• பழைய ஏற்பாட்டு வேதபாடம்
• Dr.உட்ரோ குரோல்
(நவம்பர்-டிசம்பர் 2022)

தானியேல்

9 ஆம் அதிகாரம்

Dr.உட்ரோ குரோல்

பரலோக தேவனின் கால அட்டவணையின்படி வாழ அறிந்துகொள்வது ஒரு கடினமான பாடமாகும். எதிர்காலத்தில் நிகழும் மாபெரும் ஆச்சரியமான தரிசனங்களைக் கண்ட தானியேலுக்கு அது அதிகக் கடினமாக இருந்திருக்கும் என்பதை சற்றே கற்பனை பண்ணி பாருங்கள். உங்களால் காலக்கணக்குகளை அறிந்துகொள்ள இயலாவிடில் காலக்கட்டுப்பாட்டாளரை நம்புங்கள்.

வரலாற்றின் கடந்தகாலம் மற்றும் எதிர்காலம் இவற்றைப்பற்றி தானியேலின் தீர்க்கதரிசனங்களும் கனவுகளும், அதிகம் வெளிப்படுத்தின. இத்தீர்க்கருக்கு தேவன் வெளிப்படுத்திய அநேக தீர்க்கதரிசனங்கள் நிறைவேறிவிட்டன. ஆனால் இப்பூமியில் ஆண்டவர் தமது கிரியைகளை நிறை வேற்றிமுடிக்கும் ஒரு காலம் வரவிருக்கிறது. இன்றைய பகுதியில் ஆண்டவருடைய காலத்தைப்பற்றியும் அக்காலத்தில் நடப்பதைப்பற்றியும் – நம்முடைய காலத்தில் அல்ல – தானியேல் தெளிவாகக் கூறியுள்ளார். இன்றைய நமது தலைப்பு தானியேலின் எழுபது வாரங்கள். இவ் வதிகாரத்தைப் பற்றி அநேக கருத்துக்களும், விவாதங்களும், பிரசங்கங்களும் எழுந்துள்ளன. நாம் பரலோகராஜ்யம் சென்றபின்னரே அனைத்துக் காரியங்களும் நமக்கு முழுமையாக வெளிப்படுத்தப்படும். அதுவரை கருத்து வேறுபாடுகள் இருக்கத்தான் செய்யும்.

தானியேல் தன்னுடைய இத்தரிசனத்தை அகாஸ்வேரு அரசரின் மகனான தரியு அரசரின் முதலாம் ஆண்டு என்று குறிப்பிடுகிறார். இவர் பெல்ஷாத்சார் அரசர் தன்னுடைய பிரபுக்களுடன் குடித்திருந்த இரவில் அவருடைய ராஜ்யத்துக்குள் நுழைந்து அதனை ஆக்கிரமித்தார். வலிமை நிறைந்த பாபிலோன் சாம்ராஜ்யம் விழுந்தது.

தானியேல் சிறைபிடிக்கப்பட்டு 66 ஆண்டுகள் ஆகிவிட்டன. வாலிபனான தானியேல் தற்பொழுது முதியவராகிவிட்டார். ஒருநாள் அவர் தன்னுடைய அனுதின தியானத்தில் ஈடுபட்டிருந்தார். ஒவ்வொரு நல்ல வேதாகம கல்வியாளர்களும் தனி தியானம் செய்வதுபோலவே அவரும் செய்தார். அவர் வேதத்தை வாசித்தார்.

தானியேல் 9:1-3இல் “கல்தேயருடைய ராஜ்யத்தின்மேல் ராஜாவாக்கப்பட்ட மேதிய குலத்தானாகிய அகாஸ்வேருவின் புத்திரனான தரியு ராஜ்யபாரம் பண்ணுகிற முதலாம் வருஷத்திலே, தானியேலாகிய நான் எருசலேமின் பாழ்க்கடிப்புகள் நிறைவேறித்தீர எழுபது வருஷம் செல்லுமென்று கர்த்தர் எரேமியா தீர்க்கதரிசியோடே சொல்லிய வருஷங்களின் தொகையைப் புஸ்தகங்களால் அறிந்துகொண்டேன். நான் உபவாசம் பண்ணி, இரட்டிலும் சாம்பலிலும் உட்கார்ந்து, தேவனாகிய ஆண்டவரை ஜெபத்தினாலும் விண்ணப்பங்களினாலும் தேட என் முகத்தை அவருக்கு நேராக்கினேன்” என்று எழுதப்பட்டுள்ளது.

