• Dr.உட்ரோ குரோல் •
(மே – ஜுன் 2025)

10. சர்தை – மரித்த சபை!

இந்த இதழில் நாம் சர்தை நகரத்தைப் பற்றியும் அங்கிருந்த சபையைப் பற்றியும் சிறிது சிந்திப்போம். பின்னர் தற்கால சபைகளுடன் அந்த சபையை ஒப்பிடுவோம்.

வெளிப்படுத்தல் மூன்றாம் அதிகாரத்தின் ஆரம்பம், சர்தை சபையின் நிலையை நமக்கு நன்கு விவரிக்கிறது. “சர்தை சபையின் தூதனுக்கு நீ எழுத வேண்டியது என்னவெனில்: தேவனுடைய ஏழு ஆவிகளையும் ஏழு நட்சத்திரங்களையும் உடையவர் சொல்லுகிறதாவது; உன் கிரியைகளை அறிந்திருக்கிறேன், நீ உயிருள்ளவனென்று பெயர் கொண்டிருந்தும் செத்தவனாயிருக்கிறாய்.”

இந்த சபையின் இருப்பிடமான சர்தை நகரத்தைப் பற்றி ஆராய்வோம். இது கி.மு.6ம் நூற்றாண்டில் பாரசீக பேரரசர் மகா கோரேஸ் என்பவரால் கைப்பற்றப்பட்டது. இது கிரேக்கர்களுக்கு ஒரு தர்ம சங்கட நிலையைத் தோற்றுவித்தது, ஏனெனில் கிரேக்கர்கள் ஆசியா மைனரில் (தற்போதைய துருக்கி) உள்ள லிடியா என்ற இடத்தைக் கைப்பற்ற முயற்சித்தனர். ஆனால், அவர்களால் அது இயலவில்லை. கோரேஸ் அரசர் இதனைக் கைப்பற்றிய சுமார் 300 ஆண்டுகளுக்குப் பின்னரே ரோமானியர் வந்து சர்தையைக் கைப்பற்றினர். ஏனெனில் சர்தை நகரம் ஒரு மலையின்மேல் இருந்த ஓர் அரணான நகரமாகும். அது எந்த தாக்குதலுக்கும் அசையாமல் நிற்கும் வலிமையுடையதாய் விளங்கியது. அது செழித்தோங்கும் சமுதாயமாக காணப்பட்டாலும் சபை வளரவில்லை. இதைத்தான் நாம் பார்க்க போகிறோம்.

இதுவொரு உயிரோட்டமுள்ள சபை! ஆனால், கனியற்ற சபை. அவர்கள் மக்களைச் சென்று சந்திப்பது இல்லை. தங்களுக்கென்று பெயர் உண்டாக்கிக்கொண்டனர். ஆனால், சபைக்கென்று தனி முன்னேற்றப்பணி எதையும் நடத்தவில்லை. சபைக்கு சிறப்பு அடையாளம் இருந்தாலும் இழந்துபோன ஆத்துமாக்களைப்பற்றிய கரிசனை எதுவும் அங்கு இல்லை. ஒருவர் கூறியதுபோல அவர்கள் மீன்களை வளர்ப்பவர்களாய் இருந்தாலும், மனிதர்களைப் பிடிப்பவர்களாய் இல்லை. அநேக ஆண்டுகளாய் தாங்கள் பின்பற்றிவந்த வழிமுறைகளையே கடைபிடித்து வந்தனர்.

எனவேதான் நான் இந்த சபையை இக்காலத்தில் உள்ள பல நவீன சபைகளுக்கு ஒப்பிடுகிறேன். அவைகளுக்கு பாரம்பரிய வரலாறு உண்டு; ஆனால், எதிர்கால திட்டங்கள் எதுவும் இல்லை. ஒரு காலத்தில் நூற்றுக்கணக்கான மக்களைக் கொண்டிருந்த அவ்விடங்கள் இன்று ஒருசில மக்களே பங்கெடுக்கும் பழங்கால கட்டிடங்களாக இருக்கின்றன. அதன் விளைவு அவை கோபுரத்தை உடைய சவக்கிடங்கு பகுதியாகத் திகழ்கின்றன. அவை மரித்த சபைகள்!

