• Dr.வாரன் வியர்ஸ்பி •
(மே – ஜுன் 2025)

இறையியல் கூற்றுகளைப் பற்றி யூதக் குருக்கள் பொதுவான இடங்களில் விவாதிப்பது என்பது இயல்பான காரியம் ஆகும். மேலும் நியாய சாஸ்திரி இயேசுவினிடத்தில் கேட்ட கேள்வியானது யூதர்களால் அடிக்கடி விவாதிக்கப்பட்ட ஒன்றாகும். அவன் கேட்ட கேள்வியானது மிகவும் நல்ல கேள்வியாகும். ஆனால், அந்த நியாயசாஸ்திரி கெட்ட நோக்கத்தோடு அதைக் கேட்டான். நியாயசாஸ்திரி இயேசுவை சிக்க வைக்க வேண்டுமென நினைத்தான். ஆனால், இயேசு அந்த நியாயசாஸ்திரியை சிந்திக்க வைத்தார். மேலும் அவனை நியாயப்பிரமாணத்திற்கு நேராய் திருப்பினார். ஏனென்றால் நியாயப்பிரமாணம் நம்மை இரட்சிக்கிறது என்பதற்காக அல்ல (கலா.2:16,21; 3:21). ஆனால், நியாயப்பிரமாணம் நாம் இரட்சிக்கப்பட வேண்டும் என்பதை நமக்கு சுட்டிக்காட்டு கிறதாய் உள்ளது. தீர்மானம் இல்லாமல் ஒரு உண்மையான மனமாற்றம் இருக்கவே முடியாது. மேலும் கர்த்தர் பாவிகளைக் கண்டிப்பதற்காகவே நியாயப் பிரமாணத்தை வைத்துள்ளார் (ரோமர் 3:20).

நியாயசாஸ்திரி இயேசுவுக்கு பின்வரும் பதிலைக் கூறினான்: “அவன் பிரதியுத்தரமாக: உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் உன் முழுப் பலத்தோடும் உன் முழுச் சிந்தையோடும் அன்பு கூர்ந்து, உன்னிடத்தில் அன்புகூருவது போலப் பிறனிடத்திலும் அன்பு கூருவாயாக என்று எழுதியிருக்கிறது என்றான் (லூக்.10:27).” உண்மையிலே, நியாயசாஸ்திரி சரியான பதிலைக் கொடுத்தான். ஆனால், அவன் தனது வாழ்வில் அதைக் கடைபிடிக்கவில்லை. மேலும் தன்னை நியாயப்படுத்திக்கொள்ள முயன்றான். அவன் தனது பழைய விவாத தந்திரத்தை இங்கு பயன்படுத்தினான். இயேசுவிடம், எனக்குப் பிறன் யார்? என்று கேட்டான். இயேசு அவனிடம் இந்தக் கதையை ஒரு உவமை என்று சொல்லவில்லை. எனவே அது ஒரு உண்மையான நிகழ்வின் செய்தியாக இருக்கக்கூடும். ஏனென்றால், யூதர்களை மோசமாகவும், சமாரியர்களை நல்லவர்களாகவும் காட்டும் ஒரு கதையை இயேசு சொல்வது ஆபத்தானதாகவோ அல்லது தன்னைத்தானே தோற்கடித்துக் கொள்வதாகவோ இருக்கும் அல்லவா?

ஆகையால் அவருடைய பேச்சைக் கேட்டவர்களில் சிலர் நியாயசாஸ்திரி உட்பட, அப்படி ஒரு விஷயம் உண்மையில் நடந்தது என்பதை அறிந்திருக்கலாம். எப்படியிருந்தாலும், இந்தச் செய்தியானது யதார்த்தமானதுதானே.

குறிப்பாக, உவமைகளை நாம் கையாளும் முறை சற்று மோசமாகதான் உள்ளது. இந்த உவமையில் நாம் செய்யக்கூடிய வித்தியாசமான காரியம் என்னவென்றால், அதை ஒரு உருவகமாக மாற்றி, எல்லாவற்றையும் ஏதோ ஒன்றைக் குறிக்கச் செய்வதுதான். அதாவது பாதிக்கப்பட்டவர் (உடல் ரீதியாக, ஆன்மீக ரீதியாக) வாழ்க்கைப் பாதையில் உதவியற்ற நிலையில் கைவிடப்படுகிறார். அங்கே வந்த ஆசாரியரும், லேவியரும் கற்பனைகளையும், பலிகளையும் முக்கியப்படுத்துகின்றனர். ஆனால், இரண்டு பேருமே பாதிக்கபட்ட நபரை காப்பாற்ற முடியாது.

