சத்திய வசனம் பங்காளர் மடல்
(ஜனவரி – பிப்ரவரி 2024)
கிறிஸ்துவுக்குள் பிரியமுள்ள விசுவாச பங்காளர்களுக்கு,
கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் இனியநாமத்தில் அன்பின் வாழ்த்துக்கள்.
இவ்விதழ் வாயிலாக தங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சியடைகிறோம். சத்தியவசன ஊழியத்தை 2024ஆம் ஆண்டிலும் ஜெபத்தினாலும் காணிக்கையினாலும் தாங்க அன்போடு அழைக்கிறோம். தொலைகாட்சி, இலக்கியம், இணையதளம், சோஷியல் மீடியாக்கள் ஆகியனவற்றின் வாயிலாக ஒவ்வொருநாளும் பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு சுவிசேஷத்தை அறிவிக்கவும் சத்தியத்தைப் பகிர்ந்துகொடுக்கவும் கர்த்தர் கிருபைசெய்து வருகிறார். இவ்வூழியத்திற்கு தாங்கள் இணைக்கரம் நீட்டுவதன் மூலமாக தேவனுடைய ராஜ்யம் கட்டப்படுவதில் நீங்களும் முக்கிய பங்கு வகிக்கிறீர்கள் என்பதைத் தெரியப்படுத்துகிறோம். தொலை காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் சத்தியவசன ஊழியப்பணிகளை மற்றவர்களுக்கு அறிமுகப் படுத்தவும் அன்பாய் கேட்கிறோம்.
ஆன்லைன் மூலமாக எமது வங்கிக்கணக்கிற்கு காணிக்கை அனுப்பும் பங்காளர்கள் தயவுசெய்து பணம் அனுப்பிய பின், பணம் செலுத்திய விபரங்களை Phone/ Whatsapp/ SMS/ Email வாயிலாக எங்களுக்கு தெரிவிக்க மறவாதீர்கள். அப்பொழுதுதான் உங்களுக்கு சரியானபடி ரசீதுகளை அனுப்பித் தரமுடியும். கடந்த ஆண்டு இவ்வாறு பணம் அனுப்பிய பின் அந்த விபரங்களை எங்களுக்குத் தெரிவிக்காததினால் அநேகருக்கு ரசீதுகளை அனுப்பி வைக்க முடியாமலும், அவர்களது கணக்கில் வரவு வைக்க இயலாமலும் உள்ளது. ஆகவே கடந்த ஆண்டில் தாங்கள் பணம் அனுப்பிய விபரங்கள் இருக்குமானால் எங்களுக்கு உடனேத் தெரியப்படுத்துவீர்களென்றால் உங்களுக்கு அதற்கான இரசீதுகளை அனுப்பி வைப்போம்.
இவ்விதழில் சகோதரி சாந்தி பொன்னு அவர்கள் எழுதிய தேவனுடைய ராஜ்யமும் நாமும்… என்ற தலைப்பில் எழுதியுள்ள சிறப்பு தேவசெய்தியும், அவர் நம்மை மீண்டும் கட்டுகிறார் என்ற தலைப்பில் சகோ.காந்தன் அவர்கள் எழுதியுள்ள கட்டுரையும், தேவனிடம் அன்புசெலுத்தும் உள்ளத்தையே தேவன் எதிர்பார்க்கிறார் என்பதை விளக்கி அன்பே பிரதானம் என்ற தலைப்பில் சகோ.சாம்சன் அவர்கள் எழுதியுள்ள கட்டுரையும் இடம்பெற்றுள்ளது. மேலும் ஆசீர்வாதமான கிறிஸ்தவ குடும்பம் என்ற தலைப்பில் Dr.எம்.எஸ்.வசந்த குமார் அவர்கள் எழுதிய செய்தியின் தொடர்ச்சியும், வெளிப்படுத்தின விசேஷத்திலிருந்து Dr.உட்ரோ குரோல் அவர்கள் வழங்கிய வேதபாடமும், காலங்களைப் பற்றிய சத்தியம் என்ற தலைப்பில் Dr.தியோடர் எச்.எஃப். அவர்கள் எழுதிய தொடர் வேதபாடமும் இடம்பெற்றுள்ளது. இவ்விதழின் வாயிலாக தாங்கள் ஆசீர்வாத மடைய வேண்டுதல் செய்கிறோம்.
இச்செய்திகளின் வாயிலாக தாங்கள் பெற்ற ஆசீர்வாத அனுபவங்களை தேவனுடைய நாம மகிமைக்காக எங்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.
கே.ப.ஆபிரகாம்