• Dr.தியோடர் எச்.எஃப். •
(மே – ஜுன் 2025)

1. மூன்றாம் ஆலயத்தின் நகரம்

இஸ்ரவேலின் மூன்றாம் ஆலயத்தைப் பற்றிச் சிந்திக்கும்போது எருசலேம் நகரத்தைப் பற்றிய காரியங்களையும் சிந்திக்கவேண்டும். ஏனெனில், அந்த நகரத்தில்தான் இந்த ஆலயம் கட்டப்படும். வேத வெளிப்பாட்டின்படி, ஆண்டவரின் காலத்திட்டத்தில் எருசலேம் நகரம் அதிமுக்கியமான இடம் வகிக்கிறது. வேதத்தின் வெளிப்பாட்டின்படியே ஆண்டவருக்கு எதெல்லாம் முக்கியமானதோ, அவையே சாத்தானால் விசேஷமாய் எதிர்க்கப்பட்டுத் தாக்கப்படும் என்று நாம் நிச்சயமாய் இருக்கலாம். இதன் விளைவாக எருசலேம் கடந்த நூற்றாண்டுகளெல்லாம் மிகுந்த நெருக்கத்துடனேதான் ஒரு பட்டணமாக இருந்து வந்தது.

பழைய ஏற்பாட்டில் சீயோன் என்று அழைக்கப்பட்ட எருசலேம் நகரத்தைப் பற்றி அடிக்கடி குறிப்பிடப்பட்டிருக்கிறது. சங்கீதம் 132:13, “கர்த்தர் சீயோனைத் தெரிந்துகொண்டு, அது தமக்கு வாசஸ்தலமாகும்படி விரும்பினார்” என்று கூறுகிறது. இதை தொடர்ந்து, “இது என்றென்றைக்கும் நான் தங்கும் இடம்; இதை நான் விரும்பினபடியால், இங்கே வாசம் பண்ணுவேன். அதின் ஆகாரத்தை நான் ஆசீர்வதித்து வருவேன்; அதின் ஏழைகளை நான் அப்பத்தினால் திருப்தியாக்குவேன்… அங்கே தாவீதுக்காக ஒரு கொம்பை முளைக்கப் பண்ணுவேன்; நான் அபிஷேகம் பண்ணுவித்தவனுக்காக ஒரு விளக்கை ஆயத்தம் பண்ணினேன். அவன் சத்துருக்களுக்கு வெட்கத்தை உடுத்துவேன்: அவன் மீதிலோ அவன் கிரீடம் பூக்கும் என்றார்” என்று வாசிக்கிறோம் (14, 15, 17).

தாவீதின் நகரம்

2 சாமுவேல் 5ஆம் அதிகாரம் 6-9 வசனங்கள், தாவீது எப்படி எருசலேம் நகரத்தைக் கைப்பற்றி, அதைத் “தாவீதின் நகரம்” என்று பேரிட்டான் என்று விவரிக்கிறது. 4 ஆம், 5 ஆம் வசனங்களில் தாவீதின் ஜீவியத்தைப் பற்றி சுருக்கமாகச் சொல்லப்பட்டிருக்கிறது. “தாவீது ராஜாவாகும்போது முப்பது வயதாயிருந்தான்; அவன் நாற்பது வருஷம் ராஜ்யபாரம் பண்ணினான். அவன் எப்ரோனிலே யூதாவின்மேல் ஏழு வருஷமும் ஆறு மாதமும். எருசலேமிலே சமஸ்த இஸ்ரவேலின் மேலும் யூதாவின்மேலும் முப்பத்து மூன்று வருஷமும் ராஜ்யபாரம் பண்ணினான்” என்று பார்க்கிறோம். ஆகவே தாவீது பிரியாமல் ஒன்றாயிருந்த இஸ்ரவேல் ராஜ்ஜியத்தை ஆளுகைபுரிந்து மகிமை நிறைந்த வருடங்களில் எருசலேம் தேசத்தின் தலைநகரமாகவும் அதிமுக்கிய நகரமாகவும் இருந்தது.

