• பேராசிரியர் S.C.எடிசன் •
(நவம்பர்-டிசம்பர் 2022)

தீர்மானத்தின் விவரம் சொல்லுவேன்; கர்த்தர் என்னை நோக்கி: நீர் என்னுடைய குமாரன், இன்று நான் உம்மை ஜநிப்பித்தேன் (சங்.2:7).

பேராசிரியர் S.C.எடிசன்

இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் சத்திய வசனம் நேயர்களுக்கு என் அன்பின் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்.

தீர்மானத்தின் விவரம் சொல்லுவேன்: கர்த்தர் என்னை நோக்கி: நீர் என்னுடைய குமாரன், இன்று நான் உம்மை ஜநிப்பித்தேன் – சங்.2:6,7 இது ஒரு அற்புதமான வசனம். ஏனென்றால் வேதத்தில் நான்கு இடங்களில் இது சொல்லப்பட்டிருக்கிறது. பிதாவானவர் குமாரனை நோக்கிச் சொல்லுகிற ஒரு வசனம். இன்று நான் உம்மை ஜநிப்பித்தேன்; அதாவது பிதாவானவர் இது உன்னுடைய பிறந்தநாள் என்று இயேசுவுக்குச் சொல்வதுபோல் இந்த வசனம் இருக்கிறது. ஆகவே இந்த வசனம் ஏதோ ஒரு இரகசியத்தைக் கொண்டதாக இருக்கவேண்டும். எதனால் இந்த வசனம் நான்கு இடங்களில் சொல்லப்பட்டிருக்கிறது என்பதை நாம் பார்ப்போம்.

இயேசுவானவர் மாம்சத்தில் பிறந்தாலும் அவரை என்ன ஒரு நோக்கத்திற்காக பிதாவானவர் உலகத்தில் அனுப்பினார்; அவருக்குள் இருந்த தன்மைகள் என்னவென்பதை இந்த வசனம் தனக்குள் அடக்கி இருக்கிறது. அதைத்தான் நான்கு இடங்களிலும் சொல்லப்பட்டிருக்கிறது.

1. பிதா இயேசுவை ராஜாவாக அனுப்பினார்

இந்த சங்கீதத்திலே ஆறாம் வசனத்தை நாம் பார்க்கும்பொழுது, நான் என்னுடைய பரிசுத்த பர்வதமாகிய சீயோன் மீதில் என்னுடைய ராஜாவை அபிஷேகம் பண்ணிவைத்தேன் என்றார். அப்படியானால் இந்த வசனத்திலே பிதாவானவர் சொல்லுவது என்னவென்றால், உம்மை நான் இந்த பூமிக்கு ஒரு மனிதனாக அனுப்பினாலும் நீர் தேவனுடைய குமாரன் என்றும் என்னால் அபிஷேகம் பண்ணப்பட்ட ராஜா என்றும் கூறுகிறார். இயேசு பிறந்து முன்னணையில் கிடத்தப்பட்டிருந்தாலும் அவர் ராஜாதான்!

அவர் பிறந்தபொழுது கிழக்கிலிருந்து சாஸ்திரிகள் இந்த பாலகனைத் தேடிவந்து யூதருக்கு ராஜாவாக பிறந்திருக்கிறவர் எங்கே என்று கேட்டனர். ஏரோது அவர்களுக்கு நேரடியாக எந்தவொரு பதிலையும் சொல்லவில்லை. ஆனால், பெத்லகேமுக்குப் போய் பாருங்கள் என்று சொல்லி பெத்லகேமுக்கு அவர்களை அனுப்பினான். ஆனால், அவன் பாலகன் இயேசுவை ராஜா என்று தன் உள்ளத்திலே நம்பினான். அவர் தனக்குப் போட்டியாக வந்துவிடுவார் என்று நினைத்து இரண்டு வயதுக்குட்பட்ட ஆண் பிள்ளைகளையெல்லாம் கொன்றுபோட்டான். ஏரோது தவறாக செயல்பட்டான். சகோதரரே, நீங்கள் எப்படி? இயேசுவை ராஜா என்று நம்புகிறீர்கள். ஆனால், அவரை உங்கள் வாழ்க்கையில் செயல்படாதபடி கொலை செய்ய நீங்கள் முயற்சிக்கிறீர்களோ?

