பேராசிரியர் S.C.எடிசன்
(மே-ஜுன் 2022)

அதற்கு இயேசு: நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான் (யோவான் 14:6).

பேராசிரியர் S.C.எடிசன்

இயேசுகிறிஸ்துவின் இனியநாமத்தில் சத்திய வசன நேயர்களுக்கு என் அன்பின் வாழ்த்துக்கள். இருக்கிறவராகவே இருக்கிறேன் என்று தன்னை வெளிப்படுத்தின பிதாவையும், அவருடைய குமாரனையும் குறித்துத் தியானித்து வருகிறோம். தேவனைக் குறித்து தியானிக்கும் பொழுது நமக்குள் ஒருவிதமான பயம் உண்டாகிறது. நம்மைச் சிருஷ்டித்த தேவன் சர்வ உலகங்களையும் சிருஷ்டித்தவர். பெரிய மலைகளையும் சமுத்திரத்தையும் தமது ஒரு வார்த்தையால் படைத்தவர். அத்தனை வல்லமையுள்ளவரை நாம் அறிந்துகொள்ள முடியுமா? என் ஞானத்தால் முடியாது. ஆனால், அவர் தம்முடைய அன்பால் தம்மை நமக்கு வெளிப்படுத்தும்போது அவரை நாம் அறிந்துகொள்ள முடியும். அதனால்தான் அவர் தம்முடைய தன்மைகளை சொல்லும் போது நானே பரலோகத்திற்கு வாசலாக இருக்கிறேன்; நானே பரலோகத்திற்கு வழியாய் இருக்கிறேன்; நானே பிதாவினிடத்தில் போவதற்கு உங்களுக்கு வழியாய் இருக்கிறேன். என் அடிச்சுவடுகளை நீங்கள் பின்பற்றி வரும்படி உங்களுக்கு மாதிரியாக வைத்திருக்கிறேன் என்றெல்லாம் சொல்லி தம்மை வெளிப்படுத்துகிறார்.

இந்த வசனத்திலும் நானே சத்தியம் என்று சொல்லி தன்னை சத்தியம் என்று அறிமுகப்படுத்துகிறார். சத்தியம் என்கிற வார்த்தை நாம் அடிக்கடி கேட்கின்ற உபயோகிக்கின்ற ஒரு வார்த்தையாகும். சத்தியமாய் அது எனக்குத் தெரியாது என்று சிலர் சொல்வதுண்டு. அதற்கு அர்த்தம் என்னவென்றால், உண்மையாகவே அது என்னவென்று எனக்குத் தெரியாது என்பதாகும். அவன் என்கிட்ட ஒன்றும் கொடுக்கவே இல்லையென்று நான் சத்தியம் பண்றேன் என்று சிலர் சொல்லுவார்கள். அப்படியென்றால் ஒரு உண்மையை இன்னும் கொஞ்சம் அழுத்தமாகச் சொல்வதற்காக சத்தியம் என்று சொல்கின்றனர்.

அப்படியென்றால் இயேசு, நானே சத்தியம் என்றாரே, அதினுடைய அர்த்தம் என்ன? அவரே சத்தியமானவர் என்பதாகும். ஆகையால் அவர் பேசுகிற வார்த்தைகளும் அவர் சொல்லுகிற கட்டளைகளும் உண்மையானவைகள். அவர் பரலோகம் உண்டு என்றார். அப்படியென்றால் நிச்சயமாக பரலோகம் என்று ஒன்று உண்டு. நாம் நம்பினாலும் நம்பாவிட்டாலும் இயேசுவானவர் சொல்லியிருப்பது உண்மையாகும். அங்கே தேவன் வசிப்பதும் உண்மையாகும். இரட்சிக்கப் பட்டவர்களை இயேசு அழைத்துச்செல்லும் இடமும் பரலோகந்தான்! அதுவும் உண்மையாகும். அங்கு அநேக வாசஸ்தலங்கள் உண்டு என்பதும் உண்மையாகும். இதையெல்லவற்றையும் நான் உண்மையானதாக எண்ணுவதற்கும் நம்புவதற்கும் காரணம் என்னவென்றால், இவைகளை யெல்லாம் சொன்ன இயேசுவானவர் நானே சத்தியம் என்றார். அவர் சத்தியமானவராய் இருப்பதினால் அவர் சொல்பவைகள் எல்லாமே உண்மையானவைகளாகும். அவர் இந்த பூமிக்கு வந்தபோது செய்த முதல் பிரசங்கம் என்னவென்றால் மத்தேயு 4:17இல் அதை வாசிக்கிறோம். மனந் திரும்புங்கள், பரலோக ராஜ்யம் சமீபத்திருக்கிறது. இயேசு சொன்னார்: நீங்கள் உண்மையாய் உங்கள் பாவ வாழ்க்கையை வெறுத்து நான் பரலோகத்திற்கு போகவேண்டும் என்கிற ஒரு வாஞ்சை உங்களுக்குள் இருந்தால் மனந்திரும் புங்கள்; உங்கள் பாவத்தை அறிக்கை செய்து பாவமன்னிப்பாகிய இரட்சிப்பைப் பெற்றுக்கொள்ளுங்கள். அப்பொழுது பரலோக ராஜ்யம் உங்களுக்குச் சமீபமாய் இருக்கும். உங்கள் இருதயத்திற்குள்ளும் தேவனுடைய ராஜ்யம் இருக்கும்.