பின்வரும்படியாக இந்த வேதபகுதியை விளக்குவதன் மூலம் இயேசு நமக்கு அளிக்க விரும்பின செய்திகளை நாம் தவறவிடுகிறோம். அது எப்படியெனில், சமாரியனை அந்த மனிதனைக் காப்பாற்றும் இயேசுகிறிஸ்துவாகவும், மேலும் அவர் கட்டணத்தைச் செலுத்தி, மீண்டும் வருவதாக உறுதியளிக்கிறார் என்பதாகவும், சத்திரம் என்பது விசுவாசிகள் பராமரிக்கப்படும் உள்ளூர் தேவாலயத்தைக் குறிப்பதாகவும் “இரண்டு காசு” என்பது இரண்டு கட்டளைகள், ஞானஸ்நானம் மற்றும் ஒற்றுமையை குறிப்பிடுவதாகவும் சிலர் விளக்க முயற்சி செய்கின்றனர். நீங்கள் இப்படி வசனத்தை விளக்க முற்படும்போது எதை வேண்டுமானாலும் சொல்லி வசனத்தை விளக்கலாம். ஆனால், அந்த வேதபகுதி சொல்லும் சரியான மைய கருத்தை நாம் இழந்துவிட நேரிடும். கர்த்தர் நமக்கு அளிக்க விரும்பும் செய்தியையும் தவறவிடுகிறோம்.

எருசலேமிலிருந்து எரிகோவுக்குச் செல்லும் பாதை உண்மையில் ஆபத்தானதுதான். ஆசாரியர்கள் அதை அதிகமாகப் பயன்படுத்தியதால், யூதர்கள் அல்லது ரோமர்கள் அதைப் பாதுகாப்பாக மாற்ற நடவடிக்கை எடுத்திருப்பார்கள் என்று நீங்கள் நினைத்திருப்பீர்கள். விஷயம் என்னவெனில், சுற்றுப்புறத்தை மேம்படுத்துவதைவிட ஆலயத்தைப் பராமரிப்பது மிகவும் எளிதானது ஆகும். ஆசாரியரும் லேவியரும் பாதிக்கப்பட்டவரைப் புறக்கணித்ததால், நம்மில் பெரும்பாலோர் சாக்குப்போக்குகளைச் சொல்லலாம். (ஒருவேளை நாமே அவற்றைப் பயன்படுத்தியிருக்கலாம்) ஆசாரியர் வாரம் முழுவதும் ஆலயத்தில் கர்த்தருக்கு ஊழியம் செய்துவிட்டு வீட்டிற்குச் செல்ல ஆர்வமாக இருந்தனர் என நாம் நினைக்கலாம். மேலும் கொள்ளையர்கள் ஒருவேளை இன்னும் அருகிலேயே பதுங்கியிருக்கலாம், பாதிக்கப்பட்டவரை அவர்கள் தூண்டிலாக பயன்படுத்தியிருக்கலாம் எனக்கூட நாம் நினைக்கலாம். எப்படியிருந்தாலும், அந்த மனிதன் தாக்கப்பட்டது அவன் தவறு அல்ல.

சாலை பரபரப்பாக இருந்தபடியால் வேறு யாராவது வந்து அந்த மனிதனுக்கு உதவுவார்கள் என்று அந்த ஆசாரியன் நினைத்து விட்டுவிட்டு போய் இருக்கலாம். அதேபோல் லேவியனும் விட்டு விட்டுபோய் இருக்கலாம். இவர்களின் செயலை ஒரு மதவாதியின் மோசமான முன்மாதிரியாகதான் பார்க்கவேண்டும்.

இயேசு ஒரு சமாரியனை முன்மாதிரியாக பயன்படுத்தி, யூதர்களை நிராயுதபாணியாக்கினார். ஏனென்றால் யூதர்களும் சமாரியர்களும் அந்நாட்களில் எதிரிகளாக இருந்தனர் (யோவான் 4:9, 8:48). இதில் ஒரு யூதன் ஒரு சமாரியனுக்கு உதவவில்லை; ஆனால், தனது சகயூதர்களால் புறக்கணிக்கப்பட்ட ஒரு யூதனுக்கு ஒரு சமாரியன் உதவினான். இதில் சமாரியன் தன்னை வெறுத்தவர்களை நேசித்தான். மேலும் அவன் தன் உயிரைப் பணயம் வைத்தான். அந்த யூதனுக்காக தனது சொந்தப்பணத்தை செலவிட்டான். அந்தப் பணம் ஒரு வேலையாளின் இரண்டு நாள் கூலிக்கு சமமானதாகும்.

