Dr.எம்.எஸ்.வசந்தகுமார்
(மே-ஜுன் 2022)

Dr.எம்.எஸ்.வசந்தகுமார்

இயேசுகிறிஸ்து இவ்வுலகில் வாழ்ந்த காலத்தில் தேவனுடைய ராஜ்யமே அவருடைய செய்தியின் பிரதான விஷயமாயிருந்தது. இதனால்தான், அவர் தம்முடைய ஊழியத்தை ஆரம்பித்தபோது, மனந்திரும்புங்கள், பரலோகராஜ்யம் சமீபித்திருக்கிறது என்று பிரசங்கிக்கத் தொடங்கினார் (மத்.4: 17). மாற்கு இதைப்பற்றி எழுதும்போது, யோவான் காவலில் வைக்கப்பட்ட பின்பு, இயேசு கலிலேயாவிலே வந்து, தேவனுடைய ராஜ்யத்தின் சுவிசேஷத்தைப் பிரசங்கித்து: காலம் நிறைவேறிற்று, தேவனுடைய ராஜ்யம் சமீபமாயிற்று; மனந்திரும்பி, சுவிசேஷத்தை விசுவாசியுங்கள் என்று பிரசங்கித்ததாகக் குறிப்பிட்டுள்ளார் (மாற்கு 1:14-15).

இயேசுகிறிஸ்துவின் பிரசங்கத்தைக் குறிப்பிடும்போது மத்தேயு பரலோகராஜ்யம் என்றும், மாற்கு தேவனுடைய ராஜ்யம் என்றும் எழுதியுள்ளது நமக்கு குழப்பத்தை ஏற்படுத்தலாம். இதனால்தான், இயேசுகிறிஸ்து இரண்டு விதமான ராஜ்யங்களைப் பற்றி பேசுவதாகச் சிலர் போதிக்கின்றனர். ஆனால், மத்தேயு தன்னுடைய சுவிசேஷத்தை யூதர்களுக்கு எழுதுவதினால், அவர்களுடைய அக்கால மொழி வழக்கின்படி தேவனுடைய ராஜ்யத்தைப் பரலோக ராஜ்யம் என்று குறிப்பிட்டுள்ளார். ஏனெனில், அக்கால யூதர்கள் தேவன் என்னும் சொல்லை உச்சரிப்பதைத் தவிர்த்து வந்தனர். இது, தேவனுடைய நாமத்தை வீணிலே வழங்காதிருப்பாயாக என்னும் கட்டளையை மீறும் ஒரு செயலாக அவர்களுக்குத் தென்பட்டது. இதனால், ஜெபாலயங்களில் வேதவாக்கியம் வாசிக்கப்படும்போதுகூட, தேவன் என்னும் சொல்லை உச்சரிக்காமல் ஒரு சில வினாடிகள் மவுனமாய் இருப்பது அவர்களுடைய பழக்கமாய் இருந்தது. இதனால்தான், யூதர்களுக்கு எழுதப்பட்ட மத்தேயுவின் சுவிசேஷத்தில் தேவனுடைய ராஜ்யம் என்பதற்குப் பதிலாக பரலோக ராஜ்யம் என்னும் சொல் உபயோகிக்கப்பட்டுள்ளது. எனவே, தேவனுடைய ராஜ்யம் பரலோக ராஜ்யம் என்னும் இரண்டு சொற் பிரயோகங்களும் ஒன்றையே குறிக்கின்றன.

