பழைய ஏற்பாட்டு வேதபாடம்
Dr.உட்ரோ குரோல்
(மே-ஜுன் 2022)

தானியேல்

6 ஆம் அதிகாரம்

Dr.உட்ரோ குரோல்

மரணம், வறுமை, வியாதி, கைவிடப்படுதல் இவற்றில் நீங்கள் எதற்கு அஞ்சுகிறீர்கள்? தானியேலும் பயப்படவேண்டிய காரணம் இருந்தது. அவருக்கு எதிராக ஒரு சதித்திட்டம் தீட்டப்பட்டது. சட்டரீதியாக அவர் சிக்கலில் மாட்டிக்கொண்டார்; ஆகவே பசியுடன் இருந்த சிங்கங்களிடையே இரவைக் கழிக்கவேண்டியதாயிருந்தது. தானியேல் பயப்படக் காரணம் இருந்தாலும் தேவன் அவருக்கு உதவினார்.

தேவனுடன் ஆச்சரியமான விதங்களில் தொடர்புடைய சீரிய வாழ்க்கையை தானியேல் நடத்தினார். இந்த பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசியின் வாழ்வில் நடந்த சிறப்பான நிகழ்வை நாம் ஆராய இருக்கிறோம். தேவன் தமது மக்களை இக்காலத்திலும் காப்பாற்றி வருகிறார். தானியேல் தேவனை உத்தமமாய்ப் பின்பற்றினார். அவர் பாபிலோனிய ராஜ்யத்தின் முக்கியமான ஒரு பிரதானி. ஆனால், அவர் சிறைபிடித்துவரப்பட்ட வந்த ஒரு யூத கைதி.

தானியேல் புத்தகத்தின் முதல் நான்கு அதிகாரங்களில் நேபுகாத்நேச்சார் அரசரைப்பற்றிப் பார்த்தோம். ஐந்தாம் அதிகாரத்தில் பெல்ஷாத்சார் அரசரைப்பற்றி படித்தோம். ஆறாம் அதிகாரத்தில் மேதியனாகிய தரியு என்ற அரசரைப்பற்றி நாம் காண இருக்கிறோம்.

பாபிலோனிய சாம்ராஜ்யம் அனைத்து மாகாணத்தையும் உரிமையாக்கிக்கொண்டதும் தரியு அதனைச் சீர்படுத்தினார். அவர் ஒரு சிறந்த நிர்வாகி. ராஜ்யம் முழுவதையும் ஆளும்படிக்குத் தன் ராஜ்யத்தின்மேல் நூற்றிருபது தேசாதிபதிகளையும், ராஜாவுக்கு நஷ்டம் வராதபடிக்கு அந்த தேசாதிபதிகள் கணக்கு ஒப்புவிக்க அவர்களுக்கு மேலாக மூன்று பிரதானிகளையும் ஏற்படுத்துவது தரியுவுக்கு நலமென்று கண்டது; இவர்களில் தானியேல் ஒருவனாயிருந்தான்.

தானியேலின் வாழ்க்கை அரசவையில் பணி புரிந்த ஒரு சிறைபிடிக்கப்பட்ட அடிமையாகவே அமைந்தது. ஆனாலும் அரசர்களுக்கு முன்பாக, “ராஜாவே, நீங்கள் என்ன சொன்னாலும் நான் என் தேவனுக்காகவே வாழ்வேன்” என்று கூறினார். தேவனுக்கு அவர் கீழ்ப்படிந்ததால் அவருக்கு உண்மையாக இருந்ததால் தானியேலைச் சகல தரிசனங்களையும் சொப்பனங்களையும் அறியத்தக்க அறிவுள்ளவனாக்கினார்.

