– Dr.வாரன் வியர்ஸ்பி –
(மே-ஜுன் 2022)

Dr.வாரன் வியர்ஸ்பி

கொலோசெயர் 1:3-8; கொலோசே பட்டணத்தில் உள்ள கிறிஸ்தவ சபையாருக்குப் பவுல் நிருபம் எழுத ஆரம்பித்தபோது, முதலாவது அவர்களுக்கு நன்றி கூறினார். அவர்கள் நற்செய்தியின் சுவிசேஷத்தை ஏற்றுக்கொண்ட விதத்துக்காக அவர்களுக்கு நன்றி தெரிவித்தார். அது அவர்களுடைய வாழ்க்கையை மாற்றுருவாக்கம் செய்திருந்தது. அவர்களை ஒரு உண்மையான திருச்சபையாக உருவாக்கியிருந்தது.

இன்றைய கிறிஸ்தவர்களுக்கு நற்செய்தி என்பதில் எந்த நன்மையும் இல்லை; அது அவர்களுக்கு ஒரு புதிய செய்தியும் அல்ல என்று ஒருவர் கூறினார். நாம் நற்செய்தியைக் கேட்டுக்கேட்டு அதில் பழகிவிட்டோம். ஆனால் அதுவொரு தேவனுடைய பிள்ளைக்கு பழக்கமான, சாதாரண ஒரு காரியமாக ஆகிவிடக்கூடாது. சில விசுவாசிகள் தங்கள் இரட்சிப்பை ஒரு ஆறுதல் பரிசு என்று நினைக்கிறார்கள். வாழ்க்கையில் அவர்களுக்கு வேறு எதுவும் கிடைக்காவிட்டாலும், பரலோகத்துக்காவது போகலாம் என்று ஆறுதல் படுகின்றனர்.

  • தேவன் நம்மை நேசிக்கிறார்.
  • கிறிஸ்து நமது பாவங்களுக்காக சிலுவையில் மரித்தார்.
  • நமக்கு நித்திய ஜீவன் உண்டு.

இவை ஒவ்வொரு நாளும் நம்மைப் பரவசப் படுத்தி உற்சாகப்படுத்த வேண்டும்.

நாம் நற்செய்திக்குச் செவிகொடுத்து, ஏற்றுக்கொண்டபோது, கிறிஸ்துவில் நமது புதிய வாழ்க்கை ஆரம்பமாயிற்று. நாம் என்றென்றும் கிறிஸ்துவுக்குள் குழந்தைகள் அல்ல. நாம் இன்னும் வளர்ந்து, கிறிஸ்தவர்களாக முதிர்ச்சியடையவேண்டும். நாம் நற்செய்தியை பின்னால் விட்டுவிட முடியாது. நாம் ஆண்டவருக்காக வாழும் போது நாம் இடைவிடாது நற்செய்தியினால் அளந்து மதிப்பிடப்படுகிறோம். இந்தச் சத்தியத்தை இரண்டு பிரதேசங்களில் செயல்படுத்திப் பார்ப்போம்.

முதலாவதாக, நமது திருச்சபையே நற்செய்தியினால் அளக்கப்படுகிறது. பவுல் கொலோசே திருச்சபையை ஆரம்பகாலத்தில் மறுபரிசீலனை செய்ததுபோல, நற்செய்தி விசுவாசிகளின் ஐக்கியத்தில் பல காரியங்களைச் செய்யவேண்டும். அவற்றை நாம் கேள்விகளாக அமைத்து, நம்முடைய சபையிடமே கேட்டு கிடைக்கும் விடைகளின் மூலம் நமது சபையைச் சோதிப்போம்.

i. நாம் நற்செய்தியின் சத்தியத்துக்கு உண்மையாக இருக்கிறோமா?

