• சகோதரி சாந்தி பொன்னு •
(நவம்பர்-டிசம்பர் 2022)

ஆதாமுக்கு ஏழாந்தலைமுறையான ஏனோக்கும் இவர்களைக்குறித்து: இதோ, எல்லாருக்கும் நியாயத்தீர்ப்புக் கொடுக்கிறதற்கும், அவர்களில் அவபக்தியுள்ளவர்கள் யாவரும் … பேசின கடின வார்த்தைகளெல்லாவற்றினிமித்தமும், அவர்களைக் கண்டிக்கிறதற்கும், ஆயிரமாயிரமான தமது பரிசுத்தவான்களோடுங்கூடக் கர்த்தர் வருகிறார் (யூதா 14,15).

சகோதரி சாந்தி பொன்னு

மிலேனியம் கொண்டாட்டங்கள் இன்னமும் நினைவைவிட்டு அகலாத நிலையில், 2022ஐ யும் நாம் கடந்துகொண்டிருக்கிறோம் என்பது ஜீரணிக்கக் கடினமான உண்மை! நமது அறிவின் கணக்குக்கும், நவீன தொழில் நுட்பங்களின் ஆதிக்கத்துக்கும் அப்பால், நெருக்கங்களும் சவால்களும் நிறைந்த காலத்துக்குள் நாம் கடந்து வந்து விட்டோம். எப்படிக் கடந்தோம்? என்னவெல்லாம் நடந்துமுடிந்தன? இப்போது, வாழ்வில் எந்த நிலையில் எங்கே நிற்கிறோம்?

எதையும் சிந்திக்கக்கூட நேரமில்லாதபடி காலத்துடன் சேர்ந்து நாமும் அதிவேகமாக ஓடிக்கொண்டிருக்கிறோம். ஆனால், நமது அவசரங்களையும், அவலங்களையும், ஆதங்கங்களையும் ஒரு கணம் தள்ளிவைத்துவிட்டு, நம்மைக் குறித்து, நம்மவர்களைக் குறித்து, நிதானமாக சிந்திக்கவேண்டியது இந்தக் காலகட்டத்தின் கட்டாயமாக இருக்கிறது. இல்லையானால் இந்த உலகத்தின் வேகம் மிகுந்த ஓட்டத்தில் நாமும் மூழ்கித் தொலைந்து விடுவோமோ என்று ஒருவித பயம் தோன்றுகிறது. ஏனெனில், காலத்தின் வேகத்தைப் பார்க்கிலும் அதிக வேகத்தில் சத்துரு தன் வேலையை நாசூக்காகச் செய்துகொண்டிருக்கிறான், கண்களுக்குத் தெரியாத கண்ணி வலைகளை வேகமாகவே வீசிக் கொண்டிருக்கிறான், குறிப்பாக தேவ பிள்ளைகளை நோக்கியே வீசுகிறான். அதில் அகப்பட்டுத் தவிக்கிறவர்களும் ஏராளமான பேர்!

பாவம் பெருகிவிட்டது என்கிறோம், உண்மைதான், நாளுக்கு நாள் திடுக்கிடும் சம்பவங்கள் நம்மை நிலைகுலையச் செய்கின்றன. உலகம் நம்மீது அழுத்துகின்ற பாரங்கள் ஒருபுறமிருக்க, நாம் சிந்திக்கவேண்டியவற்றை மறக்கச்செய்து, விசுவாசத்தில் தளரப்பண்ணி, ஒரு மாயையான வாழ்வுக்குள் சத்துரு, நம்மை ஈர்த்துக் கொண்டிருக்கிறான் என்பது நிதரிசனமான உண்மை.