இயேசுகிறிஸ்து தேவனுடைய ராஜ்யத்தைப் பற்றி பிரசங்கிக்கும்போது, தேவனுடைய ராஜ்யம் சமீபமாயிற்று (மாற்.1:14-15) என்றே குறிப்பிட்டுள்ளார். ஏனென்றால், இயேசுகிறிஸ்து பிரசங்கித்த தேவனுடைய ராஜ்யம், பூகோளரீதியாக குறிப்பிட்ட ஒரு இடத்தில் இவ்வுலகத்தில் இருக்கும் ராஜ்யம் அல்ல. இதனால்தான், என் ராஜ்யம் இவ்வுலகத்திற்குரியதல்ல, என் ராஜ்யம் இவ்வுலகத்திற்குரியதானால் நான் யூதரிடத்தில் ஒப்புக்கொடுக்கப்படாதபடிக்கு என் ஊழியக்காரர் போராடியிருப்பார்களே; இப்படியிருக்க என் ராஜ்யம் இவ்விடத்திற்குரியதல்ல (யோவான் 18:36) என்று இயேசுகிறிஸ்து கூறினார். ஏனெனில், அக்கால யூதர்கள் தேவனுடைய ராஜ்யம் இவ்வுலகத்தில் ஸ்தாபிக்கப்படும் என்னும் எண்ணத்தில் ராஜ்யத்தை எதிர்பார்த்தவர்களாக இருந்தனர். இதனால்தான், இயேசு கிறிஸ்து அற்புதங்கள் செய்தபோது அவர்கள் அவரைத் தங்களுடைய ராஜாவாக்க முற்பட்டனர். ஆனால், இத்தகைய சந்தர்ப்பங்களில் இயேசுகிறிஸ்து அவர்களை விட்டுச் சென்றுவிடுவது அவருடைய வழக்கமாயிருந்தது (யோவா. 6:14-15). இயேசுகிறிஸ்து இவ்வுலகத்திற்கு வந்தபோது அறிவித்த தேவனுடைய ராஜ்யம் இவ்வுலகத்திற்குரியதாக இருக்கவில்லை. அப்படியிருந்தும், இயேசுகிறிஸ்து கடைசியாக எருசலேம் நகரத்திற்குச் சென்றபோது திரளான மக்கள் அவரை ஆரவாரத்துடன் வரவேற்று, அவரை ராஜாவாக வாழ்த்திப் பாடி, தங்களை ரோமராட்சியத்தின் அடிமைத் தனத்திலிருந்து விடுவிக்கும்படி கதறினார்கள். இதனால்தான் அவர்கள் ஓசன்னா! கர்த்தரின் நாமத்தினாலே வருகிறவர் ஸ்தோத்தரிக்கப்பட்டவர். கர்த்தரின் நாமத்தினாலே வருகிற நம்முடைய பிதாவாகிய தாவீதின் ராஜ்யம் ஆசீர்வதிக்கப்படுவதாக, உன்னதத்திலே ஓசன்னா என்று சொல்லி ஆர்ப்பரித்தார்கள் (மாற்.11:9-10). இதில் ஓசன்னா என்பது, விடுவியும் என்று மன்றாடும் எபிரெய சொல்லாகும். மேலும், அவர்கள் இயேசுகிறிஸ்துவை கர்த்தரின் நாமத்தில் வருகிறவர் என்று புகழ்ந்து, கர்த்தரின் நாமத்தினாலே வருகிற நம்முடைய பிதாவாகிய தாவீதின் ராஜ்யம் ஆசீர்வதிக்கப்படுவதாக என்று கூறி ஓசன்னா என்று ஆர்ப்பரித்ததினால், அவர்கள் இயேசுகிறிஸ்துவை ராஜாவாக அங்கீகரித்து, தங்களை ரோமராஜ்யத்தின் அடிமைத்தனத்திலிருந்து விடுவித்து, தாவீதின் ராஜ்யத்தை இஸ்ரவேலில் மறுபடியும் ஸ்தாபிக்கும்படியான மன்றாடுதலாகவே அவர்களுடைய கோஷங்கள் இருந்தன. ஏனெனில், மரக்கிளைகளையும் வஸ்திரங்களையும் பாதையில் போட்டு ஒருவரை வரவேற்பது அக்காலத்தில் ராஜாவை வரவேற்கும்முறையாகவே இருந்தது (2ராஜா.9:13).

