• Bro.K.P.ஆபிரகாம் •
(நவம்பர்-டிசம்பர் 2022)

Bro.K.P.ஆபிரகாம்

தேவனுடைய மீட்பின் திட்டத்தில் கிறிஸ்துவின் பிறப்பு முக்கியமானதும் இன்றியமையானதுமாயிருக்கிறது. இயேசுகிறிஸ்துவின் பிறப்பானது அதிசயமானதும் அற்புதமானதுமான நிகழ்வாகும். இயேசுகிறிஸ்துவின் பிறப்பு ஏதோ தற்செயலாக நடந்த நிகழ்வல்ல; தேவ தீர்மானத்தின்படி பரிசுத்த வேதாகமத்தில் முன்குறிக்கப்பட்டு தீர்க்கதரிசிகளினால் முன்னறிவிக்கப்பட்ட ஒன்றாகும். இயேசுகிறிஸ்துவின் பிறப்பில் தேவனின் பரிபூரண அன்பு விளங்கினது. தம்முடைய ஒரே பேறான குமாரனாலே நாம் பிழைக்கும்படிக்குத் தேவன் அவரை இவ்வுலகத்திலே அனுப்பினதினால் தேவன் நம்மேல் வைத்த அன்பு வெளிப்பட்டது ( 1யோவான் 4:9).

கிறிஸ்துவின் பிறப்பின்போது தேவன் தெரிந்துகொண்ட பாத்திரங்களை நாம் உற்று நோக்கும்போது மிகவும் ஆச்சரியமாயிருக்கிறது. அவர்கள் எளிமையானவர்களும் தேவனுக்குள்; மறைந்து வாழ்கிறவர்களுமாயிருந்தனர். அவர்களுக்கென்று சமுதாயத்திலோ ஆன்மீகத்திலோ எந்த விதமான அடையாளங்களோ அந்தஸ்தோ கிடையாது. ஆனால் தேவன் அவர்களைத் தமது திட்டத்திற்குத் தெரிந்துகொள்ளும் அளவிற்கு சிறந்த ஆவிக்குரியப் பண்புகளையும் குணாதிசயங்களையும் உடையவர்களாயிருந்தனர். தேவன் வெளித்தோற்றத்தின்படி மதிப்பீடு செய்கிறவர்களல்ல என்பதும் நம்முடைய உள்ளான ஆவிக்குரிய வாழ்க்கையின்படியே ஒவ்வொருவரையும் நோக்குகிறார் என்பதை கிறிஸ்து பிறப்பின் சம்பவங்கள் வாயிலாக நாம் அறியமுடிகிறது. தேவன் தாம் தெரிந்துகொண்ட சில பாத்திரங்களைக் குறித்தும் நாம் கற்றுக்கொள்ளக்கூடிய அவர்களது ஆவிக்குரிய பண்புகளைக் குறித்தும் இச் செய்தியில் பார்ப்போம்.

சகரியா – எலிசபத் தம்பதியரின் பரிசுத்த நடக்கையும் நீதியுள்ள வாழ்வும்

லூக்கா இயேசு பிறப்பின் சம்பவங்களை எழுதும்போது ஆசாரிய ஊழியம் செய்துவந்த சகரியா-எலிசபெத் தம்பதியரிடமிருந்து ஆரம்பிக்கிறார். கர்த்தருக்கு பாதைகளை ஆயத்தம் பண்ணும்படிக்கு தேவனால் முன் அறிவிக்கப்பட்ட யோவான் ஸ்நானன் பிறப்பதற்கு இவர்களைத் தெரிந்துகொள்கிறார். இவர்கள் பிள்ளைகள் இல்லாதவர்களும் வயது சென்றவர்களுமாக இருந்தனர். ஆண்டவருடைய நியமங்களை இவர்கள் குடும்பமாக கைக்கொண்டு குற்றமில்லாதவர்களாக நடந்ததோடு தேவனுக்கு முன்பாக நீதியுள்ளவர்களாக காணப்பட்டனர். இவர்களது பக்தி வாழ்க்கை தேவனுக்கு மறைவாக இருக்கவில்லை. சங்கீதம் 4:3இல் பக்தியுள்ளவனைக் கர்த்தர் தமக்காகத் தெரிந்துகொண்டாரென்று அறியுங்கள் என்று தாவீது கூறுவதைப் பார்க்கிறோம்.