ஒரு காலத்தில் மகிமையுடன் விளங்கிய சர்தை சபை தனது மகிமையை இழந்துவிட்டது. ஏனெனில் அந்த சபையில் ஆர்வத்துடன் செயல்பட ஒருவரும் இல்லை. நாம் ஆராய இருக்கும் ஏழு சபைகளையும் தற்காலத்தில் காணப்படும் சபைகளின் தன்மையுடன் ஒத்துப்பார்க்க இருக்கின்றோம். நாம் பெரிய சபைகள் மற்றும் சிறிய சபைகளைப் பற்றி ஆராய்ந்தோம். நீங்கள் இப்பொழுது கலந்துகொள்ளும் ஆலயம் இந்த சர்தை சபையை ஒத்துக் காணப்படலாம். உங்களுடைய பெற்றோர் இந்த ஆலயத்துக்குச் சென்றதால் நீங்களும் சென்று கொண்டிருக்கலாம். அவர்களது பெற்றோர் அங்கு சென்றதால் உங்களது பெற்றோர் இந்த ஆலயத்துக்குச் சென்றனர் என்பதே அதன் காரணம்.

சர்தை சபை தனது குறிக்கோளை இழந்துவிட்டது. ஆனாலும் குடும்பங்களின் உறவுகளுக்காகவும் பாரம்பரியத்துக்காகவும் அந்த சபை தொடருகிறது. இது உங்களது சபையின் நிலையெனில் சர்தை சபைக்கு தேவன் கூறியவற்றை நீங்கள் மிக உன்னிப்பாக கவனிக்கவேண்டும். “தேவனுடைய ஏழு ஆவிகளையும் ஏழு நட்சத்திரங்களையும் உடையவர் கூறுகிறார்.” நன்கு அறியப்பட்டதும், சிறந்த நற்பெயரைக் கொண்டதும், பாரம்பரிய வரலாற்றைக் கொண்டதுமான இச்சபைக்கு எதிர்காலம் இல்லையெனில் நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

முதலாவது, சர்தை சபையைப் பற்றி இயேசு கூறிய மதிப்பீடுகளையே யோவான் எழுதி வைத்துள்ளார். வசனம் 1: தேவனுடைய ஏழு ஆவிகளையும் ஏழு நட்சத்திரங்களையும் உடையவர் என்பது இயேசுவையும் அவர் பேசியதையும் கூறுகிறது.

இரண்டாவதாக, இச்சபையைப் பற்றி இயேசு ஏற்கனவே அறிந்துள்ளார். இங்கு நிகழ்காலத்தைப்பற்றி அவர் ஆராய்ச்சி செய்யவில்லை. அங்கு நடந்ததைத் தெள்ளத் தெளிவாக அறிந்திருந்தார். அவர்கள் உணர்ச்சிகளைத் தூண்டும் நிகழ்ச்சிகள் மூலம் இறந்துபோன ஆவியை மறைப்பதற்கு முயற்சித்தனர். (அநேக சபைகள் இன்றும் செய்கின்றன). இயேசு இவற்றைத் தாண்டி உண்மையான நிலையை எடுத்துரைத்தார்.

மூன்றாவதாக, இந்த மக்கள் உயிரோடு இருப்பதற்கான நற்பெயரைக் கொண்டிருப்பதைக் கவனியுங்கள். ஆனால் வசனம் 2ல் “நீங்கள் உயிருடன் இல்லை; இறந்துவிட்டீர்கள்” என்று இயேசு கூறுகிறார். இந்த சபையின் பின்ணனியில் அதன் வரலாறு உள்ளது. சபையின் பொருட்களை வைத்து நாம் மதிப்பிடக்கூடாது. உதாரணமாக அதில் பங்கெடுக்கும் மக்களின் வருகை எண்ணிக்கையை வைத்தும் ஈஸ்டர் விழாக்கள், கிறிஸ்துமஸ் விழாக்கள் இவற்றை வைத்தும் ஒரு சபையை நாம் தீர்மானிக்கக் கூடாது.