உலகம் எப்படித்தான் சீரழிந்துகொண்டிருந்தாலும், கிறிஸ்தவர்கள் நாம், ஞாயிறு ஆராதனையில் தொடங்கி, நமது பழக்கவழக்கங்கள் மற்றும் வருடக் கொண்டாட்டங்கள் யாவையும் முன்னெடுப்பதில் பின் நிற்பதே இல்லை என்பது சந்தோஷ செய்தியா அல்லது துக்க செய்தியா? வரலாற்று நிகழ்வுகளை நினைவுகூருவது நமக்கொரு நம்பிக்கையை, திடத்தைத் தருகிறது என்பது உண்மைதான்; அதிலும் கொண்டாட்டங்கள் நம்மை உற் சாகப்படுத்துகிறது. பண்டிகை ஆசரிப்புகள், கொண்டாட்டங்கள் கர்த்தருக்கும் பிரியமான விஷயம் என்பதை, தமது மக்களை எகிப்திலிருந்து விடு விக்கும்போது, கர்த்தர், பார்வோனிடம் சொல்லும் படி மோசேயைப் பணித்த செய்தியைப் படித்தால் புரியும். ஆனால் இயேசு, இந்த உலகில் வாழ்ந்திருந்தபோது, “என்னை நினைவுகூருங்கள்” என்று எதைக் குறித்துக் கூறினார் என்பதை சிந்திப்போமானால், நமது ஆராதனைகள், கொண்டாட்டங்கள் யாவற்றிலும் எதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்ற நமது மனநோக்கு நிச்சயம் மாறிப்போகும்!

இது கடைசிக் காலம்

மார்கழி பிறந்துவிட்டால் பல மதங்களும், தங்கள் தங்கள் மத அனுஷ்டானங்களை முன்னெடுப்பர். கிறிஸ்தவர்கள் நாம் இந்த மாதத்தை அட்வென்ட் (Advent) காலமாக அனுஷ்டித்து, அதற்கேற்றவாறு ஞாயிறுதோறும் ஆராதனைகளை நடத்துவதுண்டு. அதாவது, இந்த மாதத்து ஞாயிறு தினங்களில், நிறைவேறி முடிந்த இயேசுவின் முதலாம் வருகை மாத்திரமல்ல, இனி நிறை வேறப்போகின்ற இரண்டாம் வருகை பற்றியும் நாம் நினைவுகூருவது நமது கிறிஸ்தவ வழக்கம். ஆனால், அத்துடன் கூடவே பழக்கப்பட்டுப்போன பண்டிகை ஆரவாரங்களுக்கும் குறைவிராது. அது நல்லது, தேவையானது. ஆனால், இவற்றிலும் முக்கியமாக நாம் நினைவுகூர வேண்டிய முக்கிய விஷயங்கள் இன்று தள்ளப்பட்டு புதைக்கப்பட்டு மறக்கப்பட்டுப்போனதோ என்று நமக்கு எண்ணத் தோன்றுகிறது.

நாம் சுயநலத்திற்காகவும் பொதுநலத்திற்காகவும் அநேக ஜெபங்களை ஏறெடுக்கிறோம், நல்லது! ஆனால், ஒரு முக்கிய ஜெபத்தை நாம் மறந்துவிட்டோமோ, அல்லது அதைக் குறித்து அசட்டையீன மாக இருக்கிறோமோ என்பதைச் சிந்தித்தால், இந்த நாட்களில் நினைவுகூரலில் எதெதற்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும் என்பதை உணரமுடியும்.

