சகோ. பிரகாஷ் ஏசுவடியான்
(செப்டம்பர்-அக்டோபர் 2022)

சகோ. பிரகாஷ் ஏசுவடியான்

இன்றைய உலகத்திலே மிகவும் தவறாக புரிந்துகொள்ளப்பட்ட ஒரு வார்த்தை அன்பு என்ற வார்த்தையாகும். இந்த அன்பு என்ற வார்த்தையைப் பலதரப்பட்ட மக்கள் இந்த உலகத்திலே பயன்படுத்துகிறார்கள். ஆனால், வேதபுத்தகத்திலே சொல்லப்பட்டிருக்கும் அன்புக்கும் இந்த அன்புக்குமுள்ள வித்தியாசத்தை நாம் கண்டுகொள்ளவேண்டும். கிரேக்க மொழியிலே புதிய ஏற்பாடு எழுதப்பட்டது. இந்த கிரேக்க மொழியிலே வித்தியாசமான வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

1. ஈரோஸ் அன்பு (Eros Love)

ஈரோஸ் என்ற அன்பு கணவன்-மனைவி என்ற கட்டுப்பாட்டுக்குள்ளே இயங்கக்கூடிய பாலுணர்வின் அடிப்படையில் இருக்கவேண்டிய ஒரு அன்பு. இது தேவனாலே படைக்கப்பட்ட ஒரு அன்பு. இதை நாம் வேதத்திலேப் பார்க்கிறோம். ஆதியிலே உலகத்தை படைத்த தேவன் ஆதாமை படைத்தார். அவன் தனிமையாக இருப்பது நல்லதல்ல என்று எண்ணி அவனுக்கு துணையாக ஏவாளைப் படைத்தார். ஏவாளைப் படைத்து ஆதாமிடனித்திலேக் கொண்டு வந்தபோது ஆதாம் மெய்மறந்து அவளை பார்த்து பாடிய பாடல்தான் நீ என் எலும்பில் எலும்பும், என் மாம்சத்தில் மாம்சமுமானவள். இவ்விதமாக கணவன்-மனைவி என்ற ஒரு கட்டுப்பாட்டை தேவன் நியமித்தார். வேதபுத்தகத்திலே இதைப்பற்றிய அநேக காரியங்கள் கற்றுக்கொடுக்கப்பட்டு இருக்கிறது.

ஆனால், இந்த ஈரோஸ் என்ற அன்பு அது கணவன் மனைவி என்ற கட்டுப்பாடுடன் மாத்திரமே இயங்கவேண்டிய ஒரு அன்பு. கணவன் மனைவி என்ற கட்டுப்பாட்டிற்கு வெளியிலே இயங்குமானால், அதை வேதபுத்தகம் விபச்சாரம் என்று சொல்லுகிறது; வேசித்தனம், காமவிகாரம் என்று சொல்லுகிறது. இப்படிப்பட்டவைகளை செய்கிறவர்கள் தேவனுடைய ராஜ்யத்தை சுதந்தரிப்பதில்லை. இவ்விதமான பாவங்களிலே, திருமணம் என்ற கட்டுப்பாட்டுக்கு வெளியிலே வாழுகிற மக்கள் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்க முடியாது. அப்படியானால், தேவனால் படைக்கப்பட்ட இந்த நல்ல அன்பை மனிதன் தன் இஷ்டப்படி பயன்படுத்த முடியும் என்று பார்க்கிறோம். இதில் இருக்கிற ஒரு பிரச்சனை என்னவென்றால் இந்த அன்பு அடிக்கடி சுயநலமாகவே வெளிப்படுகிறது.