தானியேல் தன்னுடைய தனி தியானத்தில் எரேமியா தீர்க்கதரிசியின் நூலை வாசித்துக்கொண்டிருந்தார். அதில் யூதர்கள் 70 ஆண்டுகள் சிறையிருப்பில் இருப்பார்கள் என்று தேவன் கூறியதை எரேமியா 25:11,12 தானியேல் கண்டு பிடித்தார். சிறையிருப்பு முடியும் தருவாயில் உள்ளது என்பதை வேதாகமத்தின் மூலமாக அவர் அறிந்து கொண்டார்.

1985ஆம் ஆண்டு பிப்ரவரி 21ஆம் நாள் அமெரிக்க அதிபர் திரு.ரொனால்ட் ரீகன் கூறியதை நான் இங்கு மேற்கோள் காட்ட விரும்புகிறேன். “வேதாகமத்தில் அனைத்துக்கும் விடை உண்டு; நம்மை எதிர்கொள்ளும் அனைத்து பிரச்சனைகளுக்கும் அதில் தீர்வு உண்டு; ஆனால், பிரச்சனைகளுக்குத் தீர்வு தரும் அந்த ஒரு புத்தகத்தை நாம் ஏன் அடையாளம் கண்டுகொள்வதில்லை என நான் வியப்பதுண்டு.”

12 விழுக்காட்டு அமெரிக்கர்கள் ஒரு வாரத்தில் ஏழுமுறை பரிசுத்த வேதாகமத்தை வாசிக்கிறார் கள் என்று திரு.ஜார்ஜ்பர்னா என்பவர் கூறுகிறார். இது மகிழ்ச்சியை அளித்தாலும் 52 விழுக்காட்டு மனிதர்கள் ஒருமுறைகூட அதை வாசித்ததேயில்லை என்ற கூற்று நமக்கு அதிர்ச்சியை அளிக்கிறது. என்ன நடக்கிறது? அதை அறிந்துகொள்ளுவதற்கு வேதாகமத்துக்கு நாம் திரும்பவேண்டும் நண்பர்களே!

வேதாகமத்தை அச்சடிக்கும் நிறுவனங்கள் ஓர் ஆச்சரியமான காரியத்தை ஒத்துக்கொள்கின்றனர். இதனை சில ஆண்டுகளுக்கு முன் அவர்கள் வெளியிட்ட 4000 சுய உதவி நூல்களில் ஒரு ஆய்வு மேற்கொண்டனர். அப்புத்தகங்கள் எத்துணை உதவியை அளித்துள்ளது, அதிலிருந்து அவர்கள் பெற்ற நன்மைகள் யாது என ஆராய்ந்தனர். “அந்த 4000 புத்தகங்களில் மிக அதிகமான நன்மையையும் உதவியையும் தந்தது பரிசுத்த வேதாகமம்மட்டுமே” என்ற முடிவைப் பெற்றனர்.

தானியேலும் தன்னுடைய வேதாகமத்தை வாசித்தபொழுது எரேமியா 25ஆம் அதிகாரத்தில் தங்களுடைய சிறையிருப்பு முடியும் காலம் நெருங்கிவிட்டது என்பதை அறிந்தார். அவர் செய்ததைக் கவனியுங்கள். அவர் முழங்காற்படியிட்டு ஆண்டவரை நோக்கி ஜெபம் பண்ணினார். 4ம் வசனம் தொடங்கி 19ம் வசனம் முடிய அவருடைய விண்ணப்பத்தை நாம் வாசிக்கலாம். அவரது ஜெபத்தை தானியேல் 9ம் அதிகாரம் முழுவதும் விளக்குகிறது. நீங்களும் அந்த ஜெபத்தை முழுவதுமாக வாசித்து தியானியுங்கள். அதில் தானியேல் தன்னுடைய தேசத்தின் பாவங்களை அறிக்கையிடுகிறார். ஏனெனில் தேவன் அவர்களை விடுவிப்பார் என்று அறிந்திருந்தார்.