தானியேலுக்கு இந்த திறமையும் ஞானமும் சாமர்த்தியமும் இருந்தது என்று நீங்கள் எண்ணுகிறீர்களா? இல்லை; அது தேவன் அருளிய ஒரு வரம். அவர் பாபிலோன் அரசர்களுக்கு உண்மையாய் இருந்ததாலல்ல, பரலோக தேவனுக்கு உண்மையாக இருந்ததால் பெர்சிய சாம்ராஜ்யத்தில் மிகப்பெரிய ஒரு பிரதானியாக உயர்த்தப்பட்டார். பெர்சியர்கள் பாபிலோனியர்களை விரும்பமாட்டார்கள். ஏனெனில், அவர்கள் பாபிலோனியரை சிறைபிடித்தனர். தானியேல் இந்த பதவிக்கு எப்படி வந்தார்? சுயமுயற்சியோ திறமையாலோ அல்ல; ஏனெனில் தேவன் அவரை அவ்விடத்தில் அமரச்செய்தார்.

இப்பொழுது நாம் மூன்றாவது அரசரை சந்திக்க இருக்கிறோம். மேதியனாகிய தரியு அரசர் தனது முழு சாம்ராஜ்யத்தையும் ஒழுங்குபடுத்த வேண்டியதாய் இருந்தது. எனவே, அவர் 120 மாகாணங்களாகப் பிரித்தார். ஒரு மாகாணம் என்பது ஒரு பகுதி. அந்த பகுதிகளுக்கு ஒவ்வொரு தேசாதிபதியையும் நியமித்தார். இவர்களுக்கு மேலாக மூன்று பிரதானிகள் ஏற்படுத்தினார். தானியேல் அம்மூன்று பிரதானிகளில் ஒருவர். மற்ற மூன்று பிரதானிகளிடமிருந்து அவர் வேறுபட்டு நின்றார். ஏன்? ஏனெனில் இப்பெரிய சாம்ராஜ்யத்தில் வாழ்வதற்கு தேவன் கொடுத்த மற்ற வரங்களில் நிர்வாகத்திறமையையும் தானியேல் பெற்றிருந்தார். அது மாத்திரமல்ல, நேபுகாத்நேச்சார், பெல்ஷாத்சார் ஆகிய அரசர்களிடம் பணிபுரிந்ததால் 39 ஆண்டுகள் நிர்வாக அனுபவமும் பெற்றிருந்தார்.

இவ்வாறு சிறந்த முறையில் தானியேலின் வாழ்க்கை சென்று கொண்டிருந்தபொழுது, அவருக்கு எதிராக ஒரு சதித்தீட்டம் தீட்டப்பட்டது. “அப்பொழுது பிரதானிகளும் தேசாதிபதிகளும் ராஜ்யத்தின் விசாரிப்பிலே தானியேலைக் குற்றப் படுத்தும்படி முகாந்தரம் தேடினார்கள்”. இதற்குக் காரணம் பொறாமை. இப்பேரரசை ஆளுவதற்கு தகுதியான ஒரு மனிதராக தேவன் தானியேலை மாற்றினார். எனவே தானியேலை 120 மாகாணங்களையும் ஆளும் தலையான பிரதானியாக அரசர் உயர்த்தினார். மற்றவர்கள், “நாங்களும் அப்பதவிக்குத் தகுதியானவர்கள்தானே” என முறுமுறுத்தனர்.

அழுக்காறு மிக மோசமான காரியம். பொதுவாக கிறிஸ்தவர்கள் மற்றவர்கள் மீது அநேக காரியங்களுக்குப் பொறமைப்படுகின்றனர். 1994ஆம் ஆண்டு, ஜனவரி மாதம் 6ம் தேதியன்று அமெரிக்க ஐக்கிய நாடுகளைச் சேர்ந்த உலகப் புகழ்பெற்ற சறுக்கு விளையாட்டு வீராங்கனையான நான்சி கெரிகன் என்பவர் முழங்காலில் தாக்கப்பட்டார் என்ற ஓர் அதிர்ச்சியான செய்தி வெளியானது; இதைவிட அதிர்ச்சியான காரியம் என்னவெனில், மற்றொரு சக வீராங்கனையான டான்யா ஹார்டிங் இதற்கு உடந்தையாக இருந்தார் என்பதே. பொறாமைதான் இதற்குக் காரணம். 17ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஜான் டிரைடென் என்ற ஒரு கிறிஸ்தவர் “பொறாமை என்பது எண்ணத்தில் உண்டாகும் மஞ்சள் காமாலை” என்று கூறினார்.