வேறுபட்ட மதங்கள், மனிதனுடைய இறப்பையும், அதன் பின்னான வாழ்வையும் குறித்து பல்வேறுபட்ட நம்பிக்கைகளைக் கொண்டிருந்தாலும், முழு உலகமும் நம்புகின்ற ஒரு பொதுவான விஷயம், இந்த உலகம் அதாவது இந்தப் பூகோளம் ஒருநாள் அழிந்துவிடும் என்பதுதான். அது எப்போ சம்பவிக்கும் என்பதை யாரும் அறியாததால், இந்தக் காலப்பகுதியை பல்வேறுபட்ட சொற் பதங்களால் விபரிப்பதுமுண்டு. நாம் கிறிஸ்தவர்கள், இதனை “கடைசிக் காலம்” என்கிறோம். உண்மை! ஆனால் ஒரு திருத்தம், இது “கடைசிக் காலத்தின் கடைசிப்பகுதி” என்பதுதான் சரியான பதில். ஏனெனில், இயேசு பரத்துக்கு எடுக்கப்பட்ட பின்னர், அப்போதிருந்த விசுவாசிகள் அவரது இரண்டாம் வருகையை அந்த நூற்றாண்டிலேயே எதிர்பார்த்திருந்தார்கள் என்பது பேதுரு, பவுல் என்பவர்களின் நிருபங்களிலிருந்து புரிந்துகொள்ளலாம். ஆனால் இயேசு தாமே கூறியதாகப் பதியப்பட்டுள்ள மத்தேயு 24ம் அதிகாரத்தின் சம்பவங்களும், பழைய புதிய ஏற்பாடுகளில் ஆங்காங்கே கூறப்பட்டுள்ள கிறிஸ்துவின் இரண்டாம் வருகைக்குரிய அடையாளங்கள் யாவும் இன்று துல்லியமாக நிறைவேறி வருவதை மறுக்கமுடியாது. ஆனால், அதை உணரமுடியாதிருக்கிறோமோ என்பதுதான் கேள்வி. அதை உணர்ந்து, கிறிஸ்துவைச் சந்திக்க ஆயத்தப்படுவதைத் தடுக்குமுகமாக சத்துரு நம்மைத் தந்திரமாக வேறுபட்ட திசைகளில் நமது கவனத்தை ஈர்த்துக்கொள்ள செயற்பட்டுக் கொண்டிருக்கிறான் என்பதை நாம் உணரப் போவது எப்போ?

கடைசி வார்த்தைகள்

ஒருவர் மரிக்கும்போது, இறுதியாக என்னதான் கூறுவார் என்று எதிர்பார்த்துக் காத்திருப்போம் இல்லையா! அவர் ஏதாவது கூறிவிட்டால், அல்லது ஏதாவது அடையாளத்தையாவது சைகையிலே காட்டிவிட்டால், அவருடைய குடும்பத்தினர் அதை ஒருபோதும் அலட்சியம் செய்யமாட்டார்கள். ஏனென்றால் இன்னொரு தடவை பேசுவதற்கு இறந்துவிட்ட அவர் திரும்பவும் வரப்போவதில்லை.

அப்படிப் பார்த்தால்,”பிதாவே, உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன் என்று மகா சத்தமாய்க் கூப்பிட்டுச்…சொல்லி, ஜீவனை விட்டார்” (மத்.23:46) என்று லூக்கா பதிவு செய்துள்ள வார்த்தையை அநேகர் இயேசுவின் இறுதி வார்த்தையாகக் கருதுவதுண்டு. ஆனால், மரித்த இயேசு மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்து, தம்முடையவர்களுக்குத் தரிசனமானார், அவர்களுடன் உறவாடினார், பணிகளைக் கொடுத்தார். பின்னர், நாற்பதாம் நாளில், அவர் உயர எடுத்துக்கொள்ளப்பட்டபோது, “பூமியின் கடைசி பரியந்தமும் எனக்குச் சாட்சிகளாயிருங்கள்” (அப்.1:8) என்று தம்முடையவர்களிடத்தில் சொல்லி உயர எடுத்துக்கொள்ளப்பட்டார் என்று வாசிக்கிறோம். அப்படியானால் இதுதான் கடைசி வார்த்தையா? இல்லை. ஆண்டவர் உரைத்ததாக வேதாகமம் நமக்குத் தந்திருக்கிற கனதியான, உறுதியான, நம்பிக்கைத் தருகின்ற, மாறாத கடைசி வார்த்தை ஒன்று உண்டு. அதைச் சொன்னவர் நிச்சயம் சொன்னபடியே செய்வார்.