எருசலேம் தலைநகரமாகயிருந்ததோடு மற்ற அநேக முக்கியமான சம்பவங்கள் நடந்த ஸ்தலமாயிருந்தது. இஸ்ரவேல் ஜனத்தின் ஆசாரியத்துவம் இங்குதான் ஆரம்பமானது. இஸ்ரவேலர் அனுசரித்த ஆரோனின் ஆசாரியத்துவத்தைவிட மேலான ஆசாரியத்துவம் புரிந்த மெல்கிசேதேக்கு சாலேமின் ராஜாவாக இருந்தான் (ஆதி.14:18). “சாலேம்” என்றால் “சமாதானம்”. இந்த நகரம் தான் பிற்காலத்தில் “எருசலேம்” என்று அழைக்கப்பட்டது. இது சங்கீதக்காரனால் குறிப்பிடப்பட்டிருக்கிறது. “யூதாவில் தேவன் அறியப்பட்டவர்; இஸ்ரவேலில் அவருடைய நாமம் பெரியது. சாலேமில் அவருடைய கூடாரமும், சீயோனில் அவருடைய வாசஸ்தலமும் இருக்கிறது” (சங்.76:1,2). இஸ்ரவேலின் ஆராதனைகளில் ஆசாரியத்துவம் மிகவும் முக்கியமான பாகமாயிருந்தது. “நமக்கு முன்னோடினவராகிய இயேசு மெல்கிசேதேக்கின் முறைமையின்படி நித்திய பிரதான ஆசாரியராய் நமக்காக அந்தத் திரைக்குள் பிரவேசித்திருக்கிறார்” என்று திட்டமாகக் கூறப்பட்டிருக்கிறது” (எபி.6: 20).

ஆண்டவர் இஸ்ரவேலரை எகிப்திலிருந்து விடுவித்தபிறகு, அவர்களைக் கானான் தேசத்திற்குக் கூட்டிக்கொண்டு வந்தார். குறிப்பாக, அவர்களை எருசலேமுக்கே கொண்டுவந்தார். நாளடைவில் எருசலேம் நகரம் இஸ்ரவேல் ஜனத்தாரின் ஈடுபாடுகள் எல்லாவற்றிற்கும் மையமாக இருந்த ஸ்தலமாக மாறியது. இதனாலேயே சாலொமோன் அந்த நகரத்தில் தேவாலயத்தைக் கட்டினான்.

இரட்சிப்பின் திட்டத்தின் மையம்

உலகத்தின் இந்த நிலப்பகுதியானது பூகோளத்தின் அடிப்படையில் பூமியின் மையமாக இருப்பது மட்டுமல்லாமல், ஆண்டவர் உலகத்தை இரட்சிப்பதற்கு உண்டுபண்ணிய திட்டத்திற்கும் மையமாய் இருக்கிறது. பழைய ஏற்பாட்டின் காலத்தில் எருசலேம் ஆலயத்தில் செலுத்தப்பட்ட பலிகளெல்லாம், ஆண்டவர்தாமே கடைசியிலே உலகத்தின் பாவங்களைச் சுமந்து தீர்ப்பதற்காகச் செலுத்தவிருந்த பலியைச் சுட்டிக்காட்டின. யோவான் ஸ்நானன் ஆண்டவர் இயேசுவைக் கண்டபோது, “இதோ, உலகத்தின் பாவத்தைச் சுமந்துதீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி” (யோவான் 1:29) என்று சொன்னது மிகவும் அர்த்தமுள்ளதாய் இருக்கிறது. இயேசு கிறிஸ்து யூதனாகப் பிறந்து, இஸ்ரவேலருக்கு அவர்களுடைய மேசியா என்று தன்னை வெளிப்படுத்தியிருந்தபோதும், உலகத்தில் யார் யார் அவரைத் தன் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொள்வார்களோ அவர்கள் எல்லாருக்கும் இரட்சிப்பு அளிக்கவே வந்தார்.

