• சகோ.இ.வஷ்னீ ஏனர்ஸ்ட் •
(நவம்பர்-டிசம்பர் 2022)

இந்த உலகிற்கே ஆச்சரியமானதும், அற்புதமானதும், வல்லமை மிகுந்ததுமான ஒரு நிகழ்வை நினைவுபடுத்தவே நான் விரும்புகின்றேன். அது கிறிஸ்துமஸ் காலத்திற்குமட்டும் உரியதல்ல. எனினும், அது இயேசுகிறிஸ்துவின் பிறப்பைப் பற்றியதே.

இன்று அநேக கிறிஸ்தவர்கள் கிறிஸ்து பிறப்பைக் கொண்டாடும் நாளுக்கு மிக முக்கியத்துவம் கொடுக்கின்றார்கள். பரிசு வழங்க முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். கிறிஸ்து பிறப்பைக் கொண்டாடும் நாள் முக்கியமானதல்ல. நடந்த அந்த சம்பவமே முக்கியமானது. கொடுக்கப்படுகின்ற பரிசு முக்கியமல்ல. கிறிஸ்துவே பரிசாக வந்தார் என்பதே முக்கியமானது.

ஒவ்வொரு வருஷமும் கிறிஸ்துமஸ் நமக்கு இந்த அற்புதத்தையே நினைவுப்படுத்துகின்றது. தேவன் செய்த அற்புதங்களிலேயே மிகவும் மெச்சத்தக்க அற்புதமான அதிசயமான செயல் கிறிஸ்து மாம்சமாகி நமக்குள்ளே வாசம் பண்ணும்படி வந்தார் என்பதே.

வேதாகமம் கூறுகின்றபடி, இயேசு தெய்வீகமானவர். தேவனுடைய குமாரன், நித்தியமானவர். இயேசுவின் பிறப்பைக்குறித்து பேசும்போது, அவர் மாம்சமானார் என்பதே சரியான சொல்லாகும். அதன் அர்த்தமானது, இயேசு மனித வடிவத்தை எடுத்தார், சரீரத்தைப் பெற்றார், மனிதனாக வந்துதித்தார் என்பதாகும். ஆம், அவர் பாலகனாகப் பிறந்தார்.

ஆனால், இன்றைய உலகமானது கிறிஸ்துமஸ் காலங்களில், நமது சிந்தையை திசை திருப்புகின்ற ஒரு கொண்டாட்டத்தையே விரும்புகின்றது. பெத்லகேமில் கிறிஸ்து பிறந்தார் என்பதையோ, அவர் கன்னி மரியாளின் கர்ப்பத்தில் உற்பவித்தார் என்றோ, அவரே வாக்களிக்கப்பட்ட மேசியா என்றோ பெரிதாக கூறுவதில்லை. நாமோ, கிறிஸ்துமஸ் என்று குறிப்பிட்ட ஒரு நாளை நினைவு விழாவாக கொண்டாடாமல், ஒரு அற்புதத்தையே நினைவுகூர்ந்து கொண்டாட வேண்டும். அது நமது நித்தியத்துக்கேதுவான பெரிய திட்டத்தை உள்ளடக்கியது. தேவகுமாரனின் பிறப்பானது, பல தீர்க்கதரிசிகளுக்கூடாக தேவ வாக்குத்தத்தமான முன்னுரைக்கப்பட்ட ஒன்று. நாம் அந்த அற்புதத்தையே கொண்டாட வேண்டும். ஏனெனில், பிதாவானவர் குமாரனை உலக இரட்சகராகவே அனுப்பினார் (1யோவா.4:14).

முதலாவதாக, இயேசுவின் பிறப்பானது அனைத்தையும் மாற்றிவிட்டது. உலகில் அதிக அளவு செல்வாக்கு செலுத்திய இயேசுகிறிஸ்து, மற்றொரு நபர் அல்ல, அவர் தேவனுடைய குமாரன். “தேவன் இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்” அதாவது, வழிதவறிப்போன பாவிகளை தேவன் நேசித்தார். அவர்களை மீட்டுக்கொள்ளும்படி தனது மகனை வெகுமதியாக அளித்தார். இயேசுகிறிஸ்துவானவர் மனிதகுலத்திற்கான தேவனுடைய ஈவாக, கொடையாக, வெகுமதியாக தரப்பட்டிருக்கிறார்.

இருளில் இருக்கும் ஜனங்கள் பெரிய வெளிச்சத்தைக் கண்டார்கள்; மரண இருளின் திசையிலிருக்கிறவர்களுக்கு வெளிச்சம் உதித்தது (மத்.4:15). ஆம், ஆதாமின் சந்ததியான நமக்கு அன்பான தெய்வத்திடமிருந்து மரணத்தை ஜெயிக்க, சாத்தானை ஜெயிக்க, பாவ உலகத்தை ஜெயிக்க ஒரு மீட்பர் கிடைத்தார். அவருக்கூடாக இவ்வுலகிற்கு ஒரு மாற்றம் ஏற்பட்டது.