இயேசுகிறிஸ்து அற்புதங்கள் செய்தபோது அவரே பழைய ஏற்பாட்டில் வாக்களிக்கப்பட்ட விதமாகத் தாவீதின் ராஜ்யத்தை மறுபடியுமாக இஸ்ரவேலில் ஸ்தாபிப்பார் என்னும் எண்ணத்தை மக்களுக்கு ஏற்படுத்தினாலும், இயேசுகிறிஸ்து அவர்களுடைய எதிர்பார்ப்பின்படி எதுவும் செய்யவில்லை. அப்படியிருந்தும் அவர் தேவராஜ்யத்தைப் பற்றியே அதிகமாக போதித்தார். எனினும், ராஜ்யம் என்பதற்கு அவர் அரமேய மொழியில் உபயோகித்த மல்ஃகு (malku) என்னும் சொல்லும், புதிய ஏற்பாடு எழுதப்பட்ட கிரேக்க மொழியில் உள்ள பசீலேயா (basileia) என்னும் கிரேக்கச் சொல்லும் பூகோள ரீதியான ராட்சியத்தை அல்ல, ஆளுகையைக் குறிப்பிடும் சொல்லாகவே உள்ளது. இதைப் போலவே, பழைய ஏற்பாட்டில் உபயோகிக்கப்பட்டுள்ள மல்ஃகுத் (malkuth) என்னும் எபிரெய சொல்லும் ஆளுகையைக் குறிப்பிடுவதினால், இதைத் தமிழில் ராஜரீகம் என்று மொழிபெயர்த்து, கர்த்தர் ராஜரீகம் பண்ணுகிறார் என்று வேதாகமத்தில் குறிப்பிட்டுள்ளனர். ஏனெனில், தேவனுடைய ராஜ்யம் என்பது, தேவன் ராஜாவாயிருக்கின்றார் என்பதை அடிப்படையாகக்கொண்டு உருவாக்கப்பட்ட சொற்பிரயோகமாகவே உள்ளது.

இயேசுகிறிஸ்துவும், ராஜ்யம் என்னும் சொல்லைத் தேவனுடைய ஆளுகை என்னும் அர்த்தத்திலேயே உபயோகித்துள்ளார். இதனால்தான், தேவனுடைய ராஜ்யம் எப்பொழுது வருமென்று, பரிசேயர் அவரிடத்தில் கேட்டபொழுது, அவர்களுக்கு அவர் பிரதியுத்தரமாக: தேவனுடைய ராஜ்யம் பிரத்தியட்சமாய் வராது. இதோ, இங்கே என்றும், அதோ, அங்கே என்றும் சொல்லப்படுகிறதற்கும் ஏதுவிராது; இதோ, தேவனுடைய ராஜ்யம் உங்களுக்குள் இருக்கிறதே என்றார் (லூக்.17:20-21). எனினும், தேவனுடைய ராஜ்யம் மனிதருக்குள் இருக்கின்றது என்னும் அர்த்தத்தில் இயேசுகிறிஸ்து இவ்வாறு கூறவில்லை.

இயேசுகிறிஸ்து பரிசேயரிடம்,தேவனுடைய ராஜ்யம் உங்களுக்குள் இருக்கின்றதே என்று கூறியபோது, அது உங்கள் மத்தியில் இருக்கின்றது என்பதையே சுட்டிக்காட்டியுள்ளார். ஏனெனில், இயேசு கிறிஸ்துவின் போதனையில் தேவனுடைய ராஜ்யம் என்பது அவரையே குறிக்கின்றது. அதாவது, இயேசுகிறிஸ்துவே தேவனுடைய ராஜ்யமாக இருக்கின்றார். ஏனெனில், அவர் தம்மோடு தேவனுடைய ராஜ்யத்தை, அதாவது தேவனுடைய ஆளுகையைப் பூமிக்கு கொண்டுவந்துவிட்டார். இதனால்தான், அவர் தம்முடைய ஊழியத்தை ஆரம்பித்தபோது தேவனுடைய ராஜ்யம் சமீபமாயிற்று என்று தெரிவித்தார். அதாவது, இயேசு கிறிஸ்துவினுடைய வருகை தேவனுடைய ராஜ்யத்தை மனிதருக்குச் சமீபமாய்க் கொண்டுவந்துள்ளது. இதனால், மனிதர்கள் தேவனுடைய ராஜ்யத்தைத் தேடி எங்கும் செல்லவேண்டியதாய் இருக்கவில்லை. ஏனெனில், இயேசுகிறிஸ்துவின் பிரசன்னமே தேவனுடைய ராஜ்யத்தை அவர்களிடம் கொண்டு வந்திருந்தது.