எருசலேமும், பாலஸ்தீனா தேசமும், கிறிஸ்தவ மதத்தின் தொட்டிலாக இருந்தது. ஏனென்றால் இங்கேதான் இயேசுவானவர் உலகத்தின் பாவத்திற்காக மனப்பூர்வமாய்த் தன் இரத்தத்தைச் சிந்துமுன், 33 வருடங்கள் மனிதர் மத்தியில் வாழ்ந்து வந்தார். எருசலேமில்தான் அவர் சிலுவையில் அறையப்பட்டு, அடக்கம் பண்ணப்பட்டு, மரித்தோரிலிருந்து எழுப்பப்பட்டார். பின் எருசலேமுக்கு அருகிலிருக்கும் ஒலிவ மலையிலிருந்து பரலோகப் பிதாவினிடத்திற்கு எழுந்தருளிப்போனார் (அப். 1:9-12).

எருசலேமும் அதன் சுற்றுப்புறமும், ஆண்டவருடைய இரட்சிப்பின் திட்டத்தில் மிக முக்கியமான பகுதியாயிருக்கிறதினால், அது பிசாசினாலும் தாக்கப்பட்டு வருகிறது. வரப்போகிற உபத்திரவ காலத்தில், பிசாசின் முக்கிய மனிதனான அந்திக் கிறிஸ்து எருசலேமிலிருந்துதான் உலகத்தை அரசாளுவான். ஏழுவருட உபத்திரவ காலம், தானியேலின் தீர்க்கதரிசனத்தின் 70-வது வாரமாகும். தானி.9:27-இல் இந்த வாரத்தையும், அந்திக்கிறிஸ்துவையும் பற்றி இப்படிக் கூறப்பட்டிருக்கிறது: “அவர் ஒரு வாரமளவும் அநேகருக்கு உடன்படிக்கையை உறுதிப்படுத்தி, அந்த வாரம் பாதி சென்றபோது பலியையும் காணிக்கையையும் ஒழியப்பண்ணுவார்; அருவருப்பான செட்டைகளோடே பாழாக்குகிறவன் வந்து இறங்குவான், நிர்ணயிக்கப்பட்டிருக்கிற நிர்மூலம் பாழாக்குகிறவன்மேல் தீருமட்டும் சொரியும் என்றான்.”

அந்திக்கிறிஸ்துவை 2 தெசலோனிக்கேயர் 2:3-இல் “கேட்டின் மகன்” என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. “அவன் எதிர்த்து நிற்கிறவனாயும், தேவனென்னப்படுவதெதுவோ ஆராதிக்கப்படுவதெதுவோ. அவையெல்லாவற்றிற்கும் மேலாகத் தன்னை உயர்த்துகிறவனாயும், தேவனுடைய ஆலயத்தில் தேவன்போல உட்கார்ந்து. தன்னைத்தான் தேவனென்று காண்பிக்கிறவனாயும் இருப்பான்” என்று 4-ம் வசனத்தில் அவனைப்பற்றி விவரிக்கப்பட்டிருக்கிறது. உபத்திரவ காலத்தின் ஆரம்பத்தில் இந்த மனிதன் இஸ்ரவேலரோடு ஒரு உடன்படிக்கைக்கு கையொப்பம் போட்டிருந்தாலும், அவன் மூன்றரை வருடங்களுக்குப்பின் அந்த உடன்படிக்கையை முறித்துவிட்டு, எல்லாரையும், இஸ்ரவேலரையும்கூட. தன்னை வணங்கும்படி அதிகாரத்தோடு கேட்பான். அவனை வணங்க மறுப்பவர்கள் கொல்லப்படுவார்கள் (வெளி 13:15).

ஆனால், உலகத்தின் இதே பகுதியில்தான் இஸ்ரவேல் ஜனம் ஒரு ஆவிக்குரிய மறுபிறப்பின் அனுபவத்தைப் பெறுவார்கள். உபத்திரவகால முடிவு வரும்போது, இஸ்ரவேல் ஜனமே அழிந்து போகும்போல் தோன்றும்போது, இயேசுகிறிஸ்து எப்படி வானத்துக்கு எழுந்தருளிப் போனாரோ அப்படியே மறுபடியும் ஒலிவமலைக்கே திரும்பி வருவார் (சகரி.14:1-8). இஸ்ரவேல் ஜனம் தப்புவிக்கப்படும்படி இயேசுகிறிஸ்துவண்டை ஓடோடிச் சென்றபோது, சொல்லப்பட்டிருக்கும் தீர்க்கதரிசனத்தின்படி, (ரோமர் 11:26-ல்) “இஸ்ரவேலரெல்லாரும் இரட்சிக்கப்படுவார்கள்.”

