ஜெபக்குறிப்பு: ஜனவரி 1 புதன்

“தேவரீர் உமது ஜனத்தை இரட்சித்து, உமது சுதந்தரத்தை ஆசீர்வதியும்; அவர்களைப் போஷித்து, அவர்களை என்றென்றைக்கும் உயர்த்தியருளும்” (சங்.28:9) என்ற வாக்குப்படியே கர்த்தர்தாமே இவ்வருடம் முழுவதும் நம்மை எல்லா வகையிலும் ஆசீர்வதித்து நடத்தும்படியாக அர்ப்பணித்து ஜெபிப்போம்.

தேவனோடு உடன்படிக்கை!

தியானம்: ஜனவரி 1 புதன்; வாசிப்பு: ஆதியாகமம் 9:8-17

 “…என் உடன்படிக்கையை நித்திய
உடன்படிக்கையாக ஸ்தாபிப்பேன்.”
(ஆதியாகமம் 17:7)

மீண்டும் ஒரு புதிய வருடத்தினுள் பிரவேசித்திருக்கிறோம். சத்தியவசன விசுவாசப்பங்காளர்கள், வாசகர்கள், நேயர்கள் யாவருக்கும் இனியப் புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறோம்.

தேவனோடு நாம் செய்யும் உடன்படிக்கைக்கு எவ்வளவோ முக்கியத்துவத்தை நாம் கொடுக்கிறோம். தேவன் மனிதரோடு உடன்படிக்கை செய்ததை வேதாகமத்திலே பல இடங்களில் காணலாம். தேவன் தாம் செய்த உடன்படிக்கைக்கு உண்மையுள்ளவராகவே இருக்கிறார். ஆகவே, அவரைத் தொழுதுகொள்ளும் நாமும் இப்புதிய ஆண்டில் தேவனோடு செய்யும் உடன்படிக்கைக்கு முக்கியத்துவம் கொடுத்து வாழவேண்டியது அவசியம் அல்லவா.

என் வாழ்வில் எவ்வளவோ சிக்கல்களும் பிரச்சனைகளும் வந்தபோதிலும், அவற்றின் மத்தியில் வெற்றியோடு கடந்துச்செல்வதற்கு, திருமணத்தில் தான் தேவனோடு செய்துகொண்ட உடன்படிக்கையும் தனக்குக் கைகொடுத்தது என்று, திருமண பந்தத்தில் பல வருடங்களைப் பூர்த்திசெய்த ஒருவர் மகிழ்ச்சியோடு கூறினார். ஆனால் இன்று, திருமண பந்தத்தில் தேவனோடு செய்து கொண்ட உடன்படிக்கையை மறந்து, சுயநலமான மனப்போக்குடன் தீர்மானங்களை எடுத்து, திருமண பந்தத்தையே முறித்து, விவாகரத்து செய்வதை நாகரீகம் எனக் கருதும் முற்போக்குவாதிகள் மலிந்துவிட்டார்கள்.

தேவனோடு நாம் செய்யும் உடன்படிக்கை மிகவும் முக்கியமானது. அதனைக் காத்துக்கொள்ள நாம் பிரயாசப்படவேண்டும். அதற்கு உடன்படிக்கையின் தேவனும் நமக்கு உதவிசெய்வார். நோவாவின் காலத்தில் வெள்ளப் பெருக்கினால் ஏற்பட்ட அழிவுக்குப் பின்பு, தாம் இனி வெள்ளத்தால் பூமியை அழிப்பதில்லை என்று சொன்ன தேவன், தமக்கும், பூமியிலுள்ள சகல மாம்ச ஜீவன்களுக்கும் இடையில் செய்த உடன்படிக்கையின் அடையாளமாக வானவில்லை வைத்தார். இன்று வானவில்லைக் கண்டதும் மழை வராது என்கிறோம். இவ்விதமாக உடன்படிக்கைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் தேவனை ஆராதிக்கும் நாமும், அவரோடு செய்யும் உடன்படிக்கைக்கு முக்கியத்துவம் கொடுத்து வாழக் கற்றுக்கொள்ள வேண்டும்.

இப் புதிய வருடத்தின் முதல் நாளில் இத்தியானத்தில் இணைந்திருக்கும் தேவபிள்ளையே, கடந்த காலங்களில் தேவனோடு செய்துகொண்ட உடன்படிக்கைக்கு நாம் முக்கியத்துவம் கொடுத்து வாழ்ந்திருக்கிறோமா? அல்லது, ஒவ்வொரு வருடமும் நாம் செய்யும் உடன்படிக்கை ஜனவரி மாதத்துடனே காணமற் போகின்றனவா? இவ்வருடத்தில் நாம் தேவனோடு செய்துகொள்ளும் உடன்படிக்கையை உண்மையாய் காத்துக்கொள்ள தேவன் கிருபை செய்வாராக.

