந்தது. அதிகமான பூக்கள் பூக்கிறதற்கு என்ன செய்யவேண்டும் என்பதை அவர் விளக்குகிறார். இரண்டு காரியங்களைச் செய்வதாக அவர் சொன்னார். ஒன்று, கத்தரித்து சுத்திகரிப்பது; இரண்டாவது, இயற்கையான உரங்களைப் போடுவதாகும். அந்தக் கத்தரித்து சுத்திகரிப்பதைப்பற்றி அவர் சொல்லும்போது செடி அதிகமான இலைகள் வைத்து செழித்து உயரமாக வளரும்போது நிச்சயமாக அந்த மரத்திலே பூக்கள் அதிகமாக வராது. ஆகவே, ஜாடியிலுள்ள அந்த இலையிலிருந்து ஒரு அடி அல்லது ஒன்றரை அடி உயரத்திற்கு செடிகளை வெட்டிவிட்டு நன்றாக கொத்தி உரம் போட்டுவிட்டால் அதிகமான பூக்கள் பெரிய பூக்களாகவும் அழகாகவும் நிறைய பலன் கிடைக்கும்.
இந்தக் குறிப்பை திராட்சத் தோட்டக்காரரிடத்திலும் நாம் கேட்கலாம். இது ஒரு பொதுவான குறிப்புதான். எங்கே அதிகமான செழிப்பு இருக்கிறதோ அங்கே அதிக பலன் கிடைப்பது மிகமிக கடினம். ஆகையினாலேதான் சுத்திகரிப்பு மிகமிக அவசியமாக இருக்கிறது. திராட்சத் தோட்டத்தை நீங்கள் பார்த்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். அந்த பந்தலிலேகூட பெரியபெரிய இலைகள் காணப்பட்டு, நல்ல பச்சைக் கலரிலே இலைகள் வந்து செழித்து வளருகிற திராட்சச்செடியிலே கனிகள் மிகமிகக் குறைவாகவே இருக்கிறது. எனவே கனி கொடுக்கவேண்டுமென்றால் முதலாவது, அது வெட்டி சுத்திகரிக்கப்பட வேண்டும்.
இந்த ரீதியிலே ஆண்டவர் இயேசு சொன்ன வார்த்தைகளை வாசிப்போம். அது யோவான் சுவிசேஷத்தில் அழகாக விளக்கப்பட்டுள்ளது. யோவான் 15:1,2 ஆகிய வசனங்கள். நான் மெய்யான திராட்சச்செடி, என் பிதா திராட்சத் தோட்டக்காரர். என்னில் கனிகொடாதிருக்கிற கொடி எதுவோ, அதை அவர் அறுத்துப்போடுகிறார்; கனி கொடுக்கிற கொடி எதுவோ, அது அதிகக் கனிகளைக் கொடுக்கும்படி, அதைச் சுத்தம் பண்ணுகிறார். இரண்டும் நடக்கிறது. கனிகொடுக்கிற கொடி எதுவோ அதற்கும் வெட்டுதல் நடைபெறுகிறது. கனி கொடாதிருக்கிற கொடி எதுவோ அதற்கும் வெட்டுதல் நடைபெறுகிறது. ஆனால், வெட்டப்படுவதினுடைய நோக்கம் வித்தியாசமானது. கனி கொடாதிருக்கிற கொடிகள் வெட்டப்பட்டு அக்கினிக்கு இரையாக்கப்படும். ஏன் தெரியுமா? அவை அங்கிருந்து மற்றவைகளுக்கு இடறல் கொடுக்கக்கூடாதென்பதற்காக. கனி கொடுக்கிற கொடிகளும் வெட்டப்பட்டு சுத்திகரிக்கப்படுகிறது ஏன்? அவை அதிகமான கனிகளைக் கொடுக்கும்படி சுத்திகரிக்கப்படுகிறது.
பிரியமானவர்களே, இப்போது சொல்லுங்கள். நமக்கு வருகிற வேதனைகள் கஷ்டங்கள் எல்லாம் நம் ஆண்டவர் நம்மை வேதனைப்படுத்தவா அனு மதிக்கிறார்? கிறிஸ்துவுக்கு முன் கிட்டத்தட்ட 1800 ஆண்டுகளுக்கு முன் ஒரு வாலிபன் வாழ்ந்தான். அவன் மிகவும் செல்லப்பிள்ளை. பதினோராவது பிள்ளை. அப்பாவுக்கு மிகவும் செல்லப் பிள்ளை. அப்பா அவனுக்கு அழகழகான பலவர்ண ஆடைகளையெல்லாம் வாங்கிக்கொடுப்பார். இது மற்ற சகோதரர்களுக்கு அதிக எரிச்சலைத் தந்தது. இதனால் அந்த சகோதரர்கள் என்ன செய்தனர். அவர்களுக்கு உணவு கொடுக்கப்போன தம்பியைப் பிடித்து, குழிக்குள் போட்டு அவனை வதைத்து, அவனது பலவர்ண அங்கியையெல்லாம் அவனை விட்டு கழட்டி எடுத்து, அவனை யாரிடமோ விற்றுப் போட்டு, அவன் செத்துப்போனான் என்று அவனது அப்பாவிடம் சொல்லிவிட்டார்கள். அவனது பெயர் யோசேப்பு. பதினேழு வயது. அவன் தொலைந்து போனான், தொலைக்கப்பட்டான்.
