ஜெபக்குறிப்பு: பிப்ரவரி 28 வெள்ளி

“.. பயப்படாதே, விசுவாசமுள்ளவனாயிரு” (மாற்.5:36) என ஜெபஆலயத் தலைவனை திடப்படுத்தின ஆண்டவர்தாமே இம்மாதம் முழுவதும் நம்மையும் திடப்படுத்தி, உற்சாகத்தின் ஆவியால் நிரப்பி வழிநடத்திவந்த அவரது நிகரற்ற கிருபைகளுக்காக ஸ்தோத்திரம் செலுத்தி ஜெபிப்போம்.

பழைய பாவங்கள்

தியானம்: பிப்ரவரி 28 வெள்ளி; வாசிப்பு: சங்கீதம் 32:1-11

“…என் பாவங்களையெல்லாம் உமது முதுகுக்குப்
பின்னாக எறிந்துவிட்டீர்.” (ஏசாயா 38:17)

“என் பாவங்களை தேவன் மன்னித்திருக்கிறாரா என்ற நிச்சயம் அற்றவனாய் கலங்கி நிற்கிறேன். என் மனச்சமாதானம் தொலைந்துவிட்டது” பாதிப்படைந்த ஒருவரின் புலம்பல் இது. “எந்நேரத்தில் நமது பாவங்களை உணர்ந்து அறிக்கை செய்கிறோமோ, அந்நேரமே நம்மை மன்னித்து ஏற்றுக்கொள்ள ஆண்டவர் தயையுள்ளவராய் இருக்கிறார் என்பது தேவ வாக்கு. அதைப் பற்றிக்கொண்டு ஜெபியுங்கள். சாத்தானின் தூண்டுதலான சிந்தனைக்கு இடங்கொடுக்கவேண்டாம்” என்று அவருக்குப் பதிலளித்தேன்.

தேவனைவிட்டு நம்மைப் பிரிப்பதற்கு சாத்தான் விரிக்கும் வலைகளில் ஒன்று, நம் பழைய பாவங்களை நினைவுபடுத்துவதாகும். ‘தேவன் உன்னை மன்னிக்கவில்லை’ என்பான். ‘இவ்வளவு கொடிய பாவி உனக்கு தண்டனை நிச்சயம் உண்டு’ என்பான். இப்படியாக பொய்க்குமேல் பொய் சொல்லி, தேவன் நம்மை மன்னித்துவிட்டாலும், நம்மை நாமே மன்னிக்க முடியாத கொடிய நிலைக்குத் தள்ளிவிடுவான். எப்படியெல்லாம் தந்திரம் செய்து தேவனைவிட்டு நம்மைப் பிரிக்கப் பார்க்கிறான் பார்த்தீர்களா!

எசேக்கியா ராஜா வியாதிப்பட்டபோது தேவனை நோக்கி விண்ணப்பம் செய்தான். அவனுக்கு தேவன் சுகமளித்து ஆயுசு நாட்களைப் பதினைந்து வருஷங்களால் கூட்டிக்கொடுத்தார். அப்பொழுது எசேக்கியா விளம்பின வசனங்களில் ஒன்றுதான், “என் பாவங்களையெல்லாம் உமது முதுகுக்குப் பின்னாக எறிந்துவிட்டீர்” என்பதாகும். நமது முதுகுக்குப் பின்னால் போடப்படும் காரியங்கள் பார்க்கமுடியாதவையாகும். தேவனும் நமது பாவங்களை மன்னித்தால் மீண்டும் பார்க்கிறவரல்ல. அந்த நிச்சயம் நமக்கு இருக்குமானால் சாத்தான் நம்மை நெருங்கிடமுடியாது.

“நம்முடைய பாவங்களையெல்லாம் சமுத்திரத்தின் ஆழங்களில்போட்டு விடுவார்” என்கிறார் மீகா (மீகா 7:19). சமுத்திர ஆழங்களில் போடப்படும் காரியங்களும் மீண்டுவர முடியாது. எனவே, நமது பாவங்களை மன்னிக்கும் தேவன், அப்படியே முழுவதும் மன்னித்து மறந்துவிடுகிறார். அவர் மறந்துவிட்ட காரியங்களை சாத்தான் நமது ஞாபகத்திற்கு கொண்டுவந்து நம்மை வதைக்கும்போது தேவ வார்த்தைகளைக்கொண்டு அவனை ஜெயித்திட வேண்டுமேதவிர, அவனது தந்திரங்களுக்குள் நாம் அகப்பட்டுவிடக்கூடாது. இவ்விதமாய் பாவங்களை மன்னிக்கும் தேவனின் பிள்ளைகளாகிய நாமும், பிறர் நமக்கு விரோதமாகச் செய்யும் காரியங்களை மன்னித்து மறக்கத் தயாரா?

ஜெபம்: “பிதாவே, பிறர் குற்றங்களை நான் மன்னித்து வாழவும் நீர் மன்னித்த பாவங்களை திரும்பிப் பாராமலும், வாழ பெலப்படுத்தும். ஆமென்.”

