• சகோதரி சாந்தி பொன்னு •
(மே – ஜுன் 2025)

உலகமும் காலநிலைகளும் உருண்டுருண்டு வருடாவருடம் திரும்பத்திரும்ப அதே இடத்துக்கே வந்துநிற்கின்றன. தகுதி தராதரம்! உண்மைதான், ஒவ்வொன்றுக்கும் அததற்கேற்ப ஒரு தகுதி வேண்டும். ஒரு தொழிலைத் தெரிந்தெடுக்கும்போது, நாம் எதைக் கவனிப்போம்? அதற்கான நேர்முகப் பரீட்சையில் பங்குபெறும்போது எதனைக் கவனிப்பார்கள்? இந்த வேலைக்கு ஏற்ற படிப்பு உண்டா? அனுபவம் உண்டா? தோற்றம் தகுமா? என்று பலவித விஷயங்களுக்கு முன்னுரிமை கொடுத்துத்தான் அந்தக் குறிப்பிட்ட வேலைக்கு ஆட்களைச் சேர்ப்பார்கள். பாதுகாப்புப் பணிக்கென்று செல்லும்போது, உயரம், நிறை, நெஞ்சின் அளவு என்று பல சோதனைகள் செய்யப்படுவதுண்டு.

இது ஒருபுறம் என்றால், சாதாரணமாக மனிதருடன் பழகுவதற்கே தகுதி தராதரம் பார்ப்பவர்களும் இருக்கிறார்கள். அதிலும், “அந்தப் பிள்ளையுடன் சேராதே, இந்தப் பிள்ளையிடம் நட்பு வைக்காதே” என்று பிள்ளைகளுக்கும் இந்தத் தகுதியை ஊட்டிவிடும் பெற்றோர்களும் உண்டு. திருமணம் என்று வந்துவிட்டால், இந்தக் குடும்பம் நமக்குத் தகுதியானதா, பெண்ணோ மாப்பிள்ளையோ நமது தகுதிக்கு ஏற்றவர்களா என்பதை நிச்சயமாகவே பார்ப்பதுண்டு. இந்த தகுதிகளாலேயே உடைந்துபோன குடும்ப உறவுகள் அநேகம். ஆம், தகுதி தராதரம் ஓரளவுக்கு ஏற்புடையதாக இருந்தாலும், இந்த விஷயம் அநேகருடைய வாழ்வையே திருப்பிப் போட்டிருப்பதையும் மறுக்கமுடியாது.

ஏன், சபைகளிலேகூட நமக்கு ஏற்றவர்களுடன்தான் நாம் அதிகமாகப் பழகுவதுண்டு. இல்லையா? முன்னரெல்லாம் கிறிஸ்தவ ஸ்தாபனங்களில் பணி செய்ய ஆட்களைச் சேர்க்கும்போது, கேட்கப்படுகின்ற முதல் கேள்வி, “நீ இரட்சிப்பைப் பெற்றிருக்கிறாயா?” என்பதுதான். ஆனால், இன்றைய காலகட்டத்திலே இரட்சிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கிற ஊழியஸ்தாபனங்கள் இருந்தாலும், கல்வித்தகுதி, அனுபவம், எந்த சபையைச் சார்ந்தவர் என்று பல காரியங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கிற பலரும் இருக்கத்தான் செய்கிறார்கள். இது சற்று கவலைக்குரிய விஷயம்தான்!

மொத்தத்தில் அதற்கேற்ற தகுதி இல்லாவிட்டால், வாழ்வில் உயர்நிலையை எய்துவதற்கோ, சாதனைகளைச் சாதிக்கவோ, எதுவானாலும் அந்த சூழ்நிலைக்கு நம்மால் முகங்கொடுப்பது கடினம் என்பதுவே மனிதனுடைய இயல்பான சிந்தனை. அதில் நியாயமும் உண்டு. இவை ஏற்றுக்கொள்ளக்கூடிய விஷயங்கள்தான். ஆனால், இந்தத் தகுதியும் தராதரமும் எங்கிருந்து வருகிறது? யார் இதற்கு வரையறை இடுவது? இந்தத் தகுதியை நிலைப்படுத்துவது எது? உலகரீதியில் பணம், புகழ், கல்வித் தகுதி, பரம்பரை காரியங்கள், உயர்நிலை தாழ்நிலை என்று இன்னும் பல, இந்த விஷயத்தில் முன்னுரிமை எடுத்திருப்பதையும், உலக வாழ்வில் இது தவிர்க்கமுடியாத ஒன்றாக பதிந்துவிட்டி ருப்பதையும் மறுக்கமுடியாது.