இத்தாலியின் தலைசிறந்த சிற்பியும் ஓவியருமான மைக்கேலாஞ்சலோவைப் பற்றி வாசித்தது என் நினைவுக்கு வருகிறது. அவரும் தலை சிறந்த ஓவியருமான ரஃபேல் என்பவரும் வாடிகன் நகரில் சில அற்புதமான திருப்பணிக்கு நியமிக்கப்பட்டனர். இருவரும் தலைசிறந்த திறமைசாலிகள், மேதைகள். ஆனால், அவர்களால் மற்றவர்களை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவர்கள் இருவரும் தேவனுடைய மகிமையை விளங்கப் பண்ணும்படியாக வாடிகன் நகர தேவாலயத்தில் சிற்பங்களை வடிக்கவும், சித்திரங்கள் வரையவும் பணி புரிந்தனர். ஆனால், அவர்களால் ஒத்துப்போக முடியவில்லை. அங்கு வேலை செய்த காலம் முழுவதிலும் ஒன்றாக இருந்தாலும் ஒருவரோடொருவர் பேசிக்கொள்ளவில்லை. பொறாமையே அதற்குக் காரணம்.

தானியேல் மீதும் மற்றவர்கள் பொறாமை கொண்டனர். அவர்மீது சிறிய தவறு இருந்தாலும் அதனை மாபெரும் மலையாக மாற்றுவதற்கு அம்மக்கள் கண்ணோக்கமாயிருந்தனர் (வசனங்கள் 4 மற்றும் 5). அவருடைய பொது வாழ்வின் காரியங்களிலும் தனிப்பட்ட காரியங்களிலும் அவர்களால் எந்தவொரு குற்றத்தையும் காணமுடியவில்லை. தீமோத்தேயு 1, 3 மற்றும் தீத்து 1 ஆகிய அதிகாரங்களில் திருச்சபையின் தலைவர்களுக்கு அப்.பவுல் குறிப்பிடும் சிறந்த குணங்கள் அனைத்தையும் தானியேல் பெற்றிருந்தார்.

தானியேல் கறையற்றவர். மறைவான பாவங்கள் அவரிடத்தில் காணப்படவில்லை. எனவே அவர்கள் தானியேலை அவருடைய தேவனுக்கடுத்த காரியங்களில் குற்றம் கண்டுபிடிப்போம் என்று தீர்மானித்தனர்.

தானியேல் ஒரு ஜெபவீரர் என்பது அவர்களுக்குத் தெரியும். அவர் இடைவிடாமல் தேவனிடம் சென்று அடிக்கடி ஜெபிப்பார் என்பதையும் அவர்கள் அறிந்திருந்தனர். எனவேதான் அரசனை ஏமாற்றி ஒரு சட்டத்தைக் கொண்டுவந்தனர். ராஜாவைத்தவிர வேறு எந்தத் தேவனையானாலும் மனுஷனையானாலும் நோக்கி, முப்பது நாள் வரையில் யாதொரு காரியத்தைக் குறித்தும் விண்ணப்பம் பண்ணக்கூடாது என்ற சட்டத்தை இயற்றினர். ராஜா அவர்களது மறைவான தீய எண்ணத்தை அறியவில்லை. மற்றவர்களின் நலனில் அனைவரும் அக்கறைகொண்டுள்ள னர் என்று அவர் நினைத்தார். இது தனக்கு நன்மை பயக்கும் எனவும் அவர் எண்ணினார். எனவே அவர் “30 நாட்களுக்கு என்னைத்தவிர மற்ற தேவர்களை வணங்கக்கூடாது என்பது மேதியருக்கும் பெர்சியருக்கும் மாறாத சட்டமாயிருக்கும்” என்று அறிவித்தார்.