ஜெபக்குறிப்பு: பிப்ரவரி 27 வியாழன்

“இரட்டிப்பான நன்மையைத் தருவேன், இன்றைக்கே தருவேன்” (சகரி.9:12) என்ற வாக்குப்படி பலவிதத் தேவைகளோடு இருக்கிற 16 குடும்பங்களுக்கு கர்த்தர் தம்முடைய வாக்குத்தத்தங்களை நிறைவேற்றி அவர்கள் குடும்பங்களை தழைக்கச்செய்திட பாரத்துடன் ஜெபிப்போம்.

தற்கொலை

தியானம்: பிப்ரவரி 27 வியாழன்; வாசிப்பு: அப்போஸ்தலர் 1:15-22

“…தலைகீழாக விழுந்தான்; அவன் வயிறுவெடித்து,
குடல்களெல்லாம் சரிந்துபோயிற்று.” (அப்போஸ்தலர் 1:18)

ஆலயத்திலே ஜெபித்துக்கொண்டிருந்த ஒரு சகோதரி, அங்கே அழுது கொண்டிருந்த ஒரு தாயாரைக் கண்டு, அருகில் சென்று, அவர்களுக்கு ஒரு ஆறுதலான, நம்பிக்கையான வார்த்தைகளைப் பேசினாள். இதில் ஆறுதல் பெற்ற அத் தாயார் தனது கைக்குள் இருந்த தூக்க மாத்திரைகளை இச் சகோதரியிடம் கொடுத்துவிட்டு, நம்பிக்கையோடு எழுந்து சென்றார். இது ஒரு உண்மைச் சம்பவம். தேவ ஆலயத்தில் அழுதுவிட்டு தூக்கமாத்திரைகளை விழுங்கி தன் உயிரை மாய்த்துக்கொள்ளவே அத்தாயார் அவ்விடம் வந்துள்ளார்கள். ஆனால், அந்தச் சகோதரி பேசிய நம்பிக்கையின் தேவ வார்த்தை அந்தத் தாயின் முடிவை மாற்றிவிட்டது.

பரீட்சை முடிவு திருப்தியில்லாததால் மாணவன் தற்கொலை; குடும்ப தகராறு காரணமாக மனைவியும் பிள்ளைகளும் தற்கொலை; கடன் தீர்க்க முடியாத குடும்பத் தலைவன் தற்கொலை… இப்படி தினமும் ஒரு சம்பவம் நிகழத்தான் செய்கிறது. சாத்தானின் வஞ்சக காரியங்களில் ஒன்றுதான் இத் தற்கொலை முயற்சி. ‘உன்னாலே இனி வாழமுடியாது, நீ எதற்கும் இனி பிரயோஜனமற்றவன், உன்னை யாருமே நேசிக்கவில்லை, உனக்கு உதவிட யாரும் இல்லை’ என்று அடுத்தடுத்து நமது சிந்தனைகளைத் தூண்டி, தற்கொலைக்கு வழிநடத்துவான். அவனது தந்திரத்தை நாம்தான் முறியடிக்க வேண்டும். இதற்குள் அகப்பட்டிருக்கும் பலரையும் வெளிக்கொண்டுவரவும் நாம் போராடிடவேண்டும்.

ஒரு நாளைக்கு நூற்றுக்கும் அதிகமானோர் தற்கொலை செய்கிறார்கள். நமக்குள் தேவன் வைத்துள்ள உயிரை நாம் அழித்துப்போட நமக்கு எந்தவித அதிகாரமும் இல்லை. உயிரைக் கொடுப்பவரும், திரும்ப தம்மிடம் சேர்த்துக் கொள்கிறவரும் ஆண்டவர் ஒருவரே. தற்கொலை முயற்சிக்குத் தூண்டப்படுகிறவர்களின் விடுதலைக்காக தினமும் காலையில் தனது தனிப்பட்ட ஜெபத்தில் தான் ஜெபிப்பதாக ஒரு வயது முதிர்ந்த தாயார் சொல்லுவார்கள். அது நமது சமுதாயத்திற்கு மிகவும் அத்தியாவசியமான ஒரு ஜெபமாகும்.

இயேசுவோடு மூன்றரை வருடங்கள் வாழ்ந்த யூதாஸின் முடிவு பரிதாபமானது. தான் மிகப்பெரிய தவறு செய்துவிட்டதை உணர்ந்தவன், தன்னைத் தானே மாய்த்துக்கொண்டான். இப்படிப்பட்டவர்களுக்கு தேவ அன்பை எடுத்துரைப்பது யார்? ஆண்டவரை அறிந்துகொண்ட நாம், சாத்தானின் தந்திரங்களுக்குள் சிக்கி, தம்மைத்தாமே மாய்த்துவிட முற்படுவோருக்காக ஜெபிப்பதும், அவர்களை விடுவிப்பதும் நமது கடமையும் பொறுப்பும் அல்லவா!

ஜெபம்: “என் மீட்பரே, அழிவை நோக்கி ஓடுகின்றவர்களைத் தடுத்து நிறுத்தி, உம்மண்டை கொண்டுவந்து சேர்க்க என்னைப் பெலப்படுத்தும். ஆமென்.”