ஜெபம்: உடன்படிக்கையில் மாறாத என் தேவனே, இன்றைக்கு நான் செய்யும் இந்தத் தீர்மானத்தை என்றைக்கும் காத்திட உமதாவியால் நிரப்பும். ஆமென்.

பாவத்தின் விளைவு

அதிகாலை வேளையில்… (ஜனவரி-பிப்ரவரி 2014)
– Dr.உட்ரோ குரோல்

“மேலும் அப்சலோம் காலைதோறும் எழுந்திருந்து, பட்டணத்து வாசலுக்குப் போகிற வழி ஓரத்திலே நின்றுகொண்டு, எவனாகிலும் தனக்கு இருக்கிற வழக்கு முகாந்தரமாய் ராஜாவினிடத்தில் நியாயத்திற்காகப் போகும்போது, அவனை அழைத்து, நீ எந்த ஊரான் என்று கேட்பான்; அவன் உமது அடியான் இஸ்ரவேல் கோத்திரங்களில் ஒன்றுக்கடுத்த இன்ன ஊரான் என்றால், அப்பொழுது அப்சலோம் அவனை நோக்கி: இதோ, உன் காரியம் நேர்மையும் நியாயமுமாயிருக்கிறது; ஆனாலும் ராஜாவினிடத்திலே உன் காரியத்தை விசாரிப்பார் ஒருவரும் இல்லை என்பான்” (2சாமு.15:2,3)

நம்முடைய எண்ணத்தில் பாவம் ஒரு விசித்திரமான வழியில் உருவாகிறது. உரியாவைக் கொலை செய்ததும் அவருடைய மனைவி பத்சேபாளிடம் விபச்சாரம் செய்ததும், தாவீது அரசர் செய்த இரு பாவங்கள். இதற்குப் பின்னர் நாத்தான் தீர்க்கதரிசி அவரிடத்தில் வந்து அவரது பாவத்தை உணர்த்த ஒரு உவமையைக் கூறினார். “நீயே அந்த மனுஷன்” (2சாமு.12:7) என்று அவர் கூறியதும் “நான் கர்த்தருக்கு விரோதமாய்ப் பாவஞ் செய்தேன்…”(2சாமு.12:13) என்று தாவீது தனது தவறை உணர்ந்து வருந்தினார்.

தேவன் அப்பாவத்தை மன்னித்து விட்டாலும் அதன் தண்டனையைத் தாவீது அனுபவிக்க வேண்டியதாய் இருந்தது. இராஜாவின் இச்சையினால் உருவான அந்த குழந்தை மரித்துவிட்டது. அவரது மற்ற பிள்ளைகள் இரக்கமற்றவர்களாகவும், முரட்டாட்டமுள்ளவர்களாயும் அவரைக் கொலை செய்வதற்கான சதித்திட்டம் தீட்டுபவர்களாயும் மாறினர்.

தாவீதின் பாவத்துக்கு தண்டனை துரிதமாய் வந்தது. பத்சேபாளை மணப்பதற்கு முன்னர் அவருக்குப் பதினாறு பிள்ளைகள் இருந்தனர். ஒவ்வொருவரும் அரசகுமாரனைப் போல தனித்தனி அரண்மனையில் வசித்து வந்தனர். ஆயினும் வரலாற்றில் மூன்று பேர் மட்டுமே சிறப்பாகக் குறிப்பிடப்பட்டுள்ளனர். யெஸ்ரெயேல் ஊராளான அகினோவாமிடத்திலே பிறந்த அம்னோன் அவனுக்கு முதல் பிறந்தவன். மூன்றாம் குமாரன் கேசூரின் ராஜாவான தல்மாய் குமாரத்தியாகிய மாக்காள் பெற்ற அப்சலோம் என்பவன்; நாலாம் குமாரன் ஆகீத் பெற்ற அதொனியா என்பவன்; அப்சலோமும் அதோனியாவும் தங்கள் தகப்பனுக்கு விரோதமாய் சதி ஆலோசனை பண்ணி அவரை ஆட்சியிலிருந்து அகற்ற வகை தேடினர். அம்னோனின் பாவமும் இழிவானதொன்று.

அப்சலோமுக்கு தாமார் என்றதொரு செளந்தரியமுள்ள சகோதரி இருந்தாள். அம்னோன் அவளுடைய அழகில் மயங்கியதால் அவன் வியாதிப்பட்டான். மோசேயின் நியாயப் பிரமாணத்தின்படி ஒருவன் தனது சகோதரியை மணப்பது தவறு. எனவே அம்னோன் ஒரு மாற்று வழியில் செயல்பட எண்ணினான். தாமாரைப் பலாத்காரம்பண்ணி அவளுடன் உறவுகொண்டான். பின்னர் அவளை வெறுத்துவிட்டு அந்த இடத்திலிருந்து தப்பிவிட்டான். அப்சலோம் தாமாரை விசாரித்து உண்மையை அறிந்து கொண்டான். அதனால் சினமுற்ற அப்சலோம் அம்னோனைப் பழிவாங்கத் திட்டமிட்டான்.

