• Bro.இ.வஷ்னி ஏனர்ஸ்ட் •
(மே – ஜுன் 2025)
இன்றைய நாட்களில் அநேகர் தங்களுக்காக தாங்களே சரியான விதத்தில் ஜெபிப்பதில்லை. தங்களுடைய பிரச்சனைகளையும் தேவைகளையும் பட்டியல்போட்டு ஜெபிக்கின்ற கிறிஸ்தவர்களே அதிகரித்துள்ளார்கள். உண்மையில், நம்மைக் குறித்து தேவன் எதிர்பார்க்கின்ற விதத்தில் நாம் ஜெபிக்கவேண்டும். தேவன் அப்படிப்பட்ட ஜெபத்தையே விரும்புகின்றார். என்ன அதிர்ச்சியடைகின்றீர்களா? கடைசியாக, முற்றிலும் மனந்திறந்து ஆண்டவரிடம் வெளிப்படையாக உங்களைப் பற்றி ஜெபித்தது எப்பொழுது?
நமது ஜீவியம், அன்றாட நமது வாழ்க்கை, தொழில், நமது நண்பர்கள், நமது குடும்பம். நமது பிள்ளை, நமது உறவினர்கள், நமக்கு உதவி செய்தவர்கள், நமக்காக ஜெபிப்பவர்கள் என சிந்தித்து நாம் ஜெபிப்பதுண்டா? கடைசியாக, எப்பொழுது கணக்கொப்புவித்து ஜெபித்தீர்கள்?
அதாவது, நமது தனிப்பட்ட ஜீவியத்திற்காக, ஆத்தும சுகத்திற்காக, சரீர சுகத்திற்காக, நல்ல மன நிலைக்காக, தெளிந்த புத்திக்காக, நமது பொருளாதாரத்திற்காக. கல்விக்காக, அறிவுக்காக. விசுவாசத்திற்காக ஜெபித்தது எப்போது?
உண்மையில், யுத்தத்திற்குச் செல்கின்ற ஒரு வீரன் மற்றவர்களுடன் சேர்ந்தே யுத்தம் செய்வான். எனினும், அவன் தன்னைத்தானே காப்பாற்றிக்கொள்ள தெரியாதவனாக இருந்தால், நிச்சயமாக போரில் அவன் காயப்படுவான். அவன் தனது ஜீவியத்தையே இழக்கவும் நேரிடும். ஆகவே, ஒவ்வொரு கிறிஸ்தவனும் தனது. ஆவி. ஆத்துமா, சரீரத்திற்காக, தேவன் தந்துள்ள வாழ்க்கைக்காக, சோதனைகளில் ஜெயிப்பதற்காக தேவனுக்காகச் செய்யும் ஊழியங்களுக்காக சொந்த வாழ்க்கையில் தனது சாட்சியைக் காத்துக்கொள்வதற்காக ஜெபிக்கவேண்டும்.
இந்த ஜெபமானது. சுயநலம் சார்ந்தாகவோ, ஆவிக்குரிய பெருமை நிறைந்ததாகவோ, செழிப்பு உபதேசம் சார்ந்ததாகவோ இருக்கக்கூடாது. அதாவது எனக்கு மட்டும், நான் செழிப்பதற்காக மட்டும், எனது பிரயோஜனத்திற்காக மட்டும் என ஜெபிப்பது நல்லதல்ல. அது ஏற்றுக்கொள்ளப்பட முடியாது.
ஆண்டவர் எதற்காக நம்மை அழைத்தாரோ. அதற்கு ஏற்றவனாக நாம் இருக்கின்றோமா என்று சிந்திப்பவர்களாக, தேவன் தந்த சிறியதோ பெரியதோ ஒவ்வொரு பணிக்காக, தேவன் தந்த வரத்திற்காக தேவனை ஸ்தோத்தரித்து தனியாக அந்தரங்கத்தில் அவரிடம் ஜெபிக்கப் பழகவேண்டும்.
