– சகோ. இ. வஷ்னீ ஏனர்ஸ்ட் –
(செப்டம்பர்-அக்டோபர் 2022)

எனது ஜெபம்

“அன்பின் இறைவா, இந்த உலகத்தில் நடை பெறுகின்ற காரியங்களை நான் உற்றுப்பார்க்கும் பொழுது, நீர் என்ன செய்துகொண்டிருக்கின்றீர் என்பதைக்குறித்து நான் வியப்படைகின்றேன். எனது சமுதாயத்தில் இடம்பெறுகின்ற கொலைகள், கொள்ளைகள், அநீதிகள், யுத்தங்கள் போன்ற அநேக பிரச்சனைகளைக் குறித்து நீர் சிந்திப்பதுண்டா என்பதைத் தெரிந்துகொள்ளும் ஆவலுடன் இருக்கின்றேன். நான் வாழும் இந்த உலகைப் பற்றிய உமது கவலை என்னவென்பதை கட்டாயம் நான் அறிந்தே ஆகவேண்டும். தயவுசெய்து எனக்கு இந்தக் கவலையிலிருந்து விடுதலையைத் தர வேண்டுமென பணிவுடன் வேண்டுகின்றேன்.

வார்த்தை பேசுகிறது:

கர்த்தர்: (நான்) இரக்கமும், கிருபையும், நீடிய சாந்தமும், மகா தயையும், சத்தியமுமுள்ள தேவன். ஆயிரம் தலைமுறைகளுக்கு இரக்கத்தைக் காக்கிறவர்; அக்கிரமத்தையும் மீறுதலையும் பாவத்தையும் மன்னிக்கிறவர்; குற்றவாளியைக் குற்றமற்றவனாக விடாமல், பிதாக்கள் செய்த அக்கிரமத்தைப் பிள்ளைகளிடத்திலும், பிள்ளைகளுடைய பிள்ளைகளிடத்திலும் மூன்றாம் நான்காம் தலைமுறைமட்டும் விசாரிக்கிறவர் என்று கூறினார் (யாத்.34:6-7).

எனது கலக்கம்:

“இறைவா, பிறக்கும்போது உம்மையே நான் நம்பியிருந்தேன். நீரே என்னைப் பராமரித்தீர். இப்போ என்னைக் காணாதவர் போலிருப்பீரோ? என்னுடைய மீறுதல்களையும் தவறுகளையும் அக்கிரமங்களையும் மன்னிக்கின்ற தெய்வம் நீர் ஒருவரல்லவா? நான் உம்மை நோக்கிக் கெஞ்சுகிறேன். நீர் உமது முகத்தை அடியேனுக்கு மறைக்காதிரும். அனுதினமும் நான் கேள்விப்படும் விஷயங்கள் எல்லாவற்றின் நிமித்தம் என் மேனி நடுங்குகின்றது. காரணமில்லாத பயம் என்னைச் சூழ்ந்துகொள்கின்றது. என்னைச் சுற்றிலும் மனிதர்களுடைய அக்கிரமங்களை காணும்போது நான் பிறவாமல் கருப்பையில் அழுகியிருப்பேனாயின் நலமாயிருந்திருக்கும் எனவும் எண்ணுகிறேன்.”

“இறைவா, என்னுள்ளம் அழுகின்றது. நடுங்குகின்றது. என் மக்கள் அழிகின்றனர். நான் வாழும் இந்த உலகம் இன அழிப்பிலும் பஞ்சத்திலும், பசியிலும், தடுமாறுகின்றது. என் ஆண்டவரே, நாங்கள் படுகின்ற வேதனைகளை நீர் காணாதவர் போலிருப்பீரோ?”

“இறைவா, எங்கள் மக்கள் ஞானமற்றவர்களைப்போல உம்மைவிட்டு இலகுவில் விலகிவிடுகின்றனரே! புத்தியில்லாமல் ஜனங்கள் பாவம் செய்வதைக் காணும்போது நான் மிகவும் துக்கப்படுகின்றேன். ஆண்டவரே, என் மனம் மிகவும் சஞ்சலப்படுகின்றது. இறைவனே, உம்மைக் குறித்த பக்திவைராக்கியம் எனக்குள் பற்றியெரிகிறது.”