ஒருநாள் ஒரு பெண் என்னுடைய வீட்டிற்கு ஆலோசனைக்காக வந்தார்கள். நானும் என்னுடைய மனைவியும் அவர்களோடுகூட பேசிக் கொண்டு இருக்கும்பொழுது கையிலே ஒரு கத்தை கடிதத்தை வைத்திருந்தாள். அந்த பெண் அழுகையோடுகூட என்னிடத்தில் சொன்ன காரியம் என்னவென்றால், அவர்கள் ஒரு மனிதரோடுகூட பழகிக்கொண்டிருந்திருக்கிறார்கள். அவன் கொஞ்ச நாட்கள் பழகிக் கொண்டிருந்த பிறகு வெளிநாட்டுக்கு சென்றுவிட்டான். வெளிநாட்டிலிருந்து அவளுக்கு கடிதங்கள் எழுதிக்கொண்டே இருக்கிறான். ஒவ்வொரு கடிதத்திலும் அவளை வர்ணித்து பலவிதமாக எழுதிக்கொண்டிருந்தவன் நான் திரும்பவும் வருவேன்; உன்னை திருமணம் பண்ணுவேன் என்று சொல்லிக்கொண்டே இருந்தான். ஆனால் ஒருநாள், அவனிடமிருந்து வந்த ஒரு கடிதத்தில் இந்த நாட்டிலேயே இந்திய தேசத்தைச் சார்ந்த இன்னொரு பெண்ணை நான் சந்தித்தேன். அவளை திருமணம் செய்ய தீர்மானித்து விட்டேன். என்னை நீ மறந்து விடு; உன்னை கடவுள் நடத்துவார் என்று அவன் எழுதியிருந்தான். அவள் கண்ணீரோடுகூட என்னிடத்தில் சொன்ன காரியம் என்ன தெரியுமா? அவன் என்னை சிகரெட் பிடிப்பதைப்போல தன்னுடைய இன்பத்திற்காக பயன்படுத்திவிட்டு இன்றைக்கு சாக்கடையிலே என்னை தூக்கி எறிந்துவிட்டான் என்றாள்.

இன்றைக்கு அநேகருடைய வாழ்க்கையிலே திருமணம் என்ற கட்டுப்பாட்டுக்கு வெளியிலே இந்த ஈரோஸ் என்ற அன்பை தங்களுடைய சுய இன்பங்களுக்காக பயன்படுத்திவிட்டு, அதற்குப் பிறகு சாக்கடையிலே எறிந்துவிட்டு போய் விடுகிறார்கள். ஒருவேளை இந்தச் செய்தியைக் கேட்டுக் கொண்டிருக்கிற ஏதோ ஒரு வாலிபர் அல்லது வாலிப ஸ்திரீ இப்படிப்பட்ட சிக்கலான நிலையிலே நீங்கள் இருப்பீர்கள் என்றால் இன்றைக்கு ஆண்டவர் உங்களை சந்திக்க விரும்புகிறார். ஆகவே, இந்த அன்பு திருமணம் என்ற கட்டுப்பாட்டுக்குள் தான் பயன்படுத்தவேண்டும். அதற்கு வெளியில் அதை பயன்படுத்தினால் அது பாவமாகும். அது தேவனுக்கு விரோதமானது. உங்களுக்கு விரோதமானது. உங்கள் சமுதாயத்திற்கு விரோதமானது. உங்கள் சரீரத்திற்கு விரோதமானது.

ஆகவே, ஈரோஸ் என்பது தேவன் படைத்த பரிசுத்தமான அன்பு! அதை சரியான வேளையில் சரியான விதத்திலே பயன்படுத்தவேண்டும். ஒரு மனிதன் ஒரு கத்தியை ஆப்பிள் வெட்டுவதற்கு அல்லது காய்கறிகளை வெட்டுவதற்கு அதை உருவாக்கி இருக்கிறான். ஆனால், அந்த நல்ல காரியத்திற்காக உருவாக்கப்பட்ட கத்தியை நான் எடுத்து ஒரு மனிதரைக் கொலை செய்துவிடமுடியும். அதே வண்ணமாக ஈரோஸ் தூய்மையானதும் பரிசுத்தமுமான ஒரு அன்பு. மனிதவர்க்கம் ஏற்படுவதற்காக தேவன் உருவாக்கின ஒரு அன்பு. ஆனால், அந்த அன்பை எடுத்து திருமணத்திற்கு வெளியிலே பயன்படுத்தும்போது நாம் தவறு செய்கிறோம். அப்படிப்பட்டவர்கள் மனந்திருந்த வேண்டும்.