இரண்டு வருஷம் சென்றபின்பு, அப்சலோம் எப்பிராயீமுக்குச் சமீபமான பாலாத்சோரிலே ஆட்களை வைத்து, ஆடுகளை மயிர் கத்தரிக்கிற வேலையில் இருந்தான்; அங்கே இராஜாவாகிய தாவீதையும் ராஜ குமாரர் எல்லாரையும் குறிப்பாக அம்னோனையும் விருந்துக்கு அழைத்தான். விருந்துவேளையில் அம்னோன் திராட்சரசம் குடித்துக் களித்திருக்கும் பொழுது அப்சலோமின் வேலையாட்கள் அவனை அடித்துக்கொன்றார்கள். இச்செயலால் அப்சலோம் தாவீதுக்குப் பயந்து தனது தாத்தாவான கேசூரின் இராஜாவான தல்மாயிடம் ஓடி அடைக்கலம் புகுந்தான். தாவீது அவனை அழைத்தனுப்பும் வரைக்கும் சுமார் மூன்று ஆண்டுகள் அவன் அங்கே தங்கியிருந்தான்.

நாடு திரும்பிய அப்சலோம் தனது தகப்பனுடைய அதிகாரத்தைக் குறைக்க ஆரம்பித்தான். “மேலும் அப்சலோம் காலைதோறும் எழுந்திருந்து, பட்டணத்து வாசலுக்குப் போகிற வழி ஓரத்திலே நின்றுகொண்டு,…” (2சாமு. 15:2) என்று கூறுகிறது. வழக்கு தொடர்பாக எருசலேமுக்கு வருகின்ற அனைவரையும் சந்திக்க அதிகாலையிலேயே ஆயத்தமானான். தனது சாதுரியமான பேச்சினால் தன்னை நல்லவனாகவும் தனது தந்தையை கெட்டவனாகவும் சித்தரித்துக் காட்டினான். இதற்குத் தீர்வாக, வழக்கு வியாஜ்யமுள்ளவர்கள் எல்லோரும் என்னிடத்தில் வந்து, நான் அவர்களுக்கு நியாயம் செய்யும்படிக்கு, என்னை தேசத்திலே நியாயாதிபதியாக வைத்தால் நலமாயிருக்கும் என்பான். பாவம் எப்பொழுதும் இனிய சொற்களுடன் கலந்தே இருக்கும். செளந்தரியமான அப்சலோம் தனது கனிவான பேச்சினாலும், அன்பான செயலாலும் இஸ்ரவேல் மனிதருடைய இருதயத்தைக் கவர்ந்துகொண்டான். தேவனால் அபிஷேகம் பண்ணப்பட்ட அவர்களது அரசனான தாவீதிடமிருந்து அனைவரையும் தன் பக்கமாக இழுத்துக்கொண்டான். தேனொழுகும் வார்த்தைகள், கை குலுக்குதல், அந்நியரைத் தழுவி போலியான முத்தம் செய்தல் ஆகிய வற்றால் இஸ்ரவேலரைத் தன் வயப்படுத்திக் கொண்டான்.

இஸ்ரவேலரை தாவீதைவிட்டு விலகச்செய்யும் இவ்விதமான துரோகச் செயல்களில் வெற்றியும் பெற்றான். ஆகவே வெகுவிரைவில் எப்ரோனுக்குச் சென்று தன்னை அரசனாக அறிவித்தான். ஜனங்கள் அப்சலோமினிடத்தில் திரளாய் வந்து கூடினார்கள். ஆனால் தாவீதுக்குப் பிறகு அரசனாக அப்சலோமை தேவன் தெரிந்தெடுக்கவில்லை. “உன் பாவம் உன்னைத் தொடர்ந்து பிடிக்கும்” என்ற பாடத்தை தாவீது அறிந்து கொள்ளும்பொழுது இஸ்ரவேல் ஜனங்களும் ஒரு விலையேறப்பெற்ற பாடத்தையும் கற்றுக்கொண்டார்கள். இனிய புன்சிரிப்பு, அன்பான கை குலுக்கல், தேனொழுகும் வார்த்தைகள் ஆகியவற்றுடன் நம்முடன் பழகும் மனிதர்கள் அனைவரும் நமது நலனில் அக்கறை கொண்டவர்கள் அல்லர். அவர்கள் ஆட்டுத்தோல் போர்த்த ஓநாய்கள். நம் தலைவர்களைப்பற்றி தேவனுடன் நாம் தொடர்ச்சியான ஆலோசனை கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் இவர்கள் நம்மை ஆட்கொள்ள முடியாது. வருங்காலத்தில் நம்மை ஆளவிருக்கும் நமது தலைவர்களுக்காக இன்று நாம் தேவனிடம் மன்றாடுவோம்.