கொலோசே பட்டணத்தாருக்கு நற்செய்தி வந்திருந்தது (வச.6). அவர்கள் அதைக் கற்றுக் கொண்டிருந்ததால், அதைக் கூறி அறிவித்துக் கொண்டிருந்தார்கள். சில கிறிஸ்தவர்கள் ஆவிக்குரிய நிலையில் ஆழமாக இருப்பது என்பது, எளிய சாதாரண கருத்துக்களை பின்னால் தூக்கி எறிந்துவிடுவது என்று நினைக்கிறார்கள். ஆனால், சாதாரணமாகக் கூறப்படும் எளிய கருத்துக்கள் உண்மையில் மிகப் பெரியவையாக இருக்கும். இதற்கு உதாரணமாக, “நான் உன்னை நேசிக்கிறேன்” என்ற கூற்றை எடுத்துக்கொள்வோம். இதற்கு எவ்வளவு ஆழமான பொருள் உண்டு! நம்மை முதன்முதலில் கிறிஸ்துவண்டை வழிநடத்திய சொற்கள் எவை? அவற்றை நாம் ஆலயத்தின் பிரசங்க மேடையில் கேட்டோமா? ஓய்வுநாள் பள்ளி வகுப்பறையில் கேட்டோமா? வீட்டு ஜெபக்கூட்டத் தியானத்தின்போது கேட்டோமா?

நற்செய்தி என்பது தேவனுடைய கிருபையின் பிறப்பிடமாகும். அதன் செய்திக்கு நாம் உண்மையுள்ளவர்களாய் இருக்கவேண்டும்.

ii. நாம் வளர்ச்சி அடைந்துகொண்டும், கனி கொடுத்துக் கொண்டும் இருக்கிறோமா?

நற்செய்தியானது பயனற்றதும், செயலற்றி ருப்பதும் அல்ல. அது கனிகொடுப்பதன் மூலம் ஜீவன் தந்து கொண்டிருக்கிறது (வச.6). நம்முடைய ஆலயத்தில் நடைபெறும் பல்வேறு ஊழியங்கள் மூலமாக ஆத்துமாக்கள் கிறிஸ்துவிடம் வந்து கொண்டிருக்கின்றனவா?

iii. நாம் ஒரு அன்புக்குரிய சபைக் குடும்ப மாக இருக்கிறோமா?

கொலோசே திருச்சபையில் வெளிப்படுத்தப் பட்ட அன்பைக் குறித்துப் பவுல் கேள்விப்பட்டிருந்தார் (வச.8). அந்த அன்பு அவர்களிடம் இருந்த நற்செய்தியின் விளைவாக இருந்தது. நாம் ஒருவருக் கொருவர் இழந்துபோன ஆத்துமாக்களைத் தேடுவதில் கரிசனை உள்ளவர்களாய் இருப்போமானால், அவர்களுக்கு நமது விசுவாசத்தைப் பகிர்ந்து கொடுக்க விரும்புவோமானால், அப்பொழுது நம்மத்தியில் ஐக்கியமும் ஒருமைப்பாடும் உண்டு. இது இரக்கமற்ற தன்மையை அகற்றிவிடும்.

சபைத்தலைவர்கள் எண்ணற்ற பிரிவுகளில் பலவகையான தீர்மானங்களைச் செய்கிறார்கள். அவை,

  • வரவு செலவுத்திட்டம் (Budget)
  • பணியாளர் குழு
  • செயல் திட்டங்கள்
  • சேவைகள்
  • பாடத்திட்டங்கள்

என்பவைப் பற்றியதாக இருக்கும். இவ்விதத் தீர்மானங்களைச் செய்யும்போது, அவை நமது நற்செய்தியை முன்னேற்ற உதவுமா? என்று சோதிக்கவேண்டும். ஏனென்றால் நமது திருச் சபை பின்பற்றும் சத்தியங்களின் அடிப்படையில்தான், அது மற்றவர்களால் மதிப்பீடு செய்யப்படுகிறது.

இந்த வேதப்பகுதியைச் செயல்படுத்திப் பார்ப்பதில் இரண்டாவது அம்சம் நம்முடைய தனிப்பட்ட வாழ்க்கை சம்பந்தப்பட்டதாகும். அதுவும் சபை நற்செய்தியினால் மதிப்பிடப்படும்.