அதற்காக இதற்கும் தகுதி வேண்டுமா

அதற்காக ஒரு மனிதனுடைய வாழ்விலே அவன் பாடுபடுவதற்கும், சோதிக்கப்படுவதற்கும் கூட அவனுக்கு ஒரு தகுதி வேண்டுமா? இது ஒரு கேள்வியா? தகுதியுள்ளவன்தான் சோதனைக்கும் பாடுகளுக்கும் அனுமதிக்கப்படுகிறானா? அதாவது, சோதிக்கப்படுவதற்கும் ஒரு தகுதி தேவையா? வியாதிகளை யார்தான் விரும்புவோம்? என்றாலும், வியாதியால் தாக்கப்பட்டுச் சோதிக்கப்படுவதற்கும் ஒரு தகுதி வேண்டுமென்றால், இதை வாசிக்கின்ற யாராவது இதை ஏற்றுக்கொள்வீர்களா? இதை எழுதுகின்ற என்னையே உங்களில் பலர் குறை கூறக்கூடும். ஆனால் இது சத்தியம்!

நமது திராணிக்கு மேலாக நாம் சோதிக்கப்படுவதற்கு இடங்கொடாத தேவன் (1கொரி.10:13), “என் கிருபை உனக்குப் போதும், பலவீனத்திலே என் பலம் பூரணமாக விளங்கும்” (2கொரி.12:9) என்று வாக்களித்த தேவன், சோதனையை அனுமதிக்கும்போது, இதனை நம்மால் தாங்கமுடியுமா, ஏற்கமுடியுமா, சகிக்கமுடியுமா, இந்த இக்கட்டிலும் தமது பிள்ளை சோர்ந்துவிடாமல் தம்மையே சார்ந்து நிற்பானா என்பதையெல்லாம் பார்க்காமல் நம்மை நேசிக்கிற அன்புள்ள கர்த்தர் நாம் சோதிக்கப்பட வெறுமனே இடமளிப்பாரா? எனவே நாம் சற்று சிந்தித்துப்பார்ப்போம். ஒன்று, எனது திராணி அதாவது, என் மனதால் கொள்ளக்கூடிய அளவுக்கு மேலாக நம்மீது எந்தப் பாரமும் சுமத்தப்படாத படிக்கு இடங்கொடாத தேவன், தாம் அனுமதிக்கும் பாரத்தை நான் சுமக்கப் பாத்திரனா என்று அறிந்திருக்கமாட்டாரா? அதற்கான நமது தகுதியைப் பார்க்கமாட்டாரா?

திருமதி சார்லஸ் இ. கெளமேன் அம்மையார் எழுதிய ஒரு கவிதையில் என்னைக் கவர்ந்த ஒரு சில வரிகள் இதோ:

என் வழியை அடைத்துக் கோணலாக்கி,
நான் தாழ்மையும் பொறுமையும்
உடையவனாகி
உலக நேசத்தைவிட்டு உம்மை நேசிக்குமாறு செய்தீர்;
புரியாத இப்புதிருக்காக உம்மைத்
துதித்துப் போற்றுவேன்.
எனக்கு விளங்காதபோது உம்மை நம்புவேன்
என்னைச் சோதிக்கப்பாத்திரனாக எண்ணியதால் மகிழுவேன்;
நடத்தும் உம் கரத்தையே என்றும் பற்றிக்கொள்வேன்.

அந்த அம்மையார் எழுதிய வரிகளில் “என்னைச் சோதிக்கப் பாத்திரனாக எண்ணியதால் மகிழுவேன்” என்ற வரிகள்தான் என்னைச் சிந்திக்க வைத்தது. இந்தக் கவிதையை நான் படித்த நாட்களில் ஒரு விநோதமான வியாதியால் தாக்குண்டிருந்ததால் மனதிலே சற்று சோர்வை அனுபவித்திருந்தேன். அப்போது என்னுடைய ஜெபம் – என்னுடைய ஜெபம் என்பதிலும், பரிசுத்த ஆவியானவர் என்னுள்ளிருந்து ஏறெடுத்த ஜெபம் என்பது எனது விசுவாசம் – “தகப்பனே, (குறிப்பட்ட காலப்பகுதியில்) என் ஆத்துமாவை மரணத்துக்கு மீட்டுக்கொண்டீர்; (குறிப்பிட்ட காலப்பகுதியில்) என் சரீரத்தை சரீரமரணத்திலிருந்து மீட்டுக் கொண்டீர். ஆகையால் எதுவும் என்னுடைய தல்ல; நீரே நடத்தும்.” அப்போதுதான் இந்தக் கவிதை வார்த்தைகள் என் இருதயத்தை ஊடுருவிச்சென்றது.