அதிகாலைப் பாடல்:
என் இரட்சகர் என்னை நடத்துகிறார்;
வேறென்ன எனக்கு வேண்டும்?
என் வாழ்வின் வழிகாட்டியான
அவருடைய கிருபையை சந்தேகிப்பேனோ?
விண்ணின் சமாதானம், தெய்வீக ஆறுதலாகிய
அவரில் விசுவாசத்தில் வாழுவேன்
என்ன நேரிடினும் இயேசு அனைத்தையும்
நேர்த்தியாய் செய்கிறார். அல்லேலூயா!

மொழியாக்கம்: Sis.அகஸ்டா மங்களதுரை

அனைத்துலக மொழிபெயர்ப்புப் பணிகள்

புனித வேதாகமத்தின் வரலாறு (ஜனவரி-பிப்ரவரி 2014)
அத்தியாயம்-9
சகோ.M.S.வசந்தகுமார்

(6) கன்னட மொழிபெயர்ப்பு

இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் பேசப்படும் கன்னட மொழியில் 1809இல் புதிய ஏற்பாடு மொழி பெயர்க்கப்பட்டது. செரம்பூரிலிருந்த மிஷனரிகள் மொழிபெயர்த்த இப்புதிய ஏற்பாட்டின் மூலப்பிரதிகள் 1812இல் செரம்பூர் அச்சகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் எரிந்துவிட்டன. இதன்பின்னர் அவர்கள் 1823இலேயே கன்னடமொழி புதிய ஏற்பாட்டை வெளியிட்டனர். அதே சமயம் 1810இல், பெலாரி எனுமிடத்துக்கு மிஷனரியாக வந்த லண்டன் மிஷனரி சங்கத்தைச் சேர்ந்த ஜோன் ஹேன்ட்ஸ் என்பவர், 1812இல் முதல் மூன்று சுவிசேஷங்களையும் கன்னட மொழியில் மொழி பெயர்த்து வெளியிட்டார். 1820இல் இவர் மொழி பெயர்த்த சுவிசேஷங்களும் அப்போஸ்தலர் நடபடிகளும் கன்னட மொழியில் சென்னையில் அச்சிடப்பட்டன. 1830இல், பெலாரி மிஷன் அச்சகத்தில் இவரது கன்னட மொழி புதிய ஏற்பாடு வெளியிடப்பட்டது. 1831இல் இவர் மொழிபெயர்த்த பழைய ஏற்பாடும் கன்னட மொழியில் வெளிவந்தது.

1837இல், சுவிசேஷ புத்தகத்தையும் அப்போஸ்தலருடைய நடபடிகளையும் ஹேன்ட்ஸ் திருத்தி வெளியிட்டார். பிற்காலத்தில் ஏனைய பகுதிகளும் திருத்தப்பட்டன. 1848 இல் பேசல் எனுமிடத்திலிருந்த லூத்தரன் மிஷனைச் சேர்ந்த ஜி.எஸ்.வெய்கல் கன்னட புதிய ஏற்பாட்டைத் திருத்தி மொழிபெயர்த்தார். இது 1850இல் வெளிவந்தது. 1854இல் இது மறுபடியுமாக திருத்தப்பட்டது. 1865இல் இரு ஏற்பாடுகளையும் கொண்ட திருத்தப்பட்ட கன்னட மொழி வேதாகமம் வெளிவந்தது. 1890இல் இவ்வேதாகமம் மறுபடியுமாகத் திருத்தப்பட வேண்டியதன் அவசியம் உணரப்பட்டது. 1891இல் இதற்காக ஒரு குழு நியமிக்கப்பட்டது. இவர்களது பணி காரணமாகப் புதிய கன்னட மொழி புதிய ஏற்பாடு 1907இல் வெளிவந்தது. 1934இல் முழுவேதாகமத்தினதும் திருத்தப்பதிப்பு வெளியிடப்பட்டது.