“இரக்கம் காட்டுதல்” என்றால் என்னவென்பதை நாம் நன்கு புரிந்துகொள்ள சமாரியன் செய்த காரியம் உதவுகிறது (லூக்கா 10:37). அதுபோல, சமாரியன் செய்த காரியம் இயேசுகிறிஸ்துவின் ஊழியத்தையும் விளக்குகிறது. சமாரியன் அந்நியனின் தேவைகளை அடையாளம் கண்டுகொண்டு அவன்மீது இரக்கம் காட்டினான். தேவையில் இருக்கும் “எதிரிக்கு” உதவுவதற்காக அவன் தனது திட்டங்களை மாற்றியமைத்துக்கொண்டான், மேலும், தனது பணத்தை செலவிடுவதற்கு எந்த தர்க்கரீதியான காரணத்தையும் அவன் தேடவில்லை, சொல்லப்போனால் இரக்கம் செய்வதற்குக் காரணங்கள் தேவையில்லை.

அந்த ஆசாரியன் கற்பனைகளில் நிபுணராக இருந்தவன். கர்த்தர் தன்னுடைய ஜனத்திற்கு கட்டளையிட்டபடி அந்த ஆசாரியன் அந்நியர்களிடமும் எதிரிகளிடமும் இரக்கம் காட்டவேண்டும் என்பதை நிச்சயமாக அறிந்தவனாக இருந்தான் (யாத். 23:4,5; லேவி. 19:33,34; மீகா 6:8).

இயேசு எவ்வளவு ஞானமாக நியாய சாஸ்திரியை “தலைகீழாக மாற்றினார்” என்று பாருங்கள். தன்னுடைய பொறுப்பைத் தவிர்க்க முயன்றதினால்தான் அவன் “எனக்குப் பிறன் யார்?” என்று கேட்டான். ஆனால் இயேசு, “இந்த மூன்று பேரில் யார் பாதிக்கப்பட்டவருக்கு பிறனாக இருந்தான்?” என்று கேட்டார். தேவையோடு எங்கெல்லாம் மக்கள் இருக்கிறார்களோ அங்கெல்லாம் நாம் அவர்களின் பிறனாக இருக்கிறோம்; எனவே இயேசுகிறிஸ்துவைப்போல நாமும் அவர்களுக்கு இரக்கம் பாராட்டலாம்.

நியாயசாஸ்திரி, “தனக்குப் பிறனாக இருப்பவன் யார்?” என்பதைக் குறித்து பொதுவான முறையில் விவாதிக்க விரும்பினான். ஆனால் இயேசு, அவனை ஒரு குறிப்பிட்ட தேவையுள்ள மனிதனைக் கருத்திற்கொள்ள கட்டாயப்படுத்தினார். நமது இலட்சியங்களைப்பற்றி நாம் விரிவாகப் பேசலாம். ஆனால், ஒரு குறிப்பிட்ட பிரச்சனையைத் தீர்க்க உதவுவது என்பது அவ்வளவு எளிதானது அல்ல. குறிப்பாக “வறுமை” மற்றும் “வேலை வாய்ப்புகள்” போன்ற விஷயங்களைப்பற்றி நாம் விவாதிக்கலாம், ஆனால், தனிப்பட்ட முறையில் பசியுள்ள ஒரு குடும்பத்திற்கு உணவளிக்கவோ அல்லது ஒருவருக்கு வேலை தேட உதவி செய்யவோ நம்மால் முடியாது.

நிச்சயமாக, நியாயசாஸ்திரி இந்தப் பிரச்சனையை ஓரளவு சிக்கலானதாகவும் தத்துவார்த்தமாகவும் மாற்ற விரும்பினான். ஆனால், இயேசுவோ, அதை எளிமையாகவும் நடைமுறை ரீதியாகவும் மாற்றினார். அவர் அதை கடமையிலிருந்து அன்பிற்கும், விவாதத்திலிருந்து செயல்பாட்டிற்கும் மாற்றினார். நிச்சயமாக, நமது ஆண்டவர் விவாதங்களையோ அல்லது தர்க்கங்களையோ கண்டிக்கவில்லை. மாறாக, எதையும் செய்யாமல் இருப்பதற்கு இவற்றை சாக்குப்போக்காகப் பயன்படுத்த வேண்டாம் என்று மட்டுமே அவர் நம்மை எச்சரிக்கிறார்.

எனக்குப் பிடித்த டி.எல்.மூடியின் வாழ்வில் நடந்த சம்பவம் ஒன்று இந்தக் கருத்தை விளக்குகிறது. இண்டியானா போலிஸில் நடந்த ஒரு கருத்தரங்கில் கலந்துகொண்ட டி.எல்.மூடி அவர்கள் பிரபலமான பாடகி இரா சாங்கியை மாலை ஆறு மணிக்கு ஒரு குறிப்பிட்ட தெருமுனையில் தன்னைச் சந்திக்க வரச் சொன்னார்.