இயேசு அப்படிச் சொல்லியிருக்கிறார். அப்படியானால் அது உண்மையா பொய்யா என்று நாம் சந்தேகப்படவேண்டிய அவசியமே இல்லை. அது நிச்சயம் உண்மை. நாம் மனந்திரும்பி பாவத்தை அறிக்கை செய்து இரட்சிக்கப்பட்டு பரிசுத்தமாய் வாழும்போது நிச்சயமாக அந்த பரலோகத்திலே நமக்கு ஒரு இடம் உண்டு. இதை தேவாதி தேவனே சொல்லியிருக்கிறபடியால் நாம் அதை அதிகமாக நம்புகிறோம்.

எனக்கு அருமையான சகோதரர்களே, நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? உங்கள் வாழ்க்கையில் பரலோகம் என்பதை அவ்வளவு பெரிதாக நினைக்கவில்லையோ? உங்கள் வாழ்க்கையில் உங்களுக்குக் கிடைக்கக்கூடிய மிகப் பெரிய ஆசீர்வாதம் அந்த பரலோகத்திற்கு போகும் பாக்கியமாகும். உங்கள் வாழ்க்கையில் உங்களுக்குக் கிடைக்கக்கூடிய மிகப்பெரிய நன்மை தேவன் உங்கள் பாவங்களை மன்னித்து உங்களை நீதிமான்களாக்கி தன்னோடு தன்னுடைய வாசஸ்தலத்துக்கு பரலோகத்துக்கு அழைத்துச் செல்வதுதான். உங்களுக்கு கிடைக்கக்கூடிய பெரிய நன்மை, பெரிய ஆசீர்வாதம் பரலோகம் நமக்கு சொந்தமாவது. பெரிய நன்மை தேவன் நம்மை அங்கே அழைத்துச் செல்வதாகும்.

சகோதரரே, இதை நாம் விட்டுவிட்டு பணத்தின் பின்னாலோ, புகழின் பின்னாலோ சிற்றின்பங்களிலோ தேடித் திரிவோமென்றால் கெட்ட குமாரனாக நாம் வாழ்ந்து, நமது வாழ்வின் முடிவும் பன்றிகளோடுதான் முடியும். ஆகவே இன்றைக்கு நாம் மனந்திரும்புவோம். நீர் பன்றிகளோடு இருந்தாலும் சரிதான். சாக்கடையிலே இருந்தாலும் சரிதான். சாராயத்தை குடித்து குடித்து குடல் வெந்து போயிருந்தாலும் சரிதான். இயேசு உம்மை நேசிக்கிறார். அவர் உம்மை பரலோகத்துக்கு அழைத்துச்செல்ல விரும்புகிறார்.