(7) மராத்தி மொழிபெயர்ப்பு

இந்திய மாநிலங்களில் ஒன்றான மகாராஷ்ட்ராவில் பேசப்படும் மராத்திமொழியில் 1807ஆம் ஆண்டு 1000 புதிய ஏற்பாடுகள் செரம்பூர் அச்சகத்தில் அச்சிடப்பட்டன. பண்டித் வைஜநாத் என்பவரினால் மொழி பெயர்க்கப்பட்ட இம் மராத்தி மொழி புதிய ஏற்பாடு வில்லியம் கேரியினால் திருத்தப்பட்டு அச்சிடப்பட்டபோதிலும், அம்மொழிபெயர்ப்பு நாக்பூர் எனும் பிரதேசத்தில் பேசப்பட்ட மராத்தி மொழியில் இருந்தமையினால், மற்றைய பிரதேச மராத்திய மக்களுக்கு அம்மொழிபெயர்ப்பு பிரயோஜனமற்றதாகவே இருந்தது. 1807ஆம் ஆண்டு பம்பாய்க்கு வந்த லண்டன் மிஷனரி சங்கத்தைச் சேர்ந்த ஜோன் டெய்லர் என்பவர் 1817 இல் மத்தேயு சுவிசேஷத்தை மராத்தி மொழியில் மொழிபெயர்த்தார். இது பம்பாய் வேதாகமச்சங்கக் கிளையினால் அச்சிடப்பட்டது. அதேசமயம், அமெரிக்காவிலிருந்து பம்பாய்க்கு வந்த கோர்டன் ஹால், சாமுவேல் நியூவெல் எனுமிருவரும் மராத்தி மொழியைக் கற்றவாறே சுவிசேஷத்தை அறிவித்து வந்தனர். ஆரம்பத்தில் இவர்கள் செரம்பூர் அச்சகத்தினால் வெளியிடப்பட்ட மராத்தி மொழி புதிய ஏற்பாட்டையே உபயோகித்து வந்தபோதிலும், இவர்களது மராத்திய மொழியறிவு அதிகரிக்க அதிகரிக்க, அம்மொழி பெயர்ப்பு மகாராஷ்ட்ரா மக்களது மராத்திய மொழியைவிட வித்தியாசமானதாக இருப்பதை அறிந்துகொண்டனர். இதனால் இவர்கள், எபிரேய கிரேக்க மொழிகளைக் கற்கத் தொடங்கியதோடு அம்மொழிகளில் இருந்து மராத்திய மொழிக்கு வேதாகமத்தையும் மொழிபெயர்க்கத் தொடங்கினர்.

1816இல் பார்ட்வெல் என்பவரும் இவர்களுக்கு உதவியாக வந்து சேர்ந்தார். இவர்கள் புதிய ஏற்பாட்டின் பெரும்பாலான பகுதிகளையும் பழைய ஏற்பாட்டில் ஆதியாகமத்தையும் மராத்திய மொழியில் மொழி பெயர்த்திருந்தனர். 1821இல் பார்ட்வெல் அமெரிக்காவுக்குத் திரும்பிச்செல்ல வேண்டியதாயிற்று. அவ் வருடம் நியூவெல் மரணமடைந்தார்.

ஒரு சில மாதங்களின் பின்னர் பம்பாய்க்கு வந்த மற்ற மிஷனரிகளும் மரித்துவிட்டனர். 1832ஆம் ஆண்டு வரை பம்பாயிலிருந்த மிஷனெரிகளுக்குப் பிறந்த 30 பிள்ளைகளில் 18 பிள்ளைகள் மரித்துள்ளனர். எனினும், இவை எஞ்சியிருந்த மிஷனெரிகளை அதைரியப்படுத்திவிடவில்லை. அவர்கள் வேதாகம மொழிபெயர்ப்பு வேலையைத் தொடர்ந்து செய்தனர். 1818இல் பம்பாய்க்கு வந்த அலன் கிரேவ்ஸ் என்பவர், இம்மொழிபெயர்ப்புப் பணியைப் பூர்த்திசெய்து மராத்திய மொழி வேதாகமத்தையும் அச்சிட்டு வெளியிட்டார். 1826இல் மராத்திய புதிய ஏற்பாடு வெளிவந்தது. 1830இல் கிரேவ்ஸ் இப்புதிய ஏற்பாட்டைத் திருத்தி மொழிபெயர்த்தார்.

அமெரிக்க மிஷனெரிகளது மராத்திய மொழிபெயர்ப்பு திருப்திகரமற்றது என எண்ணிய சபை மிஷனரி சங்கத்தைச் சேர்ந்த வில்லியம் மிச்சேல் 1830இல் மத்தேயு சுவிசேஷத்தை மராத்தியில் மொழிபெயர்த்து வெளியிட்டார். 1831இல் அமெரிக்க மிஷனெரிகள் மொழி பெயர்த்த மராத்திய மொழி பெயர்ப்பை அடிப்படையாய்க் கொண்டு ஒரு புதிய மொழி பெயர்ப்பு தயாரிக்கப்பட வேண்டும் என கருதப் பட்டமையினால், இதற்கென ஒரு குழு நியமிக்கப்பட்டது. இவர்களது முயற்சியினால் 1847இல் திருத்தப்பட்ட மராத்திய புதிய ஏற்பாடும், 1855இல் இரு ஏற்பாடுகளையும் கொண்ட புதிய மராத்திய மொழி பெயர்ப்பு வேதாகமமும் வெளிவந்தது.