ஆனாலும் என்னால் எதுவும் செய்ய முடியாதுள்ளது என்பதையும் நீர் அறிவீர். என் ஏக்கங்களை அறிந்தவரே, என் வேதனைகளுக்குப் பதிலை நீரே தாரும். பெலவீனமான என் எதிர்காலத்திற்கு நீரே பாதுகாவலராக வாரும்.”

“உம்முடைய ஜனங்கள்கூட தங்களது சுய பாதுகாப்பிற்காக தம்மை விற்றவர்களாக, வேறு தெய்வங்களை ஏற்படுத்திக்கொண்டார்கள். உம்மை அறியாதவர்களைப்போல அந்நிய நுகத்திலே திருமணம் செய்துகொண்டு தாங்கள் பத்திரமாய் இருப்பதாக எண்ணுகின்றார்கள். அவர்கள் தங்கள் வாழ்க்கையில் உம்மை மறந்துவிட்டார்களே, வேதத்தின் நீதி நியாயங்கள் அனைத்தும் இன்று எனது சமுதாயத்தில் குப்பையாய் எண்ணப்படுகின்றனவே.”

“விசுவாசமுள்ள உமது தேவமனிதர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள் மத்தியிலும் அவர்கள் உமது முகத்தை நோக்கிப் பார்த்தபடி வாழ உதவி செய்யும். தேவனே, உம்மை அறிந்தும் விசுவாசியாத மக்கள், பயமற்றவர்களாக தமது இஷ்டப்படி நடக்கும்போது ஏன் என்னால் அவர்களை பொறுத்துக்கொள்ள முடியவில்லை. அக்கிரமங்கள் செய்வோரை உடனடியாகத் தண்டியாதிருக்கும், அன்பின் தெய்வமான நீர், பாவிகளின் மீதும் உமது எதிரிகளின்மீதும் அன்புகொள்ளக் காரணமாக இருந்ததென்ன?”

வார்த்தை அழைத்தது:

“சிறுமையும் எளிமையுமானவர்கள் தண்ணீரைத் தேடி, அது கிடையாமல், அவர்கள் நாவு தாகத்தால் வறளும்போது, கர்த்தராகிய நான் அவர்களுக்குச் செவி கொடுத்து, இஸ்ரவேலின் தேவனாகிய நான் அவர்களைக் கைவிடாதிருப்பேன். ஆயினும், உங்கள் வழக்கைக் கொண்டு வாருங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்; உங்கள் பலமான நியாயங்களை வெளிப்படுத்துங்கள் என்று யாக்கோபின் ராஜா உரைக்கிறார்” (ஏசாயா 41:17,21).

எனது புலம்பல்

“இறைவா, நான் சுற்றிலுமுள்ள பல்வேறு இன மக்களை நோக்கிப் பார்க்கிறேன். அவர்களுக்காகப் பரிதபிக்கின்றேன். ஏனெனில் அவர்கள் தம்முடைய வாழ்நாள் குறுகியதென்பதையே மறந்து, பணத்தின் மீதும் பதவியின் மீதும் தங்கள் வாகனங்கள்மீதும் தாம் சேமித்துள்ள நகைகள் மீதும் தமது நம்பிக்கையை வைத்து வைத்துள்ளனரே. பல நேரங்களில் நீதி அவர்களாலேயே மறுக்கப்படுகின்றது. மேலும், மக்களின் இருதயங்களில் ஆசைகள் அதிகரித்துக்கொண்டே போகிறது.

தாம் விரும்புகிறதை நாடித்தேடுகிறார்கள். புதியவைகளைக் கண்டுபிடிக்கிறார்கள். இனிமையாக தோன்றுவதையெல்லாம் செய்ய முற்படுகிறார்கள். தெய்வபயமோ சற்றும் இல்லை. இனிப்பாய் பொய் சொல்லி மக்களை வஞ்சிக்கிறார்கள். அதைவிட மகா அருவருப்புக்களைச் செய்ய துணிகரம் கொள்கிறார்கள். தாங்கள் விரும்பாதவர்களைக் கடத்தி, கொலையும் செய்கிறார்கள். மனித கற்புக்கு மதிப்பே இல்லாதொழிக்கப்படுகிறது.

