• சகோ. மைக்கேல் ஜோக்கிம் •
(மே – ஜுன் 2025)
உலகில் வாழும் எல்லா மனிதர்களிடமும் பலமும் பெலவீனமும் உண்டு. மனரீதியாக, உடல்ரீதியாக, ஆவிக்குரிய பலவீனங்கள் பல காணப்படுவதுண்டு. சில பெலவீனங்களுக்குக் காரணமாக சோர்வு, கோபம், சோம்பல், விட்டுக்கொடுக்காத தன்மை, எதற்கெடுத்தாலும் குறைசொல்லுதல், எதிலும் பிழையான பார்வை. சுயநலம், சுகாதாரமற்ற பழக்க வழக்கங்கள், மது, புகைத்தல் போன்ற போதைப் பழக்கங்களே காரணமாயுள்ளன. ஒரு நிமிட கோபத்தால் பலர் தம் வாழ்வையே இழந்துள்ளனர். கோபம் ஆத்திரம், எதற்கெடுத்தாலும் சோர்ந்து போகுதல் இவை அனைத்துமே பலவீனம்தான்.
சரீரபெலவீனம் காரணமாக நோய்கள், மருத்துவப் பிரச்சனைகள், நெருக்கடிகள். எடுக்கின்ற முயற்சிகளில் தோல்விகள் ஏற்படுவதுண்டு. வயது சென்றதினால் உடல்தளர்ந்து போகையிலும் பலவீனம் ஏற்படுவதுண்டு. ஜெபத்திற்கும் வேதவாசிப்பிற்கும் நேரம் கொடுக்காமையினாலும் ஆவிக்குரிய பெலவீனத்திற்கு முகங்கொடுக்க நேரிடுவதுண்டு.
லூக்கா 13:11ல், பதினெட்டு வருஷமாய் பலவீனப்படுத்தும் ஆவியைக்கொண்ட ஒரு ஸ்திரீயைக் குறித்து காண்கிறோம். அவள் எவ்வளவும் நிமிரக் கூடாத கூனியாயிருந்தாள். “இயேசு அவளைக் கண்டு, தம்மிடத்தில் அழைத்து: ஸ்திரீயே. உன் பலவீனத்தினின்று விடுதலையாக்கப்பட்டாய் என்று சொல்லி, அவள்மேல் தமது கைகளை வைத்தார்; உடனே அவள் நிமிர்ந்து, தேவனை மகிமைப்படுத்தினாள்”.
“அவள் எவ்வளவும் நிமிரக்கூடாத கூனியாயிருந்தாள்” என அவளது பலவீனத்தைக் குறித்துக் காண்கிறோம். இது மிகமிக கடுமையானது, மாற்றுவதற்குக் கடினமானது. அவளால் குனிந்து கீழே மட்டுமே பார்க்க முடிந்தது. நேராகவோ, மேலேயோ தலைநிமிர்ந்து பார்க்கமுடியவில்லை.
இன்று சிலரது சிந்தனைகள்கூட கீழான நிலை நோக்கியே உள்ளது. அது ஒருவேளை, நோயினால், வேதனையினால், உற்சாகமின்மையால், தாழ்வு மனப்பான்மையால். முன்னேறும் மனப்பாங்கு இல்லாததால், தன்னம்பிக்கையின்மையால். தீர்மானங்களை எடுக்க முடியாமையால். சோர்ந்துபோன ஆவியோடு இருப்பதால், எதிர்மறையான சிந்தனையோடு இருப்பதால், ஜெபிக்க முடியாததால், மேலே பார்க்கவும் நிமிர்ந்து பார்க்கவும் முடியாதவர்களாக சிறைப்பட்டுள்ளனர்.
“ஸ்திரீயே, உன் பலவீனத்தினின்று விடுதலையாக்கப்பட்டாய்” என்று இயேசு கூறியபோது அந்த வசனம் அவளுக்குள் கிரியை செய்ய ஆரம்பித்தது. அவள் நிமிர்ந்தாள். தேவனை மகிமைப்படுத்தினாள் என்று வசனம் கூறுகின்றது.
பிரியமானவர்களே, இன்று உங்களுடைய சிந்தனை மனப்பான்மை எப்படியுள்ளது? உங்களுடைய பலவீனங்களிலிருந்து விடுதலை பெற்றுள்ளீர்களா? ஒரு உயர்ந்த உன்னதமான மனநிலையை நீங்கள் இந்நாட்களில் பெற்றிருக்க வேண்டும். லூக்கா 13:14இல், ஓய்வு நாளில் அப்பெண் சுகம் பெற்றதைக் குறித்து ஜெபஆலயத் தலைவன் கோபமடைந்து குற்றஞ்சாட்டினான். அதற்கு இயேசுவின் பதிலானது. “இதோ, சாத்தான் பதினெட்டு வருஷமாய்க் கட்டியிருந்த ஆபிரகாமின் குமாரத்தியாகிய இவளை ஓய்வு நாளில் இந்தக் கட்டிலிருந்து அவிழ்த்துவிட வேண்டியதில்லையா என்றார்” (வச.16) என்பதாகும்.