உண்மையில், இயேசுகிறிஸ்துவே தேவனுடைய ராஜ்யமாக இருந்தார். இதனால்தான், பிசாசின் பிடியிலிருந்து ஒருவனை விடுவித்தபோது, நான் தேவனுடைய விரலினாலே பிசாசுகளைத் துரத்துகிறபடியால், தேவனுடைய ராஜ்யம் உங்களிடத்தில் வந்திருக்கிறதே (லூக்.11:20) என்று இயேசு கிறிஸ்து கூறினார். ஏனெனில், பிசாசின் பிடியில் இருந்தவன், பிசாசின் ஆளுகையில், அதாவது பிசாசின் ராஜ்யத்தில் இருந்தான். ஆனால், இயேசு கிறிஸ்து அவனைப் பிசாசின் பிடியிலிருந்து விடுவித்ததினால், அவன் பிசாசின் ஆளுகையில் (ராஜ்யத்தில்) இருந்து விடுவிக்கப்பட்டு தேவனுடைய ராஜ்யத்திற்குள் வந்துவிட்டான். மேலும், நாம் வாழும் உலகம் பிசாசின் ஆளுகைக்கு உட்பட்டிருப்பதினால் (யோவா.12:31, 14:30, 16:11, 1யோவா.5:19), இவ்வுலகில் வாழ்பவர்கள் அவனுடைய ராஜ்யத்திலேயே இருக்கின்றனர். ஆனால், பிசாசின் கிரியைகளை அழிப்பதற்காகவே இயேசு கிறிஸ்து இவ்வுலகத்திற்கு வந்ததினால் (1 யோவா. 3:8), அவர் பிசாசின் ராஜ்யத்தில் இருப்பவர்களைத் தேவனுடைய ராஜ்யத்திற்குள் கொண்டு வருகிறவராக இருக்கின்றார் (கொலோ.1:13).

இயேசுகிறிஸ்து இவ்வுலகத்திற்கு வந்தபோது, தேவனுடைய ராஜ்யமும் அவரோடு இவ்வுலகத்திற்கு வந்துவிட்டாலும், அவர் குறிப்பிட்டவிதமாக மனிதருடைய கண்களுக்குத் தென்படக்கூடிய விதத்தில் தேவனுடைய ராஜ்யம் பிரத்தியட்சமாக வரவில்லை (லூக்.17:20). ஏனெனில், புதிய ஏற்பாட்டுக் காலத்தில் தேவனுடைய ராஜ்யம் ஆவிக்குரியதாகவே உள்ளது. இதனால்தான், தேவனுடைய ராஜ்யம் சமீபமாயிற்று என்று கூறிய இயேசு கிறிஸ்து, மனந்திரும்பி, சுவிசேஷத்தை விசுவாசியுங்கள் என்றார் (மாற்.1:15). சுவிசேஷம் என்பது இயேசுகிறிஸ்துவைப் பற்றிய நற்செய்தியாகும். இது மனிதருடைய பாவம் போக்கும் பலியாக மரிப்பதற்காகத் தேவனே இயேசுகிறிஸ்து என்னும் பெயரில் மனிதனாக இவ்வுலகத்திற்கு வந்து (1தீமோ.3:16) தம்மையே பாவம் போக்கும் பலியாக சிலுவையில் ஒப்புக்கொடுத்ததைப் பற்றிய செய்தியாகும் (1கொரி.15:1-5).