2. ஃபீலியோ அன்பு (Phileo Love)

இரண்டாவது எபிரெய மொழியிலே உபயோகிக்கப்பட்டிருக்கிற ஒரு வார்த்தை ஃபீலியோ என்ற வார்த்தையாகும். இந்த ஃபீலியோ என்ற வார்த்தையிலிருந்து தான் பிலாசபி என்ற வார்த்தை அல்லது பிலதெல்பியா என்ற வார்த்தை இவைகளெல்லாம் அந்த வார்த்தையில் இருந்துதான் வருகிற வார்த்தைகளாகும். இந்த ஃபீலியோ என்பது நண்பர்களுக்குள்ளே இருக்கக்கூடிய ஒரு அன்பாகும். இந்த உலகத்திலேயே கடவுள் நமக்கு கொடுத்திருக்கிற ஆசீர்வாதங்களிலே ஒன்று, நண்பர்களாக நாம் ஒருவரோடு ஒருவர் பழகுகிற வாய்ப்பாகும். ஒருவேளை இந்த செய்தியைக் கேட்டு கொண்டிருக்கிற யாருடைய வாழ்க்கையிலாவது நல்ல நண்பர்கள் இல்லையென்றால் நீங்கள் பரிதாபத்திற்குரியவர்கள்.

எனக்கு இந்த உலகத்தில் நிறைய நண்பர்களை ஆண்டவர் கொடுத்திருக்கிறார். ஆனால், அந்த நண்பர்களோடுகூட நண்பர்களாக பழகும்பொழுது அதிலே இருக்கின்ற பிரச்சனை என்னவென்றால், இந்த நட்பு என்பது பகிர்ந்துகொள்வதின் அடிப்படையிலே வளர்ந்துகொண்டே இருக்கும். நான் உன்னிடத்தில் அன்புகூருகிறேன் என்று ஒரு நண்பரிடத்தில் நீங்கள் சொன்னால், அவரும் சொல்லுவார்; நான் உன்னிடத்தில் அன்புகூருகிறேன் என்று. நான் உங்கள் வீட்டிற்கு வருவேன் என்றால் அவரும்: நானும் உங்கள் வீட்டுக்கு வருவேன் என்பார். நான் அவரது சுக துக்கங்களிலும் நல்ல காரியங்களிலேயும் பங்குபெறும்போது அவரும் எனது சுக துக்கங்களில் பங்குபெறுவார். இவ்வாறு ஃபீலியோ அன்பானது பகிர்ந்துகொள்ளுதலின் அடிப்படையிலே வளர்ந்துகொண்டே இருக்கிற ஒரு அன்பாகும். ஆனால், இதில் இருக்கின்ற பிரச்சனையென்னவென்றால் இப்படியே வளர்ந்துகொண்டே இருக்கிற இந்த அன்பு திடீரென்று பகிர்ந்துகொள்ளுதல் இல்லாமல் போய்விடுமானால் அப்படியே உடைந்துவிடுகிறது.

நேற்றுவரைக்கும் ஆத்மநண்பர்களாக இருந்தவர்கள் இன்றைக்கு ஏன் பகைஞர்களாக மாறிவிட்டார்களே என்று ஒருவேளை நீங்கள் சிந்தித்துக் கொண்டிருப்பீர்கள். உங்கள் வாழ்க்கையிலே உங்களுக்கு மிகவும் நெருங்கிய நண்பர்களாக பழகினவர்கள் இன்றைக்கு உங்கள் குடும்பத்திற்கு ஜென்ம விரோதிகளாக மாறிவிட்டதற்கு காரணம் என்ன? நேற்றைக்கு வரைக்கும், ஒப்பந்தங்களை செய்துகொண்டு அன்போடுகூட இருந்த நாடுகள் இன்றைக்கு பகைவர்களாக மாறிவிட்டதற்கு காரணம் என்ன? ஃபீலியோ அன்பு.

எனவே பிரியமானவர்களே, ஃபீலியோ அன்பு பகிர்ந்துகொள்ளுதலின் அடிப்படையில் மட்டுமே வளரும். அந்த பகிர்ந்துகொள்ளுதல் சரியாக இல்லை என்றால் அத்தனையும் உடைந்துவிடும்.