சோதிக்கப்படுவதற்கும் பாத்திரவானாக இருக்க வேண்டுமா? இது தகுமா? இது எப்படி? இதற்குரிய தகுதிதான் என்ன? என்னால் உண்மையிலேயே இதனை ஏற்றுக்கொள்ள முடியவில்லையே. மனதிலே மிகுந்த போராட்டம்? அப்படியானால் இந்த விநோதமான சுகவீனத்தினூடாகச் செல்லுவதற்கு நான் தகுதி என்று கர்த்தர் கண்டாரா? இந்த நிலையிலும் கர்த்தரைச் சார்ந்து நிற்க நான் தகுதியுள்ளவள் என்று கர்த்தர் என்னைக் கண்டாரா? வியாதியின் வேதனை தாக்கினாலும், நான் கர்த்தருடைய பிள்ளை என்பதால் அவர் அறியாமல் எதுவும் எனக்கு நேரிடமுடியாது என்ற அசைக்கமுடியாத விசுவாசம் என்னுள் பற்றியெரிந்தபடியால், எந்நிலையிலும் தமது நாமத்தை நான் மகிமைப்படுத்துவேன் என்று என் நேசர் என்பேரில் நம்பிக்கை வைத்திருக்கிறாரே என்ற சத்தியம், அந்த சிந்தனை எனக்குள் ஒரு உத்வேகத்தைத் தந்தது. அதைத் தொடர்ந்து இது எப்படி ஆகும் என்று தியானித்த தியானமே இந்தக் கட்டுரையாக உங்கள் முன்பாக சமர்ப்பிக்கப்படுகிறது.

தகுதிபெற்ற யோபு

அன்று சாத்தான், யோபுவை சீண்டிப்பார்க்கப் புறப்படவில்லை. யோபுவை சாத்தானுக்குச் சுட்டிக் காட்டியவரே கர்த்தர்தான் (யோபு 1:8). பின்னர் இரண்டாந்தரமும் கர்த்தர்தான் சுட்டிக்காட்டினார் (யோபு 2:3). அதிலும், “என் தாசனாகிய யோபின் மேல் கவனம் வைத்தாயோ? உத்தமனும், சன்மார்க்கனும், தேவனுக்குப் பயந்து, பொல்லாப்புக்கு விலகுகிறவனுமான மனுஷனாகிய அவனைப் போல பூமியில் ஒருவனுமில்லை; …அவன் இன்னும் தன் உத்தமத்திலே உறுதியாய் நிற்கிறான்” என்று கர்த்தர்தாமே யோபுவைக் குறித்து ஒரு மேன்மையான சாட்சியையும் கூறினார். கர்த்தர் சொல்லச்சொல்ல சாத்தானும் சோதனையின் எல்லைக்கே சென்றுவிட்டான். கர்த்தரும், யோபின் பிராணன்மீது கை வைக்காதபடி நீ எதுவும் செய்யலாம் என்று அனுமதிகொடுத்தார். திரைக்குப் பின்னால் நடந்த எதுவும் அறியாத யோபுவும் “இவைகள் எல்லாவற்றிலும் யோபு தன் உதடுகளினால் பாவஞ்செய்யவில்லை.”