“இவைகளைச் சாட்சியாக அறிவிக்கிறவர்: மெய்யாகவே நான் சீக்கிரமாய் வருகிறேன் என்கி றார்” (வெளி.22:20) என்பதே பரிசுத்த வேதாகமம் பதிவு செய்துள்ள ஆண்டவரின் கடைசி வார்த்தையாகும். ஆம், வருவேன் என்றவர் வந்திடுவார் என்பது திண்ணம். நமது அவசர வாழ்வின் ஓட்டத்திலும், உலகம் நம்மை ஈர்த்துள்ள பலவித கவர்ச்சிகளின் மத்தியிலும், கிறிஸ்துமஸ் ஆரவாரங்களிலும், ஆண்டவருடைய கடைசி வார்த்தைக்கு யார் கவனம் செலுத்துகிறார்கள்? “சீக்கிரமாய் வருகிறேன்” என்று இந்த வார்ததையை நாம் வெகு இலகுவாக எடுத்துவிடுகிறோம். மெய்யாகவே இந்த வார்த்தை நமது உள்ளத்தைத் துளைக்குமானால், அவர் இட்டுப்போன பணியாகிய சுவிசேஷ பணியைக் குறித்து நாம் அஜாக்கிரதையாக இருக்கமாட்டோம்.

மாத்திரமல்ல, அவரைச் சந்திப்பதற்குரிய ஆயத்தத்தைக் குறித்த பயம் நமக்குள் இல்லாமல் போகாது. இப்படியிருக்க, இன்று நமது ஜெபங்களில்,”ஆமென், கர்த்தராகிய இயேசுவே, வாரும்” என்று நாம் அழைக்க நாம் பின்நிற்பது ஏன்? இதுவே இன்று நாம் செய்யவேண்டிய முக்கிய ஜெபம் என்றால் அது மிகையாகாது.

வருவேன் என்றவர் வந்திடுவார்

உலகத்தோற்றத்திற்கு முன்னே குறிக்கப்பட்ட இரட்சகராகவே (1பேது.1:20) இயேசு தமது முதல் வருகையில் வெளிப்பட்டார். “நமக்கு ஒரு பாலகனாக பிறந்தார், நமக்கு ஒரு குமாரனாகக் கொடுக்கப்பட்டார்” (ஏசா.9:6). இவ்விதமாக இயேசுவின் பிறப்பு பழைய ஏற்பாட்டில் அநேக இடங்களில் முன்னறிவிக்கப்பட்டபடி, இயேசு என்னும் இரட்சகர் தாவீதின் வம்சத்திலே வாக்களிக்கப்பட்டபடியே வந்து பிறந்தார். உலக இரட்சகராக பிதாவினாலே அனுப்பப்பட்டவர், தமது ஏக பலியை சிலுவையில் நிறைவேற்றி முடித்து, இப்போது, “அவர் பரலோகத்திற்குப் போய், தேவனுடைய வலது பாரிசத்தில் இருக்கிறார்” (1பேதுரு 3:22).

இப்படியே வாக்களிக்கப்பட்டபடி உலக இரட்சகராக கிறிஸ்து வந்தாரென்றால், வாக்களிக்கப் பட்டபடி நம்மைச் சேர்த்துக்கொள்ள திரும்பவும் அவர் வருவதும் உறுதியல்லவா! ஆனால் முதல் தடவை ஒரு குழந்தையாக, மனிதனாக, பாடுபடுகின்ற தாசனாக, ஏக பலியாக வந்தவர் இனியும் அப்படியே வரப்போவதில்லை; மாறாக, நீதியுள்ள நியாயாதிபதியாகவே அவர் வரக் காத்திருக்கிறார். அந்த நியாயத்தீர்ப்புக்கு யாரும் தப்பித்துக்கொள்ள முடியாது.

கிறிஸ்துவின் இரண்டாம் வருகையைக் குறித்துப் பழைய புதிய ஏற்பாடு இரண்டிலும் அநேக இடங்களில் தெளிவாக்கப்பட்டிருக்கிறது. “ஆதாமுக்கு ஏழாம் தலைமுறையான ஏனோக்கு, இதோ எல்லாருக்கும் நியாயத்தீர்ப்புக் கொடுக்கிறதற்கும், கண்டிக்கிறதற்கும், ஆயிரமாயிரமான தமது பரிசுத்தவான்களோடுங்கூடக் கர்த்தர் வருகிறார் என்று முன்னறிவித்தார்” (யூதா 14-15) என்று வாசிக்கிறோம். இயேசுவின் முதலாம் வருகையையே அறிந்திராத ஏனோக்கு கிறிஸ்துவின் இரண்டாம் வருகையை முன்னறிவித்தார் என்றால், காரியத்தின் தீவிரம் எப்படிப்பட்டது என்பதைச் சிந்திப்போம்.