வசனம் 5 இல் தேவனுடைய வசனத்துக்கு விலகி துன்மார்க்கமாய் வாழ்ந்த பாவங்களை அறிக்கையிட்டார். வசனம் 6 இல் தேவனுடைய தீர்க்கதரிசிகளுக்கு செவிகொடாமற் போனதையும் வசனம் 9 இல் தேவனுடைய பிரமாணங்களுக்கும் சித்தத்துக்கும் எதிர்த்து கலகம் பண்ணினதையும், தேவனுடைய சத்தத்துக்குக் செவிகொடாமல் போனதையும் அறிக்கையிட்டார். வசனம் 11இல் நியாயப்பிரமாணத்தை மீறினதை ஒத்துக்கொண்டார். வசனம் 13இல் மன்னிப்புக்காக, இரக்கத்திற்காக தேவனிடம் கெஞ்சவில்லை என்கிறார். தொடர்ந்து தங்களுடைய தவறான காரியங்களை அறிக்கையிடுகிறார். தேவனாகிய ஆண்டவரிடம் “என்னை மன்னியுங்கள்” என்று கூறுகிறார். தானியேல் இந்த பாவங்களைச் செய்யவில்லை; அக்குற்றங்களுக்கு அவர் பொறுப்பும் அல்ல. தனது தேசத்தின் சார்பாக அவர் வேண்டுதல் செய்கிறார். நாமும் நம் தேசத்துக்காக ஜெபிக்கவேண்டுமென்று முன்னுதாரணம் காட்டுகிறார். வேதாகமத்தில் அநேகர் தங்கள் தேசத்துக்காக ஜெபித்துள்ளனர்.

தானியேல் இந்த நீண்ட ஜெபத்தைச் செய்த பின்னர் இறுதியில் நடந்ததை வாசிப்போம். வசனம் 20-21 “இப்படி நான் சொல்லி, ஜெபம் பண்ணி, என் பாவத்தையும் என் ஜனமாகிய இஸ்ரவேலின் பாவத்தையும் அறிக்கையிட்டு, என் தேவனுடைய பரிசுத்த பர்வதத்துக்காக என் விண்ணப்பத்தை என் தேவனாகிய கர்த்தருக்கு முன்பாகச் செலுத்திக்கொண்டிருந்தேன். அப்படி நான் ஜெபம் பண்ணிக்கொண்டிருக்கும்போதே, முதல் தரிசனத்திலே நான் கண்ட புருஷனாகிய காபிரியேல், வேகமாய்ப் பறந்து வந்து, அந்திப்பலியின் நேரமாகிய வேளையிலே என்னைத் தொட்டான்.”

அந்திப்பலியின் நேரத்திலே காபிரியேல் தன்னிடம் வருவதை தானியேல் கண்டார். எண்ணாகமம் புத்தகத்தில் நாள்தோறும் காலையிலும் மாலையிலும் பலிகள் செலுத்தப்படுவது சட்டமாக எழுதப்பட்டுள்ளது. மாலையில் பலி செலுத்தப்படும் காலத்தில் காபிரியேல் வந்ததாக தானியேல் கண்டுகொண்டார். எருசலேம் ஆலயத்தில் அந்திப்பலி செலுத்தப்பட்டு 66 ஆண்டுகள் கடந்து விட்டன. தேவனுடைய ஆலயத்தில் அப்பலிகளை செலுத்த இயலாவிட்டாலும் தன்னுடைய இருதயத்தில் தானியேல் அதனை நினைத்து அதே நேரத்தில் தன்னுடைய ஆராதனையையும் துதிகளையும் பலியாக 66 ஆண்டுகள் செலுத்திக் கொண்டிருந்தார். தேவனுடன் அமைதி வேளையைக் கடைபிடிக்க நீங்களும் நானும் ஒருநாளில் குறைந்த பட்சம் ஐந்து நிமிடம் ஒதுக்குகிறோமா? தானியேலிடமிருந்து நாம் அநேகக் காரியங்களைக் கற்றுக்கொள்ள வேண்டும். தானியேல் 9ம் அதிகாரத்தில் அவர் தீர்க்கதரிசனங்களின் முக்கியத்துவத்தை நமக்குப் போதிக்கிறார். எனவே நாம் அதனை ஆராய்வோம்.

