சத்திய வசனம் பங்காளர் மடல்

(நவம்பர்-டிசம்பர் 2022)

கிறிஸ்துவுக்குள் பிரியமுள்ள விசுவாச பங்காளர்களுக்கு,

உன்னதமான தேவகுமாரனின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறோம். 2022 ஆம் வருடம் முழுவதும் நம்மை கைவிடாமல் காத்து வழிநடத்தி வந்த தேவாதி தேவனை ஸ்தோத்திரிப்போம். கிறிஸ்து பிறந்ததினால் உண்டான சகல ஆசீர்வாதங்களையும், நன்மைகளையும், சமாதானத்தையும் நீங்கள் குடும்பமாகப் பெற்று அனுபவிக்க ஜெபிக்கிறோம். இதேபோல நமது தேசத்திலிருக்கிற கோடானகோடி மக்களும் இரட்சிப்பின் பாக்கியத்தை அடைய வேண்டுதல் செய்வோம்.

நவம்பர் மாதத்தில் சென்னையில் சத்தியவசன விசுவாச பங்காளர் கூடுகை மிகவும் ஆசீர்வாதமாய் நடைபெற்றது. பங்காளர்கள் அநேகர் குடும்பமாக கலந்துகொண்டு கூட்டத்தை சிறப்பித்தீர்கள். அனைவருக்கும் நன்றி கூறுகிறோம். பங்காளர்களை நேரிலே சந்தித்தது அதிக மகிழ்ச்சியைத் தருகிறது. இக்கூடுகை சிறப்பாக நடைபெறுவதற்கு உறுதுணையாக இருந்த பங்காளர்களுக்கும் சகோதரர்களுக்கும் எங்கள் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

சத்தியவசன 2023 ஆம் வருட காலண்டர் வெளிவந்துள்ளது. அதை வழக்கம்போல் பங்காளர்களுக்கு அனுப்பிவைப்போம். கூடுதலான காலண்டர் தேவைப்படுவோர் 30ஆம் பக்கத்தில் உள்ள விளம்பரத்தைக் கவனிக்கவும். தவிர்க்கமுடியாத சில காரணங்களினால் வெள்ளிக்கிழமைதோறும் காலை 5.30 மணிக்கு சத்தியம் டிவியில் ஒளிபரப்பாகி வந்த தொலைகாட்சி நிகழ்ச்சி ஜனவரி மாதத்திலிருந்து நிறுத்தம் செய்யப்படுகிறது என்பதை பங்காளர்களுக்குத் தெரியப்படுத்துகிறோம்.

இவ்விதழில் தேவன் அருளிய சொல்லிமுடியாத ஈவு என்ற தலைப்பில் சுவி.சுசி பிரபாகரதாஸ் அவர்கள் வழங்கிய செய்தியும் கிறிஸ்துமஸ் ஒருநாள் அல்ல; அது ஒரு அற்புதம் என்கிற சிறப்புச் செய்தியை சகோ.இ.வஷ்னி ஏர்னஸ்ட் அவர்களும் எழுதியுள்ளார்கள். மேலும் கிறிஸ்துவின் பிறப்பில் தேவன் தெரிந்துகொண்ட பாத்திரங்கள் என்ற தலைப்பில் சகோ.கே.பழனிவேல் ஆபிரகாம் அவர்கள் எழுதிய செய்தியும், நீர் என்னுடைய குமாரன்.. என்ற தலைப்பில் பேராசிரியர் S.C.எடிசன் அவர்கள் வழங்கிய செய்தியும் இடம்பெற்றுள்ளது. இந்த கிறிஸ்துமஸ் நாட்களில் இயேசுகிறிஸ்துவின் இரண்டாம் வருகைக்கு நாம் ஆயத்தப்படும்படியாக சீக்கிரமாய் வருகிறேன் என்ற தலைப்பில் சகோதரி சாந்தி பொன்னு அவர்கள் சிறப்புகட்டுரை எழுதியுள்ளார்கள். தானியேல் புஸ்தகம் தொடர் வேதபாடத்திலிருந்து எழுபது வாரங்கள் என்ற தலைப்பில் தானியேல் 9ஆம் அதிகாரத்திலிருந்து சிறப்புச்செய்தியும் இடம்பெற்றுள்ளது.

இச்செய்திகள் உங்களது ஆவிக்குரிய வாழ்க்கைக்கு அதிக பயனுள்ளதாக இருக்கும் என்று விசுவாசிக்கிறோம். உங்கள் யாவருக்கும் எமது கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறோம்.

கே.ப.ஆபிரகாம்