மனந்திரும்புகிற ஒரு பாவியினிமித்தம் பரலோகத்தில் மிகுந்த சந்தோஷம் உண்டாயிருக்கும் என்று இயேசு சொல்லியிருக்கிறார். எனவே அந்த உண்மையான வார்த்தையை இன்றைக்கே நம்புங்கள். நீங்கள் எந்த நிலையிலிருந்தாலும் உங்களுடைய பாவங்களையும், தப்பிதங்களையும் இயேசுவினிடத்தில் அறிக்கைசெய்யுங்கள். நான் அதிலிருந்து விடுபட ஆசைப்படுகிறேன் எனக்கு பெலனில்லை; எனக்கு உதவிசெய்யும் என்று கேட்பீர்களென்றால் இயேசு உமக்கு உதவி செய்ய உண்மையுள்ளவராயிருக்கிறார். ஏனென்றால் இயேசு: நானே சத்தியம் என்றார். பரிசுத்த வாழ்க்கை வாழ எனக்கு முடியவில்லை, எனக்கு ஜெபிக்கவேண்டும் என்ற ஆசை இருக்கிறது; ஆனால், ஜெபம்பண்ண முடியவில்லை. வேதத்தை வாசிக்க வேண்டுமென்ற ஆசை இருக்கிறது; ஆனால் வாசிக்க முடியவில்லை. யார் இந்த தடைகளை உடைத்து என்னை பரிசுத்த வாழ்க்கையில் வளரச்செய்ய முடியும் என்று கேட்பீர்களென்றால் அது இயேசு ஒருவர் மாத்திரமே செய்யமுடியும்.

இயேசுவிற்கு ஒரு பெயர் உண்டு. வார்த்தை என்பது அவருடைய நாமம். யோவான் சுவிசேஷம் ஆரம்பிக்கும்போது ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது; அந்த வார்த்தை தேவனாயிருந்தது என்று சொல்லுகிறார், 14ஆம் வசனத்திலே அந்த வார்த்தை மாம்சமாகி நமக்குள்ளே வாசம் பண்ணினார். மாம்சமான அவருக்குள் கிருபையும் சத்தியமும் இருந்தது. ஆகையால் அவர் சொல்லிய வசனங்கள் எல்லாமே அவர் உண்மையுள்ளவர் என்று சாட்சியிடுகிறது. வேதபுத்தகத்திலே ஆதிமுதல் கடைசிவரை அந்த வசனங்கள் சொல்லுகிற சாட்சி என்னவென்றால், தேவன் உண்மையுள்ளவர். ஆகவே, அந்த சத்தியமானவர் ஆவியால் எழுதிக் கொடுத்த இந்த வேதமும் சத்தியமானது.

அவர் அனுப்பினவரை (குமாரனை) நீங்கள் விசுவாசியாதபடியால் அவருடைய வசனம் உங்களில் தரித்திருக்கிறதுமில்லை (யோவான் 5:38). அதனால் பரிசுத்தமாய் வாழ முடியவில்லை. அதற்கு மாற்று மருந்து என்ன? வேத வாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள்; அவைகளால் உங்களுக்கு நித்திய ஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே, என்னைக் குறித்துச் சாட்சி கொடுக்கிறவைகளும் அவைகளே (யோவா.5:39). வசனங்கள் என்ன சாட்சி கொடுக்கின்றன? தேவன் உண்மையுள்ளவர் என்றும் அவர் சொன்னது நிறைவேறும் என்றும் அவர் சொல்ல ஆகும்; கட்டளையிட நிற்கும் என்றும் காற்றும் கடலும் அவருக்குக் கீழ்ப் படிகிறது; சந்திர சூரியனும் அவர் வார்த்தைக்கு அடங்கினவைகள் என்றும் வேதவசனங்கள் சாட்சி கொடுக்கிறது. இவை அனைத்தும் சத்தியமாகும்.

ஆகையால்தான் நானே சத்தியம் என்று அவர் சொல்லும்போது என்னுடைய பரிசுத்த வாழ்க்கைக்கும் அவரே அஸ்திபாரமாக இருக்கிறார். இது உண்மை. உங்களுக்கு நன்றாகத் தெரியும். கணவன் மனைவிக்கிடையிலே, ஒரு குடும்பத்திலே அன்பு இருக்கவேண்டுமென்றால் இருவரும் ஒருவருக்கொருவர் உண்மையாய் இருக்கவேண்டும். Faithfulness is the True foundation. அது தான் உண்மையான பெலமான அஸ்திபாரமாகும். குடும்பம் நிற்க வேண்டுமென்றால் அங்கு உண்மை இருக்கவேண்டும். அந்த உண்மை என்னவென்றால், அவர்தான் இயேசு! அந்த இயேசு சத்தியமானவர்! ஆனபடியால் கணவன் மனைவி இரண்டுபேரும் இயேசுவுக்குள் இருக்கும்போது அந்த வீடு சமாதானத்தாலும் சந்தோஷத்தாலும் செழிப்பாலும் நிறைந்திருக்கும். இயேசுவானவர் சத்தியமானவர் ஆனபடியினால் வேதவசனங்கள் அனைத்தும் நமக்கு உணர்த்துகின்ற காரியம் என்னவென்றால் அவர் உண்மையானவர்!