இன்று உங்கள் நண்பர்கள், உறவினர்கள் உங்களைப் பெலவீனப்படுத்தும் ஆவியுடைய நபர்களாக இருக்கின்றார்களா? அல்லது உங்களை விடுவிக்கின்ற மனப்பான்மையுள்ளவர்களாக இருக்கின்றார்களா? அல்லது நீங்கள் மற்றவர்களுக்கு எப்படிப்பட்டவர்களாக இருக்கிறீர்கள்? “மனுஷனுடைய ஆவி அவன் பலவீனத்தைத் தாங்கும்; முறிந்த ஆவியாரால் தாங்கக்கூடும்” (நீதி.18:14).
இந்த ஸ்திரீயின் பெலவீனம் 18 வருடம் பழமையானது. இயேசு அந்த பலவீனத்தை உடைத்து, அப்பெண்ணுக்கு புதிய பெலத்தையும் புதியதொரு விடுதலையையும் வழங்கினார். முதலில் நாம் நமது பலவீனங்களை உணர்ந்து இயேசுவிடம் செல்லவேண்டும். இதை நாம்தான் தீர்மானிக்க வேண்டும்.
பலவருட பழமையான பலவீனங்கள் நமது வாழ்வில் உண்டா? அந்த பாவ நுகத்தை மேற்கொள்ள தேவையான பலம் இயேசுவிடம் மாத்திரமே உண்டு. இயேசு தமது கைகளை வைத்து சுகமாக்கினார். அந்த ஸ்திரீயின் பலவீனம் உடனடியாக அவளைவிட்டு நீங்கியது. இந்த சத்தியத்தை அறிந்த நாமும் இயேசுவிடம் எப்பொழுதும் வரவேண்டும். அவரே நமது பெலவீனத்தில் நமக்கு உதவி செய்பவர். வேத வசனத்திற்கு கீழ்ப்படியும்போது, ஜெபத்தால் அடிமைத்தன ஆவியை நீக்கிப் போடமுடியும். சாத்தானோ நமது முயற்சியை எப்போதும் முறியடிக்கவே முயற்சிப்பான். எதிர்பாராத சோதனைகளைக் கொண்டுவந்து நம்மைப் பலவீனப்படுத்த முற்படுவான். சோம்பேறித்தனத்திற்கு இடமளிக்கவேண்டாம். பலவீனத்துக்குச் சொந்தம் கொண்டாட வேண்டாம்.
இயேசுவோடு நாம் இருந்தால். கோபத்தை மேற்கொள்ள முடியும். பொறுமையாயிருக்க முடியும். சமாதானம் செய்திட முடியும். சாந்தமாக விட்டுக்கொடுக்க இயலும், இதுதான் உண்மையான பலம். கர்த்தர் தருகின்ற இந்தப் பெலத்தை நாம் நோக்கிப் பார்க்காவிட்டால், நிச்சயமாக நமது பெலவீனத்தினால் அமிழ்ந்துபோய் விடுவோம். பேதுரு இயேசுவை நோக்கிப் பார்த்ததுபோல விசுவாசத்தில் இயேசுவை நோக்கிப் பார்ப்போம். அன்று அசாதாரண சூழ்நிலையிலும் பேதுருவால் கடலில் நடக்கமுடிந்தது. அலைகளை, சூழ்நிலையைப் பார்த்தபோதோ அமிழத் தொடங்கினார் (மத் 14:28-30).
“பலவீனம்” – நமது வாழ்க்கையில் நல்லவை பலவற்றை இழக்கச் செய்திருக்கிறது. என்பதை உணர்ந்தவர்களாக உங்கள் சொந்தப் பலவீனங்களிலிருந்து மெதுமெதுவாக வெளிவர முயற்சியுங்கள். உங்களது பெலவீனத்தை மேற்கொள்ள பயிற்சி தேவையென உணர்ந்து முயற்சியைத் தொடருங்கள். வசனத்தினால் பெலப்படுங்கள். ஒவ்வொரு கட்டத்திலும் ஜெபத்தினால் அதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். தேவனுக்காக வாழுவேன் என்ற தீர்மானத்தில் உறுதியாய் இருங்கள்.
பல பாடுகளைப்பட்டு மரணமடைந்த இயேசுவானவர் தாமே, நமது பலவீனங்களிலிருந்து வெற்றிபெற நமக்கு உதவி செய்ய வல்லவராயிருக்கிறார். இன்றே முயற்சி செய்து பார்ப்போமா? கர்த்தருக்குள் உங்களது வாழ்வில் உண்மையான வெற்றியை சுதந்தரித்துக்கொள்ள தேவன் தாமே உங்களுக்கு உதவி செய்வாராக!
நினைவுகூருங்கள்!
பிசாசுக்கு நாம் ஒரு சிறிய இடத்தைக் கொடுத்தால் போதும், நம்மை முழுமையாக தன் வலைக்குள் அவன் சிக்க வைத்துவிடுவான்.