இயேசுகிறிஸ்துவைப்பற்றிய இந்நற்செய்தி ஒருவருக்கு அறிவிக்கப்படும்போது, பரிசுத்தாவியானவர் அவனுக்குப் பாவத்தையும் நீதியையும் நியாயத்தீர்ப்பையும் பற்றி கண்டித்து உணர்த்துகிறார் (யோவா. 16:8). அதாவது, அவன் பாவி என்பதையும், அவனுக்கு இயேசுகிறிஸ்துவின் நீதி தேவை என்பதையும், இல்லாவிட்டால் அவனுக்கு நியாயத்தீர்ப்பு உண்டு என்பதையும் உணர்த்துகிறார். பரிசுத்தாவியானவரின் இத்தகைய உணர்த்துதலை ஏற்றுக்கொள்பவன், தான் பாவி என்பதை ஒத்துக்கொண்டு அவற்றை இயேசுகிறிஸ்துவிடம் அறிக்கையிடுவதினால், அவனது பாவத்தை அவனிலிருந்து எடுத்துப்போடும் இயேசுகிறிஸ்து அவனுக்குத் தம்முடைய நீதியைக் கொடுத்து அவனை நீதிமானாக்குகிறார். இதுவே பாவியான மனிதன் பிசாசின் ராஜ்யத்திலிருந்து விடுவிக்கப்பட்டு, தேவனு டைய ராஜ்யத்திற்குள் பிரவேசிக்கும் வழிமுறையாய் உள்ளது.

தேவனுடைய ராஜ்யம் ஆவிக்குரியதாய் இருப்பதினால், ஒருவன் அதற்குள் செல்லும்போது அவன் ஆவிக்குரிய பிரகாரமாகப் பிறக்கின்றான். இதனால்தான், ஒருவன் தேவனுடைய ராஜ்யத்திற்குள் செல்வதற்கு அவன் மறுபடியும் பிறக்கவேண்டும் என்று இயேசுகிறிஸ்து தெரிவித்துள்ளார் (யோவா.3:3). இது, இயேசுகிறிஸ்துவைப் பற்றிய நற்செய்தியின் ஊடாகக் கிடைக்கும் பரிசுத்தாவியானவரின் உணர்த்துதல் மூலம், தான் ஒரு பாவி என்பதை அறிந்து, பாவங்களிலிருந்து மனந்திரும்பி அவற்றை இயேசுகிறிஸ்துவிடம் அறிக்கையிட்டு அவருடைய நீதியைப் பெற்றுக்கொள்வதினால் ஏற்படும் புதிய பிறப்பாயுள்ளது. இத்தகைய ஆவிக்குரிய பிறப்பே ஒருவனைத் தேவனுடைய ராஜ்யத்திற்குள் கொண்டுசெல்லும்.

பரிசுத்தாவியானவரின் உணர்த்துதலினால் மானிடரின் பாவம் போக்கும் பலியான இயேசுகிறிஸ்துவின் சிலுவைப் பலியைத் தங்களுடைய பாவத்திற்கான பிராயச்சித்தப் பலியாக ஏற்றுக்கொண்டு அவரை விசுவாசிப்பவர்கள் தேவனுடைய ராஜ்யத்திற்குள் வந்தாலும், அவர்கள் தற்பொழுது இயேசுகிறிஸ்துவின் சரீரமாகிய சபையிலேயே இருக்கின்றனர். ஏனெனில், இயேசுகிறிஸ்துவை விசுவாசித்து இரட்சிக்கப்படுகிறவர்களை அவர் சபையிலேயே சேர்க்கின்றார் (அப்.2: 47). இதனால், சபையே தேவனுடைய ராஜ்யம் என்று சிலர் கருதுகின்றனர். ஏனெனில், இந்தக் கல்லின் மேல் என் சபையைக் கட்டுவேன் என்று கூறிய இயேசுகிறிஸ்து, தேவனுடைய ராஜ்யத்தின் திறவு கோல்களைப் பேதுருவிடம் கொடுத்ததினால் (மத்.16:18-19), சபையே தேவனுடைய ராஜ்யம் என்னும் எண்ணத்தை ஏற்படுத்துகிறது. ஆனால், சபை பெந்தெகொஸ்தே நாளிலேயே உருவானது.