யாபேஸின் ஜெபம்:
வேதாகமத்திலே, யாபேசின் ஜெபத்தைக் காண்கிறோம். நாளாகமத்தில் பெயர்ப் பட்டியலை எழுதி வந்த எழுத்தாளர் 1 நாளாகமம் 4:9-10 வசனத்தில், யாபேசைக் குறித்து, குறிப்பாக, “அவன் வேண்டிக்கொண்டதை தேவன் அவனுக்கு அருளினார்” எனக் கூறுகின்றார்.
“யாபேஸ் தன் சகோதரரைப் பார்க்கிலும் கனம் பெற்றவனாயிருந்தான். அவன் தாய்: நான் துக்கத்தோடே அவனைப் பெற்றேன் என்று சொல்லி அவனுக்கு யாபேஸ் என்று பேரிட்டாள். யாபேஸ் இஸ்ரவேலின் தேவனை நோக்கி: தேவரீர் என்னை ஆசீர்வதித்து, என் எல்லையைப் பெரிதாக்கி, உமது கரம் என்னோடிருந்து, தீங்கு என்னைத் துக்கப்படுத்தாதபடிக்கு அதற்கு என்னை விலக்கிக்காத்தருளும் என்று வேண்டிக்கொண்டான். அவன் வேண்டிக்கொண்டதைத் தேவன் அருளினார்.
ஒரு பரம்பரை அட்டவணையில் மறைந்துள்ள ஒருவன்தான் யாபேஸ். 1 நாளாகமம் 4:5-6 வசனங்கள் யாபேசின் பரம்பரையைக் கூறுகின்றது. தெக்கோவாவுக்கு மூப்பனான அசூருக்கு ஏலாள் மனைவியாயிருந்தாள். அதன்படி யாபேசின் தாய், நான் துக்கத்தோடே அவனைப் பெற்றேன் என்று சொல்லி அவனுக்கு யாபேஸ் என்று பேரிட்டபோதிலும், யாபேஸ் தேவனிடம் ஜெபித்து வெற்றி பெற்றான். “அவன் வேண்டிக்கொண்டதை தேவன் அருளினார்” (1 நாளா. 4:10).
யாபேஸின் ஜெபத்தில், நாம் கவனிக்கவேண்டிய காரியமானது தவறான சிந்தனையோடு நாம் ஜெபிக்கக்கூடாது என்பதாகும். கிறிஸ்தவ ஜெபத்தின் அடித்தளமானது. ஜீவனுள்ள தேவனிடத்தில் தங்கியிருக்கிற நமது உறவு நிலையாகும். அதாவது, சரியான ஒரு உறவைத் தேவனோடு பேணுபவர்களாக, விண்ணப்பங்களை வாஞ்சையுடன் ஏறெடுக்கும்போது, தேவனிடமிருந்து நாம் மகத்தான பதிலைப் பெறுகின்றோம்.
பொதுவாக, மூன்று விதங்களில் தேவன் நமது ஜெபத்திற்கு பதில் தருவார் என நாம் அறிந்துள்ளோம். “ஆம், இல்லை, பொறுத்திரு!” இதில் நமக்கான பதில் எது? தேவசித்தத்தின்படி ஜெபித்தால், நிச்சயமாகப் பதிலை நாம் பெற்றுக்கொள்வோம்.
யாபேஸ் ஒரு கனத்திற்குரிய நபர்!
யாபேஸ் தன் சகோதரரைப் பார்க்கிலும் கனம் பெற்றவனாயிருந்தான் (1நாளா.4:9). அவன் மதிக்கப்பட்டவனாக, நம்பப்பட்டவனாக, மற்றவர்களைவிட உயர்வானவனாக இருந்தான். அவனது வாழ்க்கை முறையானது. நேர்மை, உத்தமம், எல்லாக் காரியத்திலும் தேவனுடனான சரியான நிலையைப் பேணியபடியினாலேயே அவன் தேவனோடு சமாதானமாயிருந்தான். தேவனுடைய பார்வையில் நீதிமானாக்கப்பட்டிருந்தான். ஆகவே, அவன் தேவனுடைய பார்வையின்படி, கனம் பெற்றிருப்பது இயல்பே!
