• Dr.எம்.எஸ்.வசந்தகுமார் •
(மே – ஜுன் 2025)

பிதாவாகிய தேவனையும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவையும் அறிகிற அறிவினால் உங்களுக்கு கிருபையும் சமாதானமும் உண்டாவதாக.
வேதாகமத்தை நாம் வாசிக்கும்போது, மனிதர்களுடைய வார்த்தைகளையல்ல, கர்த்தருடைய வார்த்தைகளையே வாசிக்கின்றோம். “வேதவாக்கியங்களெல்லாம் தேவஆவியினால் அருளப்பட்டிருக்கிறது” (2 தீமோ.3:16). தேவனுடைய மனிதர்கள் அவைகளை எழுதியபோதிலும், அவர்கள் தங்களுடைய சுயசிந்தனைகளின்படியல்ல, தேவாவியின் ஏவுதலினாலேயே எழுதினார்கள் (2 பேதுரு 1:21). இதனால் வேதாகமமானது மனிதனுடைய வார்த்தையாயிராமல், கர்த்தருடைய வார்த்தையாகவேயுள்ளது. மனிதனை சிருஷ்டித்த தெய்வம். அவனோடு தொடர்பு கொண்டு பேசிய வார்த்தைகளையே வேதாகமம் கொண்டுள்ளது.
உண்மையில், வேதாகமம் எனும் பதமானது. “இறைவனிடமிருந்து மனிதனுக்கு வந்தெய்திய அறிவு” அல்லது “தேவனிடமிருந்து மனிதன் அறியப்பெற்றது” எனும் அர்த்தத்தைத் தருவதாயுள்ளது. ஆங்கில வார்த்தையான பைபிள் (Bible), புத்தகம் என பொருள்படும் கிரேக்க வார்த்தையில் இருந்து பெறப்பட்டதாகும். எனினும் புத்தகம் என்றால் “கடவுளால் தரப்பட்ட புத்தகம்” என்ற கருத்திலேயே கிரேக்க சொல் உபயோகிக்கப்பட்டது. அதேபோல மற்றுமொரு பதமான “ஸ்கிரிப்ச்சர்” (Scripture) என்பது “எழுதப்பட்ட தேவனுடைய வார்த்தை” எனும் அர்த்தம் கொண்டது. இதனால்தான் ஆர்த்தர் பிங்க் என்பார். “வேதாகமம் பரலோகத்தில் இருந்து மனிதனுக்கு நேரடியாக வந்த செய்தியாகும்” என்று தெரிவித்தார். உண்மையில், ஜாண் கல்வின் குறிப்பிட்டதுபோல, மானிட ஊடகங்கள் மூலமாக தேவனுடைய வாயிலிருந்து வந்த வார்த்தைகளே “வேதாகமத்தின் வார்த்தைகளாகும்”.
பழைய ஏற்பாட்டில், “கர்த்தருடைய வார்த்தையைக் கேளுங்கள்”, “கர்த்தருடைய வாய் இதைச் சொல்லிற்று”, “கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டானது.” “கர்த்தர் போகிறார்” “சேனைகளின் கர்த்தர் உரைக்கிறார்” போன்ற சொற்பிரயோகங்கள் 4000 தடவைகளுக்குமேல் வருவதைக் காணலாம். (உ-ம் எரேமி.1:4, 15:19, 20:7-9, 2சாமு. 23:1, யாத்.5:1, எசேக். 6.1, ஏசா. 58:14). அத்தோடு, புதிய ஏற்பாட்டில் 300 தடவைகளுக்குமேல், பழைய ஏற்பாட்டு வசனங்கள் மேற்கோள்களாக உபயோகிக்கப்பட்டுள்ளன. இத்தகைய சந்தப்பங்களில் இவ்வசனங்கள், தேவனால் பேசப்பட்டவைகளாகவே குறிப்பிடப்பட்டுள்ளன. (உ-ம் அப்.1:16- 20. 28:25, 4:25, 3:24-25, 13:47, 13:34, 2 கொரி. 6:16. கலா.3:8. ரோமர் 3:2,9:13,15,17,27, 29, லூக்.2:22-23, எபி.1:5-13, 2:12-13, 3:7-11) .
புதிய ஏற்பாட்டில் அப்போஸ்தலர்கள் மட்டுமல்ல, இயேசுகிறிஸ்துவும்கூட பழைய ஏற்பாட்டு வேத வாக்கியங்கள் தேவனுடைய வாக்கியங்கள் என்பதை உறுதிப்படுத்தியுள்ளார். (உ-ம். மத்.22:31, மாற்.7:10-13. மாற்.12:36, மத்.19:4-5, யோவான் 10:35,மத்.15:4). வேதாகமம் மனிதர்களால் எழுதப்பட்டது உண்மையாயினும், அதை எழுதியவர்கள் தாங்கள் எழுதுவது தங்களுடைய வார்த்தையல்ல; மாறாக, தேவனுடைய வார்த்தைகள் என்பதற்கான சாட்சிகளாய் உள்ளனர். (உ-ம் யோசு. 24:2, எரே.13-15. மீகா 4:4, 2சாமு.23:2). ஏனெனில் அவர்கள் உலகத்தின் ஆவியைப் பெறாமல், தேவனால் அருளப்பட்டவைகளை அறியும்படிக்கு, தேவனிலிருந்து புறப்படுகிற ஆவியைப் பெற்று, மனுஷஞானம் போதிக்கிற வார்த்தைகளாலே பேசாமல், பரிசுத்த ஆவி போதிக்கிற வார்த்தைகளாகவே பேசினார்கள் (1 கொரி 2:12-13).