வசனம் 24இல் “மீறுதலைத் தவிர்க்கிறதற்கும் (1), பாவங்களைத் தொலைக்கிறதற்கும் (2), அக்கிரமத்தை நிவிர்த்திபண்ணுகிறதற்கும் (3), நித்திய நீதியை வருவிக்கிறதற்கும் (4), தரிசனத்தையும் தீர்க்கதரிசனத்தையும் முத்திரிக்கிறதற்கும் (5), மகா பரிசுத்தமுள்ளவரை அபிஷேகம் பண்ணுகிறதற்கும் (6), உன் ஜனத்தின்மேலும் உன் பரிசுத்தநகரத்தின்மேலும் எழுபது வாரங்கள் செல்லும்படி குறிக்கப்பட்டிருக்கிறது” என்று கூறினார்.

இங்கு காபிரியேல் எழுபது வாரங்களைப் பற்றிக் கூறுகிறார். ஏழு என்பதைக் குறிக்கும் எபிரெயச்சொல் “ஷபுவா” ஆகும். ஏழுடன் தொடர்புடைய அனைத்தையும் அது குறிப்பிடும். வேதாகமத்தில் ஏழுடன் தொடர்புடைய அநேக காரியங்களை நாம் வாசிக்கிறோம். 7 நாட்கள், 7 வாரங்கள், ஏழு வருடங்கள் போன்றவை. ஏழு என்பதைக் குறிக்க ஷபுவா என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது.

உதாரணமாக ஆதியாகமம் 29:27இல் யாக்கோபு தன் மாமனால் ஏமாற்றப்பட்டான். தவறான பெண்ணைத் திருமணம் பண்ணினான். ராகேலுக்காக ஊழியம் செய்து லேயாளைப் பெற்றான். வசனம் 27இல் “இவளுடைய ஏழு நாளை நிறைவேற்று; அவளையும் உனக்குத் தருவேன்; அவளுக்காகவும் நீ இன்னும் ஏழு வருஷம் என்னிடத்தில் வேலை செய்” என்றான். திருமண வாரமும், ஏழு வருஷம் ஊழியமும் ஒன்றிப்போகிறது.

எழுபது வாரங்கள் என்பது எழுபது ஏழு என்பதைக் குறிக்கிறது. அடுத்துவரும் வசனங்களில் ஷபுவா என்பது ஆண்டுகளையும் குறிக்கிறது என்பதனை நாம் தெளிவாகக் காணலாம். ஏனெனில் “ஷபுவா” என்ற சொல்லையே அங்கு பயன்படுத்துகிறார். ஏன் இவ்வாறு ஏழு என்பதை உபயோகிக்கின்றனர்? நமக்கு நன்கு பரிச்சயமான ஐந்து, பத்து, பதினைந்து அல்லது இருபது என்பதைப் பயன்படுத்தலாமே! என்ற சந்தேகம் உங்களுக்கு எழுகிறதல்லவா?

ஏனெனில் நாம் யூதர்கள் அல்ல. யூதர்கள் பொதுவாக ஏழு என்ற எண்ணையே அதிகமாக பயன்படுத்தினர். ஒரு வாரத்துக்கு ஏழு நாட்கள். தேவன் தம்முடைய கிரியைகளையெல்லாம் நிறைவேற்றி, ஏழாம் நாளிலே ஓய்ந்திருந்தார். ஏழு என்பது ஒரு பூரண எண். ஒவ்வொரு ஏழாம் வருடமும் ஓய்வின் ஆண்டு. ஆறு ஆண்டுகள் வயலில் வேலை செய்து ஏழாம் ஆண்டு அதற்கு ஓய்வு கொடுக்கவேண்டும். இதனை லேவியராகமம் 25:1-7 இல் நாம் வாசிக்கிறோம். ஏழு ஏழு வருஷங்களை எண்ணவேண்டும் (49ஆண்டுகள்). அடுத்த ஆண்டு யூபிலி ஆண்டு. இந்த 49 ஆண்டுகள் கழிந்தபின்னர் வருவது 50வது ஆண்டு. எனவே யூதர்கள் தங்களது எண்ணத்தில் இந்த ஏழு என்பதையே கணக்கிட்டு வந்தனர்.

