ஜெபக்குறிப்பு: ஜனவரி 31 வெள்ளி
“.. நான் உங்களுக்குக் கற்பிக்கும் எல்லாவழியிலும் நீங்கள் உங்களுக்கு நன்மையுண்டாகும்படிக்கு நடவுங்கள்” (எரேமி.7:23) என்ற வாக்கின்படி, தொடர்ந்து கர்த்தருடைய வழிகளில் நடப்போம் என தீர்மானித்து, இம்மாதம் முழுவதும் நம்மை பாதுகாத்து நடத்தின தேவனை ஸ்தோத்திரித்து ஜெபிப்போம்.
இருதயத்தைப் பார்க்கிறார்
தியானம்: ஜனவரி 31 வெள்ளி; வாசிப்பு: 1சாமுவேல் 16:1-12
“…மனுஷன் முகத்தைப் பார்ப்பான்,
கர்த்தரோ இருதயத்தைப் பார்க்கிறார்.”
(1சாமுவேல் 16:7)
ஆராதனை முடிந்து அவசர அவசரமாகப் புறப்பட்டுக்கொண்டிருந்தவரைப் பார்த்து, ‘எங்கே அவசரமாகப் புறப்பட்டுவிட்டீர்கள்’ என்று கேட்டேன். ‘வீட்டில் அவன் தனியே இருக்கிறான்’ என்றார் அவர். பிள்ளையைத் தனியே விட்டு வந்திருக்கிறார் என்று நினைத்து புறப்படும்படி சொன்னேன். அப்போது அவர், ‘அவனுக்கு நான் போய்த்தான் சாப்பாடு கொடுக்கவேண்டும்’ என்றார். சாப்பாடும் கொடுக்காமல் வந்திருக்கிறார், யாரோ சிறுபிள்ளையாய்த்தான் இருக்கவேண்டும் என்று எண்ணியபடி, சீக்கிரமாய் புறப்படும்படி சொன்னேன். அவரும் அவசரமாய்ப் புறப்பட்டபடியே, ‘அவன் இப்போதுதான் குரைக்கத் தொடங்கியுள்ளான்’ என்றார். அப்போதுதான் அவர் இவ்வளவு நேரமும் தனது நாய்க்குட்டியைப் பற்றியே பேசிக்கொண்டிருந்தார் என்பது புரிந்தது.
வெளிப்பேச்சுக்களையும் வெளித்தோற்றத்தையும் பார்த்து பிறரை நாம் எடைபோடுவதுண்டு. பிறர் பேசுவதைக் கேட்டு, இவர் இதைத்தான் பேசுகிறார், இவர் இப்படிப்பட்டவர் என்று நமக்குள்ளேயே சில தப்புக் கணக்குகளையும் போடுவதும் உண்டு. ஆனால், தேவனோ வெளித்தோற்றத்தைப் பார்ப்பவரல்ல; அவர் உள்ளத்தை ஆராய்ந்து அறிகிறவர். அவர் இருதயத்தைப் பார்க்கிறவர். நமது பேச்சுகளும், நடத்தைகளும் அவரைப் பிரியப்படுத்தினால் போதாது, நமது இருதயம் அவருக்கு உகந்ததாய் இருக்கவேண்டுமென்றே அவர் விரும்புகிறார். உடலில் எத்தனையோ அவயவங்கள் இருந்தும் தேவன், “மகனே, உன் நெஞ்சை எனக்குத் தாராயோ” என்றே கேட்கிறார். காரணம், இருதயம் பரிசுத்தமாய் இருக்குமானால் அனைத்துமே பரிசுத்தமாயும் தேவனுக்கு உகந்ததாயும் இருக்கும்.
ஈசாயின் குமாரரின் வெளித்தோற்றத்தைப் பார்த்து, இவனைத்தான் தேவன் ராஜாவாகத் தெரிந்தெடுத்திருப்பார் என்று தப்புக்கணக்குப் போட்டார் சாமுவேல். ஆனால், தன்னை உண்மையாய் நம்பிய ஆட்டிடையன் தாவீதின் இருதயத்தையே தனக்கு உதந்ததாகக் கண்டார் தேவன். தனது ஆடுகளை மேய்ப்பதில் உண்மையாய் இருந்த தாவீதே, இஸ்ரவேலரை வழிநடத்தவும் உகந்தவன் என்பதை தேவன் அறிந்திருந்தார். ஆம், அவர் இருதயத்தைப் பார்க்கிற தேவன். வெளித்தோற்றத்தால் தேவனைப் பிரியப்படுத்தமுடியாது. நமது இருதயத்தைத் தேவனுக்கு முன்பாக செம்மையானதாய் வைத்திருக்க ஆசிப்போமாக. பரிசுத்தம் நமது நடத்தையிலும் கிரியையிலும் மாத்திரமல்ல; அது நமது இருதயத்திலிருந்து வெளிவரவேண்டும். தேவன் இருதயத்தின் உண்மைத்துவத்தையே விரும்புகிறார். அவர் நம்மைப் பரிசுத்தப்படுத்தும் படியாக நமது இருதயத்தை அவரிடமே ஒப்புக்கொடுத்துவிடுவோமா!
ஜெபம்: அன்பின் ஆண்டவரே, உமக்கு முன்பாக என் இருதயத்தைப் பரிசுத்தமாய்க் காத்துக்கொள்ள உண்மைத்துவத்தை எனக்குள் உருவாக்கும். ஆமென்.