தானியேல் அந்தப் பத்திரத்துக்குக் கையெழுத்து வைக்கப்பட்டதென்று அறிந்து தன் வீட்டுக்குப் போய் தன் மேல்அறைக்குச் சென்றான். அவனது முழங்கால்கள் நடுங்கின. பற்கள் கிட்டிப் போயின. அவன் அதற்குப்பின்னர் ஜெபிக்கவில்லையென்று எண்ணுகிறீர்களா? நேபுகாத்நேச்சார் அரசருக்கு முன்பாக நின்று “நான் அரசருடைய உணவையும் திராட்சரசத்தையும் உட்கொள்ள மாட்டேன்” என்று மறுப்பு தெரிவித்த வாலிபன் தானியேல். “உம்முடைய கனவில் கண்ட மரத்தைப் போல நீர் வெட்டப்பட்டுப்போவீர்” என்று தைரியமாகக் கூறிய இளைஞன். இந்த கட்டளைப் பத்திரத்துக்குப் பயப்படுவானா? ஒருக்காலும் இல்லவே இல்லை. தனது வீட்டுக்குச் சென்ற தானியேல் “தன் மேலறையிலே எருசலேமுக்கு நேராகப் பலகணிகள் திறந்திருக்க அங்கே தான் முன் செய்து வந்தபடியே, தினம் மூன்று வேளையும் தன் தேவனுக்கு முன்பாக முழங்காற்படியிட்டு ஜெபம் பண்ணி ஸ்தோத்திரம் செலுத்தினான்” (வசனம் 10). எதுவும் மாறவில்லை.

இவ்விதமான வாழ்க்கை முறையே உங்களுக்கும் எனக்கும் தேவை. ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறினாலும் நமது சாட்சி மாறக் கூடாது. தேவனுக்கு நாம் கணக்கு ஒப்புவிக்கிறவர்களாயிருக்கிறோம். நீங்கள் இனி ஜெபிப்பதற்கு அனுமதியில்லை என்று மற்றவர்கள் கூறினாலும், நாம் ஜெபிக்கவேண்டும். தேவன் மேல் நிலையான விசுவாசம் கொண்டவர்கள் வாழ்வில் எந்தவித சலனமும் இருக்கக்கூடாது.

தானியேலுக்கு இப்பொழுது வயது எண்பதை கடந்துவிட்டது. இது கி.மு.539ஆம் ஆண்டில் நடந்தது. பாபிலோனிய சாம்ராஜ்யம் வீழ்ந்து மேதியனாகிய தரியு பெர்சிய சாம்ராஜ்யத்தின் தலைவனாகி பாபிலோனியரை வென்றார். தானியேல் கி.மு. 604இல் சிறைபிடிக்கப்பட்டார். 604ஆம் ஆண்டில் அவருக்கு 16 வயது எனக் கொண்டால், தற்பொ ழுது 80 வயதையும் தாண்டியிருப்பார். இந்த 80 ஆண்டுகளில் 66 வருடங்கள் சிறையிருப்பில் செலவழித்தார். அந்த 66 ஆண்டுகளும் அவர் தேவனுடன் நடந்தார். அப்பொழுதும் தன்னை அவர் மாற்றிக் கொள்ளவில்லை.

எண்பதைத் தாண்டிய அநேக முதியவர்களை நான் சந்திக்கும்பொழுது அவர்கள் தேவனுடன் நடப்பதை அறியும்பொழுது உண்மையாகவே நான் மகிழ்ச்சியடைகிறேன். ஆனால், உலக வாழ்விலே அநேக காரியங்களில் மாற்றங்கள் நிகழ்ந்திருக்கலாம். ஆனாலும், நீங்கள் தேவனுடன் நடந்துவருகிறீர்கள். அதில் எந்த மாற்றமும் இல்லை. தேவனுடன் மகிமை வரைக்கும் நடக்க இருக்கிறீர்கள். இதைத்தான் தானியேலும் உணர்ந்தார். அவருடைய வாழ்விலே எந்தவித வேறுபாடும் இல்லை.

