சத்திய வசனம் பங்காளர் மடல்

செப்டம்பர்-அக்டோபர் 2021

கிறிஸ்துவுக்குள் பிரியமுள்ள விசுவாச பங்காளர்களுக்கு,

தமது மிகுந்த வல்லமையோடும் மகிமையோடும் வரப்போகிற இராஜாதி இராஜாகிய இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துக்கள்.

இவ்விதழின் வாயிலாக தங்கள் அனைவரையும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சியடைகிறோம். கொரோனா இரண்டாவது அலையின் பேரழிவுக்கு பின்பாக தேவன் தேசத்திலே சுமுகமாக சூழ்நிலையை ஏற்படுத்திக் கொடுத்துள்ளார். தேவனுக்கு மகிமையைச் செலுத்துவோம். கல்லூரிகள் பள்ளிகள் படிப்படியாக திறக்கப்படுகின்றன. இப்புதிய கல்வியாண்டிற்குள் சென்றிருக்கும் நமது பங்காளர் குடும்பத்தின் பிள்ளைகள் நன்கு படிப்பதற்கும், அவர்களது தேவைகள் சந்திக்கப்பட்டு, எல்லா தொற்றிலுமிருந்து பாதுகாக்கப்படுவதற்கு நாங்கள் ஜெபிக்கிறோம். திருச்சபை ஆராதனை வழக்கம்போல் ஞாயிற்றுகிழமையில் நடைபெறுவதற்கும், சபை ஆராதனை ஒழுங்குகள் யாவும் தடைகளின்றி நடத்தப்படுவதற்கு சுமுகமான சூழ்நிலை உண்டாகத்தக்கதாக பாரத்துடன் ஜெபிப்போம். ஆலயம் செல்வதற்கு தடை ஏற்பட்டுள்ள இந்நாட்களில் ஆண்டவரோடுள்ள உறவிலே நாம் தணிந்துபோய்விடாதபடிக்கு தனிஜெபம், குடும்பஜெபம், வேதவாசிப்பிலே உறுதியாய் தரித்திருப்போம். தங்கள் வேலைகளை இழந்து தவிக்கும் பிள்ளைகளை பரமபிதா போஷித்து விரைவிலேயே அவர்களுக்கு நல்ல வேலைகள் கிடைப்பதற்கும் தேவைகள் சந்திக்கப்படுவதற்கும் தொடர்ந்து வேண்டுதல் செய்வோம்.

தங்களது மனஉதாரத்துவமான காணிக்கையாலும், ஊக்கமான ஜெபத்தாலும் ஊழியப்பணிகளைத் தாங்கி வருகிற சத்தியவசன ஊழிய பங்காளர் குடும்பங்களுக்கு நன்றி கூறுகிறோம். தேவனுடைய இராஜ்யம் கட்டப்படுவதற்கு அளித்துவரும் ஆதரவுகளுக்கு தேவன்தாமே இம்மைக்கும் மறுமைக்குமான ஆசீர்வாதங்களாலும் அபரிமிதமாக ஆசீர்வதிக்க ஜெபிக்கிறோம். சத்தியவசன ஊழியத்தின் வாயிலாக தாங்கள் பெற்று வரும் ஆசீர்வாத அனுபவங்களையும் தங்கள் மனபாரங்களையும், ஜெப வேண்டுதல்களையும் எங்களோடு பகிர்ந்துகொள்ளுங்கள். வருகிற 20ஆம் தேதி மாலை 6.30-8.00 மணி வரை Zoom மூலமாக ஜெபம் மற்றும் சிறப்புக் கூட்டத்தை ஒழுங்குசெய்துள்ளோம். இதில் சுவி.சுசி பிரபாகரதாஸ் அவர்கள் செய்தி அளிப்பார்கள். இக்கூட்டத்தில் கலந்துகொள்ளும்படி அன்பாய் அழைக்கிறோம்.

இவ்விதழில் நன்மை செய்வதிலே சோர்ந்துபோகாதீர்கள் என்ற தலைப்பில் Dr.W.வாரன் வியர்ஸ்பி அவர்களது கட்டுரையும், என் பிரியமே கதவை திற என்ற தலைப்பில் சகோதரி சாந்தி பொன்னு அவர்கள் எழுதிய கட்டுரையும், இரட்சிப்பைக் குறித்த சந்தேகம் என்ற தலைப்பில் மிரியம் லெவன் குட் அவர்களுடைய கட்டுரையும், கர்த்தருக்குப் பயப்படும் பயம் என்ற தலைப்பில் சகோ.பழனிவேல் ஆபிரகாம் அவர்கள் எழுதிய கட்டுரையும் இடம்பெற்றுள்ளது. மேலும் சென்ற இதழின் தொடர்ச்சியான பரம அழைப்பின் பந்தயப் பொருள் Rev.நாட் க்ராபோர்டு அவர்களுடைய கட்டுரையும், தானியேல் Dr.உட்ரோ குரோல் அவர்கள் எழுதிய பழைய ஏற்பாட்டு வேதபாடமும், Dr.எம்.எஸ்.வசந்த குமார் அவர்கள் எழுதிய தடுப்பூசிகளும் தடுமாறும் விசுவாசிகளும் என்ற தொடர்கட்டுரையும், Prof.எடிசன் அவர்கள் அளித்த ஜீவ அப்பம் நானே என்ற செய்தியும் இடம் பெற்றுள்ளது. மேலும் Dr.தியோடர் எச்.எஃப் அவர்கள் எழுதிய காலத்தைப் பற்றிய சத்தியங்கள் என்ற புதிய வேத ஆய்வு தொடர் ஒன்றை ஆரம்பித்துள்ளோம். இச்செய்திகள் யாவும் தங்களது ஆவிக்குரிய வாழ்வின் ஆசீர்வாதத்திற்கு அதிக பிரயோஜனமாக இருக்க ஜெபிக்கிறோம்.

கே.ப.ஆபிரகாம்