1851இல் மறுபடியுமாக புதிய ஏற்பாடு வெளியிடப்பட்டது. 1857 இல், திருத்தப்பட்ட இன்னுமொரு புதிய மராத்திய வேதாகமம் வெளியிடப்பட வேண்டியதன் அவசியம் உணரப்பட்டது. இதனால், பம்பாய் வேதாகமச் சங்கம் 1872இல் மறுபடியுமாக ஒரு திருத்தப்பட்ட புதிய மராத்திய வேதாகமத்தை வெளியிட்டது. 1880இல் இதை மறுபடியும் திருத்தி மொழிபெயர்ப்பதற்கு இன்னுமொரு குழு நியமிக்கப்பட்டது. இக்குழுவினர் 1907இல் பழைய ஏற்பாட்டையும் 1924இல் முழு வேதாகமத்தையும் திருத்தி வெளியிட்டனர். 1953இல் மறுபடியுமாக இதைத் திருத்த இன்னுமொரு குழு நியமிக்கப்பட்டது. இவற்றைத் தவிர ராவ் பகதூர் அத்தாவேல் என்பவரினால் புதிய ஏற்பாடும், பண்டிதை ராமா பாயினால் முழுவேதாகமமும் மராத்தியில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

(8) குஜராத்தி மொழிபெயர்ப்பு

செரம்பூரிலிருந்த மிஷனரிகள் 1809இல் குஜராத்தி மொழியில் மத்தேயு சுவிசேஷத்தை மொழி பெயர்த்து வெளியிட்டபோதிலும், அதன் பிறகு 1813ஆம் ஆண்டு வரை அம்மொழியில் மொழிபெயர்ப்பு வேலையைச் செய்யாதமையினால் 1820ஆம் ஆண்டே அவர்கள் மொழி பெயர்த்த குஜராத்தி புதிய ஏற்பாடு வெளிவந்தது. எனினும், இம்மொழி பெயர்ப்பு குஜராத்தி மக்களால் புரிந்து கொள்ள முடியாததொன்றாய் இருந்தது. லண்டன் மிஷனெரி சங்கத்தைச் சேர்ந்த மிஷனெரிகள் குஜராத் மாநிலத்திலுள்ள சூரட் எனுமிடத்தில் தமது ஊழியங்களை ஆரம்பித்தபோது, அவர்களால் அம்மொழிபெயர்ப்பை உபயோகிக்க முடியவில்லை.

பம்பாய்க்குச் சென்ற ஜோன் டெய்லர் குஜராத்தி மொழியில் புதிய ஏற்பாட்டை மொழிபெயர்க்க ஆரம்பித்தார். எனினும் அவரது மரணம், அப்பணியை மத்தேயு சுவிசேஷத்தோடு நிறுத்திவிட்டது. 1815இல் சூரட் எனுமிடத்திற்கு வந்த லண்டன் மிஷனரி சங்கத்தைச் சேர்ந்த மிஷனரிகளான வில்லியம் ஃபைவி, ஜேம்ஸ் ஸ்கின்னர் எனுமிருவரும் 1817இல் புதிய ஏற்பாட்டையும், பழைய ஏற்பாட்டில் பஞ்சாகமங்கள் வரையும் மொழிபெயர்த்திருந்தனர். இவர்கள் 1820இல், சூரட் எனுமிடத்தில் தமது சொந்த அச்சகத்தை ஏற்படுத்தி தாம் மொழி பெயர்த்த குஜராத்தி புதிய ஏற்பாட்டை 8 பகுதிகளாக வெளியிட்டனர். இவ் வெளியீட்டு வேலைகள் பூர்த்தியடையுமுன்பே 1820இல் ஜேம்ஸ் ஸ்கின்னர் மரித்துவிட்டார்.

எனினும் 1822இல் வில்லியம் ஃபைவி இன் சகோதரர் அலெக்சான்டர் அவருக்கு உதவியாக சூரட்டுக்கு வந்து சேர்ந்தார். இவர்களிருவரும் பழைய ஏற்பாட்டை 18 பகுதிகளாக குஜராத்தி மொழியில் மொழிபெயர்த்து வெளியிட்டனர். இதன் கடைசிப் பகுதி 1823இல் வெளிவந்தது. 1825இல் அச்சுத் தொழிலில் தேர்ச்சி பெற்ற தோமஸ் சல்மொன் என்பவரை லண்டன் மிஷனரி சங்கம் சூரட்டுக்கு அனுப்பியது. 1827இற்கும் 1829 இற்கும் இடைப்பட்ட காலத்தில் இவர்கள் முழு வேதாகமத்தையும் 4 பகுதிகளாக குஜராத்தி மொழியில் அச்சிட்டு வெளியிட்டனர். 1832 இல் இவர்கள் தமது புதிய ஏற்பாட்டைத் திருத்தி வெளியிட்டனர்.