சகோதரனே, அவர் நமக்கு ஒரு வாக்குத் தத்தம் கொடுத்திருக்கிறார். நித்திய ஜீவனை அளிப்பேன் என்பதே அவர் நமக்குச் செய்த வாக்குத்தத் தமாகும் (1யோவான்2:25). நித்திய ஜீவன் என்பது முடிவில்லாத பரலோக வாழ்க்கையாகும். அதை அவர் நமக்குத் தருவேன் என்று சொல்லியிருக்கிறார். எனவே நிச்சயம் தருவார். அதற்கு நாம் என்ன செய்யவேண்டும்? கர்த்தராகிய இயேசுவை விசுவாசிக்கவேண்டும். அவருடைய உண்மைகளை ஏற்றுக்கொள்ளவேண்டும். அவைகளைக் கடைபிடிக்கவேண்டும். நான் மற்றவர்களுக்கும் அந்த சத்தியங்களைச் சொல்ல வேண்டும். அப்படிப்பட்ட வாழ்க்கை வாழும்போது என் இருதயம் பரிசுத்தமாகும். என் இருதயத்திலிருக்கிற வார்த்தைகள், வெளிவருகிற எண்ணங்கள் எல்லாம் பரிசுத்தமாகும். ஆகவே, சத்தியமானவர் வசனத்தின் மூலமாய் நமக்கு நித்திய ஜீவனைத் தருவது மட்டுமல்ல, நம்மைப் பரிசுத்தப் படுத்துகிறவரும் அவரே.

சாலொமோனுக்கு இந்த உண்மைத் தெரியும். எனவேதான் அவன் கிருபையினாலும் சத்தியத்தினாலும் பாவம் நிவிர்த்தியாகும் (நீதி. 16:6) எனக் கூறுகிறான். அவன் சொல்லுகிறதைக் கவனியுங்கள்: பலிகளினால் அல்ல, சத்தியத்தினால்தான் பாவம் நிவிர்த்தியாகும். ஏனென்றால் சத்தியம் என்பது இயேசுகிறிஸ்து. அவர் பிறக்கும்போது தேவதூதன் யோசேப்புக்குச் சொன்னான்: அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக; ஏனெனில் அவர் தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி இரட்சிப்பார் என்று. சாலொமோன் அதை தீர்க்கதரிசனமாக உரைத்தான். இதையே பவுல் சற்று வித்தியாசமாகச் சொல்வதைப் பார்க்கிறோம்: கிருபையினாலே விசுவாசத்தைக் கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள்; இது உங்களால் உண்டானதல்ல, இது தேவனுடைய ஈவு. ஆகையால் பாவம் நிவிர்த்தியாவது தேவனுடைய ஈவாகும் (எபேசி.2:8). இதை நாம் சம்பாதிக்க முடியாது. நாம் ஒரு பெரிய பாவத்தைச் செய்து விட்டு, அதை வேறுவிதமாக அல்லது அந்த பாவத்துக்குப் பரிகாரம் நாமாக செய்ய முடியவேமுடியாது. அப்படிச் செய்ய முடியுமென்றால் இயேசுவானவர் சிலுவையில் மரித்திருக்கவே வேண்டாமே. ஆகையால் அவர் சத்தியமானபடியால் அவர் நம்முடைய பாவங்களை நீக்குகிறார். நம்மை பரிசுத்தமாக்குகிறார். உம்முடைய வேதம் சத்தியம் (சங்.119:142), உம்முடைய வசனம் சமூலமும் சத்தியம் (சங்.119:160).

