Dr.தியோடர் எச்.எஃப்.
(மே-ஜுன் 2022)

Dr.தியோடர் எச்.எஃப்.
3. மானூட அரசாங்கத்தின் காலம்
ஆதியாகமம் 8:20 முதல் 11:32 வரையுள்ள வேதபகுதியில் மனிதனின் அரசாங்கத்தின் காலம் விவரிக்கப்பட்டுள்ளது. இக்காலம் ஜலப்பிரளயத்திற்குப் பின் நோவாவின் காலத்திலிருந்து மனிதனின் அரசாங்கத்திற்கான அஸ்திபாரம் போடப்பட்டது. இது இறுதியாக ஆயிர வருட அரசாட்சியின் காலத்தில் இயேசுகிறிஸ்துவின் அதிகாரத்தின் கீழ் செயல்படுத்தப்படும்.
பொறுப்புகளின் அதிகரிப்பு
மனச் சாட்சியின் காலத்தில் மனிதர் அவரவர் தாங்கள் அறிந்த நன்மையான காரியங்களை செய்து, தேவனுக்கு தனிப்பட்ட வகையில் பொறுப்புடையவர்களாக இருந்தனர். மனிதனின் மனச்சாட்சியே அவனை வழிநடத்தியது. மனி தனின் அரசாட்சி காலத்தில் பிற மனிதனையும் தன் ஆளுகைக்குள் கொண்டுவந்து ஆளுகை செய்யும் பொறுப்பையும் அவனுக்குக் கொடுத்தார் (9:5). குடும்பத்தை நடத்தும் பொறுப்பு குடும்பத்தலைவனுக்குக் கொடுக்கப்பட்டது. ஒவ்வொரு குடும்பத் தலைவனும் தனக்கு நெருங்கிய சொந்தக் குடும்பத்தைக் கண்காணிக்க வேண்டும். தேவனுடைய ராஜ்யத்தின் காலத்தில் ஆவிக்குரிய குடும்பத்தைக் கண்காணிக்கும் பொறுப்பை கிறிஸ்து பெற்றுக்கொள்வார் (எபே.5: 21-23).
நோவாவின் காணிக்கை
நோவா பேழையிலிருந்து வெளியே வந்த உடனேயே அவன் தேவனுக்கு பலி செலுத்தினான். அவ்வாறு அவன் செய்ததினால்தான் முற்றிலுமாக தேவனையே சார்ந்திருப்பதை அறிக்கையிட்டான். மனுஷன் இயற்கையிலேயே பாவ சுபாவமுள்ளவன் என்பதையும் தேவன் ஆமோதித்தார். எனவே அவனின் நற்பண்புகளின் அடிப்படையில் அல்லாது கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் மீதுள்ள அவனுடைய நம்பிக்கையின் அடிப்படையிலேயே அவனுடன் தேவன் செயல்படுகிறார் (ரோமர் 3:10-23).
மனிதனின் இருதயம் மகா திருக்குள்ளதும் கோட்பாடுகள் நிறைந்ததுமாயிருக்கிறது. எனவே அவரது கிருபையின் அடிப்படையிலே அவன் வாழ்வதைத்தவிர அவனுக்கு வேறு நம்பிக்கையே இல்லை. இரட்சிப்பைப் பெறுவதற்கு தேவனைச் சார்ந்திருப்பதைத் தவிர வேறு வழியேயில்லை என்பதை நோவா அறிந்து அவரையே சார்ந்திருந்து அவரது கிருபையைப் பெற்றுக்கொண்டான்.
தேவன் நோவாவை ஆசீர்வதித்தார்:
ஆதாம் காலத்திலிருந்தே மனிதனானவன் பாவமுள்ளவன் என்று தேவன் அறிந்திருந்தும், முதல்முறையாக தேவன் மனிதனை ஆசீர்வதித்தார். தேவன் நோவாவை ஆசீர்வதித்ததற்கும், அவன் பலிபீடத்தின்மேல் தேவனுக்கு பலி செலுத்தியதற்கும் உள்ள உறவை இது வெளிக்காட்டுகிறது. இது சிலுவைக்கு அடையாளமாகக் காணப்படுகிறது (எபி.9:22).
மிருகங்களின் வாழ்க்கையில் மாற்றம்
ஜலப்பிரளயத்திற்குப்பின் மிருகங்களின் வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க விதத்தில் மிகப் பெரிய மாற்றம் ஏற்பட்டது. மிருகங்களின் மாம்சத்தைத் தனக்கு உணவாகப் பயன்படுத்துவதுடன் வேறு சில காரியங்களுக்கும் பயன்படுத்த அனுமதிக்கப்பட்டது. ஜலப்பிரளயத்திற்கு முன்பு எவ்வாறு மிருகங்கள் இருந்ததோ அதே நிலைமை கிறிஸ்து இப்பூமியில் ஆளுகை செய்யும் காலத்தில் மிருகங்கள் மீண்டும் வாழும் நிலை ஏற்படும் (ஏசா.11:6-8).