பிதாவானவர் அவரை ராஜாவாக அனுப்பி இருக்கும்பொழுது நீங்கள் அவரை ராஜாவாக ஏற்றுக்கொண்டு அவருக்குக் கீழ்ப்படிவதும், அவருடைய வார்த்தைகளுக்கு கீழ்ப்படிவதும்தானே நமக்கு நியமிக்கப்பட்டு இருக்கிறது. அப்படி செய்தால்தான் பரலோகத்திலும் நீங்கள் ராஜாவோடு இருக்கமுடியும். பிலாத்து அவரை விசாரிக்கும் பொழுது நீ யூதருடைய ராஜாவா என்று கேட்டான். அதற்கு இயேசு: நீர் சொல்லுகிறபடி நான் ராஜாதான் என்றார். ஆனால் அவனோ, பிரதான ஆசாரியர்களுக்குப் பயந்து இயேசுவை சிலுவையில் அறைந்தான். அங்கே நசரேயனாகிய இயேசு யூதருடைய ராஜா எனும் ஒரு விலாசத்தையும் எழுதினான். அவர் பிறந்தபொழுதும் ராஜாவாக இருந்தார். அவர் மரித்தபொழுதும் ராஜாவாகவே மரித்தார். அவர் உயிர்த்தெழுந்தார். இன்றைக்கும் உங்களுக்கு ராஜாவாய் இருக்கும்படி அவர் உங்களது உள்ளத்தில் இருந்து ஆளுகை செய்ய விரும்புகிறார். ஏற்றுக்கொள்வீர்களா!

இதுதான் தாவீது அவரைக் குறித்துச் சொன்ன தீர்க்கதரிசனத்தின் அர்த்தமாகும். இயேசுவை பிதாவானவர் ராஜாவாக இந்தப் பூமிக்கு அனுப்பினார். இதற்கு எனது பதில் என்னவாக இருக்கவேண்டும் என்றால் நான் அவரை என் வாழ்வின் ராஜாவாக ஏற்றுக்கொள்ளவேண்டும். அதுதான் கிறிஸ்துமஸ் கொண்டாட சரியான ஒரு வழியாகும். அன்பான சகோதரனே, சகோதரியே நீங்கள் ராஜாவாக ஏற்றுக்கொண்டு கீழ்ப்படிந்து நித்திய சந்தோஷத்தை பெற்றுக்கொள்வீர்களா?

2.பிதா இயேசுவை தேவனுடைய குமாரனாக அனுப்பினார்.

இரண்டாவதாக, எபிரெயர் 1:2 முதல் 6 வரையுள்ள வேதபகுதியைப் பார்ப்போம். ஐந்தாம் வசனத்தில், எப்படியெனில், நீர் என்னுடைய குமாரன், இன்று நான் உம்மை ஜெநிப்பித்தேன் என்று பிதா வானவர் சொல்லுகிறார். இங்கே தேவகுமாரனாக பூமிக்கு அனுப்பினார். பிதாவானவர் தமது சாயலும், பிரகாசமும் முழுத்தன்மைகளும் அவருக்குள் இருக்கும்படி அதை மாம்சத்திலே வைத்து அவரை பூமியிலே ஒரு மனிதனாக அனுப்பினார். சகோதரனே, இதை நீங்கள் அறிந்திருக்கிறீர்களா? மாட்டுக்கொட்டகையில் பிள்ளையாக கிடந்தாலும், மரியாளின் பராமரிப்பு வேண்டி இருந்தாலும் அவர் தேவனுடைய குமாரன் என்பதை நீங்கள் ஏற்றுக்கொள்ளுகிறீர்களா?