எப்படியாவது எருசலேமை முற்றுமாய் அழித்துவிட்டு அதன் ஜனங்களை அடிமைகளாக்கிவிட வேண்டும் என்ற ஆர்வத்துடன் அநேக தேசங்கள் அதற்கு விரோதமாக வந்தாலும், ஆண்டவர், எருசலேமைக் கைப்பற்ற வகைதேடும் எந்த ஜனத்திற்கும் அந்த நகரம் அவர்களை மூழ்கடிக்கக்கூடிய அளவு பெரிய பிரச்சனையாகும்படி செய்துவிடுவார். சகரியா 12:2,3-ல் “இதோ, சுற்றிலும் இருக்கிற எல்லா ஜனங்களுக்கும் நான் எருசலேமைத் தத்தளிப்பின் பாத்திரமாக்குகிறேன்; எருசலேமுக்கு விரோதமாய்ப் போடப்படும் முற்றிகையிலே யூதாவும் அப்படியேயாகும். அந்நாளிலே நான் எருசலேமைச் சகல ஜனங்களுக்கும் பாரமான கல்லாக்குவேன்; அதைக் கிளப்புகிற யாவரும் சிதைக்கப்படுவார்கள்: பூமியிலுள்ள ஜாதிகளெல்லாம் அதற்கு விரோதமாய்க் கூடிக்கொள்வார்கள்” என்று கூறுகிறது. இந்த முன்னறிவிப்பு உபத்திரவ காலத்தின் முடிவில், அர்மகெதோன் யுத்தம் நடக்கும்போது, விசேஷமாய் உண்மைப்படும். எருசலேமுக்கு விரோதமாக எல்லா ஜாதிகளும் கூட்டிச் சேர்க்கப்படுவார்கள். ஆனால், இயேசுகிறிஸ்து தாமே அந்த நகரத்தையும், இஸ்ரவேல் ஜனங்களையும் விடுவிக்க வரும்போது, அந்த ஜாதிகள் இஸ்ரவேலருக்கு எதிராகக் கூடினதன் பலனை அனுபவிப்பார்கள்.

ஆண்டவர் உலகத்திற்குத் திரும்பிவந்து, ஜாதிகளை நியாயந்தீர்த்த பிறகு, தன்னுடைய சிம்மாசனத்தை எருசலேமில் ஸ்தாபித்து, உலகத்தை ஆயிரம் வருஷங்கள் அரசாளுவார். “அப்பொழுது கர்த்தர் பூமியின் மீதெங்கும் ராஜாவாயிருப்பார்; அந்நாளில் ஒரே கர்த்தர் இருப்பார். அவருடைய நாமமும் ஒன்றாயிருக்கும். தேசமெல்லாம் கேபா தொடங்கி எருசலேமுக்குத் தெற்கே இருக்கிற ரிம்மோன் வரைக்கும் சமபூமியாகத் திருத்தப்படும்; எருசலேமோ உயர்ந்ததாகி, தன் ஸ்தானத்திலே பென்யமீன் வாசல் தொடங்கி முதல்வாசலென்கிற ஸ்தலமட்டும் கோடிவாசல் வரைக்கும். அனானெயேல் கோபுரம் துவக்கி, ராஜாவின் திராட்ச ஆலைகள் மட்டும் குடியேற்றப்பட்டிருக்கும். அதிலே ஜனங்கள் வாசம் பண்ணுவார்கள்: இனிச் சங்கரிப்பில்லாமல் எருசலேம் சுகமாய்த் தங்கியிருக்கும்” (சகரியா 14:9-11).

(தொடரும்)

மொழியாக்கம்: Bro. A.Manuel

சிந்தியுங்கள்! 

ஆத்திரத்தில் நாம் எடுக்கும் முடிவுகள் ஒருபோதும் சரியாக அமையாது. ஜெபத்துடன் நிதானமாகவும் அமைதலோடும் நாம் எடுக்கும் தீர்மானங்கள்தான் உறுதிப்படும்!