மனிதனின் ஆயுசுநாட்கள் குறுகியது
மனிதன் நீண்ட நாட்கள் வாழ்ந்து ஏற்கனவே தன் பாவத்தில் உழன்று கொண்டிருப்பது போதாதென்று இன்னும் அநேக உபாய தந்திரங்களை கண்டுபிடித்து இன்னும் பாவத்தில் வீழ்வதைவிட அவன் ஆயுசு நாட்கள் குறுகிப்போவது சாலச் சிறந்ததாகும் (சங்.90:10). கிறிஸ்து அரசாளும் ஆயிரவருட அரசாட்சியில் தேவனுடைய வாக்குத்தத்த வசனம் நிறைவேறுதலாக மனிதன் பாவஞ்செய்யாத தன் பழைய நிலையை மீண்டும் அடைவான் ( ஏசா.65:20).
மனிதனின் சந்ததியினர்
மனித இனம் மூன்று வகுப்புகளாகப் பிரிக்கப் பட்டுள்ளது. நோவாவின் மூன்று குமாரரின் சந்ததியினர் இவ்வாறு மூன்று இனத்தின் தலைவராவர்.
1. காம் (ஆதி.10: 6-20),
2. சேம் (ஆதி.10:21-31),
3. யாப்பேத் (ஆதி.10:2-5)
யாப்பேத்தின் தலைமுறையினரிலிருந்து அரசாங்கம் அறிவியல், கலை போன்றவை தோன்றியது. சேமின் சந்ததியிலிருந்து தோன்றிய தேசமாகிய இஸ்ரவேலின் மூலம், ஆயிரவருட அரசாட்சி காலத்தில் தேவன் தம்முடைய கடைசி நாட்களுக்கான காரியங்களைச் செயல்படுத்துவார்.
இனங்கள்:
இக்காலத்தில் சற்று விநோதமான இனங்களைப் பார்க்கலாம். பாபேல் கோபுரத்தின் வரலாறு, இன்றைய திருச்சபைகளின் செயல்பாட்டிற்கு இணையாகக் காணப்படுகிறது.
ஒற்றுமை:
மனிதன் தனக்குத்தானே உருவாக்கிக் கொண்ட ஒற்றுமையை (ஆதி.11:1) பரிசுத்த ஆவியானவரால் ஒன்றிணைக்கப்பட்ட திருச்சபையின் ஒற்றுமையை ஒப்பிட்டுப் பார்க்கவேண்டும்.
மனிதனின் பேராவல்:
நோவாவின் சந்ததியினர் தங்களுக்கென்று பெயர் உண்டாக்க வேண்டுமென்று விரும்பினார்கள். தாங்கள் பூமியிலெங்கும் சிதறிப்போகாதபடிக்கு தங்களுக்கென்று ஓர் நகரத்தையும், ஓர் கோபுரத்தையும் கட்டினார்கள். ஆனால் தேவன், அவர்கள் பூமியெங்கும் சிதறிப்போய், பூமியை நிரப்ப வேண்டும் என்று விரும்பினார். திருச்சபை தன்னைத்தானே விரிவாக்கம் செய்து பூமியெங்கும் பரவவேண்டும் என்று போதிக்கப்பட்டது. ஆதியாகமத்தில் நாம் பார்க்கும் நிகழ்வுகள் உலகப் பிரகாரமான ஒற்றுமைக்கான காரியங்களாகக் காணப்படுகின்றனவேயன்றி ஆவிக்குள்ளான ஒற்றுமையைக் காட்டவில்லை.
மறுபிறப்பின் மூலம் (லூக்கா 11:24-26; யோவான் 3:5-7) தேவனுடைய திட்டத்தைக் கடைப்பிடிக்காமல் மனிதன் தான் நியமித்த சட்ட திட்டங்களின்படியே நடந்தான். மறுபடியும் பிறந்த கிறிஸ்தவர்களை கிறிஸ்துவுக்குள் சிருஷ்டிக்கப்பட்ட ஜீவனுள்ள கற்கள் என்று தேவன் கருதுகிறார். இவ்வாறு கிறிஸ்துவுக்குள்ளான நாம் பரிசுத்த ஆவியினால் ஒன்றாகக் கூட்டி கட்டப்பட்டிருக்கிறோம். மீண்டும் ஆதியாகமத்தில் நாம் வாசிக்கும் பொழுது கல்லுக்குப்பதிலாக செங்கலும் சாந்துக்குப் பதிலாக நிலக்கீலையும் உபயோகித்தார்கள் என்று பார்க்கிறோம். இது இன்றைய கிறிஸ்தவ உலகத்தின் தன்மையைப் படமெடுத்துக்காட்டுகிறது. மனிதனால் உருவாக்கப்பட்ட சில அமைப்புகளில் அவர்கள் வார்க்கப்பட்டு, தங்களை கிறிஸ்தவர்கள் என்று கூறிக்கொள்கிறார்கள். இவ்வாறு மனிதனின் ஒற்றுமைத்தன்மை உண்மைத்தன்மையற்ற திட்டங்களால் உருவாக்கப்பட்டுள்ளதேயன்றி பரிசுத்த ஆவியினால் உண்டான மறுபிறப்பால் உருவாக்கப்படவில்லை (1கொரி.12:12).