3. ஸ்டோர்ஜே அன்பு (Storge Love)

மூன்றாவது எபிரெய பாஷையிலே உபயோகிக்கப்பட்டிருக்கிற வார்த்தை ஸ்டோர்ஜே அன்பு. இந்த ஸ்டோர்ஜே அன்பு என்பது பெற்றோருக்கு உள்ளே இருக்கவேண்டிய ஒரு அன்பாகும். பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் நடுவில் இருக்கவேண்டிய அன்பு. இதை பாசம் என்று தமிழ் மொழியிலே நாம் சொல்கிறோம். இந்த பாசம் அருமையான ஒரு அன்பாகும். இது தேவன் நமக்கு கொடுத்திருக்கிற ஒரு ஆசீர்வாதம்.

ஒன்றை நான் உங்களுக்குச் சொல்கிறேன்: 21ஆம் நூற்றாண்டிலே இந்த குடும்ப பாசம் கொஞ்சம் கொஞ்சமாய் மறைந்துகொண்டே இருக்கிறது. நாங்கள் சின்னப் பையன்களாக இருக்கும்போது, தேயிலை தோட்டத்திலே எங்க அப்பா அம்மா வேலை பார்த்தார்கள். நாங்கள் பள்ளியில் அங்கே படித்துக்கொண்டிருந்தோம். லீவு நாட்கள் வந்து விட்டால் நம்முடைய கிராமத்துக்குப் போவோம் என்று பெற்றோர்கள் சொல்லுவார்கள். அந்நேரத்தில் ரொம்பரொம்ப உற்சாகமாகவும் சந்தோஷமாகவும் இருக்கும். ஏனென்றால் கிராமத்தில் பாட்டி இருக்கிறார்கள், தாத்தா இருக்கிறார்கள், அங்கே உறவினர்கள் இருக்கின்றனர். அவர்களைப் போய் பார்க்கணும் என்கிற ஆசை அந்த நாட்களில் எங்களுக்கு வரும்.

இன்றைக்கு உங்கள் பிள்ளைகளிடத்திலே நாம் கிராமத்துக்குப் போவோம் என்று சொல்லுங்கள். முதலாவது அவங்க கேட்கிற கேள்வி அங்கே யார் இருக்கா? அடுத்தது அவங்க கேட்கிற கேள்வி அங்கே கலர் டிவி இருக்கா? அடுத்த அவங்க கேட்கிற கேள்வி டாம் அண்ட் ஜெர்ரி இருக்கா? அங்கே இந்த மாதிரி கேளிக்கைகள் இருக்கிறதா? இதுதான் அவர்கள் கேட்கிறார்கள். ஏனென்றால் கொஞ்சம் கொஞ்சமாக இந்த குடும்பங்களுக்குள்ளே இருக்கிற பாசம் மறைந்து இயந்திர மயமாக்கப்பட்ட உலகத்திலேயே இயந்திரங்கள் நம் வாழ்க்கையிலே முக்கியத்துவம் பெற ஆரம்பித்துவிட்டது. எனவே இந்த அன்புகூட கொஞ்சம் கொஞ்சமாய் மறைந்து கொண்டிருக்கிறது.

கொஞ்ச நாட்களுக்கு முன்பாக நான் பத்திரிகையில் படித்த ஒரு செய்தி என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இப்படிப்பட்ட செய்திகளை அனுதினமும் நாம் படிக்கிறோம். உதாரணமாக, ஒரு தாயார் ராத்திரி தனது வீட்டுத் திண்ணையில் படுத்து உறங்கிக்கொண்டு இருந்திருக்கிறார்கள். ராத்திரி அவளுடைய மகன் வந்து ஒரு பாறாங்கல்லை எடுத்து அந்த தாயார் முகத்தில் போட்டு அதை நச்சி அவளைக் கொன்றுவிட்டான். அந்த படம் போடப்பட்டிருக்கிறது. அதை பார்த்தபொழுது என்னுடைய உள்ளத்தில் ஏற்பட்ட எண்ணம் இது எப்படி முடிந்தது? பத்து மாதங்கள் சுமந்துபெற்ற தாயார் உங்களுக்கு பாலூட்டி தாலாட்டி வளர்த்த தாயார்! நிறைய தியாகங்களைச் செய்தவர்கள்! அவர்கள் முகத்தில் கல்லைப் போட்டானே, எப்படி? நிலத்தைப் பிரித்து கொடுத்தபொழுது அவனது சகோதரனுக்கு இவனுக்கு கொடுத்ததைவிட கொஞ்சம் கூடுதலாகக் கொடுத்துவிட்டார்கள். வரப்பை தள்ளிப்போட்டாங்க. அவ்வளவுதான் ஸ்டோர்ஜே அன்பு மறைந்துவிட்டது. பாசம் இன்றைக்கு மறைந்து கொண்டிருக்கிறது.