ஏழு எழுபது ஆண்டுகள் என்பது 490 வருடங்களைக் குறிக்கும். இதை நினைவில் இருத்திக்கொண்டு வசனம் 25ஐ வாசியுங்கள். தேவன் இஸ்ரவேல் ஜனங்களை தம்மிடமாகத் திருப்பி தமக்கென்று நிலைநிறுத்த அனைத்துக் காரியங்களையும் செய்துமுடிக்க இருக்கும் காலம் 490 ஆண்டுகள்.

வசனம் 24ல் இஸ்ரவேல் சீர்பெறுவதற்காகச் செய்யவேண்டிய காரியங்களை அவர் கூறியுள்ளார். வசனம் 25 தேவனுடைய கால அட்டவணையாகும். இது மிக முக்கியமானதாகும். பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசனங்களின் ஆழமான வசனம் இது. 9:25-27 “இப்போதும் நீ அறிந்து உணர்ந்துகொள்ள வேண்டியது என்னவென்றால்: எருசலேமைத் திரும்ப எடுப்பித்துக் கட்டுகிறதற்கான கட்டளை வெளிப்படுவதுமுதல், பிரபுவாகிய மேசியா வருமட்டும் ஏழு வாரமும், அறுபத்திரண்டு வாரமும் செல்லும்; அவைகளில் வீதிகளும் அலங்கங்களும் மறுபடியும் கட்டப்படும்; ஆனாலும் இடுக்கமான காலங்களில் இப்படியாகும்.

அந்த அறுபத்திரண்டு வாரங்களுக்குப் பின்பு மேசியா சங்கரிக்கப்படுவார்; ஆனாலும் தமக்காக அல்ல; நகரத்தையும் பரிசுத்த ஸ்தலத்தையும் வரப் போகிற பிரபுவின் ஜனங்கள் அழித்துப்போடுவார்கள்; அதின் முடிவு ஜலப்பிரவாகம்போல இருக்கும்; முடிவுபரியந்தம் யுத்தமும் நாசமும் உண்டாக நியமிக்கப்பட்டது. அவர் ஒரு வாரமளவும் அநேகருக்கு உடன்படிக்கையை உறுதிப்படுத்தி, அந்த வாரம் பாதி சென்றபோது பலியையும் காணிக்கையையும் ஒழியப்பண்ணுவார்; அருவருப்பான செட்டைகளோடே பாழாக்குகிறவன் வந்து இறங்குவான், நிர்ணயிக்கப்பட்டிருக்கிற நிர்மூலம் பாழாக்குகிறவன்மேல் தீருமட்டும் சொரியும்” என்றான்.

ஏழு வருடங்களைக் கொண்ட காலக்கணக்கினை நாம் பார்த்துக்கொண்டிருக்கிறோம். வசனம் 25இல் மேசியா வருமட்டும் ஏழு “ஷபுவா” (ஏழு) அதாவது 49 ஆண்டுகள். அதன்பின்பு 62 வாரங்கள் செல்லும், அதாவது 62 “ஷபுவா” (ஏழு ஆண்டுகள்) ஆகும். அதாவது 62 x 7 = 434 ஆண்டுகள் செல்லும்.

எருசலேமைத் திரும்ப எடுத்துக் கட்டுகிறதற்கான கட்டளை வெளிப்படுவது முதல் – இது கி.மு. 444 இல் மார்ச் 5ம் தேதி பிறப்பிக்கப்பட்டது. யூதர்கள் தங்களது நாட்டுக்குத் திரும்பி நகரத்தின் மதில்களைக் கட்டலாம் என்று அர்தசஷ்டா ராஜா அனுமதியளித்தார். இதனை நெகேமியா 2ஆம் அதிகாரத்தில் நாம் வாசிக்கிறோம்.”இந்நாள் முதற்கொண்டு மேசியா வந்து தம்மை அபிஷேகம் பண்ணினவராக எருசலேம் நகரத்தில் வெளிப் படுத்தும் வரை 7 வாரமும் 62 வாரமும் அதாவது 483 வருடங்கள் செல்லும்.”