வசனம் பரிசுத்தப்படுத்துகிறது. எப்படி? அது தேவனைக் குறித்த பயத்தை நமக்கு உணர்த்தும். கர்த்தருக்கு பயந்து வாழ்; இல்லையென்றால் உன் வாழ்க்கை நாசமடையும் என்று வசனம் எச்சரிக்கிறது. நாம் வேதத்தை வாசிக்கவில்லை யென்றால் தேவனை அறியவும் முடியாது. நித்திய ஜீவனைப் பெறவும் முடியாது. அவர் தருவேன் என்று நமக்கு வாக்குப்பண்ணியுள்ள அந்த பரலோகத்தையும் நாம் இழந்துபோவோம்.

ஆகையால்தான் அவர், நானே சத்தியமென்று மறுபடியும் சொல்லுகிறார். என்னைத் தவிர வேறொன்றையும் நீங்கள் நம்பவேண்டாம். வேறொன்றையும் நீங்கள் பின்பற்றவும் வேண்டாம் என்று சொல்லுகிறார். அந்த சத்தியம் நம்மைப் பாவத்தின் அடிமைத்தனத்திலிருந்து விடுதலையாக்குகிறது.

உங்களிடத்தில் இவ்விதமாகக் கேட்கலாம். பாவத்திலிருந்து விடுபட்டு இருக்கிறீர்களா? இன்னும் உங்கள் வாழ்க்கையில் ஏதோவொரு ஆசை, அது பண ஆசையாகவோ, பொருளாசையாகவோ, சிற்றின்பமோ அல்லது வேறு ஏதாவது தகாத ஒரு ஆசையோ உங்களை ஆண்டு கொண்டிருக்கிறது. ஆனாலும் நீங்கள் உங்களை ஏமாற்றிக்கொண்டும் வஞ்சித்துக்கொண்டும் அது எனக்கு பாவமில்லை, நான் பரிசுத்தமாய்தான் வாழ்கிறேன் என்று சொன்னீர்களானால் சகல மனிதரிலும் பரிதபிக்கப்படத்தக்கவர்களாயிருப்பீர்கள். உங்கள் முடிவு பயங்கரமாக இருக்கும்.

அருமையானவர்களே, குமாரன் உங்களை விடுதலையாக்கினால், சத்தியமாகிய குமாரன் உங்களை விடுதலையாக்கினால் மெய்யாகவே விடுதலையாவீர்கள். அதற்குமேலே முடியாது. பவுல், இவ்விதமாக எழுதுகிறார்: நீங்கள் நியாயப் பிரமாணத்திற்குக் கீழ்ப்பட்டிராமல் கிருபைக்குக் கீழ்ப்பட்டிருக்கிறபடியால், பாவம் உங்களை மேற்கொள்ளமாட்டாது (ரோம.6:14). நீங்கள்தான் ஜெயிப்பீர்கள். அன்பானவர்களே, இயேசுவே சத்தியம்! என்பதை நீங்கள் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். உம்முடைய பிள்ளைகள் இந்தச் சத்தியத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்றுக் கொண்டிருந்தால், இந்தச் சத்தியத்தின் சட்டத்திற்குக் கீழ்ப்படிந்து நடந்தால் அதுதான் இந்த வாழ்க்கையில் உங்களுக்கு கிடைக்கக்கூடிய பெரிய சந்தோஷமாகும்.

நம்முடைய பிள்ளைகள் எல்லாரும் இரட்சிக்கப்பட்டிருக்கின்றனர், நம்முடைய பிள்ளைகள் பரிசுத்தமாய் வாழ்கின்றனர், இயேசுவுக்காக ஏதோவொன்றை செய்துகொண்டிருக்கின்றனர் என்றால் இதைத்தான் யோவான்: என் பிள்ளைகள் சத்தியத்தில் நடக்கிறார்கள் என்று நான் கேள்விப் படுகிற சந்தோஷத்திலும் அதிகமான சந்தோஷம் எனக்கு இல்லை (3யோவான் 3வச.) எனக் கூறுகிறார்.

அருமையானவர்களே, அந்த சந்தோஷம் உங்களுக்கு வேண்டுமென்றால் சத்திய பரனாகிய இயேசுவை ஏற்றுக்கொள்ளுங்கள். இன்றைக்கு உங்கள் வாழ்க்கை முற்றிலும் பரலோக வாழ்க்கையாக மாறிவிடும்.