சாங்கி அங்கு வந்தவுடன் டி.எல்.மூடி அவரை ஒரு பெட்டியின் மீது ஏறி நின்று பாடல்கள் பாடச் சொன்னார். சிறிது நேரத்திலேயே அங்கு ஒரு பெரிய கூட்டம் கூடிவிட்டது. அங்கு மூடி சுருக்கமாகப் பேசினார், மேலும் அவர்களை அருகிலுள்ள ஓபுரா ஹவுஸ் என்ற அரங்கில் வந்து கூடும்படி அழைப்பு விடுத்தார். விரைவில் அந்த அரங்கம் நிரம்பியது. அவர்களின் ஆவிக்குரிய தாகத்தைக் கண்ட அவர் நற்செய்தியை அவர்களுக்குப் பிரசங்கித்தார்.

அவ்வாறு அவர் பிரசங்கித்து கொண்டிருக்கும்போது கருத்தரங்கை நடத்தும் சகோதரர்கள் வருவதைக் கண்ட மூடி தனது பிரசங்கத்தை நிறுத்திவிட்டு, மக்களை பார்த்து “கூட்டங்களை எவ்வாறு நடத்துவது” என்ற கருத்தரங்கை நடத்துவதற்கு சகோதரர்கள் இப்பொழுது கூடிவந்திருப்பதால் நாம் இக்கூட்டத்தை முடிக்கவேண்டும் என்று கூறினார். இது எத்தனை உண்மை பாருங்கள்!

இந்த வேதபகுதியைப் படித்துவிட்டு மற்றவர்களுக்கு இரக்கம் பாராட்டி உதவி செய்வது அதிக செலவை மட்டுமே நமக்கு ஏற்படுத்தும் என நாம் நினைக்கலாம். ஆனால், அதைப் பொருட்படுத்தாமல் இருப்பது மிகவும் விலையேறப்பெற்ற ஒன்றாகும். சமாரியன் தனது அக்கறையால் இழந்ததைவிட, ஆசாரியனும் லேவியனும் தங்கள் புறக்கணிப்பால் மிக அதிகமாக இழந்துவிட்டனர். கர்த்தர் அவர்களுக்குக் கொடுத்த நல்ல வாய்ப்பைப் பயன்படுத்தி அவர்கள் சிறந்த மனிதர்களாகவும் நல்ல நிர்வாகிகளாகவும் இருப்பதாக தங்களைக் காண்பித்திருக்கலாம். ஆனால், தங்களுக்குக் கிடைத்த வாய்ப்பை அவர்கள் இழந்தனர். இந்த மோசமான உலகில் நல்ல காரியங்களைச் செய்யும் நபர்களாக அவர்கள் இருவரும் இருந்திருக்கலாம். ஆனால், ஒரு கெட்ட செல்வாக்குடைய நபர்களாக அவர்கள் இருப்பதற்குத் தெரிந்துகொண்டனர்.

சமாரியனின் இரக்கச்செயலானது உலகம் முழுவதும் தியாகமாக ஊழியம் செய்வதற்குப் பிறரைத் தூண்டியுள்ளது. இத்தகைய ஊழியம் வீணானது என்று ஒருபோதும் சொல்லாதிருங்கள். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் நாம் செய்யும் எந்தவொரு அன்பான செயலும் ஒருபோதும் இழக்கப்படாமல் கர்த்தர் பார்த்துக்கொள்வார். இவை அனைத்தும் உங்கள் கண்ணோட்டத்தைப் பொறுத்ததாகும்.

திருடர்களைப் பொறுத்தவரை அவர்களால் தாக்கப்பட்ட இந்த யூதன் பணத்திற்காகவே தாக்கப்பட்டான். அதில் வேறே நோக்கம் இல்லை. அதேபோல் ஆசாரியரும் லேவியரும் கள்ளர் கையில் அகப்பட்ட அவனைத் தவிர்க்கவேண்டிய ஒரு தொந்தரவாக நினைத்திருந்தனர். அதனால் அவர்கள் அவரைப் புறக்கணித்தனர். ஆனால், சமாரியனுக்கோ குற்றுயிராக கிடந்த இந்த யூதன்தான் அன்பு செலுத்தவும் உதவவும்கூடிய பிறனாகவும் அல்லது ஒரு அண்டை வீட்டானாகவும் காணப்பட்டான். அதனால் அவன் அவரைக் கவனித்துக்கொண்டார். ஆகவேதான் இயேசு நியாயசாஸ்திரியிடம் சொன்னதை நம்மிடமும் சொல்கிறார்; “நீயும் போய் அவ்வாறே செய்”.

 மொழியாக்கம்: Bro.Johndurai