தேவனுடைய ராஜ்யம் பழைய ஏற்பாட்டுக் காலத்திலும் இருந்தது. எனினும், தேவனுடைய ராஜ்யம் என்பது தேவனுடைய ஆளுகையாக இருப்பதினால் பழைய ஏற்பாட்டுக் காலத்தில் தேவனுடைய ஆளுகைக்கு உட்பட்ட இஸ்ரவேல் நாடே தேவனுடைய ராஜ்யமாக இருந்தது. இதனால், அக்காலத்தில் தேவனுடைய ராஜ்யம் பூகோள ரீதியான உலக ராஜ்யமாகவே இருந்தது. ஆனால், இயேசுகிறிஸ்து தேவனுடைய ராஜ்யத்தைப்பற்றி அறிவித்தபோது, நாம் ஏற்கனவே பார்த்தவிதமாக, அவர் இவ்வுலக ராஜ்யத்தை அல்ல, ஆவிக்குரிய ராஜ்யத்தைப் பற்றியே கூறினார். இதனால்தான், தேவனுடைய ராஜ்யம் மனிதருடைய கண்களுக்குத் தென்படக் கூடிய விதமாகப் பிரத்தியட்சமாக வராது என்று அவர் கூறினார் (லூக்.7:20-21). எனவே, இயேசுகிறிஸ்து அறிவித்த தேவனுடைய ராஜ்யம் தற்காலத்தில் சபையிலேயே உள்ளது. அதாவது, சபை தேவனுடைய ஆளுகைக்கு உட்பட்டதாய் இருப்பதினால், தேவனுடைய ராஜ்யத்தின் தற்கால பிரதிபலிப்பாய் உள்ளது. இதனால், தற்காலத்தில் தேவனுடைய ராஜ்யம் ஆவிக்குரியதாய் உள்ளது. அதாவது, சபை தேவனுடைய ஆளுகைக்கு உட்பட்டதாய் இருப்பதினால் தேவனுடைய ஆவிக்குரிய ராஜ்யமாக உள்ளது.

தேவனுடைய ராஜ்யம் தற்காலத்தில் சபையில் இருப்பதினால், இது ஆவிக்குரிய ராஜ்யமாக இருந்தாலும், இது தேவனுடைய ராஜ்யத்தின் ஒரு பகுதியாகவே உள்ளது. இதனால்தான், தம்முடைய வருகையோடு தேவனுடைய ராஜ்யமும் இவ்வுலகத்திற்கு வந்துவிட்டது என்பதை அறியத்தரும் விதத்தில் தேவனுடைய ராஜ்யம் சமீபமாயிருக்கிறது (மத். 4:17, மாற்.1:15) என்றும், உங்கள் மத்தியில் இருக்கின்றது என்றும் கூறிய இயேசுகிறிஸ்து, தேவனுடைய ராஜ்யத்தின் வருகைக்காக ஜெபிக்கும்படியும் அறிவுறுத்தியுள்ளார் (மத்.6:10). இதனால், இயேசுகிறிஸ்துவின் வருகையோடு இவ்வுலகத்திற்கு வந்துவிட்ட தேவனுடைய ராஜ்யத்தின் வருகைக்காக நாம் ஏன் ஜெபிக்கவேண்டும் என்னும் கேள்வி நமக்குள் எழலாம். உண்மையில், இயேசுகிறிஸ்துவின் வருகையோடு தேவனுடைய ராஜ்யம் இவ்வுலகத்திற்கு வந்தாலும், தற்காலத்தில் இது ஆவிக்குரிய ராஜ்யமாக சபைக்குள் இருப்பதினால், இது பூகோள ரீதியாக வெளிப் படுவதற்காக ஜெபிக்கும்படியே இயேசுகிறிஸ்து அறிவுறுத்தியுள்ளார்.