இரண்டாவதாக, இயேசுகிறிஸ்து உலகில் பிறந்தபடியினால், பாவபிரமாணத்தின் வல்லமையை நீக்கினார். அவர் தேவனுடைய குமாரனாக தேவனின் தெய்வீகத்தை உடையவராக இருந்தார். அதனால், பாவ வல்லமையை நீக்கிப் போடத்தக்க சர்வவல்லமை அவரிடமே இருந்தது. விசுவாசிகளான நமது வாழ்வில் ஒரு புதிய அதிகாரம். ஒரு புதிய சட்டம். ஒரு புதிய கொள்கைக்கான வழி பிறந்தது. ஆனபடியால். கிறிஸ்து இயேசுவுக்குட்பட்டவர்களாயிருந்து, மாம்சத்தின்படி நடவாமல் ஆவியின்படியே நடக்கிறவர்களுக்கு ஆக்கினைத் தீர்ப்பில்லை. கிறிஸ்து இயேசுவினாலே ஜீவனுடைய ஆவியின் பிரமாணம் என்னைப் பாவம் மரணம் என்பவைகளின் பிரமாணத்தினின்று விடுதலையாக்கிற்றே (ரோம.8:1,2).

மூன்றாவதாக, கிறிஸ்துவின் பிறப்பானது தேவனின் வார்த்தையை உறுதிப்படுத்தியது. தேவன் தம் தாசர்களுக்கு அளித்த வாக்குத்தத்தங்களை இயேசுவுக்கூடாக நிறைவேற்றினார். அவர் தம்மைத்தாமே வெறுமையாக்கி அடிமையின் ரூபமெடுத்து மனுஷர் சாயலானார் (பிலி.2:7). நமக்கான தலைவராக அவர் அவதரித்தார். அவர் தேவனுடைய சொந்தக்குமாரனே. உலகிற்கு மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கும் நற்செய்தியாக கிறிஸ்து இரட்சகராக, தமது பிள்ளைகளுக்கான ஆண்டவராக, வழிகாட்டியாக, வழியும் ஜீவனும் சத்தியமுமானவராக வந்தார்.

நான்காவதாக, அவர் நம்மை மீட்டு, நித்தியமான ஒரு பரலோக வீட்டை, நிரந்தர வாசஸ்தலத்தை, ஒரு நம்பிக்கையின் கூடாரத்தினைத் தரவே அவர் இவ்வுலகிற்கு வந்தார்.

இப்போது நாம் சரீரமாகிய ஒரு கூடாரத்தில் வசிக்கிறோம். நீங்களும் நானும் இவ்வுலகில் தற்காலிகமாகவே வாழ்கிறோம். இந்த உடல் தற்காலிகமானது. பூமிக்குரியது. இது வயதடையும். பலவீனமடையும். மரணமடையும். எனினும், நம்மை மீட்கவே இயேசு பூமிக்கு வந்தார். நாம் தற்காலிக கூடாரத்தில் இருக்கிறோம் என்பது அவருக்குத் தெரியும். இது தற்காலிகமானது.

ஒன்றை நீங்கள் உணரவேண்டும். கிறிஸ்துமஸா, பிறந்தநாளா, கோடைக்காலமா, குளிர்காலமா, சிறந்த நாளா, மோசமான நாளா என்பது முக்கியமல்ல. பரிசு வழங்குதல் மற்றும் உணர்ச்சி வசப்பட்ட செயல்களுக்கும் இதற்கும் எவ்வித தொடர்பும் இல்லை. இது ஒரு நாள் கொண்டாட்டம் அல்ல. நித்திய வாழ்வே முக்கியமானது. பயங்கரமான மரணத்திலிருந்து, அழிவிலிருந்து, தீமையிலிருந்து நீங்கள் தப்பித்துக்கொள்ள இயேசுவை நோக்கிப்பாருங்கள்.

நமது கவனத்தை, முக்கியமான நித்தியமானதை நோக்கி செலுத்துவோம். முக்கியமற்ற காரியங்களை ஒதுக்கி வைத்துவிட்டு, இயேசுவை சாஷ்டாங்கம் செய்வோம். அவரே நம்மை இரட்சிப்பார். இந்தக் கிறிஸ்து முழு உலகிற்கும் சொந்த மானவர். கிறிஸ்தவம் உலகளாவியது. இயேசு கிறிஸ்துவின் மூலம் கிடைக்கின்ற இரட்சிப்பு மிக உயர்ந்தது. நீங்கள் ஒரு நகரத்திற்குச் செல்ல விரும்பினால், வேறுதிசையில் பயணம் செய்ய மாட்டீர்கள். ஒரேயொரு வழி மட்டுமே உள்ளது. அதையே பரிசுத்த வேதாகமம் கற்பிக்கிறது.

ஒரே ஒரு இரட்சகர் இருக்கிறார். பரலோகம் செல்வதற்கு ஒரே ஒரு வழியாக, இயேசு கிறிஸ்துவில் தேவன் பதிலை தந்துள்ளார். உலகிலுள்ள சகல மக்களுக்கும் வழங்கப்படும் ஒரே தீர்வு, இயேசுகிறிஸ்து மட்டுமே. கிறிஸ்து சகல மக்களுக்காகவும் வந்தார். ஒரு மனிதராக நீங்கள் கிறிஸ்துவின் மூலமாக மாத்திரமே மீட்கப்படுவீர்கள். இது அனைவருக்கும் இலவசமாக வழங்கப்படுகிறது. யார் வேண்டுமானாலும் தங்கள் வாழ்க்கையில் எந்த நேரத்திலும் இயேசுகிறிஸ்துவிடம் வந்து இந்த இரட்சிப்பின் பரிசைப் பெறலாம். இதுவே கிறிஸ்துமஸின் உண்மையான மகிழ்ச்சி!