வசனம் 12 இல் அவர்கள் ராஜாவுக்கு முன்பாக வந்து, ராஜாவே முப்பது நாட்கள்வரை எந்த மனிதனும் உம்மைத்தவிர வேறு யாரிடமும் விண்ணப் பிக்கக்கூடாது என்று கட்டளையிட்டீர் அல்லவா? என்றனர். ராஜாவும் ஆம் என்றார். ஆனால் தானியேல், “நாம் பேசிக்கொண்டிருக்கும் இந்த நேரத்திலும் வானத்திலிருக்கும் தன் தேவனிடத்தில் ஜெபித்துக்கொண்டிருக்கிறான்” என்றனர்.

ராஜாவுக்கு இங்கே பிரச்சனை உருவானது. ஏனெனில் தானியேல் தேவனை நோக்கி ஜெபம் பண்ணுவதை ராஜா அறிந்திருந்தார். அரசர் தானியேலை விரும்பினார். அவனை 120 பேருக்கும் மேலாக நியமிக்கப்பட்ட 3 பிரதானிகளில் ஒருவனாக உயர்த்தினார். தானியேல் அரசரின் வலதுகையாக செயல்பட்டார். ஆனால் மேதியர் மற்றும் பெர்சியரின் கட்டளைகள் யாராலும் மாற்றப்படாதவை. ராஜா ஏமாற்றப்பட்டார். தன்னுடைய கட்டளையாலேயே அரசர் பிடிபட்டார். 30 நாட்களாக ஜெபிக்கும் எந்த மனிதனும் சிங்கங்களின் கெபியிலே போடப்பட வேண்டும் என்பதே கட்டளையின் நிபந்தனை. ஒருவேளை இந்த கெபி நிலத்தின் அடியில் அமைக்கப்பட்டிருக்கலாம்.

17ஆம் வசனத்தில் ஒரு கல் கெபியினுடைய வாசலின்மேல் கொண்டுவந்து வைக்கப்பட்டது; தானியேலைப்பற்றிய தீர்மானம் மாற்றப்படாத படிக்கு ராஜா தன் மோதிரத்தினாலும் தன் பிரபுக்களின் மோதிரத்தினாலும் அதின்மேல் முத்திரை போட்டான். சிங்கக்கெபியில் போடப்படுமுன் தானியேலின் வாழ்க்கை மாறவில்லை; பின்னரும் அது மாறுமோ?

சிங்கங்களின் கெபியில் தானியேல் போடப்பட்டான். அன்று இரவு அவன் ஒரு குழந்தையைப் போல உறங்கியிருப்பான் என நான் எண்ணுகிறேன். தானியேல் அந்த இருட்டான சிங்கக்கெபியின் வாசனைகளின் மத்தியிலும் ஜெபித்திருப்பார்.

அரசரின் நிலையை நாம் கவனிப்போம். வசனம் 18இல் “பின்பு ராஜா தன் அரமனைக்குப் போய், இராமுழுவதும் போஜனம் பண்ணாமலும், கீதவாத்தியம் முதலானவைகளைத் தனக்கு முன்பாக வரவொட்டாமலும் இருந்தான்; அவனுக்கு நித்திரையும் வராமற்போயிற்று. அவர் அரசரின் மாளிகையில் பாதுகாப்பாக இருந்தாலும் அவருக்கு நித்திரையில்லாமல் தவித்தார். ஆனால், தானியேலோ பசியாயிருந்த சிங்கங்களை முகமுகமாய் சந்திக்க வேண்டியதாயிருந்தது.