வேதாகமத்தில் தன்னுடைய அப்போஸ்தலர்கள், தீர்க்கதரிசிகள் ஊடாக தேவனே பேசியுள்ளார். மாட்டின் லூத்தர் கூறியதுபோல “வேதாகமத்தை வாசிப்பது தேவனுடைய குரலைக் கேட்பதே” என்பதை மறுப்பதற்கில்லை. எனவே வேதவாக்கியங்களை வாசிக்கும்போது அவைகளினூடாக, தேவன் நம்முடன் பேசுகிறார் எனும் உணர்வுடன் வாசிக்க வேண்டும். நமக்கு வரும் கடிதங்களை வாசிக்கும்போது. அதை எழுதியவர் நம்முடன் பேசுவதை எவ்வாறு உணர்கிறோமோ, அதேபோல தேவனுடைய கடிதமான வேதாகமத்தை வாசிக்கும்போதும், அவர் நம்முடன் பேசுவதை நாம் உணர வேண்டும். 1566ஆம் ஆண்டிலிருந்த விசுவாசப் பிரமாணம் தெரிவிப்பதுபோல, “அப்போஸ்தலர் தீர்க்கதரிசிகளுடன் அன்று பேசிய தேவன், அவர்களால் எழுத்துரு பெற்ற வேதவாக்கியங்களினூடாக இன்று நம்முடன் பேசுகிறார்” என்பதில் எவ்வித ஐயமுமில்லை. இதனால்தான் தாமஸ் வாட்சன் என்பார். “பழைய புதிய ஏற்பாடுகளிரண்டும் தேவன் நம்முடன் பேசுவதற்காக உபயோகிக்கும் இரு உதடுகளாகும்” என்றார்.
இன்று அநேகர் கர்த்தர் பேசுவதைக் கேட்க எங்கெல்லாமோ செல்கின்றனர். என்னவெல்லாமோ செய்கின்றனர். ஆனால், அவர் பேசுவதை நாம் கேட்கவேண்டுமென்றால், அவர் எங்கு, எதனூடாக பேசுகிறாரோ, அங்கு அதனிடம் வரவேண்டும் என்பதை மட்டும் மறந்துவிடுகின்றனர். மேலும் தேவன் எங்கு எதனூடாக பேச சித்தங்கொண்டுள்ளாரோ, அங்கு அதனூடாக மட்டுமே அவர் பேசுவதை நம்மால் கேட்கமுடியும். அதை விடுத்து நாம் விரும்பியபடியெல்லாம், விரும்பிய இடங்களுக்கெல்லாம் சென்றால். அவர் பேசுவதை நம்மால் கேட்கமுடியாது. உண்மையில், அவர் வேதாகமத்தில் நம்மோடு பேசுவதனால், அதாவது வேதவாக்கியங்களினூடாக பேசுவதனால், அவருடைய குரலைக் கேட்க நாம் வேதப்புத்தகத்திடமே வரவேண்டும். அப்போதுமட்டுமே அவருடைய வார்த்தைகளை நம்மால் கேட்க முடியும். ஏனெனில் அவர் இக்கடைசி காலங்களில் அப்போஸ் தலர் தீர்க்கதரிசிகளினால் எழுத்துரு பெற்ற வேத வாக்கியங்களினூடாகவே நம்முடன் பேசுகிறார். அவரது வார்த்தையை நமக்கு கொண்டு வரும் ஊடகமாகத் திகழ்வது வேத புத்தகம் மட்டுமே.
உண்மையில், வேதபுத்தகத்தினூடாக கர்த்தர் நம்மோடு பேசாவிட்டால், அதை வாசிப்பதில் எவ்வித அர்த்தமும் இல்லை. எனவே ஜாண் பிளஞ்சார்ட் கூறியதுபோல. நாம் “ஒவ்வொரு முறையும் வேதபுத்தகத்தைத் திறக்கும்போதும், கர்த்தரும் நம்முடன் பேசுவதற்காக தன்னுடைய வாயைத் திறக்கிறார்” என்பதை மனதிற்கொண்டவர்களாக அவருடைய வார்த்தையை செவிமடுக்க வேண்டும். இதனால்தான் தாமஸ் வாட்சன், “வேதத்தின் ஒவ்வொரு வரியிலும் கர்த்தர் நம்முடன் பேசுகிறார் என்பதை மறவாதவர்களாக” நாம் வேத புத்தகத்தை வாசிக்கவேண்டும் என அறிவுறுத்தினார். வேதாகமம் தேவனுடைய வார்த்தை என அழைக்கப்படக் காரணம், நாம் நம் மனதில் உள்ளவைகளை, வாயின் வார்த்தைகளினூடாக எவ்வாறு வெளிப்படுத்துகிறோமோ, அவ்வாறே கர்த்தரும் தன் மனதில் உள்ளவைகளை தனது வார்த்தை மூலமாக வேதபுத்தகத்தில் வெளிப்படுத்தியுள்ளார். வேதபுத்தகத்தினூடாக மட்டுமே கர்த்தர் பேசுவதைக் கேட்கக்கூடியதாயிருப்பதனால், சத்தியவசன வாசகர்கள், தங்களுடைய வேதபுத்தகத்தை வாசிக்கையில் கர்த்தருடைய வார்த்தையைக் கேட்க. அவர் அருள்புரிய வேண்டுமென பிரார்த்திக்கிறேன்.