நன்மை செய்கிறவர்கள் இல்லாது போகிறார்கள். தீமை செய்கிற மனிதர்களை நோக்கிப்பார்த்து நல்லவர்களும் அநீதி செய்ய தூண்டப்படுகிறார்கள். நன்மை செய்ய மறந்து தீமை செய்கிறார்கள்! நன்மை செய்வதினால் தமக்கு பயனில்லை என்றே எண்ணுகின்றார்கள்.” “இறைவா, தம்மைச் சுற்றிலும் வெளியலங்கார நாகரீகத்திலே மக்கள் கவனம் செலுத்தத் தொடங்கிவிட்டார்கள். தங்களை அலங்கரித்துக்கொள்ள, தமது அழகை பராமரிக்கவே கவலைப்படுகிறார்கள். நீர் ஒருவரே செளந்தரியத்தைக் கொடுப்பவர் என்பதை மறந்துவிட்டார்கள்.

திக்கற்றவர்களையும் அநாதைகளையும் நினைத்துப் பார்ப்பவர்கள் இல்லை. பட்டணத்திலும், கிராமத்திலும், மலைநாட்டுப் பிரதேசத்திலும் கூட மனித சமுதாயத்தின் இருதயம், மகா புதைகுழிபோல மாறி வருகிறதே. அவர்கள் புதிய சினிமாப்படங்களின் வருகைக்காக எவ்வளவாக தவமிருக்கின்றனர். ஆனால், மீண்டும் நீர் நியாயாதிபதியாக வருவதைக் குறித்து கேட்கவோ அவர்களுக்கு மனமில்லை.

கேளிக்கை கொண்டாட்டங்களை நாடியோடி, தமது சரீரங்களை விற்றுப் பிழைக்கவே ஆவலாக இருக்கிறார்கள். தமது எதிர்காலத்தை நட்சத்தி ரங்களிலும், நல்ல நாட்களிலுமே வைத்து வைத்துள்ளனர். உம்மைத் தேடுவார் இல்லை. தங்கள் பிள்ளைகள் ஒருவேளை உணவிற்காக தவமிருக்கையில், அவர்களோ பண ஆசையினால் நிரம்பி, சுரண்டல் லாட்டரிகளை வாங்கி பெருமிதமடைகின்றனர். நாகரீகம் எனும் போர்வையில் இளம் பிள்ளைகள் தம் கலாச்சாரத்தை சீரழிக்கிறார்கள். பணமும் பாராட்டும் புகையும் போதையுமே அவர்கள் வாழ்வு. சத்தியத்தை மறந்துவிட்டார்களே. இறைவா! அவர்களுக்கு தெய்வபயமில்லை!

குடிவெறியும் கொலை வெறியும் அவர்கள் உள்ளத்தில் தலை விரித்தாடுகிறது. சாராயத்திலும் போதையிலும் தம்மை மறந்து வாழுகிறார்கள். சுய உணர்வு அற்றவர்களாய் வீதியில் கவனிப்பாரற்றவர்களாக திரிகிறார்கள்.”

“இறைவா, உமது நாமத்தை அறிந்திருக்கும் உமது பிள்ளைகளை அவர்கள் கைகளிலிருந்து நீர் தப்புவித்துகொள்ளும். உம் நாமம் தரித்திருக்கிற தேவ பிள்ளைகள், நேர்மையான வழிகளை விட்டுவிலகி விடுமளவிற்கு மோசம் போகிறார்கள். பணத்தின் ஆதிக்கம் கவர்ச்சியூட்டி வஞ்சிக்கிற இக்காலகட்டத்தில் உமது வசனத்திற்கு அஞ்சி நடந்த தேவபிள்ளைகள் இன்றும் இனியும் வழிவிலகி விடாதபடி நீரே காத்துக்கொள்ளும்,”

“இறைவா, தீமையைச் சகிக்காத உன்னதமான தேவனே, நீர் எதுவரைக்கும் பொறுமையாயிருப்பீர்? உமது பரிசுத்த பெயரினைச் சொல் லிக்கொண்டு சிலர் துணிகரமாய் பாவம் செய்வதை நீர் பார்த்துக்கொண்டிருப்பீரோ? என் தேவனே, அவர்கள் பிறரையும் பாவம் செய்விக்கிறார்களே. இறைவா, அவர்களிடமிருந்து உம் பிள்ளைகளை காப்பாற்றியருளுவீராக. இறைவா நீர் நீதிபரர். நீரே பதிலைத் தந்தருளும்!”