நம்முடைய வாழ்க்கையில் நாம் எப்பொழுதும் அநேக மக்களைச் சந்திக்கமுடியும். ஆனால் அனைத்து நாட்களிலும் ஒரே சமுதாயத்தை நீங்கள் சந்திக்க இயலுமா? சபை உறுப்பினர்களின் எண்ணிக்கை, போதகர்களின் எண்ணிக்கை, ஆராதனைக்குழுவின் தாலந்து இவற்றை வைத்து ஒரு சபையை மதிப்பிடாதீர்கள். வெளிப்புற தோற்றம் அல்ல, உள்ளான உண்மையையே வேதாகமம் வலியுறுத்துகிறது. சர்தை சபையும் வெளிப்புறத்தில் சிறப்பாகத் தோன்றினாலும் அகத்தில் அது மரித்திருந்தது.

வசனம் 2 இல், “நீ விழித்துக்கொண்டு, சாகிறதற்கேதுவாயிருக்கிறவைகளை ஸ்திரப்படுத்து; உன் கிரியைகள் தேவனுக்குமுன் நிறைவுள்ளவைகளாக நான் காணவில்லை. ஆகையால் நீ கேட்டுப் பெற்றுக்கொண்ட வகையை நினைவு கூர்ந்து, அதைக் கைக்கொண்டு மனந்திரும்பு. நீ விழித்திராவிட்டால், திருடனைப்போல் உன்மேல் வருவேன்; நான் உன்மேல் வரும் வேளையை அறியாதிருப்பாய்” என்று கூறப்படுகிறது.

இங்கே 2 செய்திகள் கூறப்படுகின்றன. முதலாவதாக, “கவனமாக இருங்கள்”; கோபுரங்களையுடைய பிணவறை ஆலயம் கவனமாக இருக்கவேண்டும். சபையின் ஆவிக்குரிய நிலையைப் பற்றி நாம் வருத்தப்படவேண்டும். சபையின் நிதி நிலை நன்றாக இருக்கிறது எனில் அது இயேசு கிறிஸ்துவின் கட்டளைகளை நிறைவேற்றுகிறது என்று பொருளாகாது.

இரண்டாவதாக. இருக்கும் காரியங்களை நிலைப்படுத்துங்கள். உன்னுடைய நிலை எவ்வளவு மோசமாக இருந்தது என்பதை நினைவில் கொள்ளுங்கள். நன்மையான காரியங்களை கண்டறிந்து அவற்றை உறுதிப்படுத்துங்கள். மூன்றாவதாக, உன் கிரியைகள் முழுமையாக இல்லை. உன்னுடைய ஊழியங்களின் மதிப்புகளுக்கு நீ பதிலளிக்கவில்லை. நீ செய்யும் காரியங்களுக்கு எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை; மீதியான காரியங்களை நிலைப்படுத்து. உன் ஊழியத்தை நிறைவு செய்ய முடிவு செய். இச்சபை கடைப்பிடிக்கும் வேதாகம உண்மைகளுக்கு எதிரான காரியங்களை நீ ஆதரிக்கவில்லை. அவை எல்லாம் கடந்துவிட்டன. “நிலைமையை சீர் செய்!” மனந்திரும்பாவிட்டால் ஆண்டவருக்கு கீழ்ப்படிய முடியாது. எனவேதான் அவர், “நீ கேட்டுப்பெற்றுக்கொண்டதை கைக்கொண்டு மனந்திரும்பு”. ஒரு சபை இவ்வாறு செய்தால் அது மீண்டும் உயிர்பெற்று செழித்தோங்கும்.

மனந்திரும்புதலை அறிவிக்காத சபையில் நீங்கள் அங்கத்தினராக இருந்தால், தேவனுடைய வார்த்தையின் செய்தியை புரிந்துகொள்ள இயலாதிருந்தால் நீங்கள் செத்த சபையில் இருக்கிறீர்கள். அப்பொழுது நீங்கள் இரண்டு காரியங்களைச் செய்யவேண்டும். இவ்விரண்டையும் செய்வதற்கான காரணங்களும் உண்டு. ஏனெனில் “நான் திருடனைப்போல் வருவேன். நான் வரும் நேரத்தை நீங்கள் அறியமாட்டீர்கள்” என்ற எச்சரிப்பு தரப்படுகிறது. கிறிஸ்து ஒரு திருடனைப்போல வருவார். எனவே விழித்திருங்கள்.

