சத்திய வசனம் பங்காளர் மடல்

(மே-ஜுன் 2022)

கிறிஸ்துவுக்குள் பிரியமுள்ள விசுவாச பங்காளர்களுக்கு,

வழியும், சத்தியமும் ஜீவனுமாயிருக்கிற ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துக்கள்.

இவ்வருடத்தின் பாதி மாதங்களை கடந்துவர கிருபைசெய்த தேவனை ஸ்தோத்திரிக்கிறோம். நீங்கள் உலகமெங்கும் போய், சர்வ சிருஷ்டிக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள் (மாற்கு 16:15) என்ற தரிசனத்தோடு ஆரம்பிக்கப்பட்ட சத்தியவசன ஊழியம் ஏறத்தாழ 67 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற தேவன் கிருபை செய்துள்ளார். தேவனுடைய வருகைபரியந்தம் இவ்வூழியத்தின் மூலமாக அநேகமாயிரமான ஜனங்கள் பிரயோஜனப்படவும் மீட்கப்படவும் கர்த்தர் கிருபை செய்ய வேண்டுதல் செய்வோம்.

யுத்தங்களையும், யுத்தங்களின் செய்திகளையும் கேள்விப்படுவீர்கள் …. ஜனத்துக்கு விரோதமாய் ஜனமும், ராஜ்யத்துக்கு விரோதமாய் ராஜ்யமும் எழும்பும் … (மத்.24:6,7) ஆண்டவர்தாமே தமது வருகைக்கு அடையாளமாக சொன்ன இந்த வாக்குகள்படியே தேசமெங்கும் இப்போது நடந்துவருகிற இனக்கலவரங்களைக் குறித்து நாம் கேள்விப்பட்டு வருகிறோம். தேவனுடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்து விழித்திருந்து ஜெபிக்கவும், தேவனுடைய வருகைக்கு ஆயத்தமாக இருப்பதற்கும் பிரயாசப்படுவோம். Dr.ஜாண் நியூபெல்டு அவர்கள் எழுதிய உங்கள் இரட்சிப்பின் முழுமையான பலனை அனுபவித்தல் என்ற புத்தகத்தை பங்காளர்களுக்கு அனுப்பியிருந்தோம். அதிக ஆசீர்வாதமாக இருந்திருக்கும் என்றே விசுவாசிக்கிறோம். இந்த ஊழியத்தின் வாயிலாக பெற்றுக்கொண்ட நன்மைகளை எங்களுக்கு எழுதித் தெரியப்படுத்துங்கள். கடந்த இரு மாதங்களாக பத்திரிக்கைகளுக்கான பேப்பர் கிடைப்பதில் அதிக சிரமம் ஏற்பட்டுள்ளது. அதிக விலை கொடுத்தாலும் தரமான பேப்பர் கிடைப்பதில்லை. இந்நிலை மாற பங்காளர்கள் ஜெபிக்க அன்பாய் கேட்கிறோம்.

இவ்விதழில் Dr.உட்ரோ குரோல் அவர்கள் எழுதிய தானியேல் புஸ்தகம் தொடர் வேதபாடத்திலிருந்து சிங்கங்களை அடக்குதல் என்கிற சிறப்புச்செய்தியும், நானே சத்தியம் (இயேசு) என்ற தலைப்பில் பேராசிரியர் S.C.எடிசன் அவர்கள் வழங்கிய செய்தியும், கர்த்தரின் திட்டத்தை அறிந்து அதற்கு ஆயத்தமாயும் கீழ்ப்படிதலோடும் நடந்துகொண்ட அனனியாவைக் குறித்து அவன் ஒரு சீஷன்… என்ற தலைப்பில் சகோதரி சாந்தி பொன்னு அவர்கள் எழுதிய சிறப்புச்செய்தியும் இடம் பெற்றுள்ளது. மேலும் தேவனுடைய ராஜ்யம் என்றால் என்ன? என்ற தலைப்பில் Dr.வசந்தகுமார் அவர்கள் எழுதிய செய்தியும், சத்தியவசனமாகிய சுவிசேஷத்தை அறிதல் என்ற தலைப்பில் Dr.வாரன் வியர்ஸ்பி அவர்கள் எழுதிய கட்டுரையும், Dr.தியோடர் எச்.எஃப் அவர்கள் எழுதிய காலங்களைப் பற்றிய சத்தியம் என்ற தொடர் வேதபாடமும் இடம்பெற்றுள்ளது. இச்செய்திகள் யாவும் தங்களது ஆவிக்குரிய வாழ்வின் ஆசீர்வாதத்திற்கு அதிக பிரயோஜனமாக இருக்கவேண்டுமென வேண்டுதல் செய்கிறோம்.

கே.ப.ஆபிரகாம்