அருமையானவர்களே, அநீதி நிறைந்த இவ்வுலகில் பரிசுத்தமுள்ளவர்களாகவும் நீதியுள்ளவர் களாகவும் வாழ்கின்ற அவர்களுடைய பிள்ளைகளிடத்தில் தேவன் பிரியமுள்ளவராக இருக்கிறார். இப்படியாக வாழ்கின்ற மக்கள் ஒருவேளை இவ்வுலகில் மதிப்பீடு செய்யப்படாமல் அலட்சியம் பண்ணப்படலாம். ஆனால், தேவன் அவர்களிடத்தில் பிரியமாயிருக்கிறார். இயேசு கிறிஸ்து அருளிய பாக்கிய வசனங்களில் இதைப் பார்க்கிறோம்: நீதியின்மேல் பசிதாகமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் திருப்தியடைவார்கள். இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் தேவனைத் தரிசிப்பார்கள் (மத்.5:6,9).

சகரியா எலிசபெத் தம்பதியினரின் வாழ்க்கையில் அவர்கள் முதிர்வயதிலும் அவர்களது நீண்ட நாள் வேண்டுதலை தேவன் கேட்டருளினார். ஒரு அசாதாரணமான காரியத்தை அவர்கள் வாழ்வில் செய்து சந்தோஷமும் மகிழ்ச்சியும் அடைய செய்தார். யோவான் ஸ்நானனுடைய பிறப்பினிமித்தம் அநேகருக்கு சந்தோஷம் உண்டானது (லூக்.1:14). இந்த யோவான் ஸ்நானன் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவிற்கு வழியை ஆயத்தம் பண்ணினார். கிறிஸ்துவின் பிறப்பை கொண்டாடும் நாமும் ஆண்டவருக்கு பிரியமானபடி குற்றமில்லாதவர்களும் நீதியுமுள்ள வாழ்க்கையை வாழ்கிறோமா என்பதை ஆராய்ந்துபார்த்து நம்மை அவருக்கு ஒப்புக்கொடுப்போம்.

மரியாள் – அடிமையின் தாழ்மை

அடுத்ததாக, காபிரியேல் தூதனை தேவன் மரியாளிடம் அனுப்பினார். “கிருபை பெற்றவளே, வாழ்க, கர்த்தர் உன்னுடனே இருக்கிறார், ஸ்திரீகளுக்குள்ளே நீ ஆசீர்வதிக்கப்பட்டவள்” என்ற வாழ்த்துதலோடு மரியாளை காபிரியேல் சந்திக்கிறான். இந்த வாழ்த்துதல் எப்படிப்பட்டதோ என்று மரியாள் கலங்குகிறாள். இந்த வாழ்த்துதலுக்குக் காரணம் தேவனுடைய கண்களில் மரியாளுக்கு கிருபை கிடைத்தது. மரியாள் ஆண்டவருக்கு அடிமையாக தன்னைத் தாழ்த்தி வாழ்ந்து வந்த படியால், தேவன் அவள்மேல் பிரியம் வைத்தார். அவளது தாழ்மையை தேவன் கண்டார்.