யூதர்கள் தங்களுடைய நாட்டுக்குத் திரும்பி தேவாலயத்தைத் திரும்பக்கட்ட அனுமதி அளித்ததிலிருந்து எருசலேம் தேவாலயத்துக்கு இயேசு கழுதையின்மீது பவனி வந்த நாள்வரை 483 ஆண்டுகள் மிகச் சரியாகப் பொருந்துகிறது. தேவனுடைய தீர்க்கதரிசனத்தின் வல்லமைதான் எவ்வளவு பெரியது!

சகரியா 9:9இல் “சீயோன் குமாரத்தியே, மிகவும் களிகூரு; எருசலேம் குமாரத்தியே கெம்பீரி; இதோ, உன் ராஜா உன்னிடத்தில் வருகிறார்; அவர் நீதியுள்ளவரும் இரட்சிக்கிறவரும் தாழ்மையுள்ள வரும், கழுதையின்மேலும் கழுதைக் குட்டியாகிய மறியின்மேலும் ஏறி வருகிறவருமாயிருக்கிறார்” நாம் வாசிக்கிறோம்.

ஆனால், 9ஆம் அதிகாரத்தின் இறுதியில் அந்திக் கிறிஸ்து மக்களுடன் உடன்படிக்கை பண்ணி, பின்னர் அதனை இடையில் முறித்துப்போடுவான். இது கடைசி ஏழாவது “ஷபுவா”.

70 “ஷபுவா” என்பது 70 x 7 = 490 ஆண்டுகள்.

7 வாரமும் 62 வாரமும் (7 x 7 = 49) + (62 x 7 = 434) = 483 ஆண்டுகள். இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் 490 – 483 = 7 ஆண்டுகள். இந்த ஏழு ஆண்டுகளுக்கான விவரம் எங்கே? வசனம் 26 இல் “அந்த அறுபத்திரண்டு வாரங்களுக்குப் பின்பு மேசியா சங்கரிக்கப்படுவார்” என்று தரப்பட்டுள்ளது. அதாவது, 483 ஆண்டுகளுக்குப் பிறகு மேசியா சங்கரிக்கப்படுவார்; அவர் சிலுவையில் அறையப்படுவார் என்று தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.

யூதர்களுக்கான தேவனுடைய நிகழ்ச்சி நிரலில் இன்னும் 7 ஆண்டுகள் நிறைவேற வேண்டியுள்ளன. வசனம் 26இல் கூறப்பட்டவை வரலாறில் இன்னும் நிறைவேறவில்லை.

நீங்களும் நானும் அதைப் புரிந்துகொள்ள புதிய ஏற்பாட்டுக்குச் செல்லவேண்டும். விடப்பட்ட இந்த 7 ஆண்டுகள் எதிர்காலத்தில் நிறைவேற உள்ளது என்பதை வெளிப்படுத்தின விசேஷத்திலிருந்து நாம் அறிந்து கொள்ளலாம். இதனை அப்புத்தகம் “உபத்திரவத்தின் காலம்” என அழைக்கிறது. இஸ்ரவேலுடன் தேவன் செய்துள்ள உடன்படிக்கையை அக்காலத்தின் இறுதியில் தேவன் நிறைவேற்றுவார். இஸ்ரவேலை மீண்டும் சீர்படுத்தி பழைய நிலைக்குக் கொண்டுவந்து தாமே மெய்யான மேசியா என்பதை உறுதிப்படுத்துவார். அது இப்பொழுது நடைபெறும் காரியமல்ல; அது எதிர்கால நிகழ்வாகும்.