அப்படி ஏற்றுக்கொண்டால் அவர் தேவன்தான் என்பதையும் ஏற்றுக்கொள்ள வேண்டும். ராஜா வின் குமாரன் ராஜா என்றால் தேவனுடைய குமாரனும் தேவன்தான்! அவரை தேவனாக நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். ஆகையால் அவருக்குக் கீழ்ப்படிந்திருங்கள். இந்த கிறிஸ்துமஸ் இயேசு வைப்பற்றி அவருடைய பிறப்பைக் கொண்டாடுகிற இந்நாளிலே அவர் யார் என்பதை தெளிவாக அறிந்துகொள்ளுங்கள். அவரை தச்சனின் மகன் என்றோ மரியாளின் மகன் என்றோ யூதர்கள் சொன்னாலும் இன்றைக்கு நீங்கள் அவர் தேவனுடைய குமாரன் என்று ஏற்றுக்கொண்டிருக்கிறீர்களா? தேவனுக்கு முன்பாக பயந்து குனிந்து ஆராதனை செய்கிறீர்களா? அவர் சொன்ன வார்த்தையை மீறுவதற்கு பயப்படுகிறீர்களா? நான் பரிசுத்தர்; நீங்களும் பரிசுத்தராய் இருங்கள் என்று சொன்னாரே! அந்த வார்த்தையை முக்கியமானதாகக் கருதி நம் வாழ்க்கையைப் பரிசுத்தமாக்குகிறோமா? இல்லையென்றால் நாம் தேவகுமாரனை காலின்கீழ் மிதிக்கின்ற ஒருவராக இருப்போம்; கொடிதான ஆக்கினைக்குள்ளாவோம்.

இந்த கிறிஸ்துமஸ் நாட்களில் இயேசுவை தேவ குமாரனாக ஏற்றுக்கொள்ளுங்கள். அவரது வீடாகிய பரலோகத்திலே உங்களுக்கு ஒரு சிறப்பான வரவேற்பு உண்டு. அந்தப் பரலோகத்திற்குப் போவதற்கு ஏற்றவிதமாய் ஒரு பரிசுத்த வாழ்க்கையை வாழுங்கள். அப்பொழுதுதான் இந்த கிறிஸ்துமஸ் உங்களுக்கு ஒரு அர்த்தமுள்ள கிறிஸ்துமஸ் ஆக இருக்கும்.

இயேசு ராஜா தான்; அவருக்குக் கீழ்ப்படியுங்கள். இயேசு தேவனுடைய குமாரன்தான். அவரை ஆராதியுங்கள்.

3. பிதாவானவர் இயேசுவைப் பிரதான ஆசாரியனாக அனுப்பினார்.

மூன்றாவதாக, எபிரெயர் 5:5இல் அந்தப்படியே கிறிஸ்துவும் பிரதான ஆசாரியராகிறதற்குத் தம்மைத்தாமே உயர்த்தவில்லை; நீர் என்னுடைய குமாரன், இன்று நான் உம்மை ஜெநிப்பித்தேன் என்று அவரோடே சொன்னவரே அவரை உயர்த்தினார் என்று பார்க்கிறோம். ஆம், பிதாதாமே இவரை பிரதான ஆசாரியனாக்கினார். ஒரு பிரதான ஆசாரியனுடைய வேலை என்ன? ஒரு ஆசாரியன் ஜனங்களுக்காக தேவனிடத்தில் பரிந்து பேசவேண்டும். ஜனங்களின் பாவங்களை நீக்க அவன் பலி செலுத்த வேண்டும். கிறிஸ்துமஸிற்கும் இதற்கும் என்ன சம்பந்தம் என்று நீங்கள் கேட்கலாம். இயேசுகிறிஸ்து இந்த உலகத்துக்கு வந்தபோது ஒரு பிரதான ஆசாரியனாக வந்தார். எபிரெயர் நிருபம் முழுவதும் வாசித்துப் பாருங்கள். நம்முடைய உணர்ச்சிகளை அறிந்துகொள்ள முடியாத ஒரு பிரதான ஆசாரியன் நமக்கு இல்லை. நம்மை அறிந்து, நம்முடைய பெலவீனங்களுக்காக பிதாவினிடத்தில் பரிந்து பேசுகிற ஒரு ஆசாரியனாக இயேசு இந்தப் பூமிக்கு வந்தார் என்பதை அறியமுடிகிறது. அது எனக்கு எவ்வளவு பெரிய ஆறுதல்! அவர் என்னுடைய அட்வகேட்; ஆகையால் எனக்கு ஒரு பெரிய ஆசீர்வாதமென்னவென்றால், நான் தவறு செய்யும்பொழுது எனக்காக மன்றாட இயேசு பிரதான ஆசாரியராய் இருக்கிறார் என்பதே.