இது எப்படி முடியும்? “என் தாசனாகிய யோபு” என்று சாட்சிசொன்ன கர்த்தரே, யோபுவிற்கு தாங்கொணாத துயரத்தை அனுமதித்தது எப்படி? ஆம், யோபுவின் தகுதியைக் குறித்து கர்த்தர் அறிந்திருந்தார். சகலத்தையும் அநியாயமாகவே இழக்கத் தக்கதான சோதனை மிகுதியாய் வந்தாலும் தமது பிள்ளை யோபு தமக்கு உண்மையாய் உத்தமமாய் இருப்பான் என்பதில் கர்த்தர் அசைக்கமுடி யாத நம்பிக்கை வைத்திருந்தார் என்பது, ஆரம்பத்திலும் இறுதியிலும், “என் தாசனாகிய யோபு” (1:8,42:7,8) என்று கர்த்தர் யோபுவை அழைத்ததிலிருந்து விளங்குகிறது. ஆம், சோதிக்கப்படுவதற்கு யோபுவுக்கு எல்லாத் தகுதியும் உண்டு என்று கர்த்தர் கண்டார். யோபுவும், “அவர் என்னைக் கொன்றுபோட்டாலும், அவர்மேல் நம்பிக்கையாயிருப்பேன்” என்றும், “அவர் என்னைச் சோதித்தபின் நான் பொன்னாக விளங்குவேன்” என்றும், “என் மீட்பர் உயிரோடிருக்கிறார் என்றும், அவர் கடைசி நாளில் பூமியின்மேல் நிற்பார் என்றும் நான் அறிந்திருக்கிறேன்” என்ற தீர்க்கதரிசன வார்த்தையையும் அறிக்கை பண்ணியதுமன்றி, “தேவரீர் சகலத்தையும் செய்யவல்லவர்; நீர் செய்ய நினைத்தது தடைபடாது என்பதை அறிந்திருக்கிறேன்” என்று இறுதியில் அறிக்கை செய்தார். ஆம், கர்த்தர் யோபின்மீது நம்பிக்கை வைத்தார்; தமது நாமத்தை மகிமைப்படுத்துவதினிமித்தம் பாடுபட யோபு தகுதி பெற்றவன் என்று கண்டார். யோபுவும் தேவனை மகிமைப்படுத்தினார். அவருடைய முன்னிலைமையிலும் பின்னிலைமை மகா மேன்மையாயிருந்தது. இது கட்டுக்கதை அல்ல; இது சரித்திரம்!

சவுலின் தகுதி

சவுல், ஒரு எபிரெயன், இஸ்ரவேலன், ஆபிரகாமின் சந்ததியான், எட்டாம் நாள் விருத்தசேதனம் பெற்றவன், பென்யமீன் கோத்திரத்தான், நியாயப் பிரமாணத்தின்படி பரிசேயன் (பிலி.3:5), மக்களால் மதிக்கப்பட்டவர், நற்சாட்சி பெற்றவர், கமாலியேலின் பாதத்தில் அமர்ந்து கல்வி கற்றவர், இது கிடைத்தற்கரிய பெரும் பாக்கியம்! சனகெரிப் சங்கத்தில் உயர்பதவி வகித்த இளம்அதிகாரி, யூதமத வைராக்கியம் கொண்டவர். ஒரு புதிய மதம் உண்டாவதை பொறுக்கமாட்டாதவர். ஸ்தேவான் கொல்லப்படுவதற்கு சாட்சியாக நின்றவர், அதாவது அந்த கொலையை ஏற்றுக்கொண்டவர். இதற்கும் அதிகமாக, தமஸ்குவில் வாழுகின்ற கிறிஸ்தவர்களைக் கட்டி, எருசலேமுக்கு இழுத்துவர இவர்தான் தகுதியானவர் என்று இவரிடமே அந்தப் பொறுப்பு வழங்கப்படுமளவுக்கு இவர் தகுதி பெற்றிருந்தார். இத்தனையும் உலகம் இவரில் கண்ட தகுதி.

இவரைத்தான் கர்த்தருடைய கண்கள் கண்டது. தம்முடைய பணிக்கு உகந்தவர் என்று கர்த்தர் இவரைத்தான் நோக்கினாரே, இதுவொரு அதிசயம் அல்லவா! கர்த்தருடைய நாமத்துக்கு எதிராக எழும்பிய இந்த சவுலைத்தான் கர்த்தர் தமஸ்குவின் வழியில் சந்தித்தார். சவுலே, சவுலே, நீ ஏன் என்னைத் துன்பப்படுத்துகிறாய் என்ற குரல் சவுலைத் தடுமாறவைத்தது. பின்னர் நடந்த சங்கதிகள் யாவையும் அப்.9:1-12இல் வாசிக்கிறோம். கண் பார்வையே இருண்டுவிட்டது. மூன்று நாட்கள் பார்வை இல்லாதவனாய் வைராக்கியமுள்ள மனிதனை புசியாமல் குடியாமல் ஜெபம் பண்ண வைத்தார் கர்த்தர். கர்த்தர் அனனியாவை சவுலிடத்தில் அனுப்ப அழைத்தபோது, அனனியா கர்த்தருக்கே பாடம் எடுத்தான். “ஆண்டவரே, இந்த மனுஷன் …உமது நாமத்தைத் தொழுதுகொள்ளுகிறவர்களைக் கட்டும்படி அதிகாரம் பெற்று வந்திருக்கிறானே” என்கிறான். அதற்குக் கர்த்தருடைய பதிலைப் பாருங்கள்.