1853இல் ஜோன் வில்சன் என்பவர், வில்லியம் ஃபைவி இன் குஜராத்தி மொழி புதிய ஏற்பாட்டைத் திருத்தி மொழி பெயர்த்து வெளியிட்டார். 1857இல் இன்னுமொரு புதிய குஜராத்தி மொழி புதிய ஏற்பாடு வெளிவந்தது. 1860 இல், பழைய ஏற்பாட்டின் திருத்த மொழிபெயர்ப்பு வெளியிடப்பட்டது. இந்தியாவில் பணிபுரிந்த ஐரிஸ் பிரஸ்பிட்டேரியன் மிஷனைச் சேர்ந்தவர்களால் 1889இல் குஜராத்தி மொழி புதிய ஏற்பாடு திருத்தப்பட்டது. 1899 இல் இவர்கள் பழைய ஏற்பாட்டையும் திருத்தி வெளியிட்டனர். அவ் வாண்டு குஜராத்தி மொழியில் முழு வேதாகமமும் ஒன்றாக வெளியிடப்பட்டது. 1903இல் இவ்வேதாகமத்தின் திருத்தப்பதிப்பு வெளிவந்தது.

(9) ஒரிய மொழிபெயர்ப்பு

இந்தியாவின் ஒரிசா மாநிலத்தில் பேசப்படும் ஒரிய மொழியில் வேதாகம மொழிபெயர்ப்பு 1804இல் ஆரம்பமானது. வங்காள மொழியிலிருந்து ஒரிய மொழிக்கு மொழிபெயர்க்கப்பட்ட புதிய ஏற்பாடு, வில்லியம் கேரியினாலும் அவரது உதவியாளர்களினாலும் கிரேக்க மொழி வேதாகமத்துடன் ஒப்பிட்டுத் திருத்தப்பட்டு 1809இல் வெளியிடப்பட்டது. 1815இல், பழைய ஏற்பாட்டுப் புத்தகங்களும் இவ்வாறு ஒரிய மொழியில் பிரசுரிக்கப்பட்டது. இதன் பின்னர் வேதாகமத்தின் சில பகுதிகள் ஒரிய மொழியில் வெளிவந்தன. 1840இல் கல்கத்தா வேதாகமக் கிளைச் சங்கம், ஒரிய மொழி புதிய ஏற்பாட்டைத் திருத்தி வெளியிட்டது. இதேவிதமாக 1844இல் ஒரிய மொழி பழைய ஏற்பாடும் திருத்தப்பட்டு 3 பகுதிகளாக வெளியிடப்பட்டது. 1862இல், கட்டக் எனுமிடத்தில் இருந்த மிஷன் அச்சகம் ஒரிய புதிய ஏற்பாட்டை மறுபடியுமாகத் திருத்தி வெளியிட்டது. 1872இல் பழைய ஏற்பாட்டின் திருத்தப்பதிப்பும் வெளிவந்தது. இத் திருத்த வேலைகள் கட்டக் எனுமிடத்தில் மிஷனரியாகப் பணியாற்றிய பக்லி மற்றும் ஜகுரூல் என்போரினால் செய்யப்பட்டதாகும்.

1902இல் பப்டிஸ்ட் மிஷனரி சங்கத்தைச் சேர்ந்தவர்களால் மறுபடி யுமாக ஒரிய மொழி வேதாகமம் திருத்தி மொழிபெயர்க்கப்பட்டது. 1941இல் மறுபடியுமாக புதிய ஏற்பாடு திருத்தப்பட்டது. 1957இல், திருத்தப்பட்ட முழுவேதாகமமும் வெளிவந்தது.

(10) அஸ்ஸாமிய மொழி பெயர்ப்பு

செரம்பூரிலிருந்த மிஷனரிகளினால் இந்தியாவின் அஸ்ஸாம் மொழியில் 1810ஆம் ஆண்டு வேதாகம மொழிபெயர்ப்பு வேலைகள் ஆரம்பிக்கப்பட்டபோதிலும், 1812ஆம் ஆண்டின் தீ விபத்தினால் அவ்வேலைகள் பாதிக்கப்பட்டன. பின்னர் 1819இல், புதிய ஏற்பாடும் 1832இல், முபவேதாகமமும் அஸ்ஸாம் மொழியில் வெளியிடப்பட்டது. எனினும், இம்மொழி பெயர்ப்பு அஸ்ஸாம் மக்களால் உபயோகிக்கப்படவில்லை. பிற்காலத்தில் அஸ்ஸாம் பகுதிக்கு ஊழியம் செய்யச் சென்ற அமெரிக்க பப்டிஸ்ட் மிஷனரி நேத்தன் பிரவுன் என்பவர் 1817 இல், புதிய ஏற்பாட்டை அஸ்ஸாம் மொழியில் மொழிபெயர்த்து வெளியிட்டார். 1860ஆம் ஆண்டிலிருந்து பல மிஷனரிகள் பழைய ஏற்பாட்டின் பகுதிகளை அஸ்ஸாம் மொழியில் மொழிபெயர்க்கத் தொடங்கினர். 1903இல் கேர்னி என்பவர் அவற்றையெல்லாம் தொகுத்து, பின்னர் அவற்றைத் திருத்தி முழு பழைய ஏற்பாட்டையும் அஸ்ஸாம் மொழியில் வெளியிட்டார். வேதாகமச் சங்கமே இம்மொழிபெயர்ப்பு வெளிவர உதவி செய்தது.