மனித இயல்பின்படி, கனம்பெற்றிருப்பது என்பது ஒருவித மதிப்பைத் தகுதியைப் பெற்றிருப்பதாகும். ஆக, யாபேஸ் மதிக்கப்படத்தக்கவனாக. கனம் பெற்றிருந்தார். நாமும்கூட உண்மையை, நீதியை, ஒழுக்கத்தை, கற்புள்ளதை, அன்பை, நற்கீர்த்தியை. புண்ணியம் எதுவோ, புகழ் எதுவோ அவைகளையே சிந்திப்பவர்களாக இருக்கவேண்டும் (பிலி.4:8).
தேவனுடைய பார்வையில், நாம் இரக்கம் பெற்றவர்களாகக் காணப்படுகின்றோமா? “நோவாவுக்கோ, கர்த்தருடைய கண்களில் கிருபை கிடைத்தது” (ஆதி.6:8). நாமும் தேவனிடத்திலிருந்து இரக்கத்தையும் மன்னிப்பையும் பெற்றவர்களாக, பாவத்திலிருந்து விடுதலை அடைந்தவர்களாக பரிசுத்தவானாக. நீதிமானாக்கப்பட்டவர்களாக இருக்கிறோமா? உண்மையில் நாம் கனத்திற்குரியவர்கள் தானா என்பதைச் சிந்தியுங்கள்.
இன்று கிறிஸ்தவர்களாக நாம் அந்தகார உலகத்திலிருந்து மீட்கப்பட்டவர்களாயிருக்கிறோம். ஆகவே, இயேசு கூறியபடி. “மனுஷர் உங்கள் (நமது) நற்கிரியைகளைக் கண்டு, பரலோகத்திலிருக்கிற (நமது) உங்கள் பிதாவை மகிமைப்படுத்தும்படி, உங்கள் (நமது) வெளிச்சம் அவர்கள் முன்பாக பிரகாசிக்கக்கடவது” (மத்.5:16).
இன்று மற்றவர்களிடத்தில் நமது விசுவாசம் வெளிப்படுகிறதா? நமது வெளிச்சம் மற்றவர்கள் மத்தியில் பிரகாசிக்கிறதா? தேவனுடைய பார்வையில், நாம் இரக்கத்தைப் பெற்றிருக்கிறோமா? நமது தனிப்பட்ட வாழ்க்கை எப்படிப்பட்டது? அவரிடத்தில் நாம் ஜெபிக்கின்றோமா?
யாபேஸ் ஒரு விசுவாசமுள்ள நபர்!
யாபேஸ் தேவனை நோக்கி ஜெபிக்கப் பழகியிருந்தான். அப்படியாக இஸ்ரவேலின் தேவனை நோக்கி ஜெபிப்பதற்கு விசுவாசம் தேவை. விசுவாசம் நமது இருதயத்தில் இல்லாவிட்டால், இருதயத்தில் ஜெபசிந்தை வராது. தேவனிடத்தில் சமாதானத்தைப் பெற்றிடவும் முடியாது. எல்லாச் சூழ்நிலைகளிலும் நாம் தேவனை விசுவாசிக்க வேண்டும். சமாதானத்திற்காக, சுகத்திற்காக, தேவைகளுக்காக, எதிர்காலத்திற்காக நாம் தேவனை நோக்கிப் பார்க்கவேண்டும். நம்மிடத்தில் தேவனுக்கேற்ற விசுவாசமிருந்தால், சர்வவல்லமையுள்ள தேவனின் கிருபாசனத்தண்டை நெருங்கிச் சென்றிட நாம் பயப்படத் தேவையில்லை.
தேவனைக் குறித்த நல்ல மனப்பான்மை நமக்கு அவசியம். நல்ல மனப்பான்மையின்றி ஜெபிப்பது பயனற்றது. சிலுவையிலே மனந்திரும்பிய கள்ளன் அதைச் செய்தான். “ஆண்டவரே, நீர் உம்முடைய ராஜ்யத்தில் வரும்போது அடியேனை நினைத்தருளும்” (லூக்கா 23:42) என்றான். யாபேஸின் ஜெபமும் இப்படிப்பட்டதாகவே இருந்தது. நாம் ஜெபிக்கும்போது, நமது ஜெப மனப்பான்மையைத் தேவன் கவனிப்பார்.