இந்த சர்தை நகரம், மிக வலிமையான ஒரு கோட்டையைக் கொண்டிருந்தாலும் இரண்டு முறை இது வீழ்ச்சியுற்றது. பெர்சிய அரசர் கோரேஸ் சுமார் 700 ஆண்டுகளுக்கு முன்பாகவும் 320 ஆண்டுகளுக்குப் பின் கிரேக்க அரசர் அந்தியோகுவும் இந்த நகரத்தை அழித்தனர். மறைமுக தாக்குதலுக்கு இருமுறை வீழ்ச்சியுற்றாலும், இவ்விரு முறையும் அவை எதிர்பாராத தாக்குதலாகவே அமைந்திருந்தது. இச்சபை புரிந்துகொள்ளும் விதமாக கிறிஸ்துவும் அதுபோன்று எதிர்பாராத வேளையில் வருவார் என்று கூறுகின்றார்.

கிறிஸ்துவின் வருகையின் எதிர்பார்த்தலை அச்சபை இழந்துவிட்டது. அவர் வரமாட்டார் என நினைத்து தங்களுடைய வழக்கமான நிகழ்ச்சிகளை தொடர்ந்து செய்துகொண்டிருந்தது. சபையில் உயிரோட்டம் இல்லை. சமுதாயத்தை சந்திக்கும் பணியும் இல்லை.

இரண்டாவதாக, தான் வரும் நேரத்தை கிறிஸ்து நமக்கு அறிவிக்கமாட்டார். அவர் வரும் வேளையை நாமும் ஊகிக்க முடியாது. “இயேசு 2126 ஆண்டில் வருவார் எனில் அதற்கு ஆயத்தமாக சில ஆண்டுகள் எனக்கு தரப்பட்டுள்ளது. அதுவரை என்னுடைய வாழ்க்கையை என் விருப்பம்போல நான் வாழலாம்’ என்று கூறலாமல்லவா? எனவேதான் ஆண்டவருடைய திடீர் வருகை கிறிஸ்தவ நம்பிக்கையின் முக்கிய கோட்பாடாயிருக்கிறது.

“கர்த்தருடைய நாள் இரவிலே திருடன் வருகிறவிதமாய் வரும்; அப்பொழுது வானங்கள் மடமட என்று அகன்றுபோம், பூதங்கள் வெந்து உருகிப்போம், பூமியும் அதிலுள்ள கிரியைகளும் எரிந்து அழிந்துபோம்” என்று 2பேதுரு 3:10இல் நாம் வாசிக்கிறோம். சர்தை சபைக்கு தரப்பட்ட செய்தியே இன்றைய நூற்றாண்டின் சபைகளுக்குத் தேவை. வெளித்தோற்றம் எப்படி இருந்தாலும் உள்ளான மனிதனில் நீங்கள் இறந்திருந்தால் நீங்கள் இறந்தவர்களே. அச்சபை முழுவதுமாய் இறந்துவிட்டதாய் இயேசு கூறவில்லை; மீதியான காரியங்களை நிலைப்படுத்தச் சொல்லுகிறார். வலிமையிழந்ததைக் காணமுடியாவிட்டால் அதை பலப் படுத்தமுடியாது. ஆண்டவரைவிட்டு தூரம் விலகின காரியங்களைக் காணவேண்டும். அது தேவனுக்கு முன்பாக மக்களை மண்டியிடச் செய்யும்.

இன்று நமக்கு சிறப்பாகத் தோன்றும் திட்டங்கள் நித்திய ஜீவனை உருவாக்காது. ஜெபம், பாவ அறிக்கை, கிரியைகளில் மாற விருப்பம், வேலை செய்ய விருப்பம் மற்றும் மாற்றிக்கொள்ளுதல் ஆகியனவே மரித்துப்போன ஒரு சபையைப் பலப் படுத்தும் காரணிகள் என நான் நினைக்கிறேன்.