இயேசுகிறிஸ்துவின் போதனையில் தேவனுடைய ராஜ்யம் நிகழ்காலத்தில் இருக்கும் ராஜ்யமாக மாத்திரமல்ல, எதிர்காலத்தில் வரவிருக்கும் ராஜ்யமாகவும் விளக்கப்பட்டுள்ளது. அதாவது, தற் காலத்தில் சபையின் தலையாக இருந்து சபைமக்களை ஆவிக்குரிய பிரகாரம் ஆளுகை செய்யும் இயேசுகிறிஸ்து, மறுபடியுமாக இவ்வுலகத்திற்கு வரும்போது எருசலேமிலிருந்து முழு உலகையும் ஆயிரம் வருஷங்களுக்கு ஆளுகை செய்வார். இதனால்தான், இதைப்பற்றிய தரிசனங்கள் யோவானுக்குக் கொடுக்கப்பட்டபோது, ஏழாம் தூதன் எக்காளம் ஊதினான்; அப்பொழுது உலகத்தின் ராஜ்யங்கள் நம்முடைய கர்த்தருக்கும், அவருடைய கிறிஸ்துவுக்குமுரிய ராஜ்யங்களாயின; அவர் சதா காலங்களிலும் ராஜ்யபாரம் பண்ணுவார் என்னும் கெம்பீர சத்தங்கள் வானத்தில் உண்டாயின (வெளி. 11:15).

உண்மையில், இயேசுகிறிஸ்து மனிதனாக இவ்வுலகத்திற்கு வரும்போதே இதைப்பற்றி மரியாளுக்குச் சொல்லப்பட்டது. இதனால்தான், இயேசுகிறிஸ்துவின் பிறப்பை அறிவித்த தேவ தூதன் மரியாளிடம், இதோ, நீ கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாய், அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக. அவர் பெரியவராயிருப்பார், உன்னதமானவருடைய குமாரன் என்னப்படுவார்; கர்த்தராகிய தேவன் அவருடைய பிதாவாகிய தாவீதின் சிங்காசனத்தை அவருக்குக் கொடுப்பார். அவர் யாக்கோபின் குடும்பத்தாரை என்றென்றைக்கும் அரசாளுவார்; அவருடைய ராஜ்யத்துக்கு முடிவிராது என்றான் (லூக்.1:31-33). இத்தீர்க்கதரிசனத்தின் முதற்பகுதி இயேசுகிறிஸ்துவின் முதலாவது வருகையில் நிறைவேறியதைப் போலவே, இதன் இரண்டாவது பகுதி அவருடைய இரண்டாவது வருகையில் நிறைவேறும். இவ்விதமாகவே, இயேசுகிறிஸ்துவின் வருகையைப் பற்றிய தீர்க்கதரிசனங்களில் அவருடைய முதலாவது வருகையில் நிறைவேறாதவைகள் அனைத்தும் அவரது இரண்டாவது வருகையில் நிறைவேறும்.

தேவனுடைய ராஜ்யம் என்பது தேவனுடைய ஆளுகையைக் குறிக்கின்றது. இதனால் பழைய ஏற்பாட்டுக் காலத்தில் இஸ்ரவேல் ராஜ்யத்தில் தேவனுடைய ஆளுகை இருந்தது. தற்காலத்தில் சபையில் அவருடைய ஆளுகை உள்ளது. ஆனால், இயேசுகிறிஸ்து மறுபடியும் இவ்வுலகத்திற்கு வரும்போது எருசலேமிலிருந்து ஆயிரம் வருஷங்களுக்கு முழு உலகையும் ஆளுகை செய்வார். இதனால், இப்பொழுது மனிதருடைய கண்களுக்குத் தென்படாத விதத்தில் ஆவிக்குரிய பிரகாரமாய் சபைக்குள் இருக்கும் தேவனுடைய ராஜ்யம் அக்காலத்தில் முழு உலகிலும் வெளிப்படையாகத் தென்படும் விதத்தில் இருக்கும்.

ஆவிக்குரிய தேவனுடைய ராஜ்யமான சபையில் இருக்கும் கிறிஸ்தவர்களாகிய நாம், தேவனுடைய ராஜ்யம் இவ்வுலகில் முழுமையாக வெளிப்படுவதற்காக, அதாவது இயேசுகிறிஸ்து மறுபடியுமாக இவ்வுலகத்திற்கு வந்து தம்முடைய ராஜ்யத்தை ஸ்தாபிப்பதற்காக ஜெபிப்பவர்களாகவும், தற்காலத்தில் இயேசுகிறிஸ்துவை அறியாதவர்களையும் அவருடைய ராஜ்யத்திற்குள் கொண்டு வருகிறவர்களாகவும் இருக்கவேண்டும்.