• சுவி. சுசி பிரபாகரதாஸ் •
(நவம்பர்-டிசம்பர் 2022)

சுவி. சுசி பிரபாகரதாஸ்

ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவினுடைய புண்ணிய நாமத்தினாலே உங்கள் அனைவருக்கும் எனது கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறேன். அப்போஸ்தலனாகிய பவுல் 2 கொரிந்தியர் 9:15இல் எழுதிய தேவன் அருளிய சொல்லிமுடியாத ஈவுக்காக அவருக்கு ஸ்தோத்திரம் என்ற வேதவாக்கியத்திலிருந்து இந்நாளிலே கிறிஸ்துமஸைக் குறித்ததான ஒரு நல்ல செய்தியைச் சொல்ல நான் விரும்புகிறேன்.

பவுல் ஒரு சிறந்த ஊழியர்; அதுமாத்திரமல்லாமல் கமாலியேலின் பாதத்திலே கற்றுக் கொண்டவர். இவர் ஒரு பரிசேயன், பக்திமான் என்று சொல்லலாம். ஆண்டவருக்காக வைராக்கியங்கொண்ட ஒரு மனிதன்; ஆண்டவரிடத்திலிருந்து தனிப்பட்ட அளவில் நல்லதொரு வெளிப்பாட்டையும் சிறந்த ஞானத்தையும் பெற்ற மனிதன் ஆவார். அவர் எழுதுகிறார்: “தேவன் அருளிய சொல்லி முடியாத ஈவுக்காக அவருக்கு ஸ்தோத்திரம்” என்று. ஈவுகள் என்று எழுதவில்லை, ஈவு என்று எழுதுகிறார். வல்லமைகள், வாய்ப்புகள் என்று எழுதவில்லை; தேவன் அருளிய சொல்லி முடியாத ஈவு என்று எழுதுகிறார்.

நான் புரிந்துகொண்ட ஒரு உண்மை என்னவென்றால் அந்த அதிகாரம் முழுவதையும் நீங்கள் வாசிப்பீர்கள் என்றால் 1 – 15 வசனங்கள் முடிய உள்ள பகுதியிலே தேவனுக்கு கொடுக்கிற விதத்தைக் குறித்து பவுல் அடிகளார் மிக விவரமாக அவர் எழுதுகிறார். அப்படி எழுதும்போதுதான் அந்த அதிகாரத்தையுடைய ஒரு கிரீட வசனம் போல இந்த வசனத்தை எழுதி முடிக்கிறார்.

அருமையானவர்களே, நம்முடைய நாட்களிலேயே மிக முக்கியமான ஒரு காலம் இந்த கிறிஸ்துமஸ் காலம் ஆகும். இந்த நாட்களுக்கான முக்கியமான ஒரு செய்தி என்னவென்றால், தேவன் அருளிய சொல்லிமுடியாத ஈவு என்பது நம்முடைய ஆண்டவராகிய இயேசுவானவர் என்பதை நாம் புரிந்துகொள்ள அழைக்கப்படுகிறோம்.

1. விவரிக்கமுடியாத தேவனுடைய ஈவு

முதலாவதாக, ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து வானவர் யார் என்றால் அவர் தேவனுடைய ஈவு என்று செல்லலாம். God’s Giving Gift என்று சொல்லலாம். ஆண்டவரே நமக்கு தம்முடைய ஈவாக தம்முடைய குமாரனைத் தந்தார். உண்மையாகவே கொடுக்கின்ற ஈவுகளிலே சிறந்த சொல்லி முடியாத, விவரிக்க முடியாத ஒரு ஈவு என்றால் குமாரனாகிய இயேசுவானவர்தான்.

யோவான் 3: 16ஆம் வசனத்தை வாசித்துப் பாருங்கள். தேவன், தம்முடைய ஒரே பேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்திய ஜீவனை அடையும்படிக்கு அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார். அதில் தந்தருளி என்கிற வார்த்தை மிக முக்கியமான ஒரு வார்த்தையாக இருக்கிறது. தேவனாகிய கர்த்தர் தம்முடைய திட்டத்தின் அடிப்படையிலே ஏற்ற காலத்திலே தம்முடைய குமாரனைத் தந்து தன்னுடைய அன்பை வெளிப்படுத்தினார்.