பல வருடங்களுக்கு முன்னர் இஸ்ரவேல் தேசத்தில் ஒரு சுவரொட்டியைப் பார்த்தேன். தானியேல் தன் கைகளால் அச்சிங்கங்களை அணைத்துக் கொண்டிருப்பதைப் போன்ற ஒரு படம் அது. தானியேல் ஒரு குழந்தையைப்போல தூங்கினார். அரசரோ தூங்கவில்லை. நீங்கள் நீதிமானாக இருந்தீர்களானால் தேவன் உங்களுக்கு நித்திரையை அளிப்பார்.

சமாதானத்தோடே படுத்துக்கொண்டு நித்திரை செய்வேன்; கர்த்தாவே, நீர் ஒருவரே என்னை சுகமாய்த் தங்கப்பண்ணுகிறீர் (சங்.4:8) என்பது சங்கீதக்காரனின் சாட்சி. தானியேல் உறங்கினார்; ஆனால், அரசர் தூங்கவேயில்லை. அடுத்த வசனத்தைக் கவனியுங்கள். இதுதான் தேவன் தமது தீர்க்கதரிசிகளைக் காப்பாற்றி வரும் முறை.

வசனம் 19 ஐ கவனியுங்கள். காலமே கிழக்கு வெளுக்கும்போது ராஜா எழுந்திருந்து, சிங்கங்களின் கெபிக்குத் தீவிரமாய்ப் போனான். இரவில் தூக்கமின்மையால் அதிகாலையிலே எழுந்து கெபிக்குச் சென்று நடந்ததை அறிய விரும்பினார். ராஜா கெபியின் கிட்டவந்தபோது, துயர சத்தமாய் தானியேலைக் கூப்பிட்டு “தானியேலே, ஜீவனுள்ள தேவனுடைய தாசனே, நீ இடைவிடாமல் ஆராதிக்கிற உன் தேவன் உன்னைச் சிங்கங்களுக்குத் தப்புவிக்க வல்லவராயிருந்தாரா?” என்று தானியேலைக் கேட்டான்.

இந்த இடத்தில் நீங்கள் ஒன்றை கவனிக்க வேண்டும். சிங்கக்கெபியில் போடப்பட்ட ஒரு மனிதனை அறிவுள்ள ஒருவன் காலையில் சென்று பார்க்கமாட்டான். அவனை சிங்கங்கள் பட்சித்திருக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால், இது விசுவாசத்தின் விசாரணை. தானியேலின் தேவன் அவனை பத்திரமாகக் காப்பாற்றியிருப்பார் என்ற பூரண நம்பிக்கை அரசருக்கு இருந்தது.

சிங்கங்கள் பொதுவாக 250 பவுண்டு எடையுள்ளதாயிருக்கும். வனவிலங்கு காப்பகத்தில் உள்ள ஒரு சிங்கம் 10 பவுண்டு உணவை உட்கொள்ளும். ஆனால், காட்டில் வாழும் சிங்கம் தனது வயிறு நிறையும் வரை தனது இரையை சாப்பிடும். அரசர் அதிகாலையிலேயே எழுந்து சிங்கக்கெபிக்குச் சென்று தானியேலை விசாரிக்க எந்த வித காரணமும் இல்லை.

சூளை நெருப்பில் போடப்பட்ட தானியேலின் நண்பர்களைக் காப்பாற்றிய தேவன் சிங்கங்களின் கெபியிலும் தானியேலுடன் இருந்தார். ஒருவேளை நீங்கள் வேதனையுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மருத்துவர்கள் கைவிடப்பட்ட நிலையில் இருந்தாலும் தேவன் உங்கள் கரங்களைப் பிடித்துக்கொண்டிருக்கிறார் என்பதை நினைவில் நிறுத்துங்கள். ஒருவேளை உங்கள் குடும்பத்தினர் தேவனைவிட்டு விலகியவர்களாய் இருந்தாலும், இரவில் உங்கள் படுக்கையைக் கண்ணீரால் நனைத்தாலும் அன்புள்ள இரட்சகர் உங்களோடு இருக்கிறார் என்பதை அறிந்துகொள்ளுங்கள்.