மேலும், “என் மீட்பர் உயிரோடிருக்கிறார் என்றும், அவர் கடைசி நாளில் பூமியின்மேல் நிற்பார் என்றும் நான் அறிந்திருக்கிறேன். ……அவரை நான் பார்ப்பேன்; அந்நிய கண்கள் அல்ல, என் கண்கள் அவரைக் காணும்” (யோபு 19:25-27) என்ற யோபுவின் வார்த்தைகளிலுள்ள உறுதியைக் கவனித்தீர்களா?

இன்னும், “உன் தேவனாகிய கர்த்தர் என்னைப் போல ஒரு தீர்க்கதரிசியை உனக்காக உன் நடுவே உன் சகோதரரிலிருந்து எழும்பப் பண்ணுவார்” (உபா.18:15) என்று மோசே சொன்னபோது, அன்று இஸ்ரவேல், யோசுவாவைத்தான் மோசே குறிப்பிடுவதாக நினைத்திருப்பர். ஆனால், பேதுரு மற்றும் ஸ்தேவான் இந்த வேதப்பகுதியை இயேசுவைப்பற்றிய எதிர்வு கூறாலாக எடுத்துக்கொண்டார்கள் (அப்.3:22-23; 7: 37). ஏனைய பழைய ஏற்பாட்டுத் தீர்க்கதரிசனங்களைப்போல தீர்க்கதரிசன நிறைவேறுதலின் நாளுக்கு சமீபத்தில் நிறைவேறும் வேதப்பகுதியாக இது இருக்கும், மற்றும், பின்னர் ஏனைய நிறைவேறுதல்களுடன், இதுவும் கிறிஸ்துவில் பூரணமாக உச்சநிலைக்கு வரும்.

இன்னும் நமக்கு என்னதான் வேண்டும்? தமது மணவாட்டி சபையை அழைப்பதற்காகக் கர்த்தர் மத்திய ஆகாயத்தில் வரும்போது, கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் முதலாவது எழுந்திருக்க, உயிரோடிருக்கும் நாமும் கர்த்தருக்கு எதிர்கொண்டு போக, மேகங்களின்மேல் அவர்களோ டேகூட ஆகாயத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டு, இவ்விதமாய் எப்பொழுதும் கர்த்தருடனேகூட இருப்போம் (1தெச.4:15-17). இந்த வார்த்தைகளை பவுல் எவ்வளவு ஆணித்தரமாக எழுதியுள்ளார். இந்த உலகில் கர்த்தருக்காக ஜீவித்து, அவர் சித்தம்செய்து, அவரை மகிழ்விக்கும்படி அவர் பணி செய்ய இந்த உறுதியான வார்த்தைகள் நமக்குப் போதாதா!

“மெய்யாகவே நான் சீக்கிரமாய் வருகிறேன்”

முதலாவதாக, இது யோவானோ, அல்லது, வருகிறேன் என்று சொன்னவரிடமிருந்து யோவான் பெற்று அறிவித்த வார்த்தையோ அல்ல; இது ஆண்டவர் தாமே பேசிச்சொன்ன வார்த்தை என்பதை, “அறிவிக்கிறவர்” “என்கிறார்” என்று சொற்களிலிருந்து நாம் தீர்க்கமாக அறிந்துகொள்ளலாம். யோவான் 14:3இல், “நான் போய் உங்களுக்காக ஸ்தலத்தை ஆயத்தம் பண்ணின பின்பு, நான் இருக்கிற இடத்திலே நீங்களும் இருக்கும்படி, …நான் மறுபடியும் வந்து உங்களை என்னிடத்தில் சேர்த்துக்கொள்ளுவேன்” என்கிறார் ஆண்டவர். அதாவது தம்முடையவர்களைத் தம்மிடம் சேர்த்துக்கொள்ளும்படிக்கு தாம் திரும்பவும் வருவதாக உறுதியளிக்கிறார். இங்கே, வேதவாக்கியங்களின் இறுதியிலே, “மெய்யாகவே நான் சீக்கிரமாய் வருகிறேன்” என்கிறார். ஆண்டவர் பேசிய இந்த இறுதி வார்த்தையை நாம் இதயபூர்வமாக ஏற்று உணர்ந்து ருசிப்போமானால் நமது வாழ்வில் எவ்வளவு மாற்றங்கள் தானாய் நடைபெறும்!