ரோமருக்கு எழுதின நிருபம் 8:32ஆம் வசனத்தைப் பாருங்கள். தம்முடைய சொந்த குமாரனென்றும் பாராமல் நம்மெல்லாருக்காகவும் அவரை ஒப்புக்கொடுத்தவர், அவரோடுகூட மற்ற எல்லாவற்றையும் நமக்கு அருளாதிருப்பதெப்படி? என்று அப்போஸ்தலனாகிய பவுல் எழுதுகிறார்.

நாம் ஒரு நகைக்கடைக்கு சென்று நகைகளை வாங்கினோமானால், அதை ஒரு சாதாரண தாளில் பொதிந்து தருவதில்லை. நல்ல அலங்காரமான பெட்டிகளில் அதைத் தருகிறார்கள். அதே போலதான் தேவனாகிய கர்த்தர் நமக்கு கொடுத்த விலைமதிக்க முடியாத ஒரு ஆபரணம், ஈவு யாரென்றால் குமாரனாகிய இயேசுவானவர் மட்டுமே! அவரோடுகூட எல்லா நன்மைகளையும் நமக்குத் தருவார் என்பதுதான் உண்மையாகும்.

1கொரிந்தியர் 1:31ஆம் வசனத்தில் இவ்விதமாக வாசிக்கிறோம்: கிறிஸ்து இயேசுவே தேவனால் நமக்கு ஞானமும் நீதியும் பரிசுத்தமும் மீட்புமானார். அப்படியானால் இயேசுவை நாம் ஏற்றுக் கொண்டால் தேவஞானம், தேவநீதி, தேவனுடைய பரிசுத்தமும், மீட்பும் நமக்குக் கிடைக்கிறது.

அருமையானவர்களே, 1 தீமோத்தேயு 6: 17 ஆம் வசனம் இவ்விதமாகச் சொல்கிறது: நாம் அனுபவிப்பதற்குச் சகலவித நன்மைகளையும் நமக்குச் சம்பூரணமாய்க் கொடுக்கிற ஜீவனுள்ள தேவன் மேல் நம்பிக்கை வைக்கவும் என்று பவுல் எழுதுகிறார். அப்படியானால் தேவன் தம்முடைய குமாரனையேத் தரும்பொழுது மற்ற எல்லாவற்றையும் தருவது நிச்சயமாக இருக்கிறது. ஆகவே தேவன் தந்த விலைமதிக்க முடியாத ஈவு அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்து!

2. விவரிக்கமுடியாத ஈவை நாம் எல்லோரும் பெற்றுக்கொள்ளும் ஈவு

இரண்டாவதாக, தேவன் கொடுத்த அந்த ஈவை நாம் பெற்றுக்கொள்ளுகிற ஈவாக (Receiving Gift) பார்க்கிறோம். சில காரியங்களை நாம் பெற்றுக்கொள்ள முடியாது. ஆனால், கிறிஸ்து இயேசுவை நாம் எல்லாரும் பெற்றுக்கொள்ளலாம். அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக்கொண்டவர்கள் எத்தனை பேர்களோ, அத்தனை பேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங் கொடுத்தார் (யோவான் 1:12). அப்படியானால் அருமையான சகோதர சகோதரிகளே, ஒரு குறிப்பிட்ட மக்கள்தான், ஒரு குறிப்பிட்ட ஜனம் மட்டுந்தான் இயேசுவை ஏற்றுக்கொள்ளமுடியும் என்கிற கருத்து அல்ல. அவருடைய நாமத்தின் மேல் விசுவாசம் வைத்து அவரை ஏற்றுக்கொண்டவர்கள் எத்தனை பேர்களோ அத்தனை பேர்களும் அவருடைய பிள்ளைகளாகும்படி அவர் அதிகாரங்கொடுக்கிறார். நம்முடைய வேலை ஏற்றுக்கொள்ளுகிற வேலை. அவருடைய கடமை என்னவென்றால் நம்மை அவருடைய பிள்ளைகளாக ஏற்றுக்கொள்கிற அதிகாரத்தைத் தருகிறார்.