அன்பானவர்களே, “விசுவாசமில்லாமல் தேவனுக்குப் பிரியமாயிருப்பது கூடாதகாரியம்; ஏனென்றால், தேவனிடத்தில் சேருகிறவன் அவர் உண்டென்றும், அவர் தம்மைத் தேடுகிறவர்களுக்குப் பலன் அளிக்கிறவரென்றும் விசுவாசிக்க வேண்டும்” (எபி.11:6). விசுவாசமானது பரலோகத்தின் கதவைத் திறக்கின்றது. தேவகிருபையின் அறையைத் திறக்கின்றது. கவனியுங்கள்: “ஆதலால், நாம் இரக்கத்தைப் பெறவும், ஏற்ற சமயத்தில் சகாயஞ் செய்யுங்கிருபையை அடையவும், தைரியமாய்க் கிருபாசனத்தண்டையிலே சேரக்கடவோம்” (எபி 4:16).
ஒரு ஜெபிக்கின்ற நபர்!
இன்று அநேக கிறிஸ்தவ தேவஊழியர்கள் பொதுவாக மற்றவர்களுக்காக ஜெபிக்கப் பழகியுள்ளார்கள். அது நல்லதுதான். திருச்சபைக்காக. நமது போதகருக்காக, நமது நண்பர்களுக்காக, நமது சொந்தக்காரர்களுக்காக, நமது பிள்ளைகளுக்காக ஜெபிக்கவேண்டும். அதுபோல நமக்காகவும் நாம் பரிந்து பேசி ஜெபிக்கவேண்டும்.
தேவனிடம் நமது தேவைகளை மட்டும் பட்டியலிடக்கூடாது. நமது உணர்வுகளை வெளிப்படுத்த வேண்டும். தேவதயவை நாடவேண்டும். தேவ இரக்கத்தை, அவரது கிருபையை நாடவேண்டும்.
அன்று அன்னாள் தேவனது பாதத்தில் தன்னையே ஊற்றிவிட்டாள். அவளிடம் மறைப்பதற்கு எதுவும் இருக்கவில்லை. தனது சுயநலம். சுய அகங்காரம், பெருமைகளை உதறிவிட்டவளாக, தேவபாதத்தில் வந்து தனது தேவைகளுக்காக ஜெபித்தாள். ஒரு குழந்தை வேண்டுமென்ற அன்னாளின் குறையை அவள் கூறி ஜெபித்தபோது தேவன் அவளுக்குப் பதிலளித்தார். இங்கும் யாபேஸ் இப்படித்தான் ஜெபிக்கின்றான். “தேவரீர் என்னை ஆசீர்வதித்து” (1நாளாகமம் 4:10). இது ஒரு உணர்வு பூர்வ பெலத்திற்கான அடையாளம். தனது தனிப்பட்ட தேவைகள் குறித்து உறுதியாக தேவனிடம் மன்றாடும் செயல்.
என்னை ஆசீர்வதியும் என்று யாக்கோபு தேவனிடம் மன்றாடிப் போர் புரிந்தான். ஏன் நாம் ஜெபத்தில் நம்மை ஆசீர்வதிக்கும்படி ஜெபிப்பதில்லை? ஆசீர்வதியும் என்ற உங்களுடைய ஜெபம் பணம் சார்ந்ததா? அல்லது ஆவிக்குரியதா? நீங்கள் ஜெபிக்கும்படி மனிதரிடம் கேட்கின்றீர்களா? தேவனிடம் கேட்கின்றீர்களா?
ஜெபிக்கப் பழகுவோமாக!
அன்பானவர்களே,˜உங்கள் இருதயத்திலிருந்து ஜெபியுங்கள். உங்களைக் குறித்து மற்றவர்களுக்குத் தெரியாது. உங்களை நன்கு அறிந்த தேவனிடம் உங்களையே அர்ப்பணியுங்கள். தேவனிடம் ஆசீர்வாதங்களைப் பெற வாஞ்சியுங்கள். சரியான சிந்தனையோடு, மனப்பான்மையோடு தேவனுக்குப் பிரியமாக ஜெபியுங்கள். யாபேஸின் ஜெபம் அப்படிப்பட்டதாய் இருந்தது.