4. அகப்பே அன்பு (Agape Love)

நான்காவதாக, எபிரெய பாஷையிலே உபயோகிக்கப்பட்டிருக்கிற வார்த்தை அகப்பே அன்பு. இது வேதத்திலே தெய்வீக அன்பு என்று சொல்லப்பட்டிருக்கிறது. இந்த அகப்பே என்ற அன்பு தன்னலமற்ற ஒரு அன்பு! சுயநலமற்ற ஒரு அன்பு!!

எனக்கு நீ என்ன செய்தாலும் சரி, செய்யாவிட்டாலும் சரி, உன்னிடத்தில் அன்புகூருகிறேன் என்பதாகும். இந்த அன்பை காண்பிப்பதற்காகத்தான் இயேசுகிறிஸ்து இந்த உலகத்திற்கு வந்தார். இயேசுகிறிஸ்துவைப் பிடித்து காரித்துப்பினார்கள். இந்த உலகத்தில எதையும் நாம் சகித்துக்கொள்ளலாம். ஆனால், ஒருவர்மேல் காரித்துப்புவதை எவராலும் சகிக்கமுடியாது. ஒருவேளை நீங்கள் பஸ்ஸில் பிரயாணம் செய்துகொண்டிருக்கும்போது உங்களுக்கு முன்பாக உட்கார்ந்திருக்கிறவர் திடீரென்று தனது சேகரித்து வைத்திருந்த உமிழ்நீர் அத்தனையும் காரி வெளியிலே துப்புகிறார். துப்பும்போது அதிலிருந்து இரண்டு மூன்று துளிகள் உங்கள் முகத்துக்கு நேர வருது என்று வைத்துக்கொள்ளுங்கள். என்ன சொல்லுவீர்கள்? அவரைப் பார்த்து Thank you very much என்றா சொல்லுவீர்கள்? சீச்சீ உங்களுக்கு மண்டையில மூளை இருக்கா என்று சொல்லுவோம். நமக்கு அடக்கமுடியாத கோபம் வரும். ஏனென்றால் எதையும் சகித்துக்கொள்ளக் கூடியவர்கள்கூட உமிழ் நீரை சகித்துக்கொள்ள முடியாது. ஆனால், இயேசு கிறிஸ்து சிலுவைக்குப் போகும்போது அவரை காரித்துப்பினார்கள். வாரினால் அடித்தார்கள். சிலுவையில் அறைந்தபொழுது சிலுவையிலிருந்து அவர் சொன்ன வார்த்தை: பிதாவே, இவர்களுக்கு மன்னியும்; தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே. இதுதான் அகப்பே அன்பு!

அவர் மரித்தபோது அவரை எவ்வளவோ வேதனைப்படுத்தியிருந்தாலும், எவ்வளவோ அவமானங்களைக் கொண்டுவந்தாலும் அவர்களை மன்னித்தாரே. இதுதான் அகப்பே அன்பு!

பிரியமானவர்களே, இந்த தெய்வீக அன்பு நம் வாழ்க்கையிலே இருக்கிறதா? இந்த செய்தியைக் வாசித்துக்கொண்டிருக்கிற உங்கள் வாழ்க்கையிலே ஈரோஸ் என்ற கணவன் மனைவிக்கு இடையேயான அன்பு இருக்கலாம். சகோதரர்களுக்குள்ளே, நண்பர்களுக்குள்ளே இருக்கிற ஃபீலியோ அன்பு இருக்கலாம் அல்லது ஸ்டோர்ஜே என்ற பாசம் நமது குடும்பங்களில் இருக்கலாம். ஆனால், இந்த அன்பெல்லாம் மாறிக்கொண்டே இருக்கிற இந்த உலகத்திலேயே மாறாத அன்பு இயேசுகிறிஸ்துவினுடைய தெய்வீக அன்பு மாத்திரமே!