அருமையானவர்களே, தேவன் தந்த விலை மதிக்கமுடியாத ஈவு யாரென்றால் குமாரன் என்று பார்த்தோம். தேவன் தந்த விவரிக்க முடியாத அந்த ஈவை யாவரும் பெற்றுக்கொள்ளலாம் என்றும் பார்த்தோம். சகேயுவைக் குறித்து லூக்கா 19: 1-10 வசனங்களை வாசித்து பார்த்தால் சகேயு ஆண்டவராகிய இயேசுவை தன் வீட்டிலே ஏற்றுக் கொண்டான். தன் பாவங்களை அறிக்கையிட்டு சரிபண்ண முயற்சித்தான். ஆண்டவராகிய இயேசுவானவர் சொல்கிறார்: இந்த வீட்டுக்கு இரட்சிப்பு வந்தது. இவனும் ஆபிரகாமின் குமாரன் என்று. மக்களால் வெறுக்கப்பட்ட ஆயக்காரத் தலைவனான சகேயுவை ஆண்டவர் ஏற்றுக்கொண்டார்.

சவுல் என்பவர் ஆண்டவருக்கு விரோதமாக கலகம் பண்ணினவர். அந்த மனிதனை ஆண்டவர் சந்தித்து தன் அடியானாக மாற்றிக்கொண்டார். சகேயுவை எடுத்துக்கொண்டோமானால் அவன் ஒரு சுயநலமுள்ள மனிதன் ஆவான். ஆனால், இந்த சவுல் எப்படிப்பட்டவன் என்றால் ஆண்டவரை எதிர்த்து தன் இருதயத்தைக் கடினப்படுத்தின ஒரு மனிதன். அவனைதான் ஆண்டவர் அங்கே புறமக்களுக்கு சுவிசேஷகனாய் மாற்றினார்.

அப்போஸ்தலர் 10:2ஆம் வசனத்தில் கொர்நெலியுவைப்பற்றி பார்க்கிறோம். இவர் ஒரு ரோமன். நன்றாக தான தருமங்களைச் செய்தவன். பக்தி நிறைந்தவன். அவன் ஆண்டவரை ஏற்றுக்கொள்ளும்பொழுது ஆண்டவர் அவருடைய வாழ்க்கையில் ஒரு பெரிய, அபிஷேகம் பெற்ற மனிதனாய் மாற்றினார். திருமறையிலே அவனுடைய பெயர் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

ஆண்டவராகிய இயேசுவானவர் பெற்றுக் கொள்ளும் ஒரு ஈவு! (Receiving Gift). நீங்கள் யாராக இருந்தாலும் எந்த நிலையில் இருந்தாலும் எப்படிப்பட்டவர்களாக இருந்தாலும் ஆண்டவருக்கு உங்கள் இருதயத்தின் கதவைத் திறந்து கொடுப்பீர்கள் என்றால் அவரை ஏற்றுக்கொண்டு அவருடைய பிள்ளையாய் வாழக்கூடிய அதிகாரத்தை அவர் நமக்குத் தருகிறார். எவ்வளவு ஆச்சரியமான ஒரு காரியம் பாருங்கள்!

ஒரு வாலிபன் செய்த குற்றத்தினிமித்தம் அவனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. அவனுடைய தாய், கவர்னருடைய காலில் விழுந்து என் மகனை காப்பாற்றும் என்று வேண்டிக்கொண்டார்கள். அந்த கவர்னர் ஒரு நாள் இந்த வாலிபன் இருக்கிற சிறைச்சாலைக்குச் சென்றார். வாலிபருக்கு அவர் கவர்னர் என்று தெரியாது. கதவு திறக்கப்பட்டது. கவர்னர் அந்த வாலிபனோடு பேசினார். நீ இயேசுவை நம்புகிறாயா, வேதத்தை வாசித்தாயா? உன் தாயினுடைய ஜெபத்தை நீ நம்புகிறாயா என்று கேட்டபோது அவன் தலைகுனிந்து எந்த ஒரு பதிலும் சொல்லவில்லை. கவர்னர் பிறகு போய்விட்டார்.