வார்த்தை எச்சரித்தது:

அப்படியானால், மனுஷனே, தேவனோடு எதிர்த்துத் தர்க்கிக்கிற நீ யார்? உருவாக்கப்பட்ட வஸ்து உருவாக்கினவனை நோக்கி: நீ என்னை ஏன் இப்படி உண்டாக்கினாயென்று சொல்லலாமா? மிதியிட்ட ஒரே களிமண்ணினாலே குயவன் ஒரு பாத்திரத்தைக் கனமான காரியத்துக்கும், ஒரு பாத்திரத்தைக் கனவீனமான காரியத்துக்கும் பண்ணுகிறதற்கு மண்ணின்மேல் அவனுக்கு அதிகாரமில்லையோ? தேவன் தமது கோபத்தைக் காண்பிக்கவும், நமது வல்லமையைத் தெரிவிக்கவும், தாம் மகிமைக்காக எத்தனமாக்கின கிருபாபாத்திரங்கள்மேல் தம்முடைய மகிமையின் ஐசுவரியத்தைத் தெரியப்படுத்தவும் சித்தமாய், அழிவுக்கு எத்தனமாக்கப்பட்ட கோபாக்கினைப் பாத்திரங்கள்மேல் மிகவும் நீடிய சாந்தத்தோடே பொறுமையாயிருந்தாரானால் உனக்கென்ன?

ஏனெனில், நீங்கள் …மற்றவர்களுக்கு அளக்கிற அளவின்படியே உங்களுக்கும் அளக்கப்படும். நீ உன் கண்ணிலிருக்கிற உத்திரத்தை உணராமல், உன் சகோதரன் கண்ணிலிருக்கிற துரும்பைப் பார்க்கிறதென்ன? மாயக்காரனே! முன்பு உன் கண்ணிலிருக்கிற உத்திரத்தை எடுத்துப்போடு; பின்பு உன் சகோதரன் கண்ணிலிருக்கிற துரும்பை எடுத்துப்போட வகை பார்ப்பாய் (ரோமர் 9:20-23, மத்தேயு 7:2-5 ).

மறுபடியும் ஜெபிக்கின்றேன்.

இறைவனே, என்மீது உமது கோபம் மூளாது இருப்பதாக! என் தேவனே, நான் என் முகத்தை என் தேவனாகிய உமக்கு முன்பாக ஏறெடுக்க வெட்கிக் கலங்குகிறேன்; நானும் மற்றவர்களைக் குறித்து எண்ணும் பொழுதெல்லாம் அவர்களைப் போலவே நானும் உம்மைவிட்டு வழிவிலகியிருக்கிறேன் என்பது உண்மை. ஆம், நானும் பாவிதான். என் பொல்லாத செய்கைகளினாலும், என் பெரிய குற்றத்தினிமித்தமும் உமது வார்த்தைகளுக்கு முன்பாக நடுங்குகிறேன். என் அக்கிரமங்களை நீர் மன்னித்தருளும்”

“என் இயேசுவே, பாவிகளாகிய எம்மை மீட்க அல்லவா நீர் வந்தீர். உமது அன்பு மிகப் பெரியது. எனது பாவ அடிமைத்தனத்திலே நீர் என்னைக் கைவிடாமல், உம் தியாகத்தினால் உயிர் கொடுத்தீர். இறைவனே. எங்களது தவறுகளை நீர் ஒரு காலத்தில் காணாதவர் போலிருந்தீர். இப்பொழுதோ நீர் எங்கும் உள்ள உம்முடைய மக்கள் உம்மை நோக்கிப் பார்க்கவேண்டுமென்று நீர் கட்டளையிட்டுள்ளீர். நானும், என்னைச் சுற்றிலும் வாழும் பொல்லாத மக்களின் அக்கிரமங்களை அருவருப்புக்களைக் கருத்திற்கொள்ளாமல் எனது இருதயத்தை காத்துக்கொள்ளவும் உமது நற்செய்திகளை அறிவிக்கவும் சாட்சியாக வாழவும் எனக்கு உதவிச்செய்தருளும்.”