தானியேலின் புத்தகத்தையும் வெளிப்படுத்தின விசேஷத்தையும் இணைத்துப்பார்க்கும் பொழுதே தேவன் வைத்துள்ள காலக்கிரமத்தை நாம் உணர்ந்துகொள்ள முடியும். உங்களால் கால அட்டவணையை அறிந்துகொள்ள இயலாவிடில் காலக்கட்டுப்பாட்டாளரை நாம் நம்பவேண்டும். ஏனெனில் நாம் அதை அறிந்துகொண்டாலும் சரியாகப் புரிந்துகொள்வதும் சிறிய விஷயங்கள். ஆனால் தேவனுடைய காலண்டரில் இயேசு கிறிஸ்து திரும்பிவரும் நாள் ஒன்று உண்டு. அவருடைய காலண்டரில் இஸ்ரவேலைத் திரும்பக்கட்டும் தனது கிரியைகளை அவர் முடிக்கும் ஒரு நாள் உண்டு. அவருடைய நாள் காட்டியில் அந்திக்கிறிஸ்துவின் எதிர்காலம் அழிக்கப்பட்டு இயேசுகிறிஸ்து இராஜாதி ராஜாவாக, கர்த்தாதி கர்த்தராக ஆட்சி செய்யும் ஒரு நாள் உண்டு. என்னுடைய கடிகாரத்தை நம்புவதைவிட அதனை நீங்கள் அதிக நிச்சயமாய் நம்பலாம். தேவனுடைய காலக்கணக்கை நீங்கள் அறியாவிட்டால், அவரை நம்புங்கள்.

என்னோடு இணைந்து ஜெபிப்பீர்களா?

பிதாவே, தானியேல் புத்தகம் வெளிப்படுத் தும் காரியங்களைவிட அதிகமான காரியங்கள் மறைவாக உள்ளன. எங்களால் புரிந்துகொள்ள முடியாத அநேக காரியங்கள் உண்டு. வேதத்தின் வெளிச்சத்தில்மட்டுமே நாங்கள் குறைவாக அறிந்துகொண்டிருக்கிறோம். நாங்கள் அறிந்ததையும் சரியாக விளக்கத் தெரியவில்லை. ஆண்டவரே 483 ஆண்டுகள் கழிந்து விட்டன. இஸ்ரவேலுக்கு நீர் கிரியை செய்யவிருக்கும் அந்த ஓர் ஏழு ஆண்டுகள் வரலாறில் இன்றுவரை எங்கும் காணவில்லை. அதற்குக் காரணம் அந்தக் கிரியைகளை நீர் இன்னும் நிறைவு செய்யவில்லை.

அன்புள்ள பிதாவே, அந்திக்கிறிஸ்து யூதர்களை அநியாயமாய் கொடூரமாய் சித்திரவதை செய்யும் ஒருகாலம் உண்டு. அக்காலத்தின் இறுதியான ஏழு ஆண்டுகளில் இயேசுகிறிஸ்து இராஜாதி ராஜாவாக வானத்தில் வருவார்; தம் முடையவர்களை தன்னுடன் சேர்த்துக்கொள்வார். அது ஆயிரம் ஆண்டு அரசாட்சியின் காலம்; அதன் முடிவில் இயேசுகிறிஸ்துவின் ஆளுகை என்றென்றும் நிலைத்திருக்கும்.

அந்த இராஜாதி ராஜாவுக்கு முன்பாக எங்கள் ஆவி, ஆத்துமா, சரீரம் யாவையும் அர்ப்பணிக்கிறோம். தானியேலின் புத்தகம் புரிந்துகொள்ள கடினமாக இருந்தாலும் நீர் உதவி செய்யும். ஆளுகை உம்முடையது என்ற கண்ணோட்டத்தில் அதனை நாங்கள் அறிந்துகொள்ளவும், இயேசுகிறிஸ்து மீண்டும் வருவதை எதுவும் தடைபண்ணாது என்றும் நாங்கள் உணர்ந்து கொள்ளுகிறோம்.

“என் காலங்கள் உமது கரத்திலிருக்கிறது” என்று சங்கீதக்காரன் சொல்வதை நாங்களும் அறிக்கையிடுகிறோம். தானியேல் உண்மையாயிருந்ததைப்போல நாங்களும் உண்மையும் உத்தமுமான ஊழியக்காரராய் உமக்காக இவ்வுலகில் வாழ எங்களுக்கு உதவி செய்யும். ஆமென்.

மொழியாக்கம்: Mrs.அகஸ்டா மங்களதுரை