எவ்வளவோ வைராக்கியமான பக்திமான்களும் மேன்மையுள்ள மக்களும் வாழ்ந்த அந்த நாட்களில் இயேசுகிறிஸ்து இவ்வுலகில் பிறப்பதற்கு மரியாளைத் தெரிந்துகொண்டார். இதை உணர்ந்த மரியாள், “அவர் தம்முடைய அடிமையின் தாழ்மையை நோக்கிப்பார்த்தார்; இதோ, இதுமுதல் எல்லாச் சந்ததிகளும் என்னைப் பாக்கியவதி என்பார்கள். பலவான்களை ஆசனங்களிலிருந்து தள்ளி, தாழ்மையானவர்களை உயர்த்தினார்” என்று தியானித்துப் பாடுகிறாள் (லூக். 1:52).

பெருமையுள்ளவர்களிடம் தேவன் ஒருபோதும் பிரியமாயிருந்ததில்லை. தாழ்மை எவ்வாறு ஆவிக்குரிய பண்பாக இருக்கிறதோ அதைப் போன்று பெருமையானது பின்மாற்றத்தின் அடையாளமாக இருக்கிறது என்பதை நாம் அறிய வேண்டும். எனவேதான் யாக்கோபு தனது நிருபத்தில், “தேவன் பெருமையுள்ளவர்களுக்கு எதிர்த்து நிற்கிறார், தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறாரென்று சொல்லியிருக்கிறது” (4:6) என்றும் கர்த்தருக்கு முன்பாகத் தாழ்மைப்படுங்கள், அப்பொழுது அவர் உங்களை உயர்த்துவார் (4:10) என்றும் ஆணித்தரமாக மிகவும் வலியுறுத்தி கூறுவதைப் பார்க்கிறோம். மரியாளிடத்தில் பாலகனாக பிறந்த இயேசுகிறிஸ்துவும் “தேவனுடைய ரூபமாயிருந்தும், தேவனுக்குச் சமமாயிருப்பதைக் கொள்ளையாடின பொருளாக எண்ணாமல், தம்மைத்தாமே வெறுமையாக்கி, அடிமையின் ரூபமெடுத்து, மனுஷர் சாயலானார். அவர் மனுஷரூபமாய்க் காணப்பட்டு, மரணபரியந்தம், அதாவது சிலுவையின் மரணபரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி, தம்மைத்தாமே தாழ்த்தினார்” (பிலி.2:6-8). இந்த கிறிஸ்துமஸ் நாட்களில் தேவன் விரும்புகிற தாழ்மையை நாம் கற்றுக் கொள்வதற்கு நம்மை அர்ப்பணிப்போம். நாம் தேவனிடத்தில் கிருபைமேல் கிருபை பெற்றுள்ளோம். கர்த்தருக்கு முன்பாக தாழ்மையுள்ளவர்களாக ஜீவிப்போம்.

யோசேப்பின் நற்குணம்

யோசேப்புக்கும் மரியாளுக்கும் திருமண நிச்சயம் நடைபெற்றிருந்தது. யோசேப்பிற்கென்று நியமிக்கப்பட்ட மரியாள் இப்போது பரிசுத்த ஆவியினாலே கர்ப்பந்தரித்தாள் என்பதை யோசேப்பு அறியவந்தார். அவன் நீதிமானாக இருந்ததினால் மரியாளை அவமானப்படுத்த விரும்பாமல் இரகசியமாக தள்ளிவிட முயற்சிக்கிறார். இங்குதான் யோசேப்பின் நற்குணத்தை தேவன் கண்டார். இச்சமயத்தில் தேவதூதன் யோசேப்பின் சொப்பனத்தில் தோன்றி அவனது பயத்தை நீக்கி தேவனுடைய இரட்சிப்பின் திட்டத்தை அவனிடம் விளக்கினான். உன் மனைவியாகிய மரியாளைச் சேர்த்துக்கொள்ள ஐயப்படாதே; அவளிடத்தில் உற்பத்தியாயிருக்கிறது பரிசுத்த ஆவியினால் உண்டானது. அவள் ஒரு குமாரனைப் பெறுவாள். அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக; ஏனெனில் அவர் தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார் என்றான் (மத்.1:20). உடனே யோசேப்பு, தூதன் சொன்னதை தனக்கு இடப்பட்ட கட்டளையாக எடுத்துக் கொண்டார். தேவனுடைய திட்டம் தன் மூலமாக நிறைவேறவும் தாவீதின் வம்ச அட்டவணையில் இயேசு பிறக்கவும் யோசேப்பு தன்னை முழுமையாக அர்ப்பணிக்கிறதைப் பார்க்கிறோம்.