அவர் இந்தப் பூமியில் வந்து மனிதனாய் பிறந்ததினால் அவர் பரிந்துபேசி என் பாவங்களை நீக்க அவர் வல்லமையுள்ளவராய் இருக்கிறார். எந்த ஆசாரியனும் ஒரு மிருகத்தைப் பலியிடுவான். ஆனால், அந்தப் பலி பாவங்களை நீக்காது. மறுபடியும் மறுபடியும் அவன் பலி செலுத்தவேண்டும். இயேசுவோ தாமே ஆசாரியனாய், தாமே பலியாகி, தம்மையேச் செலுத்தி, நம்மெல்லாருக்காகவும் அவர் ஒரேதரம் பலியிடப்பட்டதினால் பாவங்களை நீக்க அவருடைய இரத்தம் இன்றைக்கும் வல்லமையுள்ளதாய் இருக்கிறது. இலவசமாய் விசுவாசத்தினாலே நீங்கள் இரட்சிக்கப்பட முடியும். அதற்காகதான் இயேசு ஆசாரியனாக இந்தப் பூமிக்கு வந்தார். அருமையானவர்களே, இதை விசுவாசியுங்கள். உங்களுடைய பாவங்களுக்காக இயேசு கிறிஸ்து அவர் தம்முடைய இரத்தத்தைச் சிந்துவதற்காகதான் ஒரு பாலகனாகப் பிறந்தார்.

இயேசு பாலகனாக இவ்வுலகில் பிறந்ததன் நோக்கம் என்னவென்றால் உங்களுக்கு ஒரு நித்திய பிரதான ஆசாரியனாக அவர் செயல்பட்டு உங்களுடைய பாவங்களுக்காக தம்மையேப் பலிசெலுத்தி பரிசுத்த இரத்தத்தைச் சிந்தி உங்களுடைய பாவங்களிலிருந்து உங்களை விடுதலை ஆக்குகிறார். இதை விசுவாசிப்பீர்களென்றால் உங்களுடைய பாவங்கள் மன்னிக்கப்படும். இந்த கிறிஸ்துமஸ் உங்களது பாவங்கள் மன்னிக்கப்பட்டு, நீங்கள் விடுதலை அடைந்து பாவமன்னிப்பின் சந்தோஷத்தை அனுபவிக்கிற ஒரு கிறிஸ்துமஸ் ஆக இருக்கட்டும்.

சகோதரனே, சகோதரியே, உங்களுக்கு ஒரு பிரதான ஆசாரியன் இருக்கிறார். 1 யோவான் 2 ஆம் அதிகாரத்தில் முதல் இரண்டு வசனங்களை வாசிப்பீர்களென்றால், ஒருவன் பாவஞ் செய்வானானால் நீதிபரராயிருக்கிற இயேசுகிறிஸ்து நமக்காகப் பிதாவினிடத்தில் பரிந்து பேசுகிறவராயிருக்கிறார். ஆகையால் சந்தோஷமாய் இருங்கள். அவரை விசுவாசியுங்கள். இயேசுகிறிஸ்துவின் இரத்தம் உங்கள் பாவங்களை நீக்கி உங்களைச் சுத்திகரிக்கும் என்று விசுவாசியுங்கள். அப்பொழுது இந்த கிறிஸ்துமஸை நீங்கள் முழுமையாக அனுபவிக்க முடியும். பூமியிலே பாலகனாய் பிறந்த இயேசு சர்வலோகங்களின் பாவங்களையும் நீக்க வல்லவராய் இருக்கிறார். இதுவே கிறிஸ்துமஸ்! இதைக் கொண்டாட சிறந்த இடம் மாட்டுக் கொட்டகை அல்ல; கல்வாரி சிலுவையே! தொழுவத்தில்தான் நான் சிலுவையை கொண்டாடுவது உண்மையான கிறிஸ்துமஸ்.

4. பிதாவானவர் இயேசுவை இரட்சகராக அனுப்பினார்.