வாசகர்கள் பேசுகிறார்கள்

(ஜனவரி-பிப்ரவரி 2014)

1. தங்களது தமிழன் டிவி நிகழ்ச்சி மிக ஆசீர்வாதமாக உள்ளது. சுசி பிரபாகரதாஸ், பாகவதர்.வேதநாயகம் சாஸ்திரியார், Prof.எடிசன், Dr.புஷ்பராஜ் இவர்களது செய்திகள் பாடல்கள் என் உள்ளத்தை அதிகமாகத் தொட்டது. ஊழியங்களுக்காக தொடர்ந்து ஜெபிக்கிறோம். நன்றி

Mr.S.D.John Thangaiah, Tirupur

2. ஒவ்வொரு மாத அனுதினமும் கிறிஸ்துவுடன் தின தியானங்களும் என் உள்ளத்தை ஊடுருவித் தொடுகின்றன. உன்னதர் இயேசுவுடன் உறவாடச் செய்கின்றன. வேதத்தின்படி வாழ என்னை ஊக்குவிக்கின்றன. எனக்காக ஜெபியுங்கள்.

Mr.J.M.Chinnapparaj, Rajapalayam

3. திங்கள், செவ்வாய் காலை வானொலி நிகழ்ச்சிகளைக் கேட்டு பயன் பெறுகிறேன். செவ்வாய்கிழமையில் அந்திரேயா, அந்தரங்க மறைமுக சீஷன் பற்றிக் கூறியது நல்லதாக இருந்தது. (1) பேதுருவை அழைத்து வந்தான். (2) சிறுவனை அழைத்து வந்தான். (3) புறஜாதியானை அழைத்து வந்தான். சத்தியவசனம் நேயர் கடிதம் சிறப்பாக இருக்கிறது. தங்கள் ஊழியங்களுக்காக ஜெபிக்கிறேன்.

Mr.M.Edison Manova, Vellore

4. Dear Sir, We do appreciate the Magazine and the Daily Readings that you send us and also listen to the Messages over the television. Bro.Susi Prabhakaradass delivers his messages with such clarity and they’re so useful to us. God bless your Ministry.

Mr.Edwin, Chennai

5. சகோதரி.தர்ஷினி சேவியர், சகோ.தர்மகுலசிங்கம், சகோதரி.சாந்தி பொன்னு இவர்கள் எழுதும் தியானங்கள், எங்கள் வாழ்க்கைக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது. வேதாகம புதிர் கேள்விகள் வேதத்தை ஆழ்ந்து படிக்க, சிந்திக்க வைக்கிறது. அனைவருக்கும் எங்கள் நன்றி. ஊழியத்திற்காக தினமும் ஜெபிக்கிறோம்.

Mrs.Leela Bai, Madurai

6. அனுதினமும் கிறிஸ்துவுடன் தியான புத்தகமும், சத்தியவசனம் சஞ்சிகையும் எங்களுக்கு மிகவும் பிரயோஜனமாக உள்ளது. தமிழன் டிவியில் வரும் செய்தியின் மூலமாகவும் பயனடைகிறோம். ஊழியங்களுக்காக ஜெபிக்கிறோம்.

Mr.Marjorie Kingsley, Chennai

7. தங்களது ஆறுதல் கடிதம், அனுதினமும் கிறிஸ்துவுடன், சத்தியவசனம் சஞ்சிகை மற்றும் TV செய்திகள் எனக்கு மிகவும் ஆறுதலாகவும் ஊன்றக் கட்டுவதாகவும் உள்ளன. நான் ஊழியத்திற்காக அனுதினமும் ஜெபிக்கிறேன்.

 Mr.J.Raja Sekaren, Trichy

8. எனது வேலையில் எண்ணற்ற இன்னல்கள், துன்பங்கள் வந்தபோதும் அதைத் தாங்க பெலனும் தந்து கர்த்தர் அற்புதமாக என்னை வழிநடத்தி வருகிறார். எவ்வளவு வேலை இருந்தாலும், அனுதினமும் கிறிஸ்துவுடன் காலை எழுந்ததும் படித்துவிட தேவன் உதவிசெய்கிறார். அதன்மூலம் ஆலோசனைகளும், வழிநடத்துதலும் கிடைக்கிறது. வேதத்தைக் கிரமமாக வாசிக்க பெரிதும் உதவியாக இருக்கிறது.

Mr.Babu Muthuramalingam, Pappi Rettipatti

page 1 of 2