சத்திய வசனம் பங்காளர் மடல்

(மே – ஜுன் 2025)

கிறிஸ்துவுக்குள் பிரியமுள்ள விசுவாச பங்காளர்களுக்கு,

மீட்பர் இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தினால் அன்பின் வாழ்த்துக்கள்.

சத்தியவசன சஞ்சிகையின் வாயிலாக வாசகர்களையும் எமது பங்காளர்களையும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சியடைகிறோம். தேவனுடைய பெரிதான கிருபையாலும் தங்களது ஜெபங்களினாலும் சத்தியவசன ஊழியத்தின் வாயிலாக அனுதினமும் பல்லாயிரக்கணக்கான மக்கள் நற்செய்தியையும் சத்தியத்தையும் அறிந்து தங்கள் வாழ்வில் ஆசீர்வாதமடைந்து வருகின்றனர்.

இது நாம் ஒருமித்து செய்கின்ற ஊழியமாகும். இவ்வூழியத்தின் தேவைகள் அனைத்தும் இவ்வூழியத்திற்கு தேவன் தந்த அன்புபங்காளர்கள் தரும் காணிக்கையினால் சந்திக்கப்பட்டு வருகிறது. இதின் வாயிலாக அநேகமாயிரம் மக்கள் ஜீவனுள்ள தேவனண்டை வழிநடத்தப்படுகின்றனர். சீஷன் என்னும் நாமத்தினிமித்தம் இந்தச் சிறியரில் ஒருவனுக்கு ஒரு கலசம் தண்ணீர் மாத்திரம் குடிக்கக் கொடுக்கிறவனும் தன் பலனை அடையாமற் போகான் என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்ற இயேசுகிறிஸ்துவின் வாக்கின்படியே இம்மையிலும் மறுமையிலும் உங்கள் பலன் மிகுதியாயிருக்கும்.

வருகிற ஜுலை 15ஆம் தேதியன்று “Equip Conference 2025 – போதகர்கள் மற்றும் பங்காளர்களின் ஆயத்தமாகுதல் கருத்தரங்கு” சென்னையில் வைத்து நடைபெறுகிறது. சென்னையிலும் அருகாமையிலுமுள்ள பங்காளர்கள் இக்கருத்தரங்கில் தவறாமல் கலந்துகொள்ள உங்களை அன்பாய் அழைக்கிறோம். இதற்கான விளம்பரம் 6 ஆம் பக்கம் இடம்பெற்றுள்ளது. இதில் கலந்து கொள்ள விரும்புவோர் எங்களோடு தொடர்புகொண்டு உங்கள் பெயரை பதிவுசெய்து கொள்ளலாம். சத்தியவசன ஊழியத்தின் வாயிலாக தாங்கள் பெறும் ஆசீர்வாத அனுபவங்களை எங்களோடு பகிர்ந்துகொள்ள அன்போடு உங்களை அழைக்கிறோம்.

இவ்விதழில் சகோ.சுசி பிரபாகரதாஸ் அவர்கள் பரமேறிச்சென்ற கிறிஸ்து இயேசு நமக்கு அருளும் ஆசீர்வாதங்கள் பற்றி அளித்த செய்தியும், Dr.வாரன் வியர்ஸ்பி அவர்கள் நீயும் போய் அவ்வாறே செய் என்ற தலைப்பில் எழுதியுள்ள செய்தியும், கர்த்தரின் நாமத்தினால் வரும் பாடுகளில் நமது நிலைப்பாட்டை விளக்கி இதற்கும் தகுதி வேண்டுமா! என்ற தலைப்பில் சகோதரி சாந்தி பொன்னு அவர்கள் எழுதியுள்ள சிறப்பு செய்தியும் இடம்பெற்றுள்ளது. மேலும் நமக்காக நாம் ஜெபிக்கிறோமா? என்ற தலைப்பில் ஜெபத்தின் மேன்மையைப் பற்றி சகோ.இ.வஷ்னி ஏர்னஸ்ட் அவர்கள் எழுதியுள்ள செய்தியும், Dr.M.S.வசந்தகுமார் அவர்கள் கர்த்தர் பேசுகிறார்; கேளுங்கள் என்ற தலைப்பில் எழுதியுள்ள சிறப்புகட்டுரையும், சகோ.மைக்கேல் ஜோக்கீம் அவர்கள் உன் பலவீனங்களில் வெற்றி பெறு என்ற தலைப்பில் எழுதியுள்ள சிறப்புச் செய்தியும் இடம்பெற்றுள்ளது. மேலும் Dr.தியோடர் எச்.எப் அவர்கள் வழங்கிய மூன்றாம் தேவாலயம் என்ற செய்தியின் தொடர் வேதபாடமும், வெளிப்படுத்தின விசேஷத்திலிருந்து Dr.உட்ரோ குரோல் அவர்கள் எழுதியுள்ள தொடர் வேதபாடமும் இடம்பெற்றுள்ளது.

லெந்துநாட்களுக்கான அனைத்து செய்திகளும் தங்களது ஆவிக்குரிய வாழ்விற்கு ஆசீர்வாதமாக அமைய வேண்டுதல் செய்கிறோம். தேவகிருபை நம் அனைவரோடுங்கூட என்றென்றும் இருப்பதாக!

கே.ப.ஆபிரகாம்

ஏனென்றால், இரக்கஞ் செய்யாதவனுக்கு இரக்கமில்லாத நியாயத்தீர்ப்புக் கிடைக்கும்; நியாயத்தீர்ப்புக்கு முன்பாக இரக்கம் மேன்மை பாராட்டும் (யாக்கோபு 2:13).