நான்காவதாக, அப்போஸ்தலர் 13:32,33 ஆம் வசனத்தில் இவ்வாறு பார்க்கிறோம்: நீர் என்னுடைய குமாரன், இன்று நான் உம்மை ஜெநிப்பித்தேன் என்று இரண்டாம் சங்கீதத்தில் எழுதியிருக்கிறபடியே, இயேசுவை எழுப்பினதினாலே தேவன் நம்முடைய பிதாக்களுக்கு அருளிச்செய்த வாக்குத்தத்தத்தை அவர்களுடைய பிள்ளைகளாகிய நமக்கு நிறைவேற்றினார் என்று நாங்களும் உங்களுக்குச் சுவிசேஷமாய் அறிவிக்கிறோம்.

இந்த நடபடிகளை எழுதின லூக்கா சொல்லுகிற ஒரு காரியம்: இயேசுகிறிஸ்துவானவர் இந்தப் பூமிக்கு வந்ததன் நோக்கம் என்னவென்றால், நாம் பாவத்திற்கு மரித்து நீதிக்குப் பிழைக்கவேண்டும் என்பதற்காக நமது பாவங்களை நீக்கி இரட்சிக்க அவர் இந்த உலகத்தில் வந்தார். ஆதலால், பிள்ளைகள் மாம்சத்தையும் இரத்தத்தையும் உடையவர்களாய் இருக்க அவரும் அவர்களைப்போல மாம்சத்தையும் இரத்தத்தையும் உடையவரானார். எபிரெயர் 2:15இல், ஜீவகாலமெல்லாம் மரண பயத்தினாலே அடிமைத்தனத்திற்குள்ளானவர்கள் யாவரையும் விடுதலை பண்ணும்படிக்கும் அப்படியானார் என்று பார்க்கிறோம்.

அவர் மனிதனாக பிறந்தது மரணத்தை ஜெயித்து மரண பயத்தை மாற்றுவதற்காகவே. இயேசு மரித்து உயிர்த்தெழுந்ததினால் எனக்கு ஒரு நிச்சயம் உண்டு: “என் மரணம் என் வாழ்க்கையின் முடிவு அல்ல; அது மறுமையின் வாசல். எனக்கு ஒரு வாழ்வு இன்னும் இருக்கிறது. அது நித்திய வாழ்வு. அதாவது, நித்தியரோடு உள்ள வாழ்வு, அது சந்தோஷமான வாழ்வு, அதுவொரு முடிவில்லாத வாழ்வாகும்.

ஆகவே இந்த உலகத்திலே அதை நாம் வாஞ்சித்து அந்த மறுமை வாழ்வை நினைத்து வாழ வேண்டும். அதாவது, பாவமன்னிப்பாகிய இரட்சிப்பைப் பெற்றவளாக அதை முடிவுபரியந்தம் காத்துக்கொள்கிறவர்களாகப் பரிசுத்தமாய் வாழ வேண்டும்.

ஆகவே அன்பானவர்களே, இன்றைக்கு நீங்கள் மரணத்தைக் குறித்துப் பயப்படவேண்டாம். மரணம் எந்த நேரத்திலும் நமக்கு நேரிடலாம். ஆனால், அதைக் குறித்து கவலைப்படுவது அர்த்தமற்றது. நாம் செய்யவேண்டியது, மரணம் எந்த நேரத்தில் வந்தாலும் அதை சந்திக்க நாம் ஆயத்தமாய் இருக்கவேண்டும். நாம் தேவனோடு இணைந்து அவரோடு வாழ்ந்துகொண்டு, அவரிடத்திலே உறவாடி ஜெபித்து, அவர் வசனங்களை வாசித்து நாம் பரிசுத்தமாய் வாழும்பொழுது மரணத்தைப் பற்றிய பயத்தை அவர் என்னைவிட்டு நீக்கிப் போடுகிறார். மரணம், அது நான் தேவனோடு இணைந்திருக்கும் சந்தோஷமான ஒரு காலம்!

ஆகவே சகோதரனே, இயேசு பாலகனாக பிறந்த இந்த கிறிஸ்துமஸ் உங்களுக்கு மரண பயத்தை நீக்கிப் போட்ட கிறிஸ்துமஸ்! பரலோகத்தின் வாசலைத் திறந்த ஒரு கிறிஸ்துமஸ்! ஆகவே அந்த ஒரு வாய்ப்பை உங்களுக்குக் கொடுத்து இருப்பதினால் இரட்சிக்கப்பட்டு சந்தோஷமாய் வாழ்ந்திருங்கள்.