பதினேழு வயதில் இருக்கிற உங்கள் பிள்ளைகளோ அல்லது இதை வாசித்துக்கொண்டிருக்கும் வாலிபரோ நீங்கள் யோசித்துப் பாருங்கள். பதினேழு வயதில் இந்த வேதனை எதற்காக? ஆனால், எதற்காக? என்று அவன் கேட்டதாக வேதாகமத்தில் எழுதப்படவில்லை. அவன் எங்கேயோ விற்கப்பட்டு முன்பின் தெரியாத நாடு எகிப்து தேசத்துக்குக் கொண்டுபோகப்பட்டு ஒரு வேலைக் காரனாக, ஒரு அடிமையாக அங்கேயும் திரும்ப விற்கப்படுகிறான். அவன் அடிமையாக வேலை செய்தபொழுது அவன் செய்யாத ஒரு பாவத்திற்காக தண்டனையை அனுபவிக்கும்படியாக சிறைக்குள்ளே அடைக்கப்படுகிறான்.
சிறைக்குள் இருக்கும்வரையிலும், அவன் குற்றமே செய்யாதபோதிலும் அவனை மறந்து போனார்களல்லவா. அவனோடு சிறையில் இருந்த நண்பர்கள் விடுதலையாகி போனவுடன் அவனை மறந்து போனார்கள். கிட்டத்தட்ட முப்பது வயது வரும் வரையிலும், கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். பதினேழு வயது முதல் முப்பது வயது வரையிலும் அவன் அடைந்த வேதனை துன்பம் அளவில்லாதது. அது அவன் செய்த பாவம் என்று சொல்லமுடியுமா? முன் செய்த பாவம் என்று சிலர் சொல்லுவார்களே. அவை ஒன்றுமேயில்லை. நடந்தது என்ன தெரியுமா? பதினேழு வயது வாலிபனாய் தொலைந்து போனவன், முப்பது வயதிலே அவன் வெளியே வந்து, உயர்த்தப்பட்டு. எகிப்து தேசத்துக்கு பார்வோன் ராஜாவுக்கு அடுத்தவனாக சிங்காசனத்தில் உட்கார்ந்திருப்பதை நாம் பார்க்கிறோம்.
இப்பொழுது அவனை விற்றுப்போட்டு அவன் தொலைந்துவிட்டான் என்றிருந்த சகோதரர்களே, அவனிடத்தில் பசிக்கு தானியம் கேட்டுவந்தனர். அவன் யார் என்று தெரியாமல் அவன் காலில் விழுந்து வணங்கிய சம்பவங்கள் வேதாகமத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பிரியமானவர்களே, எந்தவொரு கஷ்டமோ, எந்தவொரு நஷ்டமோ நமக்கு சும்மா வருகிறதேயில்லை. ஒரு வாலிப பெண் என்னிடத்தில் வேதனையோடு பகிர்ந்துகொண்டாள். ஏன் இவ்வளவு துன்பம் என்றாள்? நான் அவளுக்கு சொன்னது ஒன்றுதான். உனக்கு ஏதோவொரு திட்டத்தை கர்த்தர் வைத்திருக்கிறார். அதற்காக இப்பொழுது அவர் புடமிட்டுக் கொண்டிருக்கிறார், உன்னை ஆயத்தப்படுத்திக் கொண்டிருக்கிறார், யோசேப்பை அத்தனை ஆண்டுகாலமாய் ஆயத்தப்படுத்தின தேவன் உன்னையும் ஆயத்தப்படுத்துகிறார். கஷ்டமான சூழ்நிலைதான். ஆனால், தேவனை இறுகப்பிடித்துக்கொள். அவர் இந்த காலத்தை கடந்துசெல்ல நிச்சயமாகவே பெலன் தருவார் என்று சொன்னபோது அவளது முகம் மலர்ந்ததை நான் கண்டேன்.
பிரியமானவர்களே, கர்த்தருடைய கரங்களில் அடங்கியிருப்பதைத் தவிர, அவரது சிருஷ்டிகளாகிய நம்மால் செய்யக்கூடியது ஒன்றுமேயில்லை. ஆகவே இந்த உலக ஓட்டத்திலே என்னதான் வந்தாலும் தேவனுடைய கைக்குள் நாம் அடங்கியிருக்கும்போது நிச்சயமாக, வாக்குப்படி, அவர் ஏற்ற காலத்திலே நம்மை உயர்த்தியேத் தீருவார். ஏனென்றால், அவர் வாக்குமாறாதவர்! அவரும் மாறாதவர்!! அவரது வாக்குகளும் மாறாது!!!
ஆகையினால் அன்பானவர்களே, எந்த நாளும் இருட்டியே இருக்காது; பகல் வரும். இருளிற்கு பிறகு வெளிச்சம் நிச்சயம் வரும், இவையெல்லாம் சும்மா கதையல்ல. இது வாழ்க்கை. சோர்ந்துபோக வேண்டாம். கர்த்தருடைய கரங்களில் நம்மை ஒப்புக்கொடுப்போம்.
நினைவுகூருங்கள்!
இன்றைய அவசரமான உலகில் ஆண்டவரும் அவசரமாக உடனடியாக செயற்படவேண்டும் என்று நாம் எதிர்பார்ப்பது தவறு. ஆண்டவரின் வழிநடத்துதல்கள் எப்போதும் அமர்ந்து காத்திருப்பதற்குரியதாகும்.