“என்னுடைய நாமத்தை அறிவிக்கிறதற்காக நான் தெரிந்துகொண்ட பாத்திரமாயிருக்கிறான்” என்று கூறிய கர்த்தர் அடுத்ததாக கூறியது நம்மைச் சிந்திக்க வைக்கட்டும். “அவன் என்னுடைய நாமத்தினிமித்தம் எவ்வளவாய் பாடுபட வேண்டுமென்பதை நான் அவனுக்குக் காண்பிப்பேன் என்றார்.”

ஆம், தமது நாமத்தினிமித்தம் பாடுபடுவதற்குத் தகுதியானவர் என்று கர்த்தர் பவுலைக் கண்டார். உலகரீதியான தகுதிகள் யாவும் கர்த்தருக்கு முன்பாக தூசியாகிப்போயின. கர்த்தருடைய அழைப்பின்படியே, சுவிசேஷத்தினிமித்தம் பவுல் அடைந்த பாடுகள் பற்றி அவருடைய நிருபங்களில் நாம் படிப்பதோடு, ரோமாபுரியில் தனது தலை சிரைச்சேதம் பண்ணப்படும் வரைக்கும், பவுல். கர்த்தருக்கு மகிமை சேர்க்கும் பாத்திரமாகவே இருந்தார் என்பதை நாம் சிந்திக்கவேண்டும். அவருடைய உலக தகுதிகள் எதுவும் கர்த்தருடைய பணிக்கு உதவவேயில்லை. காத்தருக்காகப் பாடுகளை அனுபவிக்க, பவுல் தகுதியானவர் என்று கர்த்தருடைய கண்கள் கண்டது. நம் தகுதி எப்படிப்பட்டது?

கர்த்தருடைய பணியாட்களின் தகுதிகள்

தானியேலுக்கு நடந்தது என்ன? அவருடைய நண்பர்களுக்கு நேரிட்டது என்ன? இன்னும் அநேக வேதாகம சாட்சிகளை நாம் காணலாம். இவர்களைவிட ஆரம்பகால கிறிஸ்தவர்கள், எத்தனை ஆயிரம் தேவபிள்ளைகள், எத்தனை மிஷனரிகள், இன்றும் கிறிஸ்துவின் நாமத்தினிமித்தம் சிறைவாசம் அனுபவிக்கும் ஊழியர்கள், தங்களை அழைத்தவருக்காகத் தங்களை, தங்கள் ஜீவனை கொடூரமாக இழந்தவர்கள் என்று இந்தப் பட்டியல் நீண்டுகொண்டே போகிறது. ஆனால் நாமோ ஒரு சிறிய வியாதியோ, இழப்போ, அல்லது நாம் விரும்பியது நடக்காது போனாலோ, உடனே “ஐயோ, ஆண்டவரே” என்று புலம்புகிறோமே எப்படி? ஒரு சின்ன நோவு வந்தாலே இதை யார் போக்குவார் என்று எத்தனை இடங்களுக்கு அலைகிறோம்? எப்படியாவது விடுதலையை சுகத்தை நாடுகிறோமே தவிர, இது எதற்காக அனுமதிக்கப்பட்டது, நான் என்ன செய்ய வேண்டும் என்று சிந்திக்கிறோமா?

எண்ணிலடங்காத நன்மைகளைக் கர்த்தரின் கரங்களிலிருந்து பெற்றிருக்கிற நாம் அவரைத் துதிக்கிறோம், நன்றி சொல்லுகிறோம், சாட்சி சொல்லுகிறோம், குதூகலிக்கிறோம்; இவை தவறல்ல, இவை இயல்பாக நம்மிலிருந்து வெளிப்படுகிற நன்றிப்பெருக்கங்கள். இப்படியிருக்க, நம்மை நேசிக்கும் நேசர் நமக்குத் தீங்கு செய்யவும் மாட்டார், தீமையால் நம்மைச் சோதிக்கவும் மாட்டார்.