வாக்குத்தத்தம்: ஜனவரி 30 வியாழன்
தேவனே தம்முடைய தயவுள்ள சித்தத்தின்படி விருப்பத்தையும் செய்கையையும் உங்களில் உண்டாக்குகிறவராயிருக்கிறார். (பிலி. 2:13)
ஜெபக்குறிப்பு: ஜனவரி 30 வியாழன்
“.. முதிர்வயதும் நரைமயிருமுள்ளவனாகும் வரைக்கும் என்னைக் கைவிடீராக” (சங்.71:18) இவ்வாக்குப்படியே சத்தியவசன ஊழிய பங்காளர் குடும்பங்களில் உள்ள முதிர்வயதில் உள்ள யாவருக்காகவும், அவர்களது சுகம் மற்றும் சமாதானம், பொருளாதாரத்தேவைகள் எல்லாவற்றிற்காகவும் ஜெபிப்போம்.
தேவனே அடைக்கலம்
தியானம்: ஜனவரி 30 வியாழன்; வாசிப்பு: சங்கீதம் 91:1-16
“எனக்கு அடைக்கலமாயிருக்கிற உன்னதமான கர்த்தரை
உனக்குத் தாபரமாகக் கொண்டாய்… வாதை உன்
கூடாரத்தை அணுகாது.” (சங்கீதம் 91:9-10)
கணவருக்கு அன்று பிறந்தநாள். கொண்டாட்டம் முடிந்து உறவினர் அனைவரும் சென்றுவிட்டனர். அன்று இரவு திடீரென யுத்தம் ஆரம்பமானது. துப்பாக்கிப் பிரயோகம் வீட்டின்மீது நடத்தப்பட்டது. பீரங்கி குண்டுகள் வந்து விழுந்தன. கணவரும் மனைவியுமாக ஒரு அறையினுள் முடங்கியவாறு ஜெபித்தனர். ‘எனது பிறந்தநாளும் மரண நாளும் ஒன்றாக அமையப்போகிறதோ’ என்று அந்தக் கணவர் கலங்கும் அளவுக்கு ஆபத்து நெருங்கியிருந்தது. இந்த நிலைமையில் அத்தம்பதியினர் தப்பிப் பிழைத்தனர். அந்த நேரத்தில் தேவனே தமக்கு அடைக்கலமாய் இருந்தார் என்றும், வேறு எந்தவொரு பாதுகாப்பும் இருக்கவில்லை என்றும் தங்கள் அனுபவத்தைக் கண்ணீரோடு பகிர்ந்துகொண்டனர்.
91ஆம் சங்கீதத்தை எழுதிய சங்கீதக்காரரும் இந்த சங்கீதத்தை அனுபவித்தே எழுதியிருக்கிறார் என்பதற்கு இந்த 9ஆம் 10ஆம் வசனங்கள் ஆதாரமாய் உள்ளன. ‘எனக்கு அடைக்கலமாய் இருக்கிற உன்னதமான கர்த்தர்’ என்று சொல்லும்போது, கர்த்தர் தனக்கு அடைக்கலமானவர் என்பதை தனது வாழ்வில் அவர் அனுபவித்திருக்கிறார் என்பது புலனாகிறது.
நமது வாழ்வில் கர்த்தரை நாம் எந்தளவுக்கு அனுபவித்திருக்கிறோம்? கர்த்தர் எனக்கு இப்படியாகச் செய்தார்; ஆகையால், அவர் உங்களுக்கும் அப்படியே செய்ய வல்லவராய் இருக்கிறார் என்று அனுபவத்தோடு சொல்லு மளவுக்கு தேவனை நெருங்கி நாம் வாழுகிறோமா? பிறருடைய சாட்சிகளை ருசித்து ரசிப்பது ஒன்று. ஆனால், தேவன் நமது வாழ்வில் செய்ததை அனுபவித்துச் சொல்லும்போது அந்த சாட்சிகள் நிச்சயமாக உயிரோட்ட முள்ளதாக, கேட்கிறவர்களின் வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்துகிறதாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
“இந்த இயேசுவை தேவன் எழுப்பினார்; இதற்கு நாங்கள் எல்லாரும் சாட்சிகளாயிருக்கிறோம்” (அப்.2:32) என்று பேதுரு கூறிய சாட்சி அன்று மூவாயிரம் பேர்களின் உள்ளத்தை அசைத்ததை நாம் மறக்கலாமா! தேவனோடு நெருங்கி வாழாத ஒருவன் அவருடைய பாதுகாப்பை அடைக்கலத்தை அனுபவிப்பது கடினம். அப்படி அனுபவிக்காதவனால் ‘தேவன் உனக்கும் அடைக்கலமாயிருப்பார்’ என்று சாட்சி சொல்லுவதும் கடினம். நாம் இன்று உயிருள்ள சாட்சிகளாக வாழுகிறோமா? அல்லது, பிறருடைய சாட்சியில் மறைந்து வாழுகிறோமா? உன்னதமானவரின் மறைவிலிருந்து சர்வவல்லவரின் நிழலில் தங்கும் நாம் மற்றவர்களும் அந்த நிழலில் வந்தடைய வழிவகுப்போமாக.
ஜெபம்: நேச பிதாவே, நீரே என் அடைக்கலம். பாதுகாப்பை பிறரும் உம்மில் கண்டடைந்து உம்மண்டை வர வழிநடத்தும். ஆமென்.