சர்தை சபையின் மக்கள் அனைவரும் ஆன் மீகத்தில் இறந்துபோகவில்லை. வெளி.3:4-5 இல் “தங்கள் வஸ்திரங்களை அசுசிப்படுத்தாத சில பேர் சர்தையிலும் உனக்குண்டு; அவர்கள் பாத்திரவான்களானபடியால் வெண்வஸ்திரந்தரித்து என்னோடேகூட நடப்பார்கள். ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனுக்கு வெண் வஸ்திரம் தரிப்பிக்கப்படும்; ஜீவபுஸ்தகத்திலிருந்து அவனுடைய நாமத்தை நான் கிறுக்கிப்போடாமல், என் பிதா முன்பாகவும் அவருடைய தூதர் முன்பாகவும் அவன் நாமத்தை அறிக்கையிடுவேன்” என்று வாசிக்கிறோம். இவை அச்சபைக்கு ஊக்கமளிக்கும் வார்த்தைகளாகும்.

மரித்ததாகக் கருதப்படும் இச்சபையில் தேவனுடைய ஆவியைக் கொண்டுள்ள சில மக்களும் உண்டு. அவர்கள் தேவனுடைய வார்த்தைக்காக ஏங்குகிறவர்கள்; அவர்கள் ஆன்மீக தூய்மையைக் காத்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் உடைகள் கறைபடவில்லை; அவர்கள் வெண்வஸ்திரம் அணிந்துள்ளனர். வெண்மை நிறம் தூய்மையைக் குறிக்கிறது. வெள்ளை ஆடைகள் தரித்துள்ளவர்கள் அல்ல; கர்த்தருடைய ஆவி வாசமாயிருப்பவர்களும், தேவனுடைய வார்த்தையைக் கேட்க ஆவலாயிருப்பவர்களுமான மக்களை நீங்கள் அடையாளம் கண்டுகொள்ளுங்கள். அவர்கள் ஆவிக்குரிய தூய்மையைக் காத்துக்கொள்பவர்கள். சபையில் ஒரு சிலர் தங்களது மரணத்தை வென்றுவிட்டார்கள். இவ்வாறு இருக்கும் சிலரை நீங்கள் கண்டுகொண்டால் உங்கள் சபைக்கு நம்பிக்கை உண்டு.

அப்பொழுது, மூப்பர்களில் ஒருவன் என்னை நோக்கி “வெள்ளை அங்கிகளைத் தரித்திருக்கிற இவர்கள் யார்? எங்கேயிருந்து வந்தார்கள்? என்று கேட்டான்.” அப்பொழுது அவன்: “இவர்கள் மிகுந்த உபத்திரவத்திலிருந்து வந்தவர்கள்; இவர்கள் தங்கள் அங்கிகளை ஆட்டுக்குட்டியானவருடைய இரத்தத்திலே தோய்த்து வெளுத்தவர்கள்” (வெளி.7:14) என்று பதில் அளித்தான். மரித்த சபையிலும் தங்களுடைய இரட்சிப்பின் தேவையை அறிந்த சிலர் இயேசுகிறிஸ்துவின் இரத்தத்தை ஏற்றுக்கொண்டு, வெள்ளை அங்கியை (உருவக நிறம்) அணிந்துகொண்டார்கள். ஆண்டவருக்கு தங்களது சபையில் உண்மையாக இருந்தனர்.

சிலர் தங்களது தூய்மையைக் காத்துக் கொண்டு சபையின் இறந்த தன்மையை மேற்கொண்டனர் என்பது சர்தை சபைக்கு ஊக்கமூட்டுவதாக அமைந்தது. சபையில் மீந்திருப்பவர்களுக்கு, “உங்கள் பெயர் ஜீவ புஸ்தகத்தில் வைக்கப்பட்டுள்ளது. அது அழிக்கப்படவில்லை. அக்கினிக் கடலுக்கு செல்லப்போவதில்லை” அவர் கூறுகிறார். “மரித்தோராகிய சிறியோரையும் பெரியோரையும் தேவனுக்கு முன்பாக நிற்கக் கண்டேன்; அப்பொழுது புஸ்தகங்கள் திறக்கப்பட்டன; ஜீவ புஸ்தகம் என்னும் வேறொரு புஸ்தகமும் திறக்கப்பட்டது. அப்பொழுது அந்தப் புஸ்தகங்களில் எழுதப்பட்டவைகளின்படியே மரித்தோர் தங்கள் தங்கள் கிரியைகளுக்குத் தக்கதாக நியாயத்தீர்ப்படைந்தார்கள் (வெளி. 20: 12).”