ஆனால் சிலவேளைகளில் எனக்கு உதவாது, எனக்குத் தீமைபோல எனக்குத் தெரிவது, நான் விரும்பாதது -– உதாரணத்துக்கு ஒரு வியாதி வந்தால், கர்த்தர் நன்மை செய்தார் என்று சொல்லுவோமா? -–– நமது வாழ்வில் நிகழும்போது நமது உணர்வுகள் எப்படியிருக்கும்? அல்லது அவற்றை நம்மால் ஏற்றுக்கொள்ளத்தான் முடியுமா?

இங்கேதான் ஒரு கிறிஸ்துவின் பிள்ளைக்கு ஒரு சவால் வருகிறது. கேள்வி இதுதான்: என்னால் கிரகிக்கமுடியாத துன்பங்கள் நேரிட்டாலும், ஏராளமான நன்மைகளை ஈந்த என் நேசரிடத்திலிருந்து இதுவும் எனக்குக் கிடைத்திருக்கிற மிகவும் சிறப்பான ஒப்பற்ற ஈவு’ என்று என்னால் ஏற்றுக்கொள்ளமுடியுமா? கவனிக்கவேண்டியது: நமக்குத் தீமைபோல தெரிகின்ற விஷயங்கள்; அவை கர்த்தருடைய கண்ணோட்டத்தில் எப்படிப்பட்டவை என்பதை நாம் காணும்வரை இதனை ஏற்றுக்கொள்வது மிகவும் கடினமே. ஆனால், இதுதான் உண்மை.

“அன்பின் தேவன், தகுதி என்று கண்டாலன்றி, ஒரு அம்பும் உன்னைத் தாக்காது.”

ஆழத்திலிருந்து எடுக்கப்பட்ட கல் வைரமாக ஜொலிப்பதில்லை; அது உடைக்கப்பட்டு, அடிக்கப்பட்டு, உராயப்பட்டு, இன்னும் அநேக படிமுறைகளைச் சந்தித்த பின்னர்தான் மன்னன் முடியில் வைக்கப்படப் பாத்திரமாக ஏற்றுக்கொள்ளப்படும். வெறும் சாதாரண கற்களை யார் அடிப்பார்? யார் உடைப்பார்? அந்தக் குறிப்பிட்ட கல்லுக்குத் தகுதி இருப்பதால்தானே இத்தனை அடிகளும் வேதனையும்! ஆனால் முடிவில் என் ராஜாவின் ராஜ மகுடத்தில் நான் ஜொலிக்கும்போது, எனக்கு விழுந்த அடிகளுக்காக நான் என்ன சொல்லுவேன் !!

நமது இரட்சகர், சகல வல்லமையும் பொருந்திய வல்லவர், நம்முடைய விடுதலைக்காக அடிக்கப்பட்டு நொருக்கப்பட்டு உதாசீனப்படுத்தப்பட்டு யாவராலும் வெறுக்கப்பட்டதும் ஏன் பிதாவின் சித்தப்படி அவர் அந்த வழி நடந்திராவிட்டால், மகிமையான உயிர்த்தெழுதலையோ, இன்று நமது விடுதலையையோ நம்மால் அனுபவித்திருக்க முடியுமா? கர்த்தருடைய வார்த்தைக்காக உறுதியோடு நின்றால் பாடுதான் மிஞ்சும். அதற்கும் நாம் ஆயத்தமாக வேண்டும்.

பிரியமானவர்களே, சோதனைகள் துன்பங்கள் நம்மை நெருக்கும்போது, “ஐயோ ஆண்டவரே, எனக்கு ஏன்” என்று புலம்பி, விடுதலை தேடி அலையப்போகிறோமா? அல்லது “இந்த அக்கினி சோதனைக்கு நீர் என்னைத் தகுதியானவன் என்று நம்பியதால் உம்மைத் துதிப்பேன்; இந்த நெருக்கத்தின் மத்தியிலும் உம்மை எப்படி சேவிப்பேன் என்று கற்றுத்தாரும்” என்று ஒப்புவிப்போமா! ஆமென்.