ஒரு திருச்சபையில் எண்ணற்ற தனி நபர்கள் உறுப்பினராய் இருப்பார்கள். தேவன் நம் ஒவ்வொருவரிடமும் நாம் செய்து சாதித்தது என்ன? என்று கணக்குக் கேட்பார். நற்செய்தியைப் பயன்படுத்தி என்ன சாதித்தோம் என்று கேட்பார். இங்கே நமது கடமை மூன்று வகையானது. அவை:

1.நாம் கேள்விப்பட்டவற்றுக்குப் பொறுப்பாளிகளாய் இருக்கிறோம்.

கொலோசே மக்கள் “கேள்விப்பட்டிருந்தார்கள்” (வச.3). அவர்கள் கேள்விப்பட்டது அவர்கள் வாழ்ந்து கொண்டிருந்த வாழ்க்கையைப் பாதித்தது. அவர்கள் முதிர்ச்சி அடைவதற்கு நேராக வளர்ச்சியடைய ஆரம்பித்தார்கள். நீங்கள் கேள்விப்பட்ட சத்தியங்கள் உங்கள் வாழ்க்கையில் மாறுதல்களை ஏற்படுத்துகின்றவா?

2. இரண்டாவதாக, நாம் கேள்விப்பட்டதை மற்றவர்களுக்குப் பகிர்ந்துகொடுக்கும் பொறுப்பும் நம்முடையது.

கொலோசே மக்கள் தாங்கள் கேள்விப்பட்ட சத்தியத்தைத் தங்களுக்குள் மட்டும் வைத்துக் கொள்ளவில்லை. அவர்கள் அதை மற்றவர்களுடன் பகிர்ந்துகொண்டார்கள். அதனால் மிகுந்த கனிகள் கொடுக்கப்பட்டன. ஆத்துமாக்கள் ஆதாயப்படுத்தப்பட்டு, சபை வளர்ந்து பெருகிற்று (வச.6). நற்செய்தியை நமக்கென்று வைத்துக்கொள்ளலாம். அடுத்தவர்களுக்கு கடத்தியும் விடலாம்.

3. மூன்றாவதாக, நாம் அன்புகூரக் கடமைப்பட்டவர்கள்.

கிறிஸ்தவ அன்பு எல்லாவற்றையும் உள்ளடக்கியது. அது எல்லாப் பரிசுத்தவான்களுக்கும் உரியது (வச.4). அது பரிசுத்த ஆவியானவரால் தரப்படுகிறது (வச.8). நற்செய்தியானது தேவன் நம்மேல் எவ்வளவாய் அன்புகூருகிறார் என்று காட்டுகிறது. நம்மில் இருக்கும் தெய்வீக அன்பு, நம்மை மற்றவர்கள் மீதும் அன்புகாட்டச் செய்கிறது. தேவனுடைய இருதயத்துக்குப் பிரியமானவனாய் இருக்கும் ஒருவன் இரக்கமற்றவனாகவும், குறை கூறுகிறவனாகவும் இருக்கமாட்டான். ஆனால் நாம் நற்செய்தியை மிகச் சாதாரணமானதாகக் கருதுவோமானால், நம்முடைய முதல் அன்பிலிருந்து வெளிப்படும் வல்லமையையும், நன்மைகளையும் இழந்துவிடுவோம்.

நற்செய்தி நம்மை அளந்து மதிப்பீடு செய்கிறது. அதைக் குறித்து அச்சம் கொள்ள வேண்டாம். தேவன் எப்போதும் உங்கள் தோள் மீது குனிந்து நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் என்று பார்த்துக் கொண்டிருப்பதால் பயப்பட வேண்டாம். ஒரு திருச்சபை என்ற நிலையில் நமது பொறுப்பும் உத்தரவாதமும் என்னவென்பதை நாம் மறந்து விடக்கூடாது. சத்தியம் எப்பொழுதுமே நற்செய்தியே! தனிநபர்களாகவும் இவற்றை மறவாது செயல்படவேண்டும்.

மொழியாக்கம்: G. வில்சன்