விசுவாசிகளின் பெயர்கள் ஜீவபுஸ்தகத்தில் எழுதப்பட்டுள்ளது. நீங்கள் ஆட்டுக்குட்டியானவரின் இரத்தத்தால் கழுவப்பட்ட விசுவாசி; நீங்களே இந்த சபைக்கு நம்பிக்கை தருபவர்கள். புது ஆயரோ, புது திட்டங்களோ, புதிய கட்டிடமோ அல்ல, தேவனுடைய ஆவியானவராலே உயிர்ப்பிக்கப்பட்டவர்களே இறந்த சபைக்கு நம்பிக்கை தருபவர்கள்.

இறந்த சபையைவிட்டு எப்பொழுது விலக வேண்டும்? அச்சபையில் சிறிதும் உயிர் இல்லையெனில் அவ்வாறு செய்யலாம். ஆனால் உங்களில் உயிர் இருந்தால் அந்த ஜீவனை மற்றவர்களுக்கும் அளித்து சபையை உயிர்ப்பிக்கலாமே! நீங்கள் அச்சபையின் நம்பிக்கையாக இருக்கலாம். உங்களுடைய பரிசுத்தத்தை நீங்கள் காத்துக் கொள்வீர்கள் எனில் உங்களைச் சுற்றியுள்ளவர்களின் இருளை மேற்கொள்ளலாம்.

இந்த மக்கள் பிதாவின் நாமத்தை அறிக்கையிடுகிறார்கள் எனில் நானும் அவர்களது பெயரை பிதா முன்பாகவும், அவருடைய தூதர்கள் முன்பாகவும் அறிக்கையிடுவேன். “மனுஷர் முன்பாக என்னை அறிக்கை பண்ணுகிறவன் எவனோ, அவனை நானும் பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் முன்பாக அறிக்கை பண்ணுவேன்” (மத்.10:32). இச்சர்தை சபையைப்பற்றி மோசமான செய்திகளே அதிகம் தரப்பட்டுள்ளது. சபைக்கு உயிரூட்டும் கருவி நீங்கள் எனில் அதைவிட்டு விலகாதீர்கள். அச்சபை மரித்து விடும்.

உங்கள் தேவைகளை இச்சபை சந்திக்கவில்லை என்றாலும் அச்சபையின் தேவைகளை நீங்கள் சந்திக்கலாமே. நமது தேவைகளை சந்திக்க தேவன் சபையை உருவாக்கவில்லை. அதிக இருளான இடங்களில் வெளிச்சமாக இருக்கவே தேவன் நம்மை அழைத்திருக்கிறார்.

உண்மையாகவே உங்கள் சபை மரித்துப்போன அனுபவத்தில் இருந்தால் நீங்கள் சபையிலிருந்து வெளியே வரலாம். ஆண்டவருடனான அனுபவங்கள் எதுவாயிருந்தாலும், சபையின் அனுபவங்கள் எதுவாயிருந்தாலும் உங்களை நான் உற்சாகப்படுத்துகிறேன். இருளில் நீங்கள் பிரகாசிக்கும் ஒளியாக இருக்கவேண்டுமென தேவன் உங்களுக்கு உறுதியளிப்பார் எனில் குறைவுகளை நிறைவாக்குங்கள். இருளை நீக்க உதவுங்கள். உங்களுடைய பரிசுத்தத்தைக் காத்துக்கொள்ளுங்கள். தேவனுடைய வார்த்தை உங்களுடைய வாழ்வின் அங்கமாக இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.

உங்கள் காரியத்தை நீங்கள் செம்மையாகச் செய்தால் உங்களைச் சுற்றியுள்ள சர்தை சபைகளை நீங்கள் உயிர்ப்பிக்கலாம்.

மொழியாக்கம்: Mrs.அகஸ்டா மங்களதுரை