கவர்னர் போனபிற்பாடு அந்த சிறைச்சாலை அதிகாரி சொன்னார்: வந்தவர் கவர்னர், உனக்கு மீட்பைத் தருவதற்காக, உனக்கு விடுதலை தருவதற்காக வந்தார். அவர் கேட்ட கேள்விகளுக்கு நீ சரியாய் பதில் சொல்லாதபடி அவரை ஏற்றுக் கொள்ளாததினாலே உனக்கு கிடைத்த வாய்ப்பை இழந்தாய் என்று சொன்னபோது அநத் வாலிபன் கதறி அழுது புரண்டான். ஆண்டவராகிய இயேசுவானவர் கிருபையுள்ள தம்முடைய வார்த்தையின் மூலமாக சந்தித்துவருகிறார். அநேகர் அவரை உதாசீனப்படுத்தும்விதமாக அவருடைய மீட்பை இழந்துவிடுகிறோம். உலகத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கும்படி தேவன் தம்முடைய குமாரனை உலகத்தில் அனுப்பாமல், அவராலே உலகம் இரட்சிக்கப்படுவதற்காகவே அவரை அனுப்பினார் (யோவான் 3:17). ஆகவே விவரிக்கமுடியாத ஒரு ஈவு அவர். அதேசமயத்தில் அந்த ஆண்டவ ராகிய இயேசுவை பெற்றுக்கொள்ளும் ஒரு ஈவு என்றும் பார்க்கிறோம்.

3. விவரிக்கமுடியாத ஈவை மற்றவர்களுக்கு பகிர்ந்துகொள்ள வேண்டும்.

மூன்றாவதாக, இந்த அருமையான ஆண்ட வர் மற்றவர்களுக்குப் பகிர்ந்து கொடுக்கக்கூடிய அல்லது அறிவிக்கக்கூடிய ஈவாக இருக்கிறார் (Sharing Gift of God).

நமது வழக்குக்காக ஒரு வழக்கறிஞரிடத்தில் செல்கிறோம். அவர் வாதாடிய வழக்கு ஜெயித்து விடுகிறது. இதைக் குறித்து நாம் மற்றவர்களுக்கு இலவசமாக அவரைப் பற்றி விளம்பரம் செய்கிறோம். ஒரு மருத்துவரிடத்தில் செல்கிறோம். அவர் கொடுக்கும் மருந்தினால் சுகமாகிவிடுகிறது. மருத்துவரைப்பற்றி நமக்கு தெரிந்த எல்லாரிடத்திலும் இலவச விளம்பரம் செய்கிறோம். ஒரு ஊழியரிடத்தில் ஜெபிக்கப் போகிறோம். அந்த ஜெபத்தின் மூலமாக நமது விண்ணப்பங்களுக்கு பதில் கிடைத்தால், அவரைப்பற்றி எல்லாருக்கும் சொல்கிறோம்.

நம்முடைய ஆண்டவராகிய இயேசுவானவர் உண்மையாகவே தேவனுடைய விவரிக்க முடியாத ஈவு என்றும், பெற்றுக்கொள்ளும் ஈவு என்றும் தியானித்தோமல்லவா. இந்த ஈவை நாம் மறைத்து வைக்கக்கூடாது. மற்றவர்களுக்கு அறிவிக்கவேண்டும். 2இராஜாக்கள் 7ஆம் அதிகாரத்தில் நாம் இந்த சம்பவத்தை வாசிக்கிறோம். கடுமையான பஞ்சம்; அதினாலே அங்குள்ள பெண்கள் தங்கள் பிள்ளைகளை கொன்று அவித்து சாப்பிட்டார்கள். இப்படிப்பட்ட அந்த சூழ்நிலையிலே அங்கு தீர்க்கதரிசியிடம் போகிறார்கள். அவர் சொல்கிறார்: “நாளைக்கு இந்நேரத்திலே..” என்று சொல்லி நடைபெறப் போகும் அற்புதத்தை குறித்துச்சொல்கிறார். அங்குள்ள பிரதான ஆசாரியன் அது எப்படி ஆகும்? வானத்தின் மதகுகள் திறந்தாலும் இது கூடுமோ என்று கேள்வி கேட்கிறான்.