இந்த “சீக்கிரமாய்” என்ற சொல்லுக்கு ஒரு ஆசிரியர் கொடுத்த விளக்கம் என் மனதை அசைத்ததால் இங்கே அதை உள்ளடக்குகிறேன். அதாவது, ஒரு தாயார் தன் பிள்ளைகளைப் பிரிந்து தூரப்பிரயாணமாகவோ, வெளிதேசப் பிரயாணமாகவோ செல்லவேண்டி இருக்கிறதாக வைத்துக்கொள்வோம். அத்தாய் தன் பிள்ளைகளை அணைத்து பிரியாவிடை சொல்லும்போது, என்ன சொல்லுவாள்? “நான் விரைவில் வந்திடுவேன்” என்பாளல்லவா; சென்ற இடத்திலிருந்து ஒரு குறுஞ் செய்தி அனுப்புவாளென்றால்,”உங்களை நான் சீக்கிரமாய் பார்ப்பேன்” என்பாள். மேலும், ஒரு கடிதம் எழுதக்கூடுமானால், தான் இல்லாத நாட்களில் பிள்ளைகள் என்ன செய்யவேண்டும், எப்படி இருக்கவேண்டும் என்பதை எழுத்தில் அறிவித்து, “நான் எப்படியோ சீக்கிரமாய் வந்து விடுவேன்” என்று எழுதுவாள் அல்லவா! ஏனென்றால், அந்த பிஞ்சு இதயங்கள் தனக்காக எவ்வளவாக ஏங்கும் என்பது அவளுக்குத் தெரியும். தன் பிள்ளைகள் தன்னை முகமுகமாய் காணும்வரைக்கும் முழுமையான சந்தோஷத்தைக் காணவும் மாட்டார்கள், தான் அனுப்புகின்ற வார்த்தையும்தான் அவர்களுடன் இருப்பதைப்போல மதிப்புள்ளதாக இருக்கவும் மாட்டாது என்பதையும் அவள் அறிவாள்.

இதற்கு இன்னுமொரு ஆழமான பக்கமும் உண்டு. அதாவது, பிள்ளைகள் தங்கள் தாய்க்காக ஏங்கும் ஏக்கம் ஒருபுறமிருக்க, அவள் பிள்ளைகள் அவளுடைய இதயத்திலே இருக்கிறார்கள்; அவர்களைக் காணும்வரைக்கும், அவர்களை அரவணைக்கும் வரைக்கும் அவளுக்குத் திருப்தி இருக்காது; ஆகவே அவள் தாமதிக்கமாட்டாள்.

தன் பிள்ளைகள்பேரில் ஒரு தாயின் இதயம் இத்தனை வாஞ்சையாயிருக்குமானால்,தமது இரத்தத்தால் மீட்டுக்கொண்ட தமது சொந்தப் பிள்ளைகளை தம்முடன் சேர்த்துக்கொள்ள, நமது ஆண்டவர் எவ்வளவு வாஞ்சையாயிருப்பார்! “சீக்கிரம்” என்று தாம் கூறிய வார்த்தைகள் அவரது இருதயத்திலிருந்து வந்த வார்த்தைகள், அது காத்திருக்கிறது. “வருகிறவர் இன்னுங் கொஞ்சக்காலத்தில் வருவார், தாமதம் பண்ணார்” (எபி.10:37) என்கிறார் எபிரெய ஆசிரியர். பேதுருவோ, “தாமதிக்கிறார் என்று சிலர் எண்ணுகிறபடி, கர்த்தர் தமது வாக்குத் தத்தத்தைக் குறித்துத் தாமதமாயிராமல்: ஒருவரும் கெட்டுப்போகாமல் எல்லாரும் மனந்திரும்ப வேண்டுமென்று விரும்பி, நம்மேல் நீடிய பொறுமையுள்ளவராயிருக்கிறார்” (2பேதுரு 3:9) என்கிறார்.