“இறைவனே, நீர் நியாயம் தீர்க்கும்போது நான் உம்முடைய சமூகத்தில் குற்றவாளியாகக் காணப்படாதபடிக்கும், உமது பகைஞனாய் உமக்கெதிராய் பாவம்செய்து உம்மைச் சந்திக்க வெட்கப்படுபவனாய் இராதபடிக்கும் உம்முடைய செம்மையான பாதையிலும் நீதியின் வழிகளிலும் அடியேனை கடைசிவரை வழிநடத்தி காத்துக்கொண்டருளும்.

வார்த்தை முழங்கியது:

பின்னும் கர்த்தர், காக்கைக்குஞ்சுகள் தேவனை நோக்கிக் கூப்பிட்டு, ஆகாரமில்லாமல் பறந்து அலைகிறபோது, அவைகளுக்கு இரையைச் சவதரித்துக்கொடுக்கிறவர் யார்? நான் பூமியை அஸ்திபாரப்படுத்துகிறபோது நீ எங்கிருந்தாய்? நீ அறிவாளியானால் அதை அறிவி. அந்தக் கரணங்களில் ஞானத்தை வைத்தவர் யார்? உள்ளத்தில் புத்தியைக் கொடுத்தவர் யார்?

மரண இருளின் வாசல்களை நீ பார்த்ததுண்டோ? இவைகளையெல்லாம் நீ அறிந்திருந்தால் சொல்லு. வெளிச்சம் வாசமாயிருக்கும் இடத்துக்கு வழியெங்கே? இருள் குடியிருக்கும் ஸ்தானமெங்கே? நீ அதை அறியும்படி அப்போது பிறந்திருந்தாயோ? உன் நாட்களின் தொகை பெரிதோ? சர்வவல்லவரோடே வழக்காடி அவருக்குப் புத்தி படிப்பிக்கிறவன் யார்? உன் தேவனாயிருக்கிற கர்த்தர் நானே; அலைகள் கொந்தளிக்கத்தக்க தாய்ச் சமுத்திரத்தைக் குலுக்குகிற சேனைகளின் கர்த்தர் என்கிற நாமமுள்ளவர். தேவன் பேரில் குற்றம் பிடிக்கிறவன் இவைகளுக்கு உத்தரவு சொல்லக்கடவன் (யோபு38:41,4,36,17-21, 40:2, ஏசாயா 51:15 யோபு 40:2) என்றார்.

எனது சரணடைதல்:

“கர்த்தாவே. நீரே என் இறைவன். உம் இரக்கங்கள் மகா பெரியது. உம்முடைய கரத்தின் கிரியைகளை நான் உணரும்போது உம் சமுகத்தில் கிட்டிச்சேருபவன் யார்? உமக்கு ஒப்பானவர் யார்? பரிசுத்தத்தில் மகத்துவமுள்ளவரும், துதிகளில் பயப்படத்தக்கவரும், அற்புதங்களைச் செய்கிறவருமாகிய உமக்கு ஒப்பானவர் யார்? தேவரீர் சகலத்தையும் செய்யவல்லவர். நீர் செய்ய நினைத்தது தடைபடாது என்பதையும் நான் அறிந்திருக்கிறேன்.”

“கர்த்தாவே, நீரே கர்த்தர். ராஜாவே, உமக்கு முன்பாக மனிதர் நடுநடுங்குவர். சமுத்திரத்திலுள்ளவை யாவும் உமக்கு அஞ்சும். பர்வதங்களும் பாலைவனங்களும் உமது வார்த்தைக்கு நடுங்கும். நீர் உம்முடைய உக்கிரத்திலே உலகத்தை நியாயந்தீர்க்கிறீர்.”

“நீதியை எதிர்க்கும் ஜனங்களுக்கு மத்தியிலும், இக்கட்டு நாட்களிலும், உம்மிடத்திலேயே நான் இளைப்பாறுதலடைவேன். கர்த்தாவே, நீரல்லவா என் தேவன்! நானோ, உம் கரங்களிலேயே விழுவேன். உமது முகத்திலே இரக்கங்களுக்காய் நான் காத்திருப்பேன்.”

உங்களுக்குத் தெரியுமா?

நம்பிக்கையற்ற சூழ்நிலையிலும் தேவன் சகலத்தையும் நன்மையாக மாற்றுவார் என்று நமது நம்பிக்கையில் நாம் உறுதியாய் நிற்போமானால், அதுவே விசுவாசத்தின் அடையாளமாகும்.