தானியேல் அரசருக்குக் கூறிய பதிலைக் கவனியுங்கள். “சிங்கங்கள் என்னைச் சேதப்படுத்தாத படிக்குத் தேவன் தம்முடைய தூதனை அனுப்பி, அவைகளின் வாயைக் கட்டிப்போட்டார்; அதே னென்றால் அவருக்கு முன்பாக நான் குற்றமற்றவனாய்க் காணப்பட்டேன்” தானியேலின் தேவன் அவனைப் பாதுகாத்தார். அரசரும் அகமகிழ்ந்தார். வசனம் 23இல் “அப்பொழுது ராஜா தன்னில் மிகவும் சந்தோஷப்பட்டு, தானியேலைக் கெபியிலிருந்து தூக்கிவிடச் சொன்னான்; அப்படியே தானியேல் கெபியிலிருந்து தூக்கிவிடப்பட்டான்; அவன் தன் தேவன் பேரில் விசுவாசித்திருந்தபடியால், அவனில் ஒரு சேதமும் காணப்படவில்லை” என்று வாசிக்கிறோம்.

நாமும் கூட சில நேரங்களில் சிங்கக் கெபியின் அனுபவத்தைப் பெற்றிருக்கலாம். அச்சிங்கங்கள் அவ்வப்பொழுது சில காயங்களை ஏற்படுத்தியிருக்கலாம். நான் அதை மறுக்கவில்லை. உங்களுடைய வாழ்விலும் இவ்விதம் நடந்திருக்கலாம். ஆனால், தானியேலைப்போல நீங்கள் முடிவெடுக்க வேண்டும். உங்கள் வாழ்வில் எது நடந்தாலும் தேவனே யாவையும் கட்டுப்படுத்துகிறவர். நீங்கள் பயப்படுகிறீர்களா? உங்கள் பயம் நேர்மையான தாக இருக்கலாம். ஆனால், நீங்கள் பயப்படும் இடத்தில் இயேசு உங்களுடன் இருக்கிறார் என்பதை நீங்கள் உணர்ந்துகொள்ளுங்கள்.

ஒரு சிறுவனை அவனது தாயார் சமையலறைக்குச் சென்று சில தக்காளிகளை எடுத்துவரச் சொன்னார். ஆனால் “சமையலறை இருட்டாக இருக்கிறது” என்று அவன் மறுத்தான். அவனுக்கு இருட்டு என்றால் பயம். எனவே தன் தாயாரிடம், “அம்மா, எனக்கு பயமாக இருக்கிறது. நான் அங்கே போகமாட்டேன்” என்றான். அவனுடைய அச்சத்தைப் போக்க அத்தாயார் அவனிடம், “மகனே பயப்படாதே. இயேசு அந்த இருளிலும் இருக்கிறார். நீ அதைப்பற்றிக் கவலைப்படாதே” என்றார். தைரியமடைந்த அப்பையன் சமையலறைக்குச் சென்று கதவைத் திறந்து, “இயேசுவே, நீங்கள் உள்ளே இருந்தால் எனக்கு சில தக்காளிகளைத் தாருங்கள்” என்றான். நாமும்கூட சில நேரங்களில் இவ்விதமே நடந்துகொள்ளுகிறோம். நம்மால் விளக்கமுடியாத சில காரியங்களும் நம் வாழ்விலும் நிகழ்வதுண்டு. அப்பொழுதெல்லாம் நாமும் சிங்கக் குகையில் இருக்கிறோம்; ஆனால், தேவன் நம்மை பாதுகாக்கிறார் என்ற எண்ணம் நமக்கு வேண்டும்.

பயப்படும் நேரத்திலும், கடினமான சூழ்நிலைகளிலும் நம்மை ஆறுதல்படுத்தவும், ஊக்கப்படுத்தவும் வேதாகமத்தில் அநேக வசனங்கள் உண்டு. பின்வரும் இரு வசனங்களும் எனக்கு அதிக ஆறுதலைத் தரும் வசனங்களாகும். நீங்களும் இவ் விரு வசனங்களையும் மனனம் செய்துகொள்வது மிகவும் அவசியம்.