ஆனால், அவர் தாம் வரும்வரைக்கும் நாம் என்ன செய்யவேண்டும் எப்படி வாழவேண்டும் என்று எழுத்தில் கொடுத்திருக்கிறாரே! “ஆகையால், பிரியமானவர்களே, இவைகள் வரக் காத்திருக்கிற நீங்கள் கறையற்றவர்களும் பிழையில்லாதவர்களுமாய்ச் சமாதானத்தோடே அவர் சந்நிதியில் காணப்படும்படி ஜாக்கிரதையாயிருங்கள்”, “அக்கிரமக்காரருடைய வஞ்சகத்திலே நீங்கள் இழுப்புண்டு உங்கள் உறுதியிலிருந்து விலகி விழுந்துபோகாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்” (2 பேதுரு 3:14,17). இந்த வார்த்தைகள் நம்மைச் சிந்திக்கவைக்கட்டும்.

இரண்டு கூட்ட மக்கள்

கிறிஸ்துவின் இரண்டாம் வருகையில் இரு பக்கங்கள் இருக்கும். கிறிஸ்துவை அறியாத, மேலும் அறிந்தும் அறியாதவர்களாக இந்த உலக ஓட்டத்திலே ஓடுகிற ஒரு கூட்டம் மக்கள்; இவர்கள் கர்த்தருடைய நியாயத்தீர்ப்பின் நாளில் கலக்கமடைவார்கள், பயமும் திகிலும் அவர்களைப் பிடிக்கும். ஏனென்றால் உலகமும் உலக இச்சையும் அவர்களைத் தேவனைவிட்டுத் தூரத்தே தள்ளியிருக்கும். அவர்களால் கர்த்தரை எதிர்கொள்வது கடினம். அடுத்த பக்கத்தில் இயேசுவின் இரத்ததால் மீட்கப்பட்டதுமன்றி, அவருடைய வார்த்தைகளுக்குக் கீழ்ப்படிந்து நடந்து அவர் வருகைக்குக் காத்திருக்கிறவர்களோ கர்த்தருடைய நியாயத்தீர்ப்பு நாளைக் குறித்து பயப்படமாட்டார்கள். மாறாக, இந்த உலக பாரத்தைச் சுமந்து களைத்தவர்களாக, கர்த்தருடன் நித்திய வீட்டில் வாழப்போகும் மகிழ்ச்சி ஆரவாரத்துடன் அவரைச் சந்திப்பார்கள்.

இந்த இரண்டு கூட்டத்தாரில் நாம் யார்? ஒன்று, இந்த ஆரவார உலகிலே, நாம் மூழ்கி நம் வாழ்வை இழந்துபோகப்போகிறோமா? அல்லது, “சீக்கிரமாய்” வருகிறேன் என்றவரை எதிர்கொள்ள ஜாக்கிரதையுடன் விழித்திருக்கிறோமா? அடுத்தது, அவரைச் சந்திப்பேன் என்ற உறுதி நமக்கிருக்கிறதென்றால், அவரை அறியாமல், அழிவை நோக்கி வேகமாக ஓடிக் கொண்டிருக்கிற மக்களைக் குறித்து நமது பாரம் என்ன? நாம் சுயநலத்தோடு வாழ்கிறோமா? அல்லது பிறரும் இயேசுவின் மகிழ்ச்சியில் பங்கெடுக்கவேண்டுமே என்ற அங்கலாய்ப்போடு பணி செய்கிறோமா? முக்கியமாக இந்தக் கொண்டாட்ட காலத்தில், ஜாக்கிரதையோடும் விழிப்போடும் நமது காரியங்களை முன்னெடுப்பதோடு, நமது நோக்கத்தில், ஜெபத்தின் போக்கில் கவனமாயிருப்போமாக.

வருவேன் என்றவர் சீக்கிரமாய் வந்திடுவார்! அவரைச் சந்திக்க நாம் ஆயத்தமா? ஆயத்தமானால், “ஆமென், கர்த்தராகிய இயேசுவே வாரும்” (வெளி.22:20) என்று நாம் மனதார அழைப்போமாக.