ஒரே நாளிலே என்ன நடந்தது? சீரியருடைய பாளையத்தில் ஆண்டவர் ஒலி சப்தங்களை எழுப்பினார். அதாவது சீரியரின் இராணுவத்திற்கு இரதங்களின் இரைச்சலையும், குதிரைகளின் இரைச்சலையும், மகா இராணுவத்தின் இரைச்சலையும் கேட்கப்பண்ணினதால், சீரியர்கள் எண்ணிக்கொண்டார்கள்; அங்கே இஸ்ரவேலின் ராஜா ஏத்தியரின் ராஜாக்களையும் எகிப்தியரின் ராஜாக்களையும் நமக்கு விரோதமாகக் கூலி பொருத்தினான் என்று சொல்லி பயந்து ஓடிவிட்டார்கள். அந்த சமயத்தில் என்ன நடந்தது? குஷ்ட ரோகிகளான நாலுபேர் அந்த பாளையத்தின் முன்னணிமட்டும் வந்து, புசித்து குடித்து, தங்களுக்குத் தேவையானவைகளை எடுத்து ஒளித்துவைத்தார்கள். 2இராஜாக்கள் 7:9ஆம் வசனத்தில் பேசிக் கொள்கிறார்கள்; நாம் செய்கிறது நியாயமல்ல, இந்நாள் நற்செய்தி அறிவிக்கும் நாள்; நாம் மவுனமாயிருந்து, பொழுது விடியுமட்டும் காத்திருந்தால் குற்றம் நம்மேல் சுமரும்; இப்போதும் நாம் போய் ராஜாவின் அரமனையாருக்கு இதை அறிவிப்போம் வாருங்கள் என்றார்கள். அருமையானவர்களே, இந்த நற்செய்தியை கேட்டபொழுது அங்கே துன்பத்தின் துயரத்தில் இருந்த மக்கள் ஆசீர்வாதங்களைப் பெற்றார்கள்.

அதேபோலத்தான் இந்த குஷ்டரோகிகளைப் போல நானும் நீங்களும் ஆண்டவரின் விடுதலைபெற்ற நாம் சுவிசேஷத்தை அறிவிக்கவும் ஆண்டவரைக் குறித்து மற்றவர்களிடத்திலே பகிர்ந்துகொள்ளவும் அழைக்கப்படுகிறோம். கிறிஸ்துமஸ் செய்தியானது மூடப்படவேண்டிய ஒரு செய்தியல்ல. இது ஒரு அறிவிக்கப்பட வேண்டிய செய்தி. எல்லா ஜனத்துக்கும் மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கும் நற்செய்தி என்று லூக்கா 2:11 ஆம் வசனம் சொல்கிறது.

கிரேக்கருக்கும், மற்ற அந்நியர்களுக்கும், ஞானிகளுக்கும், மூடருக்கும் நான் கடனாளியா யிருக்கிறேன். கிறிஸ்துவின் சுவிசேஷத்தைக் குறித்து நான் வெட்கப்படேன் ( ரோமர் 1:14-15) என்றும் கிறிஸ்துவினுடைய அன்பு எங்களை நெருக்கி ஏவுகிறது (2கொரி.5:14) என்றும் பவுல் கூறுகிறார். நாம் நற்செய்தியை அறிவிப்பதே தேவனுடைய திட்டமாகும்.

இந்த செய்தியை வாசித்துக்கொண்டிருக்கும் அருமையானவர்களே நம்முடைய வாழ்க்கையைக் குறித்து நாம் சிந்திப்போம். ஆண்டவரை அறிந்து, அவரை புரிந்துகொண்ட நீங்கள், அவரை ஆராதித்து, ஆண்டவருடைய ஆசீர்வாதத்தை பெற்றுக்கொண்ட நீங்கள் மற்றவர்களுக்கு இந்த நற்செய்தியை அறிவிக்க வேண்டுமல்லவா! சுவிசேஷத்தை நாம் அறிவிக்கவில்லையென்றால் நமக்கு ஐயோ! (1கொரி.9:10) என்று வேதம் எச்சரிக்கிறது. ஆகவே தனிப்பட்ட மனிதர்களுக்கும் நமது குடும்பத்தாருக்கும் ஆண்டவருடைய நற்செய்தியை அறிவிப்பதற்குக் கடமைப்பட்டிருக்கிறோம். விதைப்பது நமது கடமை. ஆனால், பலன்கொடுப்பது ஆண்டவருடைய கிருபையாயிருக்கிறது. பிரசங்கி 11:1 இவ்வாறு சொல்கிறது: உன் ஆகாரத் தைத் தண்ணீர்கள்மேல் போடு; அநேக நாட்களுக் குப் பின்பு அதின் பலனைக் காண்பாய் என்று. நாம் விதைத்தால், அறிவித்தால் பகிர்ந்துகொண்டால் முப்பது, அறுபது, நூறு என்று பலன் தருவார்.