பாஷைகள் தாறுமாறாக்கப்படல் (ஆ தி.11:7).
இது பாபேல் கட்டப்பட்ட காலத்தில் மனிதன் மேல் ஏற்பட்ட நியாயத்தீர்ப்பு. இது பல பாடுகள் (தேசங்கள்) ஏற்படுவதற்கான ஆரம்பமாகும். சகல தேசங்களிலுமுள்ள சகல ஜனங்களும் ஓர் நாளில் தேவனுடைய நியாயத்தீர்ப்பிற்கு முன்பாக நிற்கவேண்டும் (மத்.25:31,32). இந்த நியாயத் தீர்ப்பிற்கு பின்பு துன்மார்க்கமாக தீயவழியில் நடந்த தேசங்கள் அனைத்தும் புறம்பே தள்ளப்படும், தேவனுக்கு உகந்த தேசங்கள், மக்கள், பாஷைக்காரர் அனைவரும் மீண்டும் கிறிஸ்துவுக்குள் கூட்டிக் கட்டப்படுவார்கள் (எபே.1:9).
இன்றைய சீர்திருத்த சபைகளில் காணப்படும் பலவித பாகுபாடுகள், பிரிவினைகள், கொள்கை வேறுபாடுகள், குழப்பங்கள் மத்தியில் தேவன் தம்முடைய பரிசுத்தமுள்ள சபையை இரகசிய வருகையில் மத்திய ஆகாயத்திற்கு எடுத்துக்கொள்வார். இப்படிப்பட்ட தேவராஜ்யத்தின் காலத்தில் சகல தேசத்தாரிலிருந்தும், சபை பாகுபாடுகளிலிருந்தும் அவருடைய மக்கள் இறுதியாக கூட்டி கட்டப்படுவார்கள். இது மனிதனால் ஏற்படுத்தப்பட்ட ஒற்றுமையல்ல. ஆனால் உன்னதத்திலிருந்து உண்மையாய் மறுபிறப்படைந்த தம் மக்களை அனைத்து விசுவாசிகளை ஒன்றாகக் கூட்டிச் சேர்ப்பார்.
நிம்ரோத் எழுச்சியுற்று தன் இராஜ்ஜியத்தை ஸ்தாபித்தல்
அநேக மக்களை அடிமைப்படுத்த இது வழி வகுத்தது. இவ்வாறு நிம்ரோத் தனது முதல் உலக ராஜ்யத்தை ஸ்தாபித்தான். இது அந்திக் கிறிஸ்துவின் ராஜ்யத்தைப் போன்ற தேவனுக்கு எதிரான ஓர் ராஜ்யமாக உடனே மாறியது. விக்கிரக ஆராதனையை முக்கியப்படுத்தி கடைபிடிக்கக் கட்டளையிட்டான். இறுதியாக நிம்ரோத்தும், அவன் மனைவியும் தெய்வங்களாகக் கருதப்பட்டு அவர்களை மக்கள் ஆராதித்தார்கள். இவ்வாறு புறமதத்தின் மீது நம்பிக்கை தோன்றியது. தற்காலத்தில் காணப்படும் முறையற்ற சமயங்கள், நிம்ரோத்தின் சமயத்திலிருந்து தோன்ற ஆரம்பித்தன. இப்படிப்பட்ட தெய்வ பயமற்ற காலக்கட்டத்தில்தான் தேவன் ஆபிரகாமை அழைத்தார். இவ்வாறு குடும்பத்தின் காலம் துவங்கியது.
நாம் அறிந்து செயல்படவேண்டியது இன்றைய நிலையில் இந்தப் பாவமான உலகிலிருந்து தேவன் உண்மையான தமது திருச்சபையை அழைக்கிறார். முதலாவது தேவன் விசுவாசிகளை வேறு பிரித்து அவர்கள் வேறுபிரிக்கப்பட்ட வாழ்க்கை வாழ அழைக்கிறார். பின் அவர்கள் நித்திய நித்திய காலமாக அவருடன் வாழ அழைக்கிறார் (வெளி.3:7-13). உலகத்திலிருந்து நித்திய நித்தியமாய் வேறுபிரிக்கப்பட்ட அவருடைய மணவாட்டி அவருடைய வருகைக்காகத் தன்னை ஆயத்தப் படுத்தினாள் என்று வெளி.19:7-10இல் நாம் வாசிக்கிறோம்.
(தொடரும்)
மொழியாக்கம்: Mrs.Jeya Suseelan