இதோ, தேவனே என் இரட்சிப்பு; நான் பயப் படாமல் நம்பிக்கையாயிருப்பேன்; கர்த்தராகிய யேகோவா என் பெலனும், என் கீதமுமானவர்; அவரே எனக்கு இரட்சிப்புமானவர் (ஏசாயா 12:2).

நான் பயப்படுகிற நாளில் உம்மை நம்புவேன் (சங்கீதம் 56:3).

பயப்படாதேயுங்கள்; பயப்படும் நேரத்தில் தேவனை விசுவாசியுங்கள். அது உங்களுக்கு தைரியத்தைத் தரும்.

மொழியாக்கம்: Mrs.அகஸ்டா மங்களதுரை

மிஷனெரி பரி. ஐசக் ஜோக்ஸின் தியாகம்

ஐசக் ஜோக்ஸ் (Isaac JHgues 1607 – 1646) பிரான்ஸ் தேசத்தில் பிறந்தவர். 10 வயதிலேயே இயேசு சபையில் தன்னை இணைத்துக்கொண்டார். கொழுந்துவிட்டு எரியும் சுவிசேஷத் தாகத்தைப் பிஞ்சு பருவத்திலேயே பெற்றிருந்தார். உடலையும், உள்ளத்தையும் உலகத்தின் பக்கம் திருப்பாமல் கிறிஸ்துவை நோக்கித் திருப்பினார். இயேசு சபையின் தலைமையிடத்திலிருந்து ஒரு அழைப்பு ஐசக் ஜோக்ஸைத் தேடிவந்தது. வட அமெரிக்காவுக்கு சுவிசேஷத்தை ஏந்திச் செல்லவேண்டும் என்பதே அந்த அழைப்பு. உடனே தன்னை அர்ப்பணித்தார் ஐசக்.

நெடுநாள் பயணத்திற்குப் பின் 8 பேர் அடங்கிய மிஷனெரிக்குழு வட அமெரிக்காவை அடைந்தது. “இராக்வா” என்ற காட்டுமிராண்டிகள் கூட்டம் இவர்களை மிகவும் கோபத்துடன் எதிர்கொண்டது. இடையூறுகளும், ஆபத்துகளும் ஏராளமாக ஏற்பட்டன. அப்பழங்குடி மக்களிடையே ஏற்படும் கொள்ளை நோய்களுக்கும், அசம்பாவிதங்களுக்கும் இவர்கள் மேல் குற்றம் சுமத்தப்பட்டது. ஐந்து ஆண்டுகள் கடினமாகப் பணி செய்தாலும் அக்காட்டுமிராண்டிகளால் அதிகம் சித்திரவதைகளுக்கு உள்ளாயினர்.

ஐசக் ஜோக்ஸ் இராக்வா காட்டுமிராண்டிகளால் பிடிக்கப்பட்டார். தசை தசையாக அவர் உடலை வெட்டினர். கைவிரல்களையும் வெட்டி அவர்கள் கண் முன்பாகவே தின்றனர். திடீரென ஒருவன் கோடாரியால் வெட்ட, அவர் உடல் கீழே விழுந்தது. இரத்தம் பூமியில் சிந்தியது. ஆயினும் அவர் கொல்லப்பட்ட ஓர் ஆண்டுக்குள் அங்கு 3,000 பேர் ஞானஸ்நானம் பெற்றனர். இச்சம்பவம் அவரின் பணியினை வெளிப்படுத்திக் காட்டுவதாகவும், நம்முடைய விசுவாச வாழ்வைப் பலப்படுத்துவதாகவும் அமைகின்றது.

நினைவுகூருங்கள்!

நற்செய்தியை அறிவிக்க நீங்களும் நானும் நமது இரட்சகரின் கரங்களில் கொடுப்பது எதுவாயினும் அது உலக மக்களின் ஆத்தும பசியை ஆற்றும் சிறந்த முதலீடாக அமையும்.