4. விவரிக்கமுடியாத அந்த ஈவை வாழ்க்கையினாலும் செயலினாலும் காண்பிக்கவேண்டும்.

நான்காவதாக, அந்த சொல்லிமுடியாத ஈவை நாம் நம்முடைய செயலில் காட்டவேண்டும். ஆண்டவராகிய இயேசுவை தரிசித்த சாஸ்திரிகள் இயேசுவுக்கு அன்பளிப்பைக் கொடுத்தார்கள். ஆனால், நம்முடைய வாழ்க்கையிலே, கிறிஸ்துவின் மேலுள்ள அன்பை, பக்தியை, அவர்மேலுள்ள அர்ப்பணிப்பை நமது செயலில் காட்டவேண்டும்.

அதாவது, மத்தேயு 5:16 சொல்கிறது: இவ்விதமாய், மனுஷர் உங்கள் நற்கிரியைகளைக் கண்டு, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவை மகிமைப்படுத்தும்படி, உங்கள் வெளிச்சம் அவர்கள் முன்பாகப் பிரகாசிக்கக்கடவது. இங்கு வெளிச்சம் என்பது நற்கிரியைகளாகச் சொல்லப்படுகிறது. யாக்கோபு 2:15,16 ஆம் வசனத்தில் வஸ்திரமில்லாதவனைப் பார்த்து, பசியாயிருக்கிறவர்களைப் பார்த்து நீங்கள் குளிர்காய்ந்து பசியாறுங்கள் என்று சொல்லியும், சரீரத்திற்கு வேண்டியவைகளை அவர்களுக்குக் கொடாவிட்டால் பிரயோஜனமென்ன? என்பதைச் சுட்டிக்காட்டுகிறார். அப்படியானால் நம்முடைய விசுவாசத்தை நாம் கிரியைகளில் காண்பிக்க வேண்டும். மிகவும் சிறியவராகிய என் சகோதரரான இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்தீர்களோ, அதை எனக்கே செய்தீர்கள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்று ஆண்டவராகிய இயேசுவும் மத்.25:40ஆம் வசனத்தில் சொல்கிறார்.

லூக்கா 10:30-37 வரையுள்ள சம்பவத்தில் நல்ல சமாரியனுடைய உவமையிலிருந்தும் நாம் கற்றுக்கொள்கிறோம். யாக்கோபு 1:26,27ஆம் வசனத்தில் எது உண்மையான தேவபக்தி என்று சொல்லப்பட்டுள்ளது. நாவை அடக்கவேண்டும். அதே சமயத்தில் விதவைகள், திக்கற்ற பிள்ளைகள் விசாரிக்கப்படவேண்டும். உலகத்தால் கறைபடாதபடிக்கு காத்துக்கொள்ளவேண்டும்.

ஆகவே கிறிஸ்துமஸ் நற்செய்தியாக நான்கு குறிப்புகளை நாம் தியானித்தோம். அருமையானவர்களே, உங்கள் வாழ்வு என் வாழ்வு எப்படி இருக்கிறது? இந்த கிறிஸ்துமஸ் நாட்களில் நம் வாழ்வை மறுமதிப்பீடு செய்வோம். சொல்லிமுடியாத, இந்த விவரிக்கமுடியாத ஈவை பெற்றுக்கொண்ட நாம் அதை மற்றவர்களுக்கும் அறிவிப்போம், அவருக்காக வாழ்வோம், அவருக்காக உழைப்போம். கிறிஸ்துவின் நாமம் இந்நாட்களில் நம் மூலமாக மகிமைப்படட்டும்.

நினைவுகூருங்கள்!

சமுதாயமும் வணிகமும் வளர்ந்துவரும் இந்த நவீன காலத்து சூழலில் ஏற்பட்டுள்ள கவர்ச்சியையும் வனப்பையும் தவிர்த்துவிட்டு கிறிஸ்துமஸ்ஸின் அழகைமட்டும் மக்களுக்கு நினைவூட்டுவது நமக்கு முன்பாக இருக்கும் மிகப் பெரிய சவால்!

• பில் க்ரவுடர் •