இந்த அன்பை நமக்குக் காண்பிப்பதற்காய் உலகத்திலே வந்து சிலுவையில் தனது உயிரைக் கொடுத்து உயிர்த்தெழுந்த இயேசுகிறிஸ்து இன்றைக்கு நம்முடைய உள்ளத்திலே வந்து, அவருடைய அன்பினாலே நம் உள்ளத்தை நிரப்பி, மற்ற எந்த அன்பையும் அர்த்தமுள்ளதாக மாற்றுகிறார். இயேசுகிறிஸ்துவுக்கு உங்கள் வாழ்க்கையையும் உங்கள் இருதயத்தையும் இன்றைக்கு கிறிஸ்துவுக்கு சரணாகதியாக ஒப்புக் கொடுத்துவிடும்பொழுது, அவருடைய அன்பு நம்மை ஆட்கொள்ளும். அப்பொழுது குடும்பத்துல இருக்கிற ஈரோஸ் அன்பு அர்த்தம் உடையதாக மாறுகிறது. பரிசுத்தமாய் மாறுகிறது. நண்பர்களுக்குள்ளே இருக்கிற அன்பு அர்த்தம் உடையதாகவும் நிலைவரம் உள்ளதாகவும் மாறுகிறது. குடும்பங்களுக்ளே உள்ள பாசம் அர்த்தமுள்ளதாகவும் மாறுகிறது. ஆகவே கிறிஸ்துவின் அன்புக்குள்ளாய் மற்ற அனைத்து அன்புகளும் கட்டுப்படவேண்டும்.

அருமையானவர்களே, உங்கள் வாழ்க்கையில் உள்ள அன்பு எப்படிப்பட்டது? நம்முடைய வாழ்க்கையிலே நாம் நன்மைக்குத் தீமை செய்துகொண்டிருந்தால் அது பிசாசின் குணம். நன்மைக்கு நன்மை செய்துகொண்டிருந்தால் அது மனிதனுடைய தன்மை. ஆனால் தீமைக்கு நன்மை செய்கிறோமே, நமக்கு தீமை செய்கிறவர்களுக்கும் மன்னிக்கிறோமே. அதுதான் தெய்வீக அன்பாகும்! அதைக் கொடுக்கதான் இயேசு கிறிஸ்து இவ்வுலகில் வந்தார். அவர் உங்கள் உள்ளத்திலே வந்து இந்த அன்பினாலே நிரப்பும் படியாய் அவரை நோக்கி வேண்டிக்கொள்வோமா?

அன்புள்ள தகப்பனே, இந்த தெய்வீக அன்பு எங்களுக்கு வேண்டும். இந்த உலகத்தில் வாழும் பொழுது உலகத்தின் அன்பு எங்களுக்குள் இருக்கிறது. நண்பர்களோடே இந்த அன்பு இருக்கிறது. ஆனால் பாசம் கூட மாறிக்கொண்டே இருக்கிறது. எங்கள் குடும்பங்களில் மாறிவிட்டதே, எங்களுடைய தொடர்புகளிலே மாறிவிட்டதே. எங்களுடைய சமுதாயத்தில் மாறிவிட்டதே. நாட்டுக்கு நாடு மாறிவிட்டதே. மாறிக்கொண்டிருக்கிற இந்த உலகத்தில் மாறாதவராயிருக்கிற இயேசு கிறிஸ்துவே உம்முடைய அன்பினால் எங்களை நிரப்பும் என்று யார் யார் தங்களுடைய உள்ளத்தை திறந்து உம்மை நோக்கி ஜெபிக்கிறார்களோ அவர்கள் உள்ளங்களிலே பிரவேசித்துவிடும். அவர்களுடைய இல்லங்களிலே பிரவேசித்து விடும். உம்முடைய அன்பினாலே அவர்களை ஆட்கொண்டு ஆசீர்வதித்து மற்றவர்களுக்கு ஆசீர்வாதமாய் இருக்கும்படியாய் உம்முடைய அன்பின் கரங்களில் ஒப்புக்கொடுத்து இயேசுகிறிஸ்துவின் நாமத்திலே கேட்கிறேன் பிதாவே. ஆமென்.