தேவதூதன் தன்னை சந்தித்த பின்பதாக சமுதாயத்தில் எது அவமானமாக கருதப்பட்டதோ அதை ஏற்றுக்கொள்ள முன்வந்தார். யோசேப்பின் பிந்தின நற்குணம் மிகவும் சிறந்ததாயிருந்தது. அதன்பின்பு யோசேப்பு தைரியத்தோடு மரியாளைச் சேர்த்துகொண்டு தேவனுடைய திட்டம் நிறைவேற இறுதிவரைக்கும் மரியாளுக்கு உறுதுணையாக இருந்தார். இயேசுகிறிஸ்து பிறப்பின்போது நேரிட்ட துன்பங்கள், ஏரோதினால் உண்டான பேராபத்துக்கள் யாவற்றையும் சந்திக்கிறார். ஆனால் கர்த்தர், எல்லாவற்றிலுமிருந்து யோசேப்பையும் மரியாளையும் குழந்தையையும் பாதுகாக்கிறார். நீதிமானுக்கு வரும் துன்பங்கள் அநேகமாயிருக்கும், கர்த்தர் அவைகளெல்லாவற்றிலும் நின்று அவனை விடுவிப்பார் (சங். 34:19) நீதிமானாகிய யோசேப்பிடமிருந்த நற்குணம் நம்மில் காணப்படுகிறதா?

சிமியோன் – பரிசுத்த ஆவியானவரால் நடத்தப்பட்டார்.

இயேசுகிறிஸ்து பிறப்பின் சம்பவத்தில் சிமியோன் இணைகிறார். சிமியோன் பரிசுத்த ஆவியினால் நடத்தப்பட்ட ஒரு அருமையான தேவ மனிதன். அவர் மேல் பரிசுத்த ஆவியானவர் இருந்தார். எவ்வாறு ஏனோக்கு தேவனோடு சஞ்சரித்தாரோ அதைப்போன்று சிமியோன் ஆவியானவரோடு சஞ்சரித்தார். சிமியோன் பரிசுத்த ஆவியானவரோடு சம்பாஷிக்கிற அனுபவமுடையவனாயிருந்தார்; கர்த்தருடைய கிறிஸ்துவை நீ காணுமுன்னே மரணமடைய மாட்டாய் என்று பரிசுத்த ஆவியானவர் சிமியோனுக்கு அறிவித்திருந்தார். ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவை எருசலேம் தேவாலயத்திற்கு கொண்டு வந்தபோது பரிசுத்த ஆவியானவரே அவரை அங்கு அழைத்து வருகிறார். சிமியோன் தன் கண்களால் இயேசுவைக் கண்டு அவரை கையிலேந்தி தேவனை ஸ்தோத்தரித்தார். பிறந்திருக்கிற பாலகன் இயேசு யார் என்பதை விளக்கிக் காட்டுகிறார் (லூக்.2: 30- 32). மரியாளிடம் ஆவியானவர் தனக்குக்காட்டிய வெளிப்பாட்டை தீர்க்கதரிசனமாக உரைக்கிறார் (2:34-35). அவரைக் குறித்துச் சொல்லப்பட்டவைகளுக்காக யோசேப்பும் அவருடைய தாயாரும் ஆச்சரியப்பட்டார்கள் (2:33).

இன்றைக்கு நாம் பரிசுத்த ஆவியானவர் ஊற்றப்பட்டு அவர் ஆளுகை செய்யும் காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். சிமியோனைப் போல நாமும் ஆவியானவரோடு சஞ்சரிக்கிறவர்களாக காணப்படுகிறோமா? எவர்கள் ஆவியானவரால் நடத்தப்படுகிறார்களோ அவர்கள் தேவனுடைய புத்திரராக இருக்கிறார்கள். ஆவியானவரால் நடத்தப்பட்ட சிமியோன் இஸ்ரவேலின் ஆறுதல் வரக் காத்திருந்ததைப்போல நாமும் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து மீண்டும் இவ்வுலகிற்கு வர காத்திருக்கிறோம். நாமும் ஆவிக்குரியவர்களாக வாழ்வோமானால் அவரைச் சந்திக்க பரிசுத்த ஆவியானவர் நமக்கு உதவி செய்வார்.

அன்னாள் – இடைவிடாமல் ஆராதித்தாள்

பாலகன் இயேசுகிறிஸ்துவை தேவாலயத்திற்கு எடுத்துக்கொண்டு வந்தபோது அங்கே அன்னாள் என்ற தீர்க்கதரிசி காணப்படுகிறாள். விதவைப் பெண்ணான அவள் இரவும் பகலும் ஜெபம் பண்ணுகிறவளாக காணப்பட்டாள். தேவனுடைய ஆலயத்தைவிட்டு நீங்காமல் அங்கேயே தங்கி தீர்க்கதரிசன ஊழியத்தைச் செய்துவந்தாள்.

எண்பத்தேழு வயதான அன்னாள் இயேசு கிறிஸ்துவின் பிறப்பைக் குறித்த தீர்க்கதரிசனத்தைப் பெற்றிருந்தாள். தனது வாழ்வின் இறுதி காலத்தில் இயேசுவைக் காணும் பாக்கியத்தைப் பெற்றாள். தேவாலயத்தில் அவரைப் புகழ்ந்து பாடி ஆராதனை செய்தாள். எருசலேமிலே மீட்புண்டாகக் காத்திருந்த யாவருக்கும் அவரைக் குறித்துப் பேசினாள். இதைப்போலவே ஆண்டவருடைய பாதத்தில் அமர்ந்து அவரது வசனத்தைக் கேட்டுக்கொண்டிருந்த மரியாள், “தன்னை விட்டு எடுபடாத நல்ல பங்கை தெரிந்துகொண்டாள்” (லூக்.10:42) என்று இயேசுகிறிஸ்துவினால் சாட்சி பெற்றாள். இரவும்பகலும் அவர் பாதத்தில் அமர்ந்து ஜெபிக்கின்ற, வேதம் வாசிக்கின்ற, உபவாசிக்கிற அவருடைய பிள்ளைகளை தேவன்தாமே கண்ணோக்கிப் பார்க்கிறார். அவர்களை தமது திட்டத்தில் எடுத்து உபயோகிக்கிறார்.

அவருடைய வருகைக்காக காத்திருக்கிற நாமும் அன்னாளைப்போல இடைவிடாமல் ஜெபம் பண்ணுவோம். எல்லாவற்றிலேயும் ஸ்தோத்திரம் செய்வோம். அப்படி செய்வதே தேவனுடைய சித்தமாயிருக்கிறது (1தெச.5:18).

எஜமான் வரும் போது, விழித்திருக்கிறவர்களாகக் காணப்படுகிற ஊழியக்காரரே பாக்கியவான்கள். …. அந்தப்படியே நீங்கள் நினையாத நேரத்தில் மனுஷகுமாரன் வருவார், ஆகையால் நீங்களும் ஆயத்தமாயிருங்கள் என்றார் (லூக்-12:37,40).

உங்களுக்குத் தெரியுமா?

“கிறிஸ்துவின் பிரசன்னம் இல்லாமல் உலகில் வழங்கப்படும் அனைத்து கிறிஸ்துமஸ் பரிசுகளுக்கும் மதிப்பு